
சிவனின் தலையில் உள்ள பிறை நிலவின் முக்கியத்துவம்
சிவ தத்துவம் என்பது மனம் இல்லாத இடமாகும், சந்திரன் மனதைக் குறிக்கிறது. மனம் இல்லாதபோது இந்த ‘மனமின்மையை’ எவ்வாறு வெளிப்படுத்த முடியும், அதை யாராலும் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும், வெளிப்படுத்தவும் சிறிதளவு மனம் அவசியமாகிறது
மனம் இல்லாத, எல்லையற்ற உணர்வுக்கு வெளிப்படையான உலகில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்தச் சிறிய மனம் தேவை. எனவே, அந்த வெளிப்படுத்த முடியாததை வெளிப்படுத்த, அந்தச் சிறிய மனம் (பிறை நிலவு) தலையில் காணப்படுகிறது.
ஞானம் மனதிற்கு அப்பாற்பட்டது, ஆனால் அது மனதின் சாயலுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும், இது பிறை நிலவால் குறிக்கப்படுகிறது.
சிவபெருமானின் உடுக்கையின் முக்கியத்துவம்
உடுக்கை என்பது எப்போதும் விரிவடைந்து மீண்டும் சுருங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் குறியீடாகும். ஒரு விரிவிலிருந்து அது சுருங்கி, மீண்டும் விரிவடைகிறது; இதுவே படைப்பின் செயல்முறையாகும். நம் இதயத் துடிப்பை கவனித்தால், அது ஒரே நேர்கோடாக இல்லாமல், மேலும் கீழுமாக செல்லும் ஒரு தாளகதியில் இருப்பதைப் பார்க்கலாம். இந்த உலகம் முழுவதும் தாளகதியால் ஆனதே; ஆற்றல் எழுந்து, சுருங்கி, மீண்டும் எழுகின்றது. இதையே உடுக்கை குறிக்கிறது. உடுக்கையின் வடிவத்தை பாருங்கள் — விரிவடைந்து, சுருங்கி, மீண்டும் விரிவடையும் அமைப்பு அதில் தெளிவாகத் தெரிகிறது.
உடுக்கை என்பது ஒலியின் சின்னமாகும். ஒலி என்பது தாளம்.மேலும் ஒலி என்பதே ஆற்றல். முழுப் பிரபஞ்சமும் அலைச் செயல்பாடு (wave function) மட்டுமே; குவாண்டம் இயற்பியலும் இதையே சொல்கிறது – முழு பிரபஞ்சமும் தாளகதிகளைத் தவிர வேறில்லை. அது ஒரே ஒரு அலை (அத்வைதம்). எனவே, உடுக்கை பிரபஞ்சத்தின் அத்வைத இயல்பைச் சுட்டிக்காட்டுகிறது.
சிவபெருமானின் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பின் முக்கியத்துவம்
எதுவும் இல்லாத, வெறும் உள்ள்ளுணர்வு எனும் ஆகாயம் போன்ற சைதன்யம் மட்டுமே உள்ள சமாதி நிலையே சிவன்
அங்கு செயல்கள் இல்லை; விழிப்புணர்வு உண்டு. இந்த விழிப்புணர்வை விவரிக்க, சிவனின் கழுத்தில் ஒரு பாம்பை வைத்தனர். எனவே பாம்பு விழிப்புணர்வின் குறியீடாகும்.
தியான நிலையில் கண்கள் மூடியிருக்கும் போது, அந்த நபர் தூங்குவது போலத் தோன்றலாம்; ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருப்பதில்லை, முழுமையாக விழிப்புடன் இருக்கிறார். இந்த உணர்வு நிலையை வெளிப்படுத்தவே சிவபெருமானின் கழுத்தில் பாம்பு சித்தரிக்கப்படுகிறது.
