தியானம்

உங்களுக்கு எது ஆழ்ந்த ஓய்வை கொடுக்கிறதோ அதுவே தியானம்.

தியானம் என்றால் என்ன?

ஆழ்ந்த ஓய்வில் இருக்கும் போதே விழிப்புணர்வுடனும், சுய நினைவுடன் இருப்பதே தியானத்தின் தனி சிறப்பு! மனத்தை கட்டுப்பாட்டுக்குள் அமைதியாக வைத்து, நம்முள் உறைந்திருக்கும் பேரானந்தத்தை உணர வைக்கும் உன்னதமான திறனே தியானம். உங்கள் இயற்கை நிலை அன்புடனும், ஆனந்தத்துடனும், நிம்மதியுடனும், இருப்பதே! ஒன்றுமே செய்யாமல், அனைத்து முயற்சிகளையும் துறந்து இருப்பினும் அம்மாதிரியான இயற்கை நிலையை அடைவிக்க செய்வதே தியானம். தியானம் செய்வது ஆழ்ந்த ஓய்வை அளிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கவும், மன ஆரோக்கியத்தை சரியான கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் தியானம் மிகவும் அவசியம்.

தியானம் என்பது சப்தத்திலிருந்து நிசப்தத்திற்கும், அசைவிலிருந்து அசைவற்ற நிலைக்கும் அழைத்து செல்லும் ஒரு பயணம். தியானம் ஆத்மாவிற்கு - சைதன்யத்திற்கு - சத்துணவு, போஷாக்கு.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

தியானத்தினால் விளையும் பயன்கள்

தியானத்தினால் பல நற்பலன்களை அடையலாம். சாந்தமான , நிம்மதியான மனம், தடுமாறாத கவனம், ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனைகள், கவனக்கூர்மை , சிந்தனையிலும், எண்ணங்களிலும் தெளிவு, மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளிலும் சஞ்சலமில்லாமல் சம நிலையுடன் இருப்பது, மேம்பட்ட தொடர்பாற்றல், தன்னுள் இருக்கும் புதுப்புது திறமைகளையும், ஆற்றல்களையும் கண்டுணர்வது, அசைக்க முடியாத, திடமான மன உறுதி, குணப்படுத்தும் சக்தி, நம்முள் உறையும் சக்தியை உணர்ந்து அதனுடன் தொடர்புகொள்ளும் திறன், இளைப்பாறுதல், புத்துணர்ச்சியுடன் திளைத்தல் மற்றும் அதிஷ்டத்தை ஈர்க்கும் சக்தி போன்றவை தவறாமல் தியானம் செய்வதினால் கிடைக்கும் சில இயற்கையான நல்ல விளைவுகள். மேலும் தியானத்தின் மூலம் கிடைக்கும் மற்ற சில பயன்கள்:

icon

அதிகமான நேர்மறை உயிர் ஆற்றல்

தியானம் செய்வதால் நம்முள் இருக்கும் நேர்மறை சக்தி பெருகுகிறது. நம்மை சுற்றி இந்த நேர்மறை சக்தியையும், சுமுகமான எண்ணங்களும் பரவி, மலர செய்கிறது.

icon

சிறந்த ஆரோக்கியம்

தியானத்தின்போது நம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. இரத்தஅழுத்தம், நீரிழிவுநோய், இதயபிரச்சினைகள், தோல் சம்மந்தமான நோய்கள், நரம்பு கோளாறுகள் போன்ற உபாதைகளில் இருந்து தியானம் நிவாரணம் அளிக்கிறது என்று பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

icon

மேம்பட்ட மனநிலை

தியானம் நம்மை சுமுகமான, மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க உதவுகிறது. இதுவே பல உடல் மற்றும் மன நோய்களை தடுக்கும் அரணாக அமைகிறது.

முதன்முதலாக தியானம் தொடங்குபவர்களுக்கு ஒரு அறிமுகம்

தியானத்தை பழக்கப்படுத்திக் கொள்வது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது போல மிகவும் எளிதானது. இதற்காக மலை சிகரங்கள் மேல் சென்று, உலக வாழ்க்கையிலிருந்து துண்டித்து கொள்ள வேண்டாம்! தியானம் என்பது உங்கள் அன்றாட வாழ்க்கையில் எளிதாக பொருந்தக்கூடிய மிகவும் ஆற்றலும் சக்தியும் வாய்ந்த பயிற்சி. தியானம் பல வகைப்பட்டது. இவை அனைத்தும் நிகழ்காலத்தில், இத்தருணத்தில் உங்களை எளிதில் நிலைநிறுத்தும்.

முதன்முதலாக தியானம் செய்யும் போதே பலரும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தத்தை அனுபவித்துள்ளனர். தியானத்தை முறையே கற்று தினமும் ஒருமுறை (முடிந்தால் இரண்டு முறை) பயிற்சி செய்தால் உங்களுக்குள்ளே இருந்தே ஒரு நல்ல மாற்றம் மலர்வதை உணர முடியும். இதனால் உங்களை சுற்றி உள்ளோர்கள் கூட உங்களின் வசீகரமான சக்தியை உணரத் தொடங்குவார்கள். ஆதலால் அனைவரும் பதற்றமில்லாத, ஆனந்தமயமான வாழ்க்கை அனுபவிக்க தினமும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.

