எந்தத் தயக்கமும் இல்லாமல் தெய்வீக அன்பில் உயர்ந்தெழுங்கள் (Divine love in tamil)

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை

சில வேலைகளைச் செய்ய சில தகுதிகள், திறன்கள், மற்றும் வலிமை தேவை. நீங்கள் 100 கிலோ பளுவைத் தூக்க வேண்டுமெனில், அதற்குறிய பலம் தேவை. எல்லோராலும் அதைச் செய்ய முடியாது. அன்பு என்பது திறன் மற்றும் பலம் என்பதானால், எல்லோராலும் அன்பு செலுத்த முடியாது. ஆனால் அன்பு அனைத்துத் திறன்கள், அனைத்துத் தர்க்கம் ஆகியவற்றினைக் கடந்தது ஆகும். நீங்கள் முட்டாளோ, அறிவாளியோ, நீங்கள் செல்வந்தரோ ஏழையோ அனைவரும் அன்பில் திளைக்கலாம். பலவானோ பலவீனமானவரோ எவ்வாறாயினும் நீங்கள் அன்பு செலுத்தலாம்.

அன்பு உங்கள் திறனைச் சார்ந்தது அல்ல. அதற்கு ஓர் எளிய புரிந்துணறும் ஒப்புதல் மட்டுமே தேவை. அது நிகழ வெகு நேரம் எடுத்துக் கொள்வதில்லை. காலம் ஓர் அம்சமே அல்ல, சான்றோர் சகவாசம் உண்மையில் அதை விரைவாக நிகழச் செய்யும். சகவாசம் என்பது உங்கள் மெய்யுணர்வினை, உங்கள் மனதை முன்னேற்றி, உங்கள் இதயத்தை மலரச் செய்யும், அல்லது மூடி விடும்.

தர்க்கத்தின் மூலம் அன்பினைக் கைப்பற்ற முடியாது. தர்க்கம் விஷயங்களை வெட்டி, பகுப்பாய்ந்து கிழித்து விடும். ஆனால் அன்பு அதற்கு நேர்மாறானது. அது அனைத்தையும் ஒன்றிணைத்து விடும். அன்பு ஐக்கியப்படுத்தும் ஒரு நிகழ்முறை; தர்க்கம் என்பது ஆய்வு செய்யும் ஒரு முறை. நீங்கள் வாதாடத் துவங்கும் தருணத்திலேயே மற்றவர் உங்களைச் சரியாக அறிந்து கொள்ளவில்லை என்று கருதுகிறீர்கள். எனவே, வாதங்களின் மூலமாக அவரை/அவளை நீங்கள் சமாதானமாக நம்ப வைக்க முயல்கின்றீர்கள். தவறான புரிதலை நீக்குவதற்காக நீங்கள் வாதிடவோ அல்லது விவரிக்கவோ முற்படுகின்றீர்கள். ஆனால் சில சமயங்களில் அது அதிகக் குழப்பம் , அதிகத் தவறான புரிதல் ஆகியவற்றை உருவாக்கும். நீங்கள் மௌனமாக இருந்தால் அனைத்தும் தானாகவே சரியாகி விடும். உங்களுடைய தரப்பே சரி என்று பிறரை நம்ப வைக்க விரும்பும்போது, மிக மோசமாகத் தோல்வியடைந்து விடுவீர்கள். உங்களுடைய சரியான நிலையினை பிறருக்கு நம்பவைக்க முனையும்போது, அவர்கள் உண்மையில் நம்புவதில்லை, ஏனெனில் உங்களுடைய வாதம் ஏற்கனவே ஒரு விலகலை உருவாக்கி, உறவினைப் புளிப்பாக்கி விட்டது.

தர்க்கத்திற்குப் பல சாத்தியக் கூறுகள் உள்ளன. உண்மையென்றும் உண்மையல்ல என்றும் நிரூபிப்பதற்கு தர்க்கத்தினை பயன்படுத்தலாம். வழக்கறிஞர்களைக் கேளுங்கள் ! ஒன்றினை நிரூபிக்கவும், மறுக்கவும் ஒரே விஷயத்தையே எடுத்துக் கொள்வர்.

மூன்று விதமான தர்க்கங்கள் உள்ளன. தர்க்கம் அதாவது சரியான தர்க்கம், குதர்க்கம் -தவறான தர்க்கம், விதர்க்கம் தகுதியுள்ள தர்க்கம். நான் ஓர் உதாரணம் தருகின்றேன். ஒரு கதவு பாதி திறந்திருக்கிறது என்றால் பாதி மூடியிருக்கிறது என்று பொருள். இது சரியான தர்க்கம். பாதி திறந்திருக்கும் கதவு பாதி மூடியிருக்கிறது என்று ஏற்றுக் கொள்கின்றோம். எனவே, முழுவதும் திறந்திருந்தால் முழுவதும் மூடியிருக்கிறது என்று கூறுவது குதர்க்கம் அல்லது தவறான தர்க்கம். ஒரு பூ மேஜையின் மீது இருக்கிறது, மேஜை தரையின் மீது இருக்கிறது எனவே பூ தரையின் மீது இருக்கிறது என்று கூறுவது குதர்க்கம். இந்த குதர்க்கத்தின் மூலம் அறியாமையே அதிகமாகிறது. விதர்க்கம் என்பது ஆச்சர்யமானது." நான் யார்" " இவையெல்லாம் என்ன? " வாழ்க்கை என்பது என்ன? " என்றெல்லாம் எண்ணிப் புரிந்து கொள்ளுதலும் தர்க்கம்தான். ஆனால் அது விதர்க்கம், அதாவது தகுதி பெற்ற தர்க்கம்.

ஆகவே, தர்க்கத்தினையே நம்பியிருக்காதீர்கள். விவாதம் என்பது இதயபூர்வமான ஒருங்கிணைப் பின்மையினையே குறிக்கின்றது. முக்கியமாக, ஜென் புத்தப் பிரிவில், நீங்கள் ஓர் ஆசிரியர் அல்லது குருவிடம் பயிலும்போது, உங்களை வாதிடவே அனுமதிக்க மாட்டார்கள். உண்மை என்பது அனைத்து வாதங்களுக்கும், விவாதங்களுக்கும் அப்பாற்பட்டது. வாதங்கள் வீணான வையே. அவை நீங்கள் சரி என்பதை பிறருக்கு நம்பவைக்க முயலும் வெறும் சொற்கள்தாம். ஆனால் அன்பு என்னும் பரப்பில் அவை வேலை செய்யாது. அதனால்தான் பல காதல்கள் முறிந்து விடுகின்றன. ஏனெனில், அவை ஏதோ ஓர் தர்க்கத்தினை அல்லது விவாதத்தினை நம்பித் துவங்குகின்றன. அவன் அல்லது அவள் மற்றவரை மிக அதிகமாகக் காதலிப்பதாக நம்பவைக்கும் வாதம். அதுவே அந்த உறவினை முறிக்கப் போதுமானதாகும்.

மெய்யுணர்வு தெய்வீக அன்பினை நோக்கிப் பாய்கின்றது. ஏனெனில், அதுவே மூலாதாரம். இந்தப் பிரபஞ்சத்தில், அனைத்துமே சுழற்சியின் அடிப்படையிலானது, அனைத்தும் மூலத்திடமே திரும்பிச் செல்கின்றன. இந்த அன்பின் உச்சத்திற்காக ஆழமாக எழும் ஏக்கமே இந்த உலகினைச் சுழலச் செய்கின்றது.