எவ்வாறு முழுமையாக நிகழ் தருணத்தில் இருப்பது?

Wed, 06/15/2016 London

எவ்வாறு முழுமையாக நிகழ் தருணத்தில் இருப்பது?

 

15 ஜூன் 2016 லண்டன்

(சார்ட்டர்ட அக்கௌன்டன்ட்ஸ் பயிற்சி மையத்தில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அளித்த உரை)

 

அமைதி இல்லையேல் செழுமை இல்லை, எனவே  நீங்கள் செய்வதற்கு ஏதுமே இல்லையென நான் நினைக்கிறேன். [ சிரிப்பு ]. வாழ்வில் செழுமை இல்லையேல்  கணக்கு வழக்குகளுக்கு இடமே இல்லை.செழுமையின் அஸ்திவாரமே அமைதி தான். அவை ஒன்றை ஒன்று சார்ந்தவை.

செழுமை இருக்குமெனில் அமைதி இருக்கும், அமைதி இருக்குமெனில் செழுமை தொடரும். கோழி முட்டை மற்றும் அதன் குஞ்சு , இவற்றில் எது முன் வந்தது எனும் நிலை! அமைதி என்பது , ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கிய  பங்கு வகிக்கிறது. அமைதி இல்லையேல் படைப்பு  நிகழாது. உள்ளுணர்வு ஏற்படாது, சக்தியும் இருக்காது, எனவே  நமக்குள் சக்தியைக் கொணர்வது எப்படி ?

பயணம் இங்கே தொடங்குகிறது !

 

எப்போதேனும் நாம் நம்மைப்பற்றிச் சிந்திக்க நேரம் ஒதுக்கிஉள்ளோமா?நான் பேசிக் கொண்டு இருக்கிறேன், நாம் யாவரும் பேசிக்கொண்டு இருக்கிறோம். நான் மட்டும் தனியாகப் பேசவில்லை. ஒவ்வொருவரும் நமக்குள் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் . நமக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வுரையாடல் குறித்து நாம் அறிந்துள்ளோமா?

 

நான் எதுபற்றியேனும் கூறிக்கொண்டு இருக்கையில், உங்களுக்குள்ளேயே  ' ஆம் '' இல்லை ' என்ற விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. நான் கூறுவது சரிதானே!  நீங்கள் 'ஆம் ' அல்லது ' இல்லை ' என்று கூறியே ஆக வேண்டும். ஆகவே நீங்களும் உரையாடிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள்  மனதின் அந்த நிலையே, அதாவது 'ஆம் ' அல்லது ' இல்லை ' என்று கூறுகிறதே, அதுவே புத்தி.நாம் நம் புத்தியின் மீது சற்று கவனத்தைக் கொண்டு செல்வது அவசியம். இதனை எப்படிச் செய்வது? சுய பிரதிபலிப்பு! நம்மைப் பற்றி நாமே சிந்தித்துப் பிரதி பலிக்கையில் , அதன் மூலம் மனதின் குழப்பங்களும், மண்டிக்கிடக்கும் ஒட்டடைகளும், நீக்கப்படுகின்றன.  

 

நாம் ஒத்துக்கொள்வதா அல்லது மறுப்பதா - அதுவல்ல  ஆராயவேண்டியது.  ஆனாலும் 'ஆம் ' அல்லது ' இல்லை ' என நமக்குள்  விவாதிப்பது உண்மை. இதனை நாம் உணர்கிறோமா? இவ்விவாதம் பற்றி உணர்வதே நம்  புத்தியின் வளர்ச்சிக்கு முக்கியம். புத்திக்  கூர்மைக்கும், தெளிவுக்கும் மற்றும் சரியான பார்வைக்கும் மிகவும்  அவசியம். நாம் யாவரும் இப்போது 100% இங்கு இருக்கிறோமா? நம் நினைவுகளே  நம்மை பெரும்பாலும் ஆக்கிரமித்து  உள்ளன. நாம் ஒரு  சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருக்கையில்,நமக்குள் 101  விஷயங்கள் மனதின் பின்னணியில் போய்க் கொண்டு இருக்கின்றன. நீங்கள் 10 நிமிடம் ஒருவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருக்கையில், அப்பத்து நிமிடத்தில்  உங்கள்  மனம் மூன்று முறை  காபி அல்லது டீ இடைவேளைக்குச் சென்று  வருகிறது என்று மனோவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.   ஆகவே மனதின் இருப்பு  மனதின் பதிவுகளுக்கு  எதிரிடையான விகிதத்தில் உள்ளது.மனப்பதிவுகள் குறைவாக  இருப்பின், மனதின் இருப்பு அதிகம் எனலாம். எனவே பலவகையான தூண்டுதல்கள் நிறைந்துள்ள  இவ்வுலகில், அவற்றால் தொடர்ந்து நாம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,மனதின்  இருப்பு நன்முறையில் இருக்கச் செய்வது சாத்தியமா? 

நான் கூறுகிறேன்- ஆம், நம்மால் இயலும். மனிதனால் இரண்டையுமே கையாள இயலும். 

 

இப்போது நாம் இங்கு இருக்கிறோமா? இங்கு திரும்ப வர வேண்டும்.அவ்வப்போது இங்கும் அங்கும் சென்று வருகிறோம்.இந்த நிமிஷத்திற்குத் திரும்பி வருவதே  நமக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

 

பொதுவாக நம் மனம், நான்கு நிலைகளில் கூர்மையாகவும், விழிப்புடனும் காணப்படுகிறது.

 

1.  பயம் இருக்கையில்: சில சமயங்களில் பயம் ஒரு தூண்டுகோலாக அமைகிறது.பயமாக 

   இருக்கையில் மனம் எங்கும் செல்லாது. 100% நிகழ் காலத்திலேயே  இருக்கும்.

