சிவன் மிகுந்த வியப்புக்குரிய தத்துவமாகவும், இந்தியாவில் மிகவும் பரவலாக வழிபடுபவராகவும் இருப்பது ஏன் என்று எப்பொழுதாவது எண்ணியிருக்கிறீர்களா? சிவன் என்பவர் ஒரு தனிப்பட்ட மனிதராக இருக்கமுடியுமா? தெய்வீகம் ஒரு மனித உருவத்தை ஏற்கமுடியுமா? மனித உருவுக்குள் தெய்வீகம் இருந்தால் அது ஒரு வரையறைக்குள் உட்பட்டிருக்குமா?
சிவபெருமானின் சாயல் உங்கள் வாழ்க்கையில் கலந்திருக்கிறது என்று நாங்கள் கூறினால்? வாழ்க்கையின் இந்த அம்சத்தை நீங்கள் கிரகித்துக் கொள்ள முடியுமானால், சிவனை அடைய முடியும் என்று நாங்கள் கூறினால்? சிவன் என்பது அமைதி, சாந்தம் மற்றும் மன உறுதியின் ஆழ்நிலையே அன்றி வேறெதுவும் இல்லை என்று கூறினால் நம்புவீர்களா?
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், இதுவே மெய். சிவதத்துவம் என்பதையும், சிவராத்திரியின் முக்கியத்துவத்தையும், சாராம்சத்தையும் மேலும் அறிவோம்.
நமது கலாசாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. இவை யாவும் குறிப்பிட்ட தெய்வீக சக்தியுடன் தொடர்பு கொண்டவை. இந்த தெய்வீக சக்தியின் நற்குணங்கள், தன்மைகள் மற்றும் ஆசிகளைப் பற்றி தெளிவாக நாம் புரிந்து கொள்வதற்காக, அதற்கு ஒரு பெயரும் உருவமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சக்திகளில் ஒன்றும் பிரதானமானதும் ஆனதே சிவன்.
சிவன் என்பவர் மனிதரா?
சிவன் என்ற சொல்லுக்கு எளிமையானப் பொருள் மங்களம். உண்மையில், சிவன் என்ற சொல்லுக்கு இதைவிடப் பரந்த ஒரு பொருள் உண்டு, அதில் பின்வருவன அடங்கும்:
- ஆற்றல் உடையது
- திறன் கொண்டது
- நன்மையின் அறிகுறியாக இருப்பது
- சாதகமானதாக அல்லது நம்பிக்கையூட்டுவதாக இருப்பது
சிவன் என்ற சொல்லைப் பிரித்து எழுதலாம்:
- ஷ+ஈ+வா
- ஷ என்பது சரீரத்தை அல்லது உடலை க் குறிக்கிறது
- ஈ என்பது ஈஸ்வரி அல்லது உயிர் கொடுக்கும் சக்தியைக் குறிக்கிறது
- வா என்பது வாயு அல்லது அசைவைக் குறிக்கிறது
‘ஈ’ என்பதை சிவனிலிருந்து விலக்கினால், அது ‘சவா’ என்று குறுகிவிடுகிறது; ‘சவா’ என்பது உயிரற்ற உடல் என்று பொருளாகிறது. ஒருவர் அசைவின்றி பூரணமான ஓய்வு நிலையில் இருக்கும் ஆசனத்தை, யோக பயிற்சியில், ‘சவாசனம்’ என்ற பெயரால் நாம் அழைக்கிறோம்.
சவா என்பது அசைவற்றது, உயிரற்றது என்றால், சிவன் என்பது உயிர் சக்தி கொண்டது. சிவனுடன் இருப்பது அனைத்தும் உயிருள்ளது, சிவனைத் தவிர்த்து இருப்பது அனைத்தும் சவம்: உயிரற்றது.
எனவே சிவன் மங்களமானவர், சிவன் என்பது உயிர்சக்தி மற்றும் ஆற்றல். பிரபஞ்சத்தில் பரவியிருக்கும் உயர்ந்த ஆன்மா அல்லது பிரபஞ்ச உணர்வு அனைத்தையும் உள்ளடக்கியது சிவம். சிவன் ஒரு ஆற்றல், தத்துவம் என்ற நித்திய உண்மையை உணர்வது, நம்மை ஆனந்தத்துக்கு அழைத்துச் செல்லும்.
