மிகவும் சக்திவாய்ந்த ஓதுதல் : சிவராத்திரி அன்று நீங்கள் ஏன் ருத்ர பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்?
ஒருமுறை, மனிதனுக்கு முக்தியையும் உலகியலான அனைத்து இன்பங்களையும், ஒரே நேரத்தில் அளிக்கக்கூடிய ஒரு விஷயம் எது என்று ஆதிசங்கராசாரியரிடம் கேட்கப்பட்டபோது, அவர் “ஸ்ரீ ருத்ரம்” என்று பதிலளித்தார்.
ஸ்ரீ ருத்ரம் அல்லது ருத்ர பூஜை என்பது பிரபஞ்சத்தில் நிலவும் சிவதத்துவத்தை (சிவ சக்தியை / கொள்கையை) ஆவாஹனம் செய்து வணங்குவதற்காக உச்சரிக்கப்படும் மந்திரங்களின் தொகுப்பாகும்.
இம்மந்திரம் ஒருவரது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டும் அல்லாமல் இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அடைய உதவுகிறது.
ருத்ர பூஜை எவ்வாறு நடத்தப்படுகிறது மற்றும் இதன் பல்வேறு அம்சங்கள் யாவை என்பதை அறிந்துகொள்வோம்.
ருத்ர பூஜையின் கூறுகள்
ஸ்ரீ ருத்ரம் ஐந்து முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது:
- கணபதி அதர்வஷீர்ஷம்: எந்த பூஜையோ அல்லது சடங்கோ, தடைகளை அகற்றும் கணபதியை ஆவாஹனம் செய்யாமல் தொடங்கப்படுவதில்லை. கணபதி அதர்வஷீர்ஷம் என்பது, யானை முகம் கொண்ட விநாயகனை வணங்கும் வகையில் அமைந்துள்ள, இன்றும் கிடைக்கப்பெறும் மிகவும் தொன்மையான நூலாகும். இதில், அனைத்து தெய்வங்களிலும் ஒன்றாகவே விளங்கும் சக்தியாகவும், பரம்பொருளான உண்மை (பிரம்மம்) ஆகவும், ஆத்மா (தன்னுள் உள்ள ஆன்மா) ஆகவும், பிரபஞ்சத்தின் அடித்தளமான ஓம் எனவும் கணபதி வர்ணிக்கப்படுகிறார்.
- அங்கன்யாசம்: வெளியில் இருக்கும் தெய்வத்தை வழிபடுமுன், அந்த தெய்வத்தை முதலில் தன்னுள் ஆவாஹனம் செய்யும் செயல்முறையே அங்கன்யாஸம் ஆகும். ஸ்ரீ ருத்ரத்தை தொடங்குவதற்கு முன், பூஜை செய்பவர் அனைத்து தெய்வங்களுக்கும் மலர்களை அர்ப்பணம் செய்து பிறகு தன் சிரசிலும் சில மலர்களை வைத்துகொள்கிறார். தம்முள்ளும் ருத்ரனின் சக்தி உறைகிறது என்பதை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் செயல் செய்யப்படுகிறது. தம்முள் இருக்கும் ருத்ரனை ஆவாஹனம் செய்த பின்னரே, ருத்ர பூஜை செய்யும் தகுதியை ஒருவர் பெறமுடியும்.
- பஞ்சாமிருத ஸ்நானம்: அங்கன்யாசத்திற்கு பின், பஞ்சாமிருதத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் (வழிபாடு) செய்யப்படுகிறது. பஞ்சாம்ருதத்தின் கூறுகள், பிரபஞ்சம் உருவான பஞ்ச தத்துவங்களை (ஆகாசம், வாயு, அக்னி, நீர் மற்றும் ப்ரித்வி) பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சிவலிங்கமே, வெளிப்பட்டதும் வெளிப்படாததும் ஆகிய முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய இந்த இருப்பின் சின்னமாக விளங்குகிறது.
இந்த இருப்பில் உள்ள அனைத்து தத்துவங்களும், பஞ்சாமிருதத்தின் ஐந்து கூறுகளை அர்ப்பணிப்பதன் மூலம் சாந்தப்படுத்தப்படுகின்றன. அந்த ஐந்து கூறுகள்: பால், தயிர், வெல்லம், தேன் மற்றும் நெய். இவை ஐந்தையும் கலந்த கலவையை சிவலிங்கத்தின் மீது அர்ப்பணிப்பது, இருப்பின் முழு பரப்பிலும் உள்ள ஐந்து மூலத் தன்மைகளையும் சமநிலைப்படுத்துவதைச் சின்னமாகக் காட்டுகிறது. இந்த ஐந்து தத்துவங்களுக்கிடையிலான இசைவே அமைதியை எங்கும் பரவச் செய்கிறது. ஆகையால், ஸ்ரீ ருத்ரம் என்பது தனிநபரின் நலனுக்காக மட்டுமே செய்யப்படுவது அல்ல; ஏனெனில் சிவலிங்கத்தை வழிபடுவது முழு இருப்பையும் வழிபடுவதற்கு சமமானதாகும்.