சிவபெருமானின் திரிசூலத்தின் முக்கியத்துவம்
திரிசூலம் என்பது சைதன்யத்தின் விழிப்பு, கனவு மற்றும் தூக்கம் ஆகிய மூன்று அம்சங்களைக் குறிக்கிறது, அதேபோல், அது மூன்று குணங்களையும் – சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சிவபெருமான் திரிசூலத்தைத் தாங்கியிருப்பது, அவர் இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டவராக இருந்தாலும், அவற்றை தாங்கி நிலைநிறுத்துபவராக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
தெய்வீகத்தன்மை மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டது; அதே சமயம், அந்த மூன்று குணங்களையும் ஒன்றிணைத்து வைத்திருப்பதும் அதுவே.
‘சூலம்’ என்பதற்கு பிரச்சினைகள் அல்லது துன்பம் என்று பொருள். திரிசூலம் என்றால் அனைத்து வகையான துன்பங்களையும் அழிப்பது.
வாழ்க்கையில் எழும் மூன்று வகையான வலிகள்:
1. ஆதிபௌதிகம் (உடல் சார்ந்த துன்பம்)
2. ஆத்யாத்மிகம் (ஆன்மீகத் துன்பம்)
3. ஆதிதெய்விகம் (தெய்வீக / சூட்சுமத் துன்பம்)
எல்லா பிரச்சனைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் உங்களை விடுவிப்பது திரிசூலம். அது சிவனின் கையில் உள்ளது.
சிவபெருமானின் தலையிலிருந்து பாயும் கங்கை நதியின் முக்கியத்துவம்
கங்கை என்பது ஞானத்தை குறிக்கிறது; ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஞானம். தலை என்பது எப்போதும் ஞானத்தின் சின்னம். இதயம் என்பது அன்பின் சின்னம்.
கங்கை அன்பாக இருந்திருந்தால், அது பகவான் சிவனின் இதயத்திலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது தலையிலிருந்து வெளிப்படுகிறது; அதனால் அதன் அர்த்தம் ஞானமே என்பதைக் காட்டுகிறது
ஞானம் விடுதலையளிக்கிறது; ஞானம் சுதந்திரத்தை வழங்குகிறது; ஞானம் தூய்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் ஞானத்தின் இயல்புகளாகும். மேலும், ஞானம் இயக்கத்தையும் (நடமாட்டத்தையும்) குறிக்கிறது. ஆகவே கங்கை (ஞானம்) பகவான் சிவனின் (தெய்வீகத்தின்) தலையிலிருந்து வெளிப்பட வேண்டும் என்பதே அதன் தத்துவப் பொருள்.
சிவபெருமானின் மூன்றாவது கண்ணின் முக்கியத்துவம்
மூன்றாவது கண் எச்சரிக்கையையும், விழிப்புணர்வையும் குறிக்கிறது.
சிவனின் நீல உடலின் முக்கியத்துவம்
நீல நிறம் ஆகாயத்தைப் போன்றது. நீலம் எல்லையற்றது, அனைத்தையும் ஊடுருவி நிறைந்திருப்பதைக் குறிக்கிறது. அதற்கு எந்த வரம்பும் இல்லை; எந்த வடிவமும் இல்லை. சிவனுக்கு உண்மையில் உடல் இல்லை. சிவன் ஒருபோதும் ஒரு மனிதராக இருந்ததில்லை.
அளவிட முடியாத, எல்லையற்ற தெய்வீகத்தைக் குறிக்கவும், அந்த தெய்வீகத்தை மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தவும், பழமையான ரிஷிகள் ஒரு வடிவத்தை உருவாக்கினர்.
ஞானத்திற்கு வடிவம் இல்லை; ஆனால் அது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் ஊடுருவி நிறைந்துள்ளது.
முழு உலகமும் சிவனால் நிரம்பியுள்ளது — அவருடைய உடல் முழு பிரபஞ்சமாகவே உள்ளது.