எனினும் நூற்றாண்டுகளாக, வரலாற்றாசிரியர்களும் பக்தர்களும், ஒன்று போல, சிவ பெருமானின் உருவத்தைக் கவர்ச்சிகரமாக சித்தரித்துள்ளனர். திருநீறு பூசப்பட்ட உடல், இடுப்பைச் சுற்றிய புலி தோல், பிறை சந்திரன் அலங்கரித்த நெற்றி, உச்சந்தலை ஜடாமுடியிலிருந்து பெருக்கெடுத்தோடும் ஆகாச கங்கை, திரிசூலம் ஏந்திய ஒரு கை, நாட்டிய முத்திரைப் பிடித்த மறு கை. சில சமயங்களில் உடுக்கையை அடித்தவாறே சிவதாண்டவத்தில் (பிரபஞ்ச நடனத்தில்) லயித்திருக்கிறார். அவரது கம்பீர அழகை மெறுகேற்றுபவை, புருவங்களிக்கிடையே உள்ள மூன்றாவது கண் மற்றும் நீல கண்டத்தினைச் சுற்றியுள்ள பாம்புகள். இந்த மனதைத் தொடும் உருவம் கவர்ந்து இழுக்கவோ, ஆர்வத்தைத் தூண்டவோ ஒரு பொழுதும் தவறியதில்லை.
சிவனின் தோற்றத்தை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட உருவகங்களைப் போலவே, அவர் தன்னகத்தே கொண்டிருப்பதாக அறியப்படும் பண்புகளை விவரிக்க எண்ணற்ற பெயர்களும் உள்ளன. சிவனின் 1008 பெயர்கள், அவருடைய எல்லையற்ற மற்றும் பன்முகத் தன்மையையும், முரண்பாடுகளற்ற, ஒருங்கிணைந்த மற்றும் தொகுக்கப்பட்ட அவருடைய அறிய முடியாத மர்மத்தையுமே சித்தரிக்கின்றன. ஆயினும், அவர் எந்தவொரு விளக்கத்திற்கும் அல்லது வரையறைக்கும் அப்பாற்பட்டவர்.
சிவபெருமானை அனுபவித்து உணர்ந்து வாழ மட்டுமே முடியும்.
மகா சிவராத்திரி: சிவனின் இராத்திரி

சிவனுக்குரிய மிகப் புனிதமான திருவிழா பால்குண சந்திர மாதத்தின் தேய்பிறை 14ஆம் நாள் இரவு கொண்டாடப்படுகிறது. இது பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்குக்கிடையே வருகிறது. இதுவே மகா சிவராத்திரி அல்லது சிவனின் மகா இரவு என்று அழைக்கப்படுகிறது.
இந்த மங்களகரமான சிவராத்திரியில் சிவ பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருக்கிறார்கள். சிலர் பூஜை செய்கிறார்கள், வேத மந்திரங்கள் அல்லது ருத்ரம் ஜெபிக்கிறார்கள், சாதனா மற்றும் தியானத்தில் ஆழ்கிறார்கள். இத்தகைய புனிதமான பழக்கங்கள் நம்முள் மன அமைதியையும், உலகோடு ஒன்றியிருக்கும் உணர்வையும் அளிக்கின்றன.
ஒவ்வொரு மகா சிவராத்திரியும் உங்கள் உடலின் ஒவ்வொரு துகளையும் தட்டி எழுப்புவதற்காகவே உள்ளது. இந்தத் திருவிழா, முரண்பாடுகளிலிருந்து விலகி, உண்மை, அழகு, அமைதி மற்றும் கருணை ஆகிய சிவனின் தெய்வீக குணங்களை நோக்கிச் செல்வதற்கான ஒரு விழிப்புணர்வு அழைப்பாகும்.
– குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
மகா சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது?
சிவபெருமானைப் பற்றி பல கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவையாக இருந்தாலும், குருதேவர் மகா சிவராத்திரியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். அவர் கூறுகையில், சிவன் என்பவர் ஒரு தனிப்பட்ட நபர் அல்ல, மாறாக முழு படைப்பும் நிலைபெற்றிருக்கும் ஆதார சக்தியே ஆவார். இந்தச் சக்தி பிரபஞ்சம் முழுவதும் பரவி, ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் நிறைந்திருக்கிறது. இந்தச் சக்தியே சிவதத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
மகா சிவராத்திரியின் தாத்பர்யம்
இராத்ரி என்றால் ஓய்வையும் ஆறுதலையும் தருவது என்று பொருள். இரவு என்பது அனைத்துச் செயல்பாடுகளும் நின்றுவிடும் நேரம். எல்லாம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கும். சுற்றுப்புறம் அமைதியாகி, உடல் இயல்பாகவே உறக்கம் அல்லது ஓய்வு நிலைக்குச் செல்கிறது.
