உங்கள் தியானம் சரியற்றுப் போக ஆறு காரணங்கள் தியானப் பேரின்பத்திற்கான பூட்டினைத் திறக்கும் ஆறு சாவிகள்(How to do meditation at home in tamil)

  1. பயிற்சியில் நம்பிக்கை
  2. சரியான வழிமுறை
  3. சீரான பயிற்சி
  4. எதிர்பார்ப்புக்களைத் துறத்தல்
  5. சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை
  6. தியானம் செய்ய சரியான நேரம்

நான்சியும் அனிஷாவும் நெருங்கிய தோழிகள். ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக பின்பற்றும் அளவுக்கு நெருக்கமானவர்கள். ஒரு நாள், அனிஷா ஓர் தியான வகுப்பில் சேர்ந்தாள். இயற்கையாக, நான்சியும் அதிலேயே சேர விரும்பினாள். ஆனால் அவளது பணிநேரம் பயிற்சி நேரத்துடன் ஒத்து வர வில்லை. நான்சி பயிற்சியில் சேர முடியாத காரணத்தால், அனிஷா தியானப் பயிற்சி செய்வதைப் பார்க்கத் துவங்கினாள். அமைதியாக கண்களை மூடியபடி 20 நிமிடங்கள் இவ்வளவுதானே எளிதானதுதான் என்று நான்சி எண்ணினாள். தானும் அவ்வாறே முயற்சி செய்ய முடிவு செய்தாள்.

நாள் 1: கண்களை மூடியவுடனேயே அன்றைய தினத்தில் முடிக்க வேண்டிய பணிகளைப் பற்றி திட்டமிடத் துவங்கினாள். விளைவு: கண்களைத் திறந்தவுடன் மிகுந்த ஏமாற்றம் அடைந்தாள், ஏனெனில், அனிஷா, தியானத்திற்குப் பிறகு மிகுந்த அற்புதமான உணர்வு இருக்கும் என்று கூறியிருந்தாள். ஆனால் நான்சி மனதில் முன்னை விட அதிக எண்ணங்கள் படைஎடுப்பதாக உணர்ந்தாள்.

நாள் 4: இரண்டு நாட்களுக்குப் பின்னர், இன்று எப்படியும் அந்த அற்புத உணர்வினை அடைந்து விடுவது என்ற எதிர்பார்ப்புடன், மீண்டும் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள். விளைவு: தியானம் நிகழ மிகுந்த முயற்சியுடன் அமர்ந்த போதும், எண்ணச் சங்கிலியையே எப்போதும் போல காண முடிந்தது.

நாள் 6: இந்த முறை இரவு உணவுக்குப் பின்னர் சுமார் 11.30 மணிக்கே தியானம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அவள் வயிறு நிறைந்திருந்தது. மனம் களைப்புடன் இருந்தது. கண்களை மூடியவுடனேயே கண்ணயரத் துவங்கினாள். 20 நிமிடங்களுக்குப் பிறகு அலாரம் ஒலித்த போது, தியானத்திலிருந்து, அல்லது உறக்கத்திலிருந்து வெளி வந்தாள். விளைவு: தனது தியானம் சரியாக நிகழவில்லை என்னும் திருப்தியற்ற விரக்தி நிலையை அடைந்தாள்.

உங்களது அனுபவம் நான்சியுடையதைப் போன்று இருக்கின்றதா? அடிக்கடி," நான் தியானம் செய்கிறேன் ஆனால் எந்த மாற்றத்தினையும் காணவில்லை" என்று கூறிக் கொள்கிறீர்களா?

நான்ஸியின் தியானம் அவள் எண்ணுவது போன்று ஏன் பலனளிக்கவில்லை என்று புரிந்து கொள்வோம். மற்றும் விரைவில் அவள் சரியாகச் செய்ய உதவுவோம்.

#1: நான்சி தியான நுட்பத்தை சரியாகப் பின்பற்றினாளா?

பயிற்சியை சரியான முறையில் அனுபவம் மிக்க ஓர் ஆசிரியரிடம் முறைப் படி அமையப் பெற்ற வகுப்பில் பயில வேண்டும். பயிற்றுவிப்பாளர் சரியான தியான உத்திக்கு வழி காட்டுவார். மேலும் தியானத்தைப் பாதிக்கும் பல அம்சங்களைப் பற்றுயும் கூறுவார். (அப்போது உங்களுக்கு ஏன் தியானம் கைகூடவில்லைஎன்று அறிந்து கொள்ளலாம்).

#2: அனிஷாவை நம்பியது போன்று தியான உத்தியையும் நம்புங்கள்.

சரியான உத்தியினைக் கண்டறிந்தவுடன், முக்கியமானது, அந்த உத்தியின் மீது நம்பிக்கை வைப்பதுதான். அது சரி, நான் சரியாகச் செய்கிறேன், நிச்சயம் பலனளிக்கும் என்னும் நம்பிக்கைகள் மிக அவசியம்.

#3: நான்சி இன்னும் கூட ஒழுங்கான பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்.

