மாறும் மனநிலைகள்

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை

ஒருவருக்கொருவரிடையேயான உறவினை அறிந்து கொள்வது  மிக முக்கியமானது. எது அத்தகைய உறவினைப் பாதிக்கின்றது? கருத்து வேறுபாடு துவங்கும் போது உறவுகள் பாதிக்கப் படுகின்றன.

உங்களையே நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.  எப்போதுமே உங்களுடன் நீங்கள் ஒத்துப் போயிருக்கின்றீர்களா?  நேற்று ஒரு விதமான எண்ணம் இருந்திருக்கலாம், இன்று அதுவே வேறு விதமாக மாறியிருக்கலாம்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எண்ணங்கள் இன்றிருக்கும் எண்ணத்தினைப்  போன்றே இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே உங்களுக் குள்ளேயே ஒத்துப் போகுதல் இல்லாதபோது  ஏன்  அது பிறருடன் இருக்கக் கூடாது?

கருத்து வேறுபாடு ஏற்படும் அந்த நபர் உங்களுடைய பழைய அல்லது இன்றைய புதிய பதிப்பு என்று கூட வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய எண்ணத்தினையும் உணர்ச்சிப் முறை களையும் நீங்கள் காண வேண்டும். அவற்றில் ஓர் தாள கதி உள்ளது.  மெய்யுணர்விலும் ஓர் தாள கதி உள்ளது. உங்களுக்குள் இருக்கும் இந்த தாளப்பிரமாணத்தின் ஒத்திசைவினைக் கண்டறிந்து கொள்வதுதான் ஆன்மீகம் என்று அழைக்கப் படுகின்றது.

ஆன்மீகம் என்பது  கற்பனை அல்ல. அது உங்களது இருப்பினைக் கவனித்து வருவது ஆகும். உங்கள் உடலைப் பற்றி உங்களுக்கு முழுமையாகத் தெரியுமா? நீங்கள் ஒருவரைப் பார்க்கும் போது, அவரது உடல் உருவத்தினைக் காண்கிறீர்கள். உங்கள் உடலை நீங்கள் கண்டனுப வித்திருக்கின்றீர்களா?  உங்கள் உடல், உங்கள் சுவாசம், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சிகள், மற்றும் உங்களது வாழ்வின் ஆதாரம் ஆகியவற்றை அனுபவிப்பதுதான் தியானம். தியானம் என்பது வாழ்க்கை சக்தியினை அனுபவித்து, அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதுதான். அது எந்த முயற்சியுமின்றியே நிகழ்கின்றது.

மனமும் உடலும்  எதிரெதிரான விதிகளின் படி செயல்படுகின்றன. மனதைப் பொறுத்த வரையில், முயற்சியற்ற நிலைதான் முக்கியம். முயற்சி எடுத்து எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் இளைப்பாறும் தருணத்தில் நினைவுத்திறன்  திரும்ப வரும்.  நமக்குள் இருக்கும்  படைப்பாற்றல், அறிவுத்திறன், நினைவுத் திறன்  அனைத்தும் முயற்சியின்றியே நிகழ்கின்றன. ஆனால் உடலைப் பொறுத்த வரையில், நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். முயற்சி எடுத்தால்தான் தசைகளை வலுவாக்கிக் கொள்ள முடியும்.

எவ்வாறு கவனிக்கிறீர்கள்? ஓசைகள் உங்கள்  செவிப்பறையில் வந்து  விழுகின்றன, மனம் வேறெங்கோ இருந்தால்,உங்களால் கேட்க முடியுமா?  உங்களுக்குள் இருக்கும் ஒரு திறன் மூலமாகத்தான் கவனிக்கின்றீர்கள்.  அதுதான் மனம். கவனிக்கும் போது, ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லது மறுக்கிறீர்கள்.  நீங்கள் ஆம் என்கிறீர்களா அல்லது இல்லை என்கிறீர்களா என்று கவனியுங்கள்.  இந்த ஆம் அல்லது இல்லை என்று நீங்கள் கூறுவதுதான் அறிவு என்று அழைக்கப் படுகிறது.

ஒரே  மெய்யுணர்வுதான்  மனம், அறிவு, சித்தம் (விழிப்புணர்வு) ‘தான்’ என்னும் அகங்காரம் என்று செயல்படுகின்றது.  நமது முன்னோர், இந்த நான்கு மனநிலைகளையும் அந்தகரன் சதுஷ்டய  என்று அழைத்தனர்.

