நச்சு நீக்கி உடல் தூய்மை பெற யோகா (Detox Yoga for Cleansing the Body in tamil)

தோல், மாசுள்ள காற்று, கலப்படமான ஆரோக்கியமற்ற உணவு ஆகியவற்றின் மூலம் நமது உடல் ஏராளமான நச்சுக்களை உள்ளிழுத்துக் கொள்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? அதே சமயம் சிறுநீரகங்கள் கல்லீரல், நுரையீரல்கள் ஆகியவற்றின் வழியாக நச்சுக்களை அகற்றவும் மிகத் திறமையாக நமது உடல் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. வியர்வை வழியாகவும் நச்சுக்கள் வெளியேறுகின்றன.

எனினும் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், முறையற்ற உணவும் இந்த நச்சுக்கள் வெளியேறுவதைத் தடை செய்து அதனால் உடல் செயல்பாட்டினைப் பாதிக்கின்றது. உள்ளே சுத்தப் படுத்தவேண்டியதன் அதாவது நச்சுக்களை நீக்கவேண்டியதன் தேவையை ஏற்படுத்துகின்றது.

தலையிலிருந்து கால் வரையில் உங்கள் உடலைப் பாருங்கள். அடிக்கடி வலிகள், தோல் பிரச்சினைகள், அஜீரணம், முன்னதாகவே முதிர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றனவா? அப்போது ஆம், உடல் சுத்தப் படுத்தப் பட வேண்டும். உங்கள் உடலின் நச்சுக்களை நீக்க இதோ சில எளிய யோகப் பயிற்சிகள்.

குளிர்காலத்தில், உடல் அதிகமான நச்சுக்களைச் சேர்த்துக் கொள்கின்றது. ஏனெனில் அப்போது உடற்பயிற்சி குறைந்து, அறியாமையால் அதிக சத்தில்லாத பதப் படுத்தப் பட்ட பொருட்களை உண்பதுதான் காரணம். துரித உணவு, முழுமையாக நனைக்கப் பட்ட கொழுப்பு நிறைந்த பொரித்த உணவு, ஆகியவை மிகவும் நச்சுத் தன்மை உள்ளவை. அவை மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். மேலும், செயற்கையான இனிப்பினையும் சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரையையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அவை ஜீரணத்திற்குக் கடினமானவை, ரத்தத்தில் சர்க்கரையைக் கூட்டும் அபாயமுடையவை. அவை கல்லீரலைக் கஷ்டப் படுத்தி, நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

இனிப்பு உண்ண வேண்டும் என்னும் ஆசையை பழங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள், இனிப்பான பானங்கள், சோடா ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள். நச்சுத் தன்மையை உடலிலிருந்து நீக்குவதற்கு காப்பி ,டீ ஆகியவற்றையும் குறைத்து விடுங்கள். மது, புகையிலை ஆகியவற்றைத் தவிர்ப்பது நச்சு நீக்க மிகவும் மிகவும் தேவையாகும்.

உடலின் நச்சுக்களை நீக்குவதற்கு மற்றொரு வழி, புதிய பழங்களையும்,பச்சைக் கைகளையும் உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது ஆகும். நார்சத்து மிகுந்த முள்ளங்கி, முட்டைகோஸ் ,மற்றும் திராட்சை போன்ற பழங்கள் நச்சுக்களை எளிதாக நீங்க உதவும். அது போன்றே விடமின் C நிறைந்த உணவுகளும் உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி விடும். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் எடுத்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

காலையில் அரை எலுமிச்சம் பழம் சூடான நீரில் பிழிந்து எடுத்துக் கொண்டு நாளைத் துவங்குவது மிகவும் நல்லது. கிரீன் டீ மிக நல்ல தூய்மைப் படுத்தும் பானம் ஆகும். குளிர் காலத்தில் நான்கு கப் வரையில் கிரீன் டீ எடுத்துக் கொண்டு கல்லீரலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றலாம். வெள்ளை அரிசியைத் தவிர்த்து பிரவுன் அரிசியும், க்லோரோபில் நிறைந்த பச்சைக் காய்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை உடலில் நச்சுக்கள் சேர்வதைத் தடுக்கும்.

உடலின் நச்சுக்களை நீக்க யோகா மிகவும் உதவும். அது லாக்டிக் அமிலம், கார்பன் டை ஆக்சைடு மற்றும் லிம்பாடிக் திரவங்களை உடலிலிருந்து நீக்குகின்றது. ஆழ்ந்த நீட்டுதல் பயிற்சிகளான, த்ரிகோணாசனா, பச்சிமோத்தனாசனா , உச்த்தசனா, ஆகியவை ஜீரணக் கோளாறுகளையும் மலச்சிக்கலையும் நீக்கி விடுகின்றன. வாயுவை வெளியேற்றும் பவன முக்தாசனா, வயிறு மற்றும் குடல் பிரச்சினைகளை நீக்குகின்றது. மத்சேந்தராசனா அடிவயிற்று உறுப்புக்களை மசாஜ் செய்கின்றது. ஸ்டீம் குளியல் வியர்வை மூலம் நச்சுக்களை நீக்கும் வழி ஆகும்.

இறுதியாக மூச்சின் முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிடாதீர்கள். கபால பாதி ,பாச்த்ரிகா (Bhastrika) ஆகிய ப்ராணாயாமப் (Pranayama) பயிற்சிகள் நச்சுக்களை வெளியேற்றி, உடலுக்குப் புதிய சக்தி அளிக்கின்றன. சுதர்சனக்ரியா (Sudarshan Kriya) மிக வலிமையான தாளகதியுடன் கூடிய நச்சுக்களை நீக்கும் மூச்சுப் பயிற்சியாகும். தினந்தோறும் செய்யும் யோகா, சுதர்சனக் க்ரியா மற்றும் தியானம் (Meditation) மனதையும் உடலையும் ஆற்றுப் படுத்தி, வலிமையை அதிகரித்து, எதிர்ப்பு சக்தியினைக் கூட்டி, உங்களது செயல்திறனை அதிகப் படுத்துகின்றன.

உங்களுடைய உடலுக்கு சத்து மிகுந்த உணவும் உறக்கத்தையும் தவிர அதிகம் தேவைகள் உள்ளன. அவற்றை அடையவும் நோயற்ற வாழ்விற்கும், திறனுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் மேற்கண்டவை உதவுகின்றன. எனவே இந்தக் குறிப்புக்களைப் பயன்படுத்தி, நச்சுக்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிப் பயணப் படுங்கள்.

யோகப் பயிற்சி உடலையும் மனதையும் ஊக்குவித்து ஏராளமான உடல்நல பயன்களை அளிக்கின்றது. ஆயினும் இது மருந்துகளுக்கு மாற்று அல்ல. தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் யோகா பயிற்சிகளைக் கற்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.