பணி புரியும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தங்களைத் தகர்த்தெறியும் வழிமுறை குறிப்புக்கள்

பணி புரியும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தங்களைத் தகர்த்தெறியும் வழிமுறை குறிப்புக்கள்

 

" அட! மீண்டும் காலை நேரத்தில் அலுவலகத்தில் வேலைப் பளு அழுத்துமே ! என்று மலைத்துக்  கவலைப் படுபவர்களுக்கு சில எளிய வழி முறை குறிப்புக்கள்  இங்கு கொடுக்கப் பட்டுள்ளன.

இத்தகைய சக்தி வாய்ந்த பயிற்சியை மேற்கொண்டால் எத்தகைய வகை வேலைப் பளுவையும் விளையாட்டாக, திறமையாக சமாளித்து விடலாம். வேலைகளைக் குறைந்த நேரத்தில் செய்து முடித்து விடலாம்.

 

குறிப்பு 1 : இளைப்பாறிப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

இரவு பகல் வேலை செய்வதற்கு ஏற்றபடி நம் உடல் எவ்வளவு அழகாக வடிவ மைக்கப் பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?நாம் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டால், நல்ல ஆரோக்கியத்தையும் பெறலாம். நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு வழி உறக்கம். மற்றொரு வழி தியானம். இரண்டுமே அதனதன் தனித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டது. ஆனால் ஒன்றுக்கு மற்றொன்று மாற்று வழி ஆக முடியாது.

"நள்ளிரவு 12  மணி முதல், அதிகாலை வரை உள்ள இடைப்பட்ட நேரத்தில் நம் உடலில் செல்கள் புத்துணர்வு பெற்று புதுப்பிக்கப் படுகின்றன.அப்போது கட்டாயம் உறங்க வேண்டும். அப்போது செல்கள் புதுப்பிக்கப் படாவிட்டால் நீங்கள் சீக்கிரம் முதுமை அடைந்து உங்கள் சருமம் பொலிவிழந்து விடும்." என்று கூறுகிறார் ஸஹஜ் சமாதி தியான வல்லுநர் திரு.பாரதி ஹரீஷ்.

தூக்கம் எவ்வாறு சோர்ந்த உடலை வலுப்படுத்தி, திசுக்களை புதுப்பிக்கிறதோ அதே போல தியானமும் உடலின் ஒவ்வொரு திசுவையும் தூய்மைப் படுத்தி, மனதையும் தூய்மைப் படுத்துகிறது. தேவையற்ற எண்ணங்களை நீக்கி, மனதைத் தெளிவு பெறச் செய்கிறது. ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

" ஆயுர்வேத நாடி பரிசோதக மருத்துவரைக் கலந்து கொண்டு, ' மேத ரசாயனம் ' அல்லது நாராயண கல்பா என்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அவை உங்களுக்கு சுகமான தூக்கத்தைப் பெற உதவி செய்து அமைதியடையச் செய்கிறது. நினைவாற்றலையும் அதிகப் படுத்துகிறது." என்று ஆயுர்வேத மருத்துவர் சிக்ஷா தாக்கூர் கூறுகிறார்.

 

குறிப்பு 2 : சிறு சிறு இடைவேளைகளை எடுத்துக் கொள்ளுங்கள் 

சில நேரங்களில் பணியிடத்தில் வேலைப்பளு நம்மை நீண்ட நேரம் முடக்கிப் போடலாம். குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதால், நாம் இடைவெளியே எடுத்துக் கொள்ளாமல் வேலை செய்கிறோம்.