சிவலிங்கத்தின் முக்கியத்துவம்
லிங்கம் என்றால் அடையாளம் என்று பொருள். உண்மை என்ன, யதார்த்தம் என்ன என்பதை அடையாளம் காண உதவும் ஒரு சின்னமே லிங்கம். கண்ணுக்குப் புலப்படாத ஒன்றை, ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் மூலம் அறிய முடிந்தால், அதுவே லிங்கம் ஆகும்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எப்படி அறிவது? உடலின் ஒரு பகுதி மூலம் மட்டுமே இந்தக் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நீங்கள் அடையாளம் காண முடியும். அதனால்தான் பிறப்புறுப்பு லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
அதேபோல், இந்தப் படைப்பின் இறைவனை எப்படி அடையாளம் காண்பது? அவருக்கு உருவம் இல்லை! எனவே அவரை அடையாளம் காண ஒரு குறியீடு இருக்க வேண்டும் என்று ஞானிகள் கூறினர். எனவே, ஆண் மற்றும் பெண் என்ற இரு வடிவங்களையும் ஒன்றிணைத்து, வடிவமற்றதும், அடையாளமற்றதும் ஆன இறைவனை, முழு பிரம்மாண்டத்திலும் (படைப்பில்) அனைத்தையும் ஊடுருவி நிறைந்திருக்கும் பரம்பொருளை அடையாளம் காணும் அந்த ஒரே சின்னமே சிவலிங்கம்.
சிவலிங்கம் மிக மிகப் பழமையானது; உண்மையில் அது மிகப் பழமையான சின்னமாகும். சிவலிங்கத்தின் வடிவத்தின் மூலம், ஒருவர் வடிவமற்ற தத்துவத்தை நோக்கி பயணிக்க முடியும். அது பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்தை உருவாக்கியவரையும் ஒரே சின்னமாகக் காட்டும் பிரதிநிதியாகும்.
படைப்பில் உள்ள இரண்டு அடிப்படைத் தத்துவங்கள் — சிவமும் சக்தியும் — சிவலிங்கத்தில் பிரதிபலிக்கப்படுகின்றன. அமைதியான, வெளிப்படாத தத்துவமும், இயக்கமுள்ள வெளிப்பட்ட தத்துவமும் ஒன்றாக இணைந்து சிவலிங்கமாக வெளிப்படுகின்றன. சிவலிங்கம் என்பது வெறும் சிவனை மட்டும் குறிக்கவில்லை; அது முழுமையான உச்ச பரம்பொருள் சைதன்யத்தின் (Supreme Consciousness) நிறைவான வெளிப்பாடாகும்.
நந்தி (காளை) – பகவான் சிவனின் வாகனத்தின் முக்கியத்துவம்
நந்தி சிவபெருமானின் வாகனம். காளை நீண்ட காலமாக உலகம் முழுவதும் தர்மத்தின் (நீதியின்) அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. காளையின் மீது சவாரி செய்யும் சிவபெருமான், நீங்கள் நீதியுள்ளவராகவும் உண்மையுள்ளவராகவும் இருக்கும்போது, எல்லையற்ற சைதன்யம், நிர்மலமான விழிப்புணர்வு உங்களுடன் இருப்பதை குறிக்கிறது.
சிவ தாண்டவத்தின் முக்கியத்துவம்
முழு படைப்பும் ஒரே சைதன்யத்தின் (சிவனின்) நடனமாகும். அந்த ஒரே சைதன்யமே நடனமாடி, உலகில் கோடானுகோடி உயிரினங்களாக வெளிப்பட்டது. ஆகவே இந்த எல்லையற்ற படைப்பே பகவான் சிவனின் நடனம் அல்லது சிவ தாண்டவம் ஆகும். முழு உலகமே சிவனின் இருப்பிடமாகும்
கைலாயம் – சிவனின் வசிப்பிடத்தின் முக்கியத்துவம்
சிவனின் வசிப்பிடம் கைலாய மலை என்றும், தகன பூமி என்றும் கூறப்படுகிறது.
