பிரார்த்தனையின் சக்தி

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை

பெரும்பாலும் மக்கள், " ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஓர் பெண் இருக்கிறாள்" என்று கூறுவதுண்டு. ஆனால், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் தெய்வம் " நான் உனக்குப் பின்னால் இருக்கிறேன்" என்று கூறுவதாகவே நான் கருதுகிறேன். மேலும் நீங்கள் மனமுருகிப் பிரார்த்தனை செய்யும்போது, உங்களில் தெய்வம் பிறக்கின்றது.

பிரார்த்தனை செய்வதற்கு சிறப்புத் திறன்களோ தகுதிகளோ தேவையில்லை. அறிவாளியாக இருந்தாலும் இல்லையெனினும், செல்வந்தராயினும் ஏழையாயினும் நீங்கள் பிரார்த்தனை செய்யலாம்.

பிரார்த்தனை என்பது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த ஓர் முக்கியக் கருவியாகும். கையாள முடியாத அளவு அதிகமான தடைகள் ஏற்படும்போது, ஆழ்ந்த பிரார்த்தனை அற்புதங்களை நிகழ்த்தும். என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள். என்ன செய்ய முடியாதோ, அதற்குப் பிரார்த்தனை செய்யுங்கள். எதுவாயினும், அந்த உயர்ந்த சக்திக்கே இறுதி மொழி உண்டு என்பதை அறிந்து பிரார்த்தனை மூலம் அந்த சக்தியினைத் தட்டி எழுப்ப முடியும்.

பிரார்த்தனை என்பது அமர்ந்து சொற்களை ஜபம் செய்வது என்பது பொருளல்ல. சாந்தமான அமைதியான தியான நிலையில் இருப்பதே ஆகும். வேத பாரம்பரியத்தில், பிரார்த்தனைக்கு முன்னரும், பிரார்த்தனைக்குப் பின்னரும் தியானம் என்று கூறப் பட்டிருக்கின்றது. மனம் கூர்மையாக இருக்கும்போது, பிரார்த்தனை மேலும் அதிக சக்தியுள்ளதாகிறது.

நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். மனம் வேறெதிலோ மூழ்கியிருந்தால், அது பிரார்த்தனையே அல்ல. வேதனை இருக்கும்போது அதிக ஈடுபாடு இருக்கும். அதனால்தான் மக்கள் வேதனையில் இருக்கும்போது பிரார்த்தனையில் மனதைத் திருப்புகின்றனர். பிரார்த்தனை என்பது ஆத்மாவின் அழுகுரல். பிரார்த்தனை, நீங்கள் நன்றியறிதலுடன் இருக்கும்போதும், முற்றிலும் உதவியின்றி இருக்கும்போதும் நிகழ்கின்றது. இரு நிலைகளிலுமே பிரார்த்தனைக்குப் பதிலளிக்கப் படுகின்றது. நிர்கதியாக இருக்கும்போது தானாகவே பிரார்த்தனை தோன்றுகிறது. அதனால்தான், ‘ நிர்பலதோ பல்ராம் ' என்று கூறப் படுகிறது. நீங்கள் பலவீனமாக இருக்கும்போது இறைவன் உங்களுடனேயே இருக்கிறார். நீங்கள் உங்கள் வரையறைகளை, எல்லைகளைத் தொட்டுக் கொண்டிருக்கும் தருணமே பிரார்த்தனை என்பதாகும்.

யாருக்காகப் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. சமயம் பிரார்த்தனைக்கு வார்த்தைகள், குறியீடுகள், சடங்குகள் ஆகியவற்றை ஏற்படுத்தும்போது பிரார்த்தனை அவற்றை யெல்லாம் கடந்து விடுகின்றது. பிரார்த்தனை என்பது நுண்ணிய உணர்வு நிலையிலேயே உள்ளது, அது சொற்களுக்கும் சமயங்களுக்கும் அப்பாற்பட்டது. பிரார்த்தனை என்னும் செயலே, மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியுள்ளது.

உங்கள் பிரார்த்தனையில் உண்மையாக இருங்கள். தெய்வத்தினை ஏமாற்ற முற்படாதீர்கள். சாதரணமாக, உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லாதபோது, விருந்தினர், அல்லது விருந்துகள் இவை இல்லாதபோது, மிஞ்சியிருக்கும் நேரத்தில் நீங்கள் தெய்வத்தினை அணுகுகின்றீர்கள். இது தரமான நேரம் அல்ல. முக்கியமான நேரத்தினை இறைமைக்கு அளித்தால் நிச்சயம் பலன் பெறுவீர்கள். உங்கள் பிரார்த்தனைகள் பதிலளிக்கப் படாதது ஏனெனில், நீங்கள் தரமான நேரத்தினை அளிக்கவில்லை. பிரார்த்தனைகள் பதிலளிக்கப் பட, உங்கள் விருப்பம் தீவிரமாக இருக்க வேண்டும். தீவிர விருப்பங்கள் உங்களைப் பக்திக்கு அழைத்துச் செல்லும். நம்பிக்கையுடன், உங்களைச் சுற்றி இறைமையின் இருப்பினை அனுபவிக்கும்போது பக்தி எழுகின்றது.

தெய்வத்திடம் கேட்பதை அடைய அவசரப் படாதீர்கள். கடவுளிடம் ஓர் வரம் பெற வேண்டும் என்னும் நோக்கம் இருக்கும்போது, நீங்கள் அவசரப் படுகின்றீர்கள். ஆனால், கடவுள் உங்களுக்கே சொந்தம் என்று அறியும்போது, கடவுளிடமிருந்து எதையும் அடையும் அவசர மில்லை. உங்களுடைய அவசரம் உங்களை நிலைகுலையச் செய்து சிறுமைப் படுத்தும். இன்றைய அவசர உலகத்தில், மக்கள் பயத்தினாலோ பேராசையாலோ பிரார்த்தனை செய்கின்றனர். சாதரணமாக, நீங்கள் ஒன்றை விரும்பும்போது, அதை அடைய விரும்பி பிரார்த்தனை செய்கிறீர்கள்.

உண்மையான பிரார்த்தனை என்பது அடையும் விருப்பம் என்பதற்கு முற்றிலும் எதிரானது. அது கடவுளைக் கௌரவித்து, அனைத்தையும் தெய்வத்திற்கு சமர்ப்பிப்பது என்பது ஆகும். கௌரவித்தல் பக்தியினை எடுத்து வருகின்றது, சரணாகதிக்கு அழைத்துச் செல்கின்றது. பக்தி வாழ்க்கையினை குணப்படுத்தும் சிகிச்சையினை அளிக்கின்றது.

பக்தியும் நம்பிக்கையும் பிரார்த்தனையின் மைய உள்ளகமாகும். பக்தியும் நம்பிக்கையுமின்றி உண்மையான பிரார்த்தனை நிகழ முடியாது. நம்பிக்கை என்பது, எப்போதும் கடவுளின் பாதுகாப்பு உங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்தறிதல் ஆகும். பக்தி என்பது உள்ளிருந்து மலருதல். இறைமையிடம் பக்தியின்றி இருந்தால், உங்கள் வாழ்க்கை அமைதியின்றியே இருக்கும். பக்தியில் உங்களுக்குள் ஏக்கம் எழும். ஏக்கம் ஏற்படும்போது, உண்மையான பிரார்த்தனை தானாகவே நிகழும்.