- நமகம்: நமகம் என்பது அனைத்திலும் சிவ தத்துவத்தின் இருப்பை உணர்வதாகும். குவாண்டம் இயற்பியலின்படி, நாம் அனைவரும் ஒரே சக்தியாலேயே உருவாக்கப்பட்டவர்கள். ருத்ரத்தின் இந்தப் பகுதி, அதே சக்தி அனைவரிலும் அனைத்திலும் வியாபித்திருக்கிறது என்பதை உணர்வதற்காக செய்யப்படுகிறது. உதாரணமாக, ருத்ரனின் வில் மற்றும் அம்புகளுக்கும் கூட வணக்கம் செலுத்தப்படுகிறது. ஒரு இடத்தில் இந்த மந்திரம் இவ்வாறு குறிப்பிடுகிறது:
वंचते परिवंचते तस्करनये नमो नमः - வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நம:
இங்கு ருத்திரன் திருடர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் கடவுளாக வழிபடப்படுகிறார். ருத்திரன் எங்கும் வியாபித்திருக்கும் சக்தியாகும் என்பதையும், அது சிறந்தவற்றில் சிறந்ததாகவும், மோசமானவற்றில் மோசமானதாகவும் விளங்குகின்றது என்பதையும் புரிய வைக்கிறது.
- சமகம்: இதில், இருப்பில் உள்ள அனைத்தும் நம்முள் அடங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம் அதாவது, ருத்திரன் என்னும் அந்த தத்துவம் எங்கும் உள்ளது என்றும், அந்த சக்தியை நான் என்னுள்ளும் கொண்டிருக்கின்றேன் என்றும் அறிந்து கொள்கிறோம். இதில் நம்முள் உறையும் ருத்திரனின் இருப்பை நாம் வழிபடுகிறோம்.
ருத்ர பூஜையின் இறுதிப் பகுதி?
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாகச் செய்யப்படுகிறது. வட இந்தியாவில், ஸ்ரீ ருத்ரம் புருஷ சுக்தத்துடன் நிறைவடைகிறது. வாழும் கலையின் சர்வதேச மையத்தை போன்ற சில இடங்களில் அது துர்கா சுக்தத்துடன் முடிவடைகிறது. துர்கையின் வடிவத்தில் தேவியைத் இம்மந்திரங்கள் தொழுகின்றன.
துர்கையை வழிபடாமல் சிவ வழிபாடு முழுமையடையாது. ருத்ரத்தை தொடங்குவதற்கு முன், ஒருவர் தன்னுள் உள்ள ருத்ரனை வழிபடுகிறார். மேலும், ருத்ரமாக ஆன பிறகு, துர்கா வடிவில் வெளிப்பட்ட, முழு பிரபஞ்சத்தையும் பிரதிபலிக்கும் தெய்வீகத் தாயை நாம் வழிபட வேண்டும்.

ருத்ர பூஜை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
வேத காலத்திலிருந்தே, சுற்றுச்சூழலில் அமைதியை கொண்டுவருவதற்கான சக்தி வாய்ந்த கருவியாக ருத்ர பூஜை அறியப்பட்டிருக்கிறது. அனைத்து சங்கராச்சாரியப் பரம்பரைகளிலும் (ஆதி சங்கரரின் ஞான பாரம்பரியம்) மிகுந்த கட்டுப்பாட்டுடனும் சிரத்தையோடும் கடைப்பிடிக்கப்படும் ஒரு விஷயம், திங்கட்கிழமை செய்யப்படும் ருத்ர பூஜை ஆகும். ஒவ்வொரு சங்கராச்சாரியாரும் திங்கட்கிழமை ருத்ர பூஜையை தமக்கே உரிய முறையில் செய்கிறார். இந்த நடைமுறையின் மூலம் உலகம் முழுதிலும் மற்றும் நாடெங்கிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவே ஆதி சங்கரர் நம் நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு பீடங்களை (ஞான மையங்களை) நிறுவினார். இயற்கையில் அமைதியும், நல்லிணக்கமும் திகழவே ஸ்ரீ ருத்ரம் செய்யப்படுகிறது.