கைலாயம் என்றால் ‘கொண்டாட்டம் மட்டுமே இருக்கும் இடம்’ என்று பொருள், தகன பூமி என்பது வெற்றிடம் மட்டுமே இருக்கும் இடம். தெய்வீகம் வெற்றிடத்திலும் கொண்டாட்டத்திலும் வாழ்கிறது. உங்களில்
வெற்றிடம் இருக்கிறது, உங்களில் கொண்டாட்டம் இருக்கிறது.
‘ஓம் நம சிவாய’ என்று உச்சரிப்பதன் முக்கியத்துவம்
ஓம் நம சிவாய என்பது மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்றாகும். இது உங்கள் உடலில் சக்தியை உருவாக்கி சூழலை சுத்தப்படுத்துகிறது.
மந்திரங்கள் என்பவை சைதன்யத்தை உயர்த்த உதவும் சக்தியூட்டும் ஒலிகளாகும்.
‘ஓம் நமசிவாய’ என்ற சொற்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் ‘ந’, ‘ம’, ‘சி’, ‘வ’, ‘ய’ என்ற இந்த ஐந்து எழுத்துகளும் ஐந்து பூதங்களை — மண், நீர், அக்னி, காற்று மற்றும் ஆகாயம் — குறிக்கின்றன.
‘ஓம்’ என்பது பிரபஞ்சத்தின் ஒலி. ‘ஓம்’ என்றால் அமைதியும் அன்பும் என்று பொருள்.
அதனால், ஐந்து பூதங்களிலும் அமைதி, அன்பு மற்றும் இசைவு நிலவும்போது, அங்கே பேரானந்தமும் மகிழ்ச்சியும் தோன்றுகிறது.
மந்திரங்களின் சக்தி ஜாதகத்தின் சக்தியைவிட மேன்மையானது. கிரகங்களின் எந்தவிதமான தாக்கங்களாக இருந்தாலும், ‘ஓம் நமசிவாய’ ஜபத்தின் மூலம் அவற்றை நீக்க முடியும்.
யஸ்ய நிஷ்வசிதம் வேதயோ வேதிபியோ அகிலம் ஜகத் ॥
நிர்மமே தம் அஹம் வந்தே வித்யாதீர்த்த மஹேஶ்வரம் ॥
ஶிவத்வம் குருத்வம்ச-ஶக்தி த்வமேவ த்வமேவாஸி மாதா பிதா-ச த்வமேவ த்வைமேவாஸி பந்தூர் த்வைமேவாஸி வித்யா கதிர்மேய மாதிர்தேவி ஸர்வம் த்வமைவ – ரிக் வேதா.
தமிழ் பொருள்
யாருடைய மூச்சின் வெளியேற்றமே வேதங்களாக விளங்குகிறதோ,
அந்த வேதங்களிலிருந்தே முழு பிரபஞ்சத்தையும் படைத்தவராக,
ஆனால் தாமே ஈடுபடாமல், வெளிப்படாமல் இருப்பவராக,
அனைத்து ஞானப் பாதைகளுக்கும் மிகப் புனிதமான, உயர்ந்த தீர்த்தமாக இருப்பவரான அந்த மகேஸ்வரனை நான் பணிந்து வணங்குகிறேன்.
நீயே சிவம்; நீயே குருவும்.
படைப்பில் வெளிப்படும் தெய்வீக சக்தியான சக்தியும் நீயே.
நீயே தாய்; நீயே தந்தை;
நீயே மிகச்சிறந்த துணையும் ஆவாய்.
அனைத்து அறிவுகளின் வடிவமாகவும் நீயே இருக்கிறாய்.
எனது இலக்கும், எனது பாதையும், எனது அறிவும், எனது சிந்தனையும் நீயே.
ஓ தேவியே, அனைத்தும் நீயாகவே இருக்கின்றன.
எனது புத்தி முழுமையாக உன்னிடமே ஈடுபட்டு,
உன்னையே நோக்கி வழிநடத்தப்பட்டு,
என்றென்றும் உன்னிடமே நிலைத்திருக்க
எனக்கு அருள்புரிவாயாக.