எப்படியானாலும் இரண்டு மணிநேரத்திற்கொருமுறை ஓய்வு எடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். அது உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு இடைவிடாத வேலையால் ஏற்படும் சலிப்பு, மந்தத் தன்மை ஆகியவற்றைப் போக்குகிறது. அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வதால் , முடிக்க வேண்டும் என்னும் பரபரப்பு இல்லாமல் குறித்த நேரத்தில் வேலையை முடித்து விடுவீர்கள்.சில நாட்களுக்கு இம்முறையைக் கடைப்பிடித்துப் பாருங்கள். முன்பை விட அழுத்தமின்றி வேலையில் ஈடுபட முடிவதைக் கண்டு நீங்களே ஆச்சரியப் படுவீர்கள்.

ஒரு தேநீர் இடைவேளையோ, சக அலுவலருடன் அமர்ந்து பேசுதலோ, அல்லது கண்களை மூடிக் கொண்டு உங்கள் இருக்கையிலேயே அமர்ந்தபடியே தியானம் செய்வதோ தவறாமல் செய்ய வேண்டும்.

 

குறிப்பு 3 : உங்கள் உணவுப் பழக்கத்தைக்  கண்காணியுங்கள். வேலைச்  சுமை யின் காரணமாக நாம் நமது ஆரோக்கியத்தைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ஆரோக்கியமான உணவைப் பற்றி மூன்று கேள்விகள் உங்களை ஆரோக்கியத்தின் நீண்ட பாதைக்கு இட்டுச் செல்லும்.

  • எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள்?
  • எந்த வகையான உணவைச் சாப்பிடுகிறீர்கள்?
  • எந்த அளவு உணவு எடுத்துக் கொள்கிறீர்கள்?

இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு உணவுப் பழக்கத்தை மேற் கொண்டால், நீங்கள் ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுகிறீர்கள்.

உண்மையில் நன்றாகக் பசி எடுத்த பின்னர் உண்ணுதல் உணவு எடுத்துக் கொள்ள சரியான நேரம். வயிற்றில் பசி ஏற்படுவதை கவனித்து உணர்வதே சரியான வழி. நல்ல உணவு என்பது உங்கள் வயிறு சுலபமாக செரிக்கக் கூடிய உணவு தான். குறிப்பிட்ட ஆகாரம் எடுத்துக் கொண்டவுடன் நன்றாக உணர்ந்தால் அது உங்களுக்கு ஒத்துக் கொள்கிறது என்று பொருள். உண்ட பிறகு நெஞ்சு எரிச்சல்,  நிலை கொள்ளாத தன்மை , வயிற்றில் வலி இருந்தால் உண்ட அந்த உணவு உங்களுக்கு ஒத்துக் கொள்ள வில்லையென்று பொருள். அப்படி எதுவும் இல்லையெனில் அது உங்களுக்கு ஏற்ற உணவு என்று எடுத்துக் கொள்ளலாம். கூடுமான வரையில் வயிற்றைக் காலியாக விட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் காலியான வயிற்றில் அமிலம் தேவையின்றி சுரந்து பிரச்சினை ஏற்படக் காரணமாகி விடும்.

 

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறு சிறு அளவில் உணவு எடுத்துக் கொள்வது உயிர் சக்தி ஓட்டத்தை ஒரே சீராக வைக்கும் என்று கூறப் படுகிறது. உணவும் எளிதில் ஜீரணமாகி விடும். இது நம்மை ஆரோக்கியமாக வைக்கும். நம் உடலை மதிக்க வேண்டியது மிக அவசியம். நாம் அதைப் பொறுப்போடு மதிப்புக் கொடுத்து, பார்த்துக் கொண்டால் அதுவும் நமக்கு ஒத்துழைக்கும்.

 

மதிய உணவு அதிக அளவு எடுத்துக் கொண்டால் தூக்கம் வந்து விடும். பசி அடங்குவதற்கு மட்டும் தேவையான உணவை மதியம் எடுத்துக் கொள்ள வேண்டும். காலை உணவு மிகவும் முக்கியம் ஏனெனில், அதுதான் நமக்கு நிறைய அதிக சக்தியை அளிக்க வல்லது. இரவில் நம் உடலின் சக்தி ஓட்டம் குறைவாக இருப்பதால்,இரவு உணவு எளிமையாக இருக்க வேண்டும். இரவில் அதிக உணவு எடுத்துக் கொள்வது உடல் எடையைக் கூட்டி விடும்.