 

2. ' ஆ ' எனும் ஆச்சரிய நிலையில்: ஆச்சரியமான நிலையில் மனம் எங்கும் செல்லாது.

 

3. சரியான வாய்ப்பு ஏற்படுகையில்: ஒரு பெரிய வியாபாரத்திற்கான வாய்ப்பு ஏற்படுகையில்    மனம் அங்கேயே இருக்கும். பேராசை கூட நம் மனத்தினை நிகழ்காலத்திலேயே இருக்கச் செய்யும்.அந்நிலையில் நீங்கள் எதனைச் செய்ய  நினைத்தாலும், அச் செயலின் பால் அன்பும்,பொறுப்புணர்வும்  இருக்கும். அதுவே உங்களை நிகழ்காலத்தில், அங்கேயே இருக்கச் செய்யும்.

4. நீங்கள் யோகா, சுவாசப் பயிற்சி, தியானம் செய்கையில், நிகழ் காலத்திலேயே  இருப்பீர்கள். மனது நிகழ் காலத்தில் இருக்கக் கூடிய இந் நிலையானது, நம் பார்வையில் தெளிவும்,நம் கூற்றில் திருப்தியும் ஏற்படச் செய்கிறது.

 

நாம் கூறுவது திருப்தியாக இல்லாத நிலையில், நாம் கூறவந்ததைக் கூற இயலவில்லை என்பதை உணர்கிறோம். பெரும்பாலானோர் நினைத்ததைக் கூற இயலாது கஷ்டப்படுகிறார்கள்.

 

' ஒருவரும் என்னைப்  புரிந்து கொள்வதில்லை  தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்" எனக் கூறுவதை பல முறை நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா! நம் கூற்றில் தெளிவின்மையே இதன் காரணம். எனவே நம்  சுய மற்றும் தொழில் ரீதியான வாழ்வில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், நம் இருப்பின் முக்கியமான , இந்த நடுநாயகமான நம்  மனதினை இருக்கச் செய்வதன் மூலம் நமக்குள் இருக்கும் அல்லது இருக்க விரும்பும் திறமைகளை வளர்த்துக் கொள்ள இயலும்.

 

ஒரே சமயத்தில் பல வகையான செயல்களை செய்ய நம்மால் இயலும்.மனதினை ஒரு நிலையில் இருக்கச் செய்யுங்கள்,சந்தோஷமாக, உங்கள் புன்சிரிப்பினை எவரும் பறித்துச் செல்லாது வாழுங்கள். மனதினை இங்கும் அங்கும் செல்லாது ஒரே நிலையில் இருக்கச் செய்யுங்கள் .

பழமையானதும்,புதுமையானதுமான பல நுணுக்கமான செயல் திட்டங் களை  நான் கூறுகிறேன். அவற்றினால் பலரும் பயனடைந்துள்ளார்கள்.

 

கேள்வி / பதில் :

 

மன அழுத்தத்தினைக் கையாள்வது எப்படி?

 

முதலில் மன அழுத்தம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ? மனஅழுத்தம் என்பது, மிக அதிகமான வேலை மற்றும் மிகக் குறைந்த  நேரம் அல்லது போதிய சக்தி இன்மை. மிக அதிகமான செயல்கள்  செய்ய இருக்கும் நிலையில், அதற்கான போதிய நேரமோ அல்லது  சக்தியோ இல்லையெனில் மனஅழுத்தம் ஏற்படுகிறது.எனவே உங்கள் வேளை பளுவைக் குறைக்கலாம், ஆனால் இக்கால கட்டத்தில் அது  இயலாது. அல்லது உங்கள் வேலை நேரத்தை அதிகரிக்கச் செய்யலாம், இதுவும் இயலாது. எனவே நாம் நம் சக்தியின் அளவைப் பெருக்குவதே 

இதற்கான உபாயம்.

 

நம் சக்தியைப் பெருக்குவது எப்படி ?

 

1. சரியான அளவு உணவு உட்கொள்வது அவசியம். அதிகமும் கூடாது, குறைவாகவும் சாப்பிடக்கூடாது.சரியான அளவு  கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் புரதம் நிறைந்த சரிவிகித உணவு  உண்ணுதல் அவசியம்.

2. சரியான அளவு உறக்கம்: 6- 8 மணி நேர உறக்கம். அதிகமும்  கூடாது. குறைவாகவும் உறங்குதல்  தவறு.

 

3. சில ஆழ்ந்த சுவாசப்பயிற்சிகள் செய்வது அவசியம்.இதனால் நம் சக்தி  பெருகும்.

 

4. சில நிமிட தியானம்.சில நிமிட ஆழ்ந்த ஓய்வு. ஆழ்ந்த பிரக்ஞையுடன் கூடிய ஓய்வு. அதனையே நான் தியானம் என்கிறேன். சில நிமிட  தியானம் எல்லா வகையான மனஅழுத்தத்தினையும் போக்கவல்லது. காலையிலும், மாலையிலும் 15 - 20 நிமிட தியானம் செய்தீர்களெனில்  அதுவே போதுமானது. உங்கள் வாழ்வு நலமாக இருக்கும். உணவும், தியானமும் பகலில் செய்வது, நலமெனக் கூறுவேன். பணியிடங்களில் யாவரும் ஒன்றாக உட்கார்ந்து,சிலநிமிட தியானம்  செய்து, ஒன்றாக பகலுணவு உண்கையில்- புத்துணர்வு பெறுகிறார்கள் . காலையில் பணியிடத்திற்கு வந்தது போலவே நாள் முழுவதும்  மிகுந்த சக்தியுடன் , புத்துணர்வு மிக்கவராய் இருப்பதைக் காணலாம்.

 

                                                          ----------------------------------