கவனித்துப் பார்த்தீர்களானால், நான்சி ஒழுங்கற்று தியானப் பயிற்சியை மேற்கொண்டாள் என்பதை அறிவீர்கள். முதல் நாள் செய்தாள். பின்னர் இரு தினங்கள் செய்ய வில்லை. நான்காம் நாள் மீண்டும் துவக்கினாள். பின்னர் ஒரு நாள் விட்டு விட்டாள். . எந்தப் பயிற்சியுமே பலனளிப் பதற்கு, சற்று காலம் ஆகும். பொறுமை, அர்ப்பணிப்பு தேவையாகும். மூன்றே நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் தியானம் செய்து நான்சியைப் போன்று பலன் எதுவும் இல்லையே என்று நம்மைக் கூட எண்ணவைக்கும். உண்மை அதுவல்ல.

தியானம் நுண்ணிய ஆழ்ந்த நிலையில் நம் உணர்வுக்கு எட்டாமல் வேலை செய்யும். முதல் நாள் தியானத்தில், நான்சி 20 நிமிடங்களுக்கு எண்ணங்களால் மனம் அடைக்கப் பட்டு விட்டதாகக் கருதினாள். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் எண்ணங்களைத் தாண்டி இருந்திருக்கக் கூடும். சீரான ஒழுங்கான பயிற்சியினால் அந்தப் புள்ளியினை நாம் கண்டறிவோம்.

#4: ஒருவேளை, நான்சி அது நிகழ மிக அதிகமாக முயற்சித்திருக்கலாம்.

தியானத்திற்குச் சில விரைவுக் குறிப்புகள்:

1. அமைதியான இடத்தினைத் தேர்ந்தெடுங்கள். அது உங்களுள் ஆழ்ந்திருக்க உதவும்.

2. வசதியான இடத்தினைத் தேர்ந்தெடுங்கள் - 20 நிமிடங்கள்தான்.

3. குழுவாகத் தியானம் செய்யுங்கள். அது சிறப்பானது.

4.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது தியானம் செய்யுங்கள். நீங்கள் மகிழ்வற்று கீழாக உணரும்போது நிச்சயம் தியானம் செய்யுங்கள். அது உங்கள் மன நிலையை மேம்படுத்தும். தியானம் என்பது தானாக நிகழும். அதற்கென்று நீங்கள் தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை. தியானம் சரியாகச் செய்ய வேண்டுமே என்னும் பதட்டம், முயற்சி மற்றும் அழுத்தமே அது சரியற்றுப் போகக் காரணமாகும். சில சமயங்களில் பேரின்ப தியானம் ஏற்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒரு இடையூறான எண்ணமாக தியானத்தில் ஆகி, உங்கள் பயிற்சியைத் தடை செய்யலாம்.

தியானத்தில் அமரும்போது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் விட்டு விடுங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவமும் ஒரே மாதிரி இருக்காது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு சமயத்தில் இளைப்பாறிய அனுபவம் ஏற்படலாம், மற்றொரு நாள் அவ்வளவு சுகமாக இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை! இளைப்பாறி தியானம் செய்து கொண்டே இருங்கள்.

#5: இரவு 11.30 மணிக்கு, தூக்கம் வரும், தியானம் அல்ல!

உங்களது தியான நேரத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். 20 நிமிடங்கள்தாம், சரி! தற்போதைய வாழ்க்கை நிலை காலை மாலை என்று தியானம் செய்ய அனுமதிக்காது என்பதும் உண்மைதான்! ஆனால் இரவு நேரம் என்பது சரியல்ல! அதற்குப் பதிலாக, பகல் வேளையில் உதாரணமாக, மதிய உணவுக்கு முன்னால், அல்லது மாலை நேர ஆரம்பத்தில் ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். வயிறு நிறைந்திருக்கும்போது தியானம் செய்வது சரியல்ல, ஏனெனில் எளிதாகக் கண்ணயறும். வெறும் வயிறு அல்லது உணவுக்கு நெடுநேரத்திற்குப் பின்னர் வயிறு லேசாக இருக்கும்போது செய்வது நல்லது.

#6: அவளது உணவு சரியானதா?

தியான அனுபவத்திற்கு, நமது உணவுப் பழக்கங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிகமான இனிப்புக்கள், கார உணவு, காப்பி டீ போன்ற கஃபேன் நிறைந்த பானங்கள், அசைவ உணவுகள், ஆகியவை உங்களுடைய தியானத்தின் தரத்தினைப் பாதிக்கலாம். சரியாக உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவினை எடுத்து, நல்ல தியான அனுபவத்திக்கு வழி வகுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த முறை, நீங்கள், "என் தியானம் சரியாக இல்லை" என்று உணர்ந்தால் நான்ஸியின் ஆறு முக்கியக் காரணங்களைப் படித்து அதில் ஏதாவது ஒன்று உங்களுக்குப் பொருந்துகின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். மேலும், முன்னர் எப்போதோ பயிற்சி பெற்றிருந்தாலும் பரவாயில்லை, உங்கள் ஆசிரியருடன் தொடர்பு கொள்ளுங்கள். தியானம் செய்வதென்று தீர்மானித்து விட்டால் இதுவே தருணம். இளைப்பாறுங்கள்! தியானம் நிகழும் !

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது.

வரைவு: நிலாந்த்ரி தத்தா