இந்த பாடத்திட்டத்தில் சேர எனக்கு ஆசைதான், ஆனால்...

என் மனம் ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் அலைப்பாய்கிறது. எப்படி தியானம் செய்வது?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: ஒரு தடியை எடுத்துக்கொண்டு உங்கள் மனத்தை விடாமல் துரத்திக் கொண்டே இருங்கள். நீங்கள் துரத்த துரத்த அது ஓடி இறுதியில் சோர்ந்து போய் உங்கள் காலிலேயே வந்து விழும். மஹரிஷி பதஞ்சலி கூருகிறார் "ஒன்றை பற்றி தியானம் செய்யவேண்டும் என்றால், எல்லாவற்றையும் தியானிக்கவேண்டும். பஞ்சபூதங்களை தியானிக்கவேண்டும். ரிஷி முனிவர்களை, பற்றுக்களிலிருந்து விடுபட்டவர்களே முனிவர்கள், அவர்களை தியானம் செய்தால் உங்கள் தியானம் நன்கு மிளிரும்". சத்சங்கங்களில் பங்கேற்றாலும் தியானம் நன்கு மிளிரும். ஆனால் அம்மாதிரி சத்சங்கங்களில் பங்கேற்கும்போது 100% கவனத்தை அளிக்கவேண்டும். வெறுமனே கூரையையோ அல்லது அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே இருந்தால் பயனில்லை. உங்களுக்குள்ளேயே ஆர்வமும் பரவசமும் உறைந்துள்ளது. அனைத்திற்கும் ஆதாரமும் உள்ள அவனே உங்களுக்குள் பரவசமாக உறைந்துள்ளான். நீங்கள் இந்த ஆர்வத்துடனும் பரவசத்துடனும் தியானத்திற்குள் வர வேண்டும். நான் சொல்கிறேன், உங்களுக்குளேயே இதற்கு தேவையான ஆற்றல் ஒளி பிரகாசமான தீபமாக எரிகிறது. இந்த ஒளியை யாரும் ஏற்ற வேண்டியதில்லை. கங்கையில் நீராட இறங்கும் போது குழாய் எதற்கு! முயற்சியற்று இருங்கள்! "நான் ஒரு எதுவுமில்லை. எனக்கு எதுவும் தேவை இல்லை" என உணருங்கள். ஆனால் இந்த எண்ணத்தையே கூட எப்போதும் நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். அதுவே ஒரு விதமான மாயைதான். அதனால்தான் ஆதி சங்கரர் "'நான் ஒரு பூஜ்யம்' என்று நினைப்பது கூட அறிவிலித்தனம்” என்று கூறுகிறார்.

எண்ணங்கள் எங்கிருந்து உதயமாகின்றன? எண்ணங்கள் ஏன் நம்மை கட்டுப்படுத்துகின்றன?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: எண்ணங்கள் எங்கிருந்து உதிக்கின்றன? மனத்திலிருந்தா உடலிலிருந்தா? உங்கள் கண்களை மூடிக்கொண்டு இதைப்பற்றி சிந்தியுங்கள். இதுவே தியானமாக மிளிரும். இதன் முடிவில் எங்கிருந்து உங்கள் எண்ணங்கள் பிறக்கின்றதோ அந்த இடத்தை அடைவீர்கள். அது ஒரு உன்னதமான அனுபவம்!

தியானத்தின் அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்துவது?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: உங்களுக்கு தியானத்தில் நல்ல அனுபவம் கிடைக்கவில்லை என்றால், இன்னும் சேவை செய்யுங்கள். சேவை செய்ய செய்ய, உங்களுக்கு புண்ணியம் அதிகரிக்கும். அதனால் உங்கள் தியானம் இன்னும் ஆழமாகும். உங்கள் சேவை மூலம் இன்னொருவருக்கு விடுதலையோ, நிவாரணமோ கிடைத்தால், அதனால் உங்களுக்கும் நல்ல அதிர்வுகளும், நல்லாசிகளும் கிட்டும். இதனால் புண்ணியம் அதிகரிக்கும். புண்ணியம் ஆழ்நிலை தியானத்தை அனுபவிக்க உதவும். இத்தகைய தியானம் மூலம் உங்கள் முகத்தில் புன்னகை மிளிரும். இதனால் தியானத்தின் சிறந்த பயன்களை அனுபவிப்பீர்கள்.

எனக்கு தியானம் செய்யும் போது தூக்கம் வருகிறது. இது அனைவருக்கும் நிகழுமா? மற்றவர்களின் அனுபவம் என்ன? இதை எப்படி தீர்ப்பது?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: மற்றவர்களின் அனுபவத்தைப் பற்றி கவலைபடாதீர்கள். உங்கள் அனுபவத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். ஒவ்வொருவர் அனுபவம் காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் கவலைபடாதீர்கள் தியானமே உடல் தளர்விற்கு சிறந்த பயிற்சி.