இராத்ரி என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்று வகையான துன்பங்களிலிருந்தும் நிவாரணம் அளிப்பது என்றும் பொருள்படும் – அவை ஆத்யாத்மிகம், அதிபௌதிகம் மற்றும் அதிதைவிகம் ஆகும். நீங்கள் இரவில் உறங்கும்போது, உணவு, நீர் அல்லது உடை பற்றி கவலைப்படுவதில்லை. அன்றைய பகல் நேரக் கவலைகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக உறங்குவதையே நீங்கள் விரும்புகிறீர்கள்.
எனவே, அந்த ஆழ்ந்த ஓய்வைப் பெறுவதற்குக் கூட, மூன்று வகையான அமைதி தேவைப்படுகிறது: முதலாவது, பௌதீக அமைதி. உங்களைச் சுற்றி சண்டையோ அல்லது ஏதேனும் தொந்தரவோ இருந்தால், உங்களால் தூங்கவோ ஓய்வெடுக்கவோ முடியாது. இரண்டாவதாக, உடல் மற்றும் மனதில் அமைதி தேவை. மூன்றாவதாக, ஆன்மாவில் அமைதி தேவை. இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும், ஆழ்ந்த ஓய்வு முழுமையடையாது. எனவே, உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்று அம்சங்களிலிருந்தும் ஓய்வை அளிப்பது இரவாகும். மேலும், மகா சிவராத்திரி என்பது, உணர்வின் அனைத்து நிலைகளுக்கும் ஆறுதலைத் தரும் அந்த அதீத தெய்வீக உணர்வின் இரவு ஆகும். இந்த இரவு, சிவன் மற்றும் சக்தியின் சங்கமத்தின் அடையாளமாக உள்ளது, இது சுற்றுச்சூழலை மேலும் உயிர்ப்பிக்கிறது. எனவே, மகா சிவராத்திரி அன்று விழித்திருப்பது நன்மை பயக்கும்.
இந்த இரவு ஆழ்ந்த அமைதியையும் நன்மையையும் தருகிறது. இந்த நாளில் செய்யப்படும் எந்தவொரு தியானமும் நூறு மடங்கு அதிக பலனளிக்கும்.
இதற்கு ஜோதிடத்துடனும் தொடர்பு உள்ளது. சூரியனும் சந்திரனும் ஒரு குறிப்பிட்ட சீரமைப்பில் உள்ளபொழுது அது மனதை மேம்படுத்த உதவுகிறது. இத்தகைய நாட்கள் ஆன்மீக பயிற்சிகளுக்கு உகந்தவையாக உள்ளன என்று பண்டைய ஞானிகள் கூறியுள்ளனர். இந்திய ஜோதிடத்தின்படி, ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாட்களும், காலகட்டங்களும், ஆன்மீக வளர்ச்சிக்கும், தியானத்திற்கும் ஏதுவாக உள்ளன. மகாசிவராத்திரி அத்தகைய ஒரு நாளாகும்.
சிவராத்திரி லௌகீகம் மற்றும் ஆன்மீகத்தின் சேர்க்கையாகும். சிவதத்துவம் (அனைத்தின் அடிப்படை/சக்தி), பொதுவாக, நிலத்திற்கு மேல் பத்து அங்குல உயரத்தில் இருக்கிறது. இந்த நாளில், இந்த மெய்யுணர்வு கீழிறங்கி (பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய) நிலத்தைத் தொடுகிறது. நமது உள்ளுணர்வு உடலுக்குள் உயிர்த்தெழ இது சிறந்த நேரம். அதனால்தான் ஆன்மீக சாதகர்களுக்கு மகா சிவராத்திரி ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அத்தகைய நுட்பமான, எங்கும் பரவியிருக்கும் ஆற்றல் பூமியுடன் இணையும்போது, அது தியானத்தின் ஆழமான மற்றும் செழுமையான அனுபவத்தைப் பெற உதவுகிறது.
மகா சிவராத்திரி அன்று மேற்கொள்ளப்படும் தியானம்/சாதனா இவற்றின் முக்கியத்துவம்
மகா சிவராத்திரி என்பது சிவதத்துவத்தைக் கொண்டாடும் ஒரு நேரமாகும். ஆன்மீக சாதகர்களும் சிவபெருமானின் பக்தர்களும் சிவசக்தியில் தியானித்து ஆனந்தம் அடைகிறார்கள். சிவன் நமது ஆன்மாவைக் குறிக்கிறார், மற்றும் தத்துவம் என்பது ஒரு கொள்கை அல்லது உண்மை. இது, நாம் நமது ஆன்மாவின் உண்மை/கொள்கையில் நிலைபெறும் ஆண்டின் ஒரு காலமாகும். அதாவது, நமக்குள்ளேயே இருக்கும் வாழ்க்கையின் உயர் உண்மைகளை நாம் தேடுகிறோம் என்று பொருள்.