அது போன்று நினைவுத்திறனைக் கவனித்தால், அது எதிர்மறையினையே பற்றிக் கொள்கின்றது. ஒருவரிடமிருந்து பெற்றுள்ள பத்து பாராட்டுக்களை  மறந்து விட்டு ஒரே ஒரு அவமானத்தை நினைவில் வைத்துக் கொள்வீர்கள். இதை மாற்ற வேண்டும். இவ்வாறு எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கு மாற்றும் முறை யோகா என்று  அழைக்கப் படுகின்றது.

யோகா உங்களை மீண்டும் குழந்தையாக்கும். அது உங்கள் இயல்பினை மீட்டெடுப்பது மட்டுமன்றி, உங்கள் மனதையும் இளமையாகவும் பிரகாசமாகவும் வைக்கின்றது. உணர்தல், கவனித்தல்  மற்றும் வெளிப்படுத்துதல் ஆகிய மூன்றையும் யோகா மேம்படுத்துகின்றது.

பிறருடன் ஆன உறவினை மேலாண்மை செய்ய முதலில் உங்களுடன் உங்களுக்கு ஓர் உறவு இருக்க வேண்டும். உங்களுடனான உங்கள் உறவு நேர்மை என்று அழைக்கப் படுகிறது. உங்களுடன் உங்களுக்கு சரியான உறவு இல்லையெனில் நேர்மையில்லை என்பதாகும். இரண்டாவதாக, முறைசாராமல் பழகுவது பிறருடன் நல்ல உறவினை  ஏற்படுத்துகின்றது, ஏனெனில் அங்கு தவறுகளுக்கு இடம் உண்டு. எந்த உறவிலும், எந்த நிலைமையிலும் முழுநிறைவு என்பது  இருக்காது.

இன்று இந்த உலகிலுள்ள பெரிய பிரச்சினை உணர்ச்சிகளின் உறுதியற்ற நிலை. நீங்கள் முறைசாரா மனப்பாங்கினை ஏற்படுத்திக் கொள்ளும்போது, ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்துகிறீர்கள். எந்த உராய்வுமின்றி சூழலுக்கு நீங்கள்  தலைமை  ஏற்றுக் கொண்டு உங்களைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்ற கவலையின்றி இருக்கலாம்.

வாழ்க்கையில் எந்த சூத்திரத் தொகுப்பும் கிடையாது. நீங்கள் மிகவும் நேர்மையானவர், மிகவும் நீதிமான் என்று எண்ணிக் கொண்டிருந்தால் நீங்கள் உங்களுக்குள்ளேயே உங்களையறியாமல் சற்று விரைப்பானவராக ஆகின்றீர்கள். பிறரைக் குற்றம் கூறி சகிப்புத் தன்மையற்றவராக ஆகின்றீர்கள். உங்களிடமும் குறைகள் உள்ளன என்று நீங்கள் உணர்ந்தறியும்போது, உங்களால் பிறரிடம் உள்ள குறைகளை ஏற்றுக் கொள்ள முடியும்.

அதனால்தான் " ஒரு நல்ல செயலைச் செய்து அதை மறந்து விட வேண்டும்" என்று கூறப் படுகின்றது. உங்களது தீய  அல்லது கெட்ட குணங்கள் உங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பது மட்டுமில்லாமல்  உங்களது நல்ல குணங்களும் உங்களை விறைப்பாகவும் முரட்டுத் தனமாகவும் கோபமாகவும் ஆக்குகின்றது. அதனால்தான், நீங்கள் உங்களது தீய மற்றும் நல்ல குணங்களை  சமர்ப்பித்து விட வேண்டும். இளைப்பாறி  விட வேண்டும்.

ஒரு வேளை, நீங்கள் இரண்டு நாட்களுக்குத் தூங்க வில்லையெனில், சிறிய விஷயங்கள் கூட உங்களுக்கு  எரிச்சல் தரும். ஆனால்  நீங்கள் நன்றாக ஓய்வெடுத்திருந்தால் நிலைமையே வேறாக இருக்கும்.

தியானம் மட்டுமே நீங்கள்  எதிர்மறை எண்ணங்களைக் கடக்க ஒரே வழி. அதன் பின்னர்  நேர்மறை எண்ணங்கள் தாமாகவே தன்னிச்சையாக  வரும். மன அழுத்தமும் பதட்டமும் எதிர்மறை எண்ணங்களுக்குக் காரணமாகின்றன. நேர்மறையான மனப் போக்கு இருந்தால் நீங்கள் படைப்பாற்றல் உள்ளவராகவும், செய்யும் எந்தச் செயலிலும் வெற்றியுடனும் இருப்பீர்கள்.