மாறிவரும் உலகின் உறுதிப்பாடு

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை

மெய்யுணர்வின் மாறாத் தன்மையினை அறிந்தால் உலகின் நிச்சயமற்ற நிலையினை நிம்மதியுடன் ஏற்க முடியும். சாதரணமாக மக்கள் இதற்கு எதிரானதையே செய்கின்றனர். அவர்கள் உலகினைக் குறித்து நிச்சயமாகவும், கடவுளைப் பற்றி நிச்சயமற்றும் இருக்கின்றனர். நம்பக்கூடாதை நம்பி வேதனை அடைகின்றனர். நிச்சயமற்ற நிலை உறுதித் தன்மையை நோக்கி ஏக்கத்தினை விளைவிக்கின்றது. இந்த உலகிலேயே மிகவும் நிலையானது சுயமே.

உலகம் மாறும். சுயம் மாறாதது. மாறாத ஒன்றினை நம்பி மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைத்தும் நிச்சயமற்றவை என்று நிச்சயமாக இருந்தால் அப்போது விடுதலை பெறுகின்றீர்கள். நீங்கள் அறியாமையுடன் நிச்சயமற்று இருந்தால், கவலையுடனும் பதற்றத்துடனும் இருக்கின்றீர்கள். நிச்சயமற்றது பற்றிய விழிப்புணர்வுடன் இருத்தல் ஒரு உயர்ந்த மெய்யுணர்வு நிலையினை புன்முறுவலுடன் எடுத்து வருகின்றது.

பெரும்பாலும் மக்கள் நிச்சயமான நிலையே விடுதலை என்று எண்ணுகின்றனர். நிச்சயமற்று இருக்கும்போது அந்த விடுதலையினை உணர்ந்தால், அதுவே உண்மையான விடுதலை. பெரும்பாலும் உங்கள் உறுதிப்பாடு அல்லது நிச்சயமற்ற நிலை உலக உறவினை அடிப்படையாக கொண்டது. நிச்சயமற்ற உலக உறவின் நிச்சயத்தினை அறிதல், முழுமையின் இருப்பினை நிச்சயமாக அறிந்து கட்டுக்கடங்கா அம்முழுமையிடம் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது.

நிச்சயமற்ற நிலையின் மத்தியில் ஒருவன் ஞானத்தில் மட்டுமே உற்சாகத்துடன் இருக்க முடியும். பெரும்பாலும் நிச்சயமற்ற நிலையிலுள்ளவர்கள் செயல்பட மாட்டார்கள். வெறுமே காத்திருப்பார்கள். நிச்சயமற்ற நிலையில் செயல்படுவது வாழ்க்கையை ஒரு விளையாட்டாக ஒரு சவாலாக ஆக்குகின்றது. நிச்சயமற்ற நிலையில் இருப்பது என்பது விட்டு விடுவதாகிறது. உலக உறவினைப் பற்றிய நிச்சய நிலை மனச்சோர்வினை உருவாக்குகின்றது. சுயத்தினைப் பற்றிய நிச்சயமற்ற நிலை பயத்தினை உருவாக்குகின்றது.

பொருளகத்தினைப் பற்றிய நிச்சயமற்ற நிலை மெய்யுணர்வின் நிச்சயத்தினுக்கு எடுத்துச் செல்கின்றது. நேரம் மிகக் குறைவாக இருப்பதை உணரும்போது அமைதியற்று இருக்கின்றீர்கள் அல்லது விரிவடைந்த விழிப்புணர்வில் இருக்கின்றீர்கள். நேரம் அதிகமாக இருப்பதை உணரும்போது துன்புறுகின்றீர்கள் அல்லது கூர் மனதுடன் இருக்கின்றீர்கள். சந்தோஷமாகவும் அன்பில் திளைத்தும் இருக்கும்போது நீங்கள் நேர இழப்பினை அடைகின்றீர்கள். குறித்த காலத்திற்கு முன்பே இருந்தால் அப்போது சலிப்பாக உணருகின்றீர்கள். காலம் உங்களுக்கு முன்னே சென்றால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைகின்றீர்கள். நிகழ்வுகளின் நடப்பினைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆழ்ந்த தியானத்தில் நீங்களே காலம். அனைத்துமே உங்களுக்குள் நிகழ்கின்றன. வானத்தில் மேகங்கள் சேர்ந்து விலகுவது போன்று உங்களுக்குள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நீங்களே காலமாக இருக்கும்போது நீங்கள் அறிவுத்திறனுடம் அமைதியுடனும் இருக்கின்றீர்கள்.