இது சாதனாவிற்கான நேரம்; உடல், மனம், அகந்தை ஆகியவற்றிற்கான ஆழ்ந்த ஓய்வு நேரம். சிவதத்துவத்தின் மிக உயர்ந்த ஞானத்திற்கு ஒரு பக்தனை விழிப்பூட்டும் ஆழ்ந்த ஓய்வு அது.
தியானம், மனம் மற்றும் புத்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை அணுகுவதற்கான வழியை நமக்கு வழங்குகிறது. தியானத்தின் போது, நாம் விண்வெளியின் பரந்த வெறுமையை அனுபவிக்கக்கூடிய ஒரு தருணம் உண்டு: அது வெறுமையையும் அன்பையும் கொண்ட ஒரு வெளி. இந்த அனுபவம் நம்மை நான்காவது உணர்வு நிலைக்கு அழைத்துச் செல்கிறது, அது சிவ நிலை என்றும் அழைக்கப்படுகிறது.
ஆழ்ந்த சாதனாவை மேற்கொள்வதாலும் மற்றும் லௌகீகத்திலிருந்து விடுபடுவதாலும் மாய மண்டலங்களை அணுக முடியும் பொழுது, ஒருவர் ஆனந்த தாண்டவத்தை அனுபவிக்க முடிகிறது. நமது இருப்பு பன்முக பரிமாணங்களைக் கொண்டது. படைப்பின் சூட்சும மண்டலங்களுக்குள் பிரவேசம் பெற்ற ஒருவர் சிவதாண்டவத்தை இடைவிடாது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிவார். உடல், மனம், புத்தி மற்றும் அகந்தை ஆகியவற்றை கடந்த பின்னரே அண்டத்தின் தாளமாகிய ஆனந்த தாண்டவத்தை ரசித்து பரவசமடைய முடியும்.
– குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
சுருக்கமாக
- மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடுவது நன்மைகளையும் செழிப்பையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது, ஏனெனில் சிவன் மகாதேவனாகப் போற்றப்படுகிறார்.
- சிவன் எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருக்கிறார்.
- மகா சிவராத்திரி என்பது ‘நான் அந்தப் பரம்பொருள். நான் சிவன். நான் சத்தியம், மங்களம், நித்தியம், அழகு’ என்ற ‘சிவோஹம்’ என்னும் நித்திய உண்மையை நினைவுகூரும் ஒரு தருணமாகும்.
- மகா சிவராத்திரி ஆன்மீக சாதகர்களுக்கு ஒரு புத்தாண்டு. இது ஆன்மீக வளர்ச்சிக்கும், பௌதீகப் பேறுகளுக்கும் ஒரு மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த இரவில், நட்சத்திரங்கள் சாதகமான நிலையில் இருக்கும்போது, தியானம் செய்வதற்கு இது மிகவும் மங்களகரமானது. எனவே, சிவ தத்துவத்தை அனுபவிக்க தியானம் செய்வது மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது.
- தியானம் தொடர்ச்சியாக செய்ய முடியாவிட்டாலும் வருடத்தில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று பண்டைய காலத்தில் மக்கள் கூறுவார்கள். மகா சிவராத்திரி அன்று விழித்திருந்து தியானம் செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் அந்த தெய்வீகத்தை எழச் செய்யுங்கள்.
- நாம் வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது, அந்த மந்திரங்கள் சுற்றுச்சூழலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அது சுற்றுச்சூழலுக்குப் புனிதம் அளிக்கிறது, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது, தீய கர்மங்கள் அழிக்கப்படுகின்றன, மேலும் உள்ளத்திலும் இயற்கையிலும் ஒரு கொண்டாட்டம் பிறக்கிறது. அதனால்தான் ருத்ராபிஷேகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி அன்று ருத்ர பூஜையை உச்சரிப்பது அல்லது கேட்பது பரிந்துரைக்கப்படுகிறது.
- லேசான உணவை உண்பது, மந்திரங்களை உச்சரிப்பது, தியானம் செய்வது, பிரபஞ்சம் முழுவதும் மற்றும் நமக்குள்ளும் பரவியிருக்கும் ஒரு தத்துவமாக சிவனின் இருப்பை உணர்வது ஆகியவை மகா சிவராத்திரியின் சாராம்சமாகும்.
இந்த ஆண்டு, மார்ச் 8 ஆம் தேதி, குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் இணைந்து சிவ தத்துவத்தை நீங்கள் எளிதாக அனுபவிக்கலாம். எங்களுடன் இணைந்து மகா சிவராத்திரியின் மாயாஜால முக்கியத்துவத்தை நீங்களும் அனுபவியுங்கள்!