 

குறிப்பு 4 : உடலை நீட்டி மடக்குங்கள்:

அலுவலகம் செல்லும் முன், சிறிது யோகப் பயிற்சி செய்து வீட்டுக் கிளம்புவது வேலையைச் சுமையாக கருதாமல் இருக்க மற்றொரு வழியாகும். உங்களுக்குத் பிடித்த இசையை கேட்டுக் கொண்டே லேசாகப் பாடிக் கொண்டே பயிற்சி செய்யலாம். தொலைக் காட்சி பார்ப்பதையும் செல்போனில் மற்றும் சமூக வலைத் தளத்தில் நேரம் செலவழிப்பதைக்  குறைத்துக்   கொண்டு, காலையில் விழித்தெழுதல் உங்கள் நாளை புத்துணர்வோடு வைத்திருக்கும்.

உங்கள் இருக்கையில் அமர்ந்த படியே செய்யக் கூடிய சுலபமான யோகப் பயிற்சி நிலைகள் உங்களுக்காக இங்கு அளிக்கிறோம். கணினி முன் பல மணி நேரம் அமர்ந்து இருப்பதால் ஏற்படும் வலிகளை  இப்பயிற்சிகள் நீக்கி விடும்.

 

அதிக அளவு வேலை செய்ய விரும்புபவர்களுக்கு:

சுமேரு சாப்ட்வேர் சொலுஷன் (Sumeru Software Solutions) நிறுவனத்தில் பணி புரியும் மூத்த மென்பொறியாளர் ஹர்ஷல் யாதவ் " தினமும் நூற்றுக் கணக்கான வேலைகளைக் கொடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் செய்வேன்." என்று கூறியபோது, "எப்படி உங்களால் இப்படி அதிசயிக்கத் தக்க அளவில் நம்பிக்கையுடனும், கத்தி முனை போன்ற கவனக் கூர்மையுடனும் வேலை செய்ய முடிகிறது என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர்," தினமும் நான் தியானம் செய்கிறேன். அதனால் என்னால் அமைதியாக விருப்பத்துடன் வேலை செய்ய முடிகிறது. பதிமூன்று ஆண்டுகளாக தினமும் தியானம் செய்து, வருகிறேன் என்பதைப் பெருமையோடு கூற விரும்பு கிறேன். நான் அமைதியாக இருப்பதால், என்னுடைய குழுவினரிடம் சுமுகமாகத் தொடர்பு கொண்டு வேலைகளை பகிர்ந்து அளிக்க முடிகிறது."என்று கூறினார். அவருடைய வேலையில் எதுவும் அவரைத் தடை செய்ய முடியாது.

 

“நீச்சல், வார இறுதி நாட்களில் மலையேறுதல், போன்றவற்றையும் நான் செய்து வருகிறேன் என்கிறார்  ஹர்ஷல். இதுவே"ஏதோ வாழ்கிறோம்" என்றில்லாமல் மகிழ்ச்சியுடன் வளைய வர ஏதுவாகிறது "என்கிறார்.

வார இறுதி நாட்களுக்குப் பிறகு மீண்டும் முழு சக்தியுடன் உற்சாகம் பொங்க வேலை செய்யத் தயார் ஆகிறார்.

வேலை செய்ய விரும்பும் ஓர் மனிதரிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.....

மூன்று தொடர் கட்டுரைகளில் இதுவே முதலாவது ஆகும். அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தங்களைத் தகர்த்தெறியும் நான்கு வழி முறைகள் என்பது பற்றிய தொடர்களில் இந்த நான்கு நுட்பங்களை படித்துப் பயன் பெறுங்கள்.