தூக்கத்திற்கும் தியானத்திற்கும் என்ன வேறுபாடு?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: ஒன்று கிடைமட்டம் (horizontal), மற்றொன்று செங்குத்தானது (vertical). இப்போதைக்கு இவ்வளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.‌ நாளை தியானத்தில் அமரும் போது இதைப்பற்றி ஒன்றும் நினைக்காதீர்கள். உங்களால் தியானமும் செய்ய முடியாது, தூங்கவும் முடியாது! தியானம் செய்ய இதுவே நல்ல தருணம் என்று உறுதி பூண்டு தியானம் செய்யுங்கள்.

தியானத்திற்கு அமரும்போது பழைய நினைவுகள் ஏன் என்னை வாட்டுகின்றன?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: அதனால் பரவாயில்லை! மனசோர்வு அடையாதீர்கள்! அந்த எண்ணங்களை பார்த்து, "5 வருட, 10 வருட, 20 வருட முன்னாலிருந்த நினைவுகளே! வாருங்கள்! என்னுடன் வந்து அமருங்கள்!" என்று உபசரியுங்கள். பழைய நினைவுகளில் இருந்து நீங்கள் தப்பித்து ஓட நினைத்தால், அந்த நினைவுகள் உங்களை இன்னும் மேன்மேலும் வாட்டிவதைக்கும்.

எனக்கு யோகா, தியானம் இவைகளை செய்ய நேரம் இல்லை

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: யோகா, தியானம் உங்களுக்கு நேரத்தை உருவாக்கி கொடுக்கும்! இதற்கு நேரம் இல்லை என்று நீங்கள் சொன்னால், நீங்கள் மருத்துவரையோ மருத்துவமனையையோ அணுகவேண்டி இருக்கும்! உடற் பயிற்சி, யோகா, சுவாச பயிற்சி, செய்து, பிறகு தியானமும் செய்தால் மிகவும் நல்லது.

தினம் எவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும்? எப்போதாவது தியானம் அளவுக்கு மிஞ்சி போக வாய்ப்பு உண்டா?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: நன்கு தூங்கி எழுந்தவுடன் நம் உடல் அமைப்பு எப்படி இருக்குமோ, அம்மாதிரியே சற்று நேரத்தில், நாம் தியானத்தில் இருந்து இயற்கையாகவே வெளிவருவோம். உங்களால் 15 மணி நேரம் தூங்க முடியுமா? முடியாது! 6 மணி நேரம் தூங்கிய உடன், உங்கள் உடலுக்கு போதிய அளவு ஒய்வு கிடைத்தவுடன், தானாகவே விழிப்பு வருகிறதல்லவா? அம்மாதிரியே, தியானத்திலும் ஒரு உயிரியல் கடிகாரம் இயங்கி, சரியான நேரத்தில் தியான நிலையத்திலிருந்து வெளியே வர செய்கிறது. இதற்கு மேல் நீங்கள் வலுகட்டாயமாக தியானம் செய்ய முயற்சிக்ககூடாது. ஒவ்வொரு நாளும் 20-25 நிமிடங்கள் தியானம் செய்வது நலம் என்பது என் பரிந்துரை. ஆரம்பத்தில், ஒரு நாளுக்கு இரண்டு முறை தியானம் செய்ய தொடங்கவும். நீங்கள் இரண்டு, மூன்று முறை செய்யலாம், ஆனால் இரண்டு முறைக்கு மேல் என்பது குறுகிய இடைவெளி. நீங்கள் இருபது நிமிடங்கள், இரண்டு முறை, மூன்று முறை செய்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

தியானம் கொடிய கர்மாவை அழிக்குமா?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: ஆம் , கண்டிப்பாக!

தியானத்தில் காத்திருப்பதன் முக்கியத்துவம் என்ன?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: காத்திருக்கும் போது உங்கள் மனத்தில் என்ன நடக்கின்றது? இந்த தருணத்தில் உங்கள் மனத்தில் என்ன நடக்கின்றது? காலம் நகர்வதை உணர்கிறீர்களா? இம்மாதிரி காத்திருப்பதே உங்களை தியானத்தினுள் அழைத்து செல்லும். நீங்கள் காத்துக்கொண்டிருக்கும்போது ஒன்று விரக்தி அடையலாம், அல்லது தியானநிலையில் இருக்கலாம். காலத்தை உணர்வதே தியானம்.

பேரின்பம் அடைய வழி என்ன?

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்: முதல் வழி தியானம் செய்வது; இரண்டாம் வழி உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு சேவை செயல்பாட்டின் மூலம் தொண்டுபுரிவது. உங்களுள் உறையும் இறைவனை காண்பது தியானம். மற்றவர்களுக்குள் உறையும் இறைவனை காண்பதே அன்புடன் கூடிய சேவை. இவை இரண்டுமே ஒன்றோடொன்று இணைப்பிரியாதவை.