மனம் சந்தோஷமாக இருக்கும்போது, அது விரிவடைந்து நேரம் குறைவாகத் தோன்றுகிறது. மனம் மகிழ்ச்சியற்று இருக்கும்போது சுருங்கி, நேரம் நீண்டு கொண்டே போவது போன்று தோன்றுகிறது. மனம் சமநிலையில் இருக்கும்போது அது காலத்தினைக் கடந்து விடுகிறது. இந்த இரண்டு தீவிர நிலைகளிலிருந்தும் தப்பிக்க, பலர் மதுபானம் அல்லது தூக்கம் இவற்றினை நாடுகின்றனர். ஆனால் மனம் சோர்வாக அல்லது நினைவற்று இருந்தால் அது அனுபவங்களை அடைவதில்லை. சமாதி, மனமற்ற நிலை அல்லது நேரம் கடந்த நிலை என்பதே அமைதி, உண்மையான அமைதி. அதுவே மிகச் சிறந்த ஆற்றுப்படுத்தும் சிகிச்சையுமாகும்.

மனம் நேரத்தினை அனுபவிப்பது போன்று ஒவ்வொரு க்ஷணத்திலும் ஒரு பெரிய மனம் பிரம்மாண்டமான எல்லையற்ற அமைப்பு சக்தியுடன் இருக்கின்றது. எண்ணம் என்பது இந்த க்ஷணத்தில் ஓர் நீர்க்குமிழி போன்றதுதான். சில நிமிஷ நேர சமாதி, மனதிற்கு ஆற்றலை அளிக்கின்றது. தூங்குவதற்கு சற்று முன்னேயோ அல்லது தூங்கி எழும் சில கணங்களிலேயோ மெய்யுணர்வு காலமற்ற நிலையினை அனுபவிக்கின்றது.

வாழ்க்கை என்பது உருவ, மற்றும் உருவமற்ற என்னும் இரண்டின் கலப்பேயாகும். உணர்ச்சிகளுக்கு உருவம் இல்லை. ஆனால் அவற்றின் வெளிப்பாடு உருவம் உடையது.ஆத்மாவிற்கு உருவம் இல்லை ஆனால் அது இருக்குமிடம் உருவமுடையது. அது போன்றே ஞானமும் அருளும் உருவமற்றவை. ஆனால் அவை உருவடிவிலேயே வெளிப்படுகின்றன. உருவமற்றதை ஒதுக்கித் தள்ளுவதன் மூலம் நீங்கள் செயலற்று பொருளாசையுடன் பயத்துடன் இருக்கின்றீர்கள்.

உருவத்தினை ஒதுக்கித் தள்ளுவதன் மூலம் நீங்கள் கனவுடனும், உணர்ச்சிகளிலும் சமநிலையின்றி பயனற்ற துறவு நிலையினை அடைகின்றீர்கள். ஏதேனும் ஒன்று நம்ப முடியாத அளவு அழகாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தால் அது கனவோ என்று அதிசயிக்கின்றீர்கள். பெரும்பாலும் நீங்கள் எதை உண்மையென்று ஏற்றுக் கொள்கின்றீர்களோ அது மகிழ்ச்சியானதல்ல. ஆகவே துன்பமுடன் இருக்கும்போது அழகானதை கனவு என்று எண்ணுகின்றீர்கள். துன்பமே உண்மை என்று நம்புகிறீர்கள். அதுதான் உண்மையினை உண்மைக்கு மாறானது என்றும் உண்மையற்றதை உண்மையென்றும் தெரிந்து கொள்ளுதல் ஆகும்.

உண்மையில் அனைத்துத் துன்பங்களும் உண்மையல்ல. ஓர் ஞானி, சந்தோஷமே உண்மையானது, ஏனெனில் அது ஒருவரது இயல்பு என்பதைத் தெரிந்து கொள்வான். துன்பம் உண்மையல்ல, அது நினைவுத் திறன் விளைவிப்பது ஆகும். அனைத்துமே மாறும் கனவுகள் என்று ஏற்றுக் கொள்ளும்போது உங்களது உண்மையான இயல்பில் நிலைத்திருக்கின்றீர்கள்.

ஓர் கொடுங்கனவு உண்மையென நம்பப் படும் கனவு. கனவில் குழப்பங்களே இருப்பதில்லை. இவையெல்லாமே கனவா என்று நீங்கள் அதிசயித்துக் கொண்டிருக்கும்போது உண்மையை அறிந்து விழித்தெழுகின்றீர்கள். நிகழ்வுகள் வரும், போகும். அவை மலர்கள் போன்று அழிந்து விடும்.ஆனால் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு மனிதனும் தம்முள் தேனைக் கொண்டிருக்கின்றனர். ஒரு தேனீயைப் போன்று ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு க்ஷண த்திலும் தேனை எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றீர்கள். ஓர் சுறுசுறுப்பான தேனீயைப் போன்று உங்கள் இருப்பிலேயே நிலைத்திருங்கள்