எல்லாமே கடவுளாகும் (Everything is god in tamil)

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை

இந்த உலகில் கடவுளைத் தவிர வேறெதுவுமே இல்லை.  கடவுள் என்னும் சொல்லைப் பயன்படுத்த விருப்பமில்லையெனில், ஆற்றல் அல்லது அறிவுத்திறம் என்று நீங்கள் கூறலாம்.  அனைத்திலும்  படைப்பின் அடிப்படை உள்ளது. அது ஒன்று மட்டுமே; ஒரே சூரியன்தான், ஆனால் எந்த ஜன்னல் வழியாகவும் காண முடியும்.

பல தீர்க்கதரிசிகள் இவ்வுலகிற்கு  வந்து  மறைந்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே ஜன்னல்கள் போலவே இருந்திருக்கின்றனர். எந்த ஜன்னல் வழியாகவும், நீங்கள் ஒரே சூரியனை, ஒரே வானத்தினைக் காணலாம். சுவற்றிற்குப் பின்னால் தெரியும் அதே வானம் ஜன்னல் வழியாகவும் தெரியும். இறைவன் அனைவரிடமும்  உள்ளார். நாய்கள், பூனைகள், மரங்கள், இலைகள் மற்றும் எறும்புகளில் கூட,  படைப்பின் எல்லாவற்றிலும்  இறைவன் உள்ளார்.  ஜன்னல் வழியாகத் தெரியும் எதையும் நீங்கள் தவறவிட முடியாது ஏனெனில் ஜன்னல் வெளிப்படையானது. அது போன்று, அந்த அன்பும் அந்த மௌனமும் தவற விட முடியாதவை. அனைத்தும் ஒன்றே.

சொற்களின் நோக்கம் நாம் பயன்படுத்தும் அனைத்து சொற்கள் நாம் பேசும் பேச்சு, அனைத்தும், நமது இதயத்தில் அன்பையும் மௌனத்தையும் உருவாக்குவதற்குத்தான்.  நமது சொற்கள் மற்றவர்களின்  மனதில் வேதனையை ஏற்படுத்துமானால், அந்த சொற்கள் உண்மையில் தங்களது பணியை சரியாக நிறைவேற்றவில்லை.  அவை சரியான பாதையில் இல்லை.

நாம் எவ்வாறு இந்த இதய மௌனத்தினை அடைய முடியும்?  நன்றியுடன் இருங்கள். அது கடினமானதாக இருந்தால், தியானம், சில சுவாச நுட்பங்கள், மனதை  அமைதிப் படுத்தும் பயிற்சிகள் ஆகியவற்றைச் செய்யுங்கள். நீங்கள் முணுமுணுப்புடன் மகிழ்ச்சியின்றி இருக்கும்போது நீங்கள் நன்றியுடன் இருக்க முடியாது, அல்லவா? ஆனால் நீங்கள் அந்த நிலைமையைப்  பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கலாம். அதுவே முதல் படி.  மனம் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்போது அவ்வாறு செய்வதையே கூட, மனம் உணராமல் இருக்கலாம்.  முதல் படி  அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது.  அடுத்தது, உங்களிடம் இருப்பவை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது.  அப்போது மனம் நன்றியில் நிறையும். பின்னர் அனைத்துக் குறைகளும் மறைந்து விடும். நீங்கள் மிக எளிமையாகவும், இயல்பாகவும், மிக்க அன்புடனும்,  விடுதலையுணர்வுள்ளவராகவும் ஆவீர்கள்.

கடவுளின் விளக்கம் என்ன? கடவுள் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளவர் என்பதாகும். என்னிடம், உங்களிடம் அனைவரிடமும் நிறைந்துள்ளவர். ஆனால் மனம் அழுத்தமுற்று இருக்கும் போது கடவுளை உணர்ந்தறிய முடியாது. கண்ணாடி வெளிப்படையாக இல்லையெனில் , ஜன்னல்கள் திறக்கப் பட வில்லையெனில், சூரியனைக் காண முடியாது.

தியானம், சுவாச மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள் செய்வது மன ஜன்னல்களைச் சுத்தப் படுத்த, அனைத்து அழுத்தங்களையும் அகற்ற, மற்றும் நீங்கள்  அற்புதமாக உணரப் பெரிதும் உதவும்.  உங்கள் மனதில் நன்றி விதைகளை விதைத்து, உங்களை மிக உயர்ந்த நிலையினை அடையச்  செய்யும்.