பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் : ஸ்ரீ ஸ்ரீ யின் விளக்கவுரை (Patanjali Yoga Sutra in tamil)

முன்னொரு காலத்தில், பகவான் விஷ்ணு தன்வந்திரியாக அவதரித்து, நோய்களைக் குணமாக்க ஆயுர்வேத முறையை அளித்த பின்னரும் மக்கள் நோய் வாய்ப்படுகின்றனர் என்று கூற விழைந்து, அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் விஷ்ணு பகவானை அணுகினர். மேலும் அவ்வாறு நோயுறுபவர்களுக்கு என்ன செய்வது என்றும் கேட்க விரும்பினர்.

சில நேரங்களில் வெறும் உடல் நோய் மட்டுமன்று, மனநோய், மற்றும் கோபம், காமம், பேராசை, பொறாமை ஆகிய உணர்ச்சி நோய்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இத்தகைய தூய்மை யின்மையிலிருந்து எவ்வாறு ஒருவன் விடுபடுவது? அதற்கு சூத்திரம் என்ன?

ஸ்ரீ விஷ்ணு பகவான், ஆதிசேஷன் என்னும் ஆயிரம் தலைகளைக் கொண்ட பாம்புப் படுக்கையிலிருந்தார். ரிஷிகள் அவரை அணுகிய போது அவர்களுக்கு, (விழிப்புணர்வைக் குறிப்பிடும்) ஆதிசேஷனையே அளித்தார். ஆதிசேஷனே இப்பூவுலகில் மகரிஷி பதஞ்சலியாகப் பிறப்பெடுத்தவர்.

யோகசூத்திரங்கள் என்று அழைக்கப்படும் யோகத்தினைப் பற்றிய ஞானத்தினை அளிக்க பதஞ்சலி இந்த உலகிற்கு வந்தார். ஆயிரம் பேர் ஒன்று கூடினாலன்றி தான் யோக சூத்திரங்களை விவாதிக்கப் போவதில்லை என்று பதஞ்சலி கூறினார். எனவே விந்திய மலைக்குத் தெற்கே ஆயிரம் பேர் அவரது உரையினைக் கேட்க ஒன்று கூடினர்.

இது தவிர பதஞ்சலிக்கு வேறொரு நிபந்தனையும் இருந்தது.அவர், தனக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு திரையை வைக்கப் போவதாகவும், யாரும் அதை விலக்கக்கூடாது, அவ்விடத்தை விட்டு விலகவும் கூடாது அனைவரும் அவர் உரை கூறி முடிக்கும் வரையில் அங்கேயே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

பதஞ்சலி திரையின் பின் இருந்து, இந்த ஞானத்தினை கூடியிருந்த ஆயிரம் பேருக்கு அளித்தார், ஒவ்வொருவரும் அதில் அமிழ்வுற்றனர். மாணவர்கள் எவ்வாறு இந்த அறிவினைப் பெற்றோம் என்று நம்ப முடியாத அளவுக்கு அது ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்தது. திரையின் பின்னால், குரு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஒவ்வொருவரையும் இந்த ஞானத்தினைப் புரிந்து கொள்ளச்செய்தது எவ்வாறு என்பதை அவர்களால் நம்ப முடிய வில்லை. அனைவரும் வியப்பில் ஆழ்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் உள்ளடக்கி வைக்க முடியாத அளவுக்கு பெரும் சக்தி மற்றும் உற்சாகம் பெற்றிருந்தனர். ஆயினும் அவர்கள் ஒழுங்குடன் இருக்க வேண்டியதாயிற்று.

ஒரு சிறுவனுக்கு சிறு நீர் கழிக்க வேண்டியதிருந்தது. எனவே அவன் அந்த அரங்கினை விட்டு வெளியேறினான். அவன் அமைதியாகச் சென்று திரும்பி விடலாம் என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டான். அப்போது மற்றொருவன் ," திரையின் பின்னே குரு என்ன செய்து கொண்டிருக்கின்றார், நான் காண வேண்டும் " என்ற ஆவல் கொண்டான்.

அச்சிறுவன் திரையை விலக்கினானா ? அடுத்த புதன் கிழமையன்று, அடுத்து வரும் பதஞ்சலியின் யோக சூத்திரா ஞானப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தக் கதையிலிருந்து என்ன பொருளை நீங்கள் கண்டறிந்து கொண்டீர்கள்?

இந்தக் கதையில் ஏராளமான ஆழம் உள்ளது. புராணங்கள் எதையும் விவரிப்பதில்லை. அவை கதைகளை மட்டுமே கூறுகின்றன. அதன் பொருளை நாம்தான் திறந்தறிய வேண்டும். ஆகவே நீங்கள் அனைவரும் கண்டறிய வேண்டியது என்ன?

எவ்வாறு குரு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அனைவருக்கும் ஞானசெய்தியினைத் தெரிவித்தார்? திரையின் முக்கியத்துவம் என்ன?