சிவராத்திரி அன்று ஸ்ரீ ருத்ரம் செய்வதின் மகத்துவம்
சிவராத்திரி தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிவ தத்துவம் மிகவும் நுண்மையானது என்றும், யாராலும் தம்முடைய சொந்த அறிவை மட்டுமே பயன்படுத்தி அணுக இயலாதது என்றும் அறியப்படுகிறது. அந்த சக்தியின் அருள் தானாக நம்மேல் பொழியும் வரை நாம் காத்திருக்க வேண்டும். சிவரத்திரி அன்றுதான் வெளிபட்ட பிரபஞ்சமான சக்தியின் மிக அருகில் சிவ தத்துவம் இருக்கிறது. இந்நாளில்தான் சிவ தத்துவம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அனைத்தையும் தன் அருளால் ஆசீர்வதித்து, ஸ்தூல நிலையில் உள்ள அனைத்திலும் வியாபித்திருக்கிறது. அது நமக்கு மிகவும் அருகில் இருக்கின்றபடியால், ஸ்ரீ ருத்ரத்தின் மந்திரங்களை உச்சரிப்பதின் மூலமும், கேட்பதின் மூலமும் சிவஆற்றலின் ஒரு சிறு தரிசனத்தையும் அனுபவத்தையும் நாம் பெற முடியும்.
வானவியல் ரீதியாக சிவராத்திரி நாளை பார்த்தால், வாதத்தை (காற்று மற்றும் ஆகாசத்தின் சமநிலையின்மை) அதிகரிக்கும் நிலையில் சூரியன் மற்றும் சந்திரன் உள்ள நிலைகள் வாதத்தை (காற்று மற்றும் ஆகாய தத்துவங்களின் சமநிலையின்மை) அதிகரிக்கச் செய்கின்றன என்பது தெரிகிறது. அதனால்தான், உலகம் முழுவதும் சிவராத்திரி நாளில் மக்கள் ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய முடியாமல், உடலும் மனமும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை காணலாம்.
அதனாலேயே, சிவராத்திரி நாள் தியானத்திற்கே அல்லாமல், கொண்டாட்டத்திற்கும், அந்தக் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பிற்குமான நாளாகவும் கருதப்படுகிறது.
சிறந்த கொண்டாட்டத்திற்குப் பிறகு நம்மால் தியானத்தில் அமரவும், சிவ தத்வத்தில் ஆழ்ந்து ஓய்வெடுக்கவும் முடிகிறது என்பதை நாம் காண்கிறோம். இரவு என்பது ஓய்விற்கான நேரம், ஆகவேதான் இதை சிவராத்திரி (சிவனின் இரவு) என்கிறோம், சிவதிவஸ் (சிவனின் பகல்) எனச் சொல்வதில்லை.
எனவே, நாள்முழுதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, வாதம் சமநிலை அடையும் இரவிற்காக தயாராகிறோம்; இதனால் தியானத்தில் ஆழ்ந்து சென்று சிவதத்துவம் தரும் ஆனந்தத்தை நம்மால் முழுமையாக அனுபவிக்க முடிகிறது.
ருத்ர பூஜையில் பங்கேற்பதன் நன்மைகள்
ருத்ரர்கள் ஏகாதச ருத்ரர்கள் (பதினொன்று ருத்ரர்கள்) என வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த பதினொன்று ருத்ரர்களும் நமது இருப்பினுள் உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். அதேபோல், நமது உடலில் பதினொன்று விதமான உறுப்புத் தொகுதிகளும் (organ systems) உள்ளன.
ஸ்ரீருத்ரம் பாராயணத்தில் அமர்வதனால் பல பயன்கள் கிடைக்கின்றன; அவற்றில் முதன்மையானது மன அமைதியும் ஒற்றுமை உணர்வும் ஆகும். இப்பயன்கள் தனிநபர் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைப் பார்ப்போம்.
- மாணவர்கள் – மேலே கூறியதுபோல், ஸ்ரீ ருத்ரத்தின் சமநிலைப்படுத்தும், அமைதியளிக்கும் தாக்கம் நம்முள் ஆழ்ந்த ஞானத்தை எழுப்புகிறது. இன்றைய காலத்தில், படிப்பு என்பது சில விஷயங்களை கற்றுக்கொண்டு, தேர்வுகளில் அதை “உமிழ்வது” போன்ற நிலையாக மாறிவிட்டது. ஆனால் ஞானம் மலரும்போது, கற்ற அறிவை பெரிய நோக்கங்களுக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஒரு மாணவன் புரிந்துகொள்ள முடியும். இதனால், அறிவைப் பயன்பாட்டில் கொண்டு வருவதில் மாணவர்கள் மேலும் திறமைசாலிகளாக மாறுவார்கள்.
- வணிகர்கள் – நம்முள் ஆழ்ந்த அமைதி நிலவும்போது, உள்ளுணர்வு சக்தி (intuition) வெளிப்படத் தொடங்குகிறது. ஒரு வணிகரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவதும், அவரை வளர்ச்சியடையச் செய்வதும், அவரின் உள்ளுணர்வு திறனே ஆகும். ஸ்ரீ ருத்ரம் அந்த உள்ளுணர்வு சிறப்பாக செயல்பட உதவுகிறது. இருப்பினும், இது ருத்ர பூஜை ஒன்றின் மீது மட்டும் சார்ந்தது அல்ல. ருத்ரம் நம்முள் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்துகிறது; ஆனால் அந்த உள்ளுணர்வு திறன் முழுமையாக வெளிப்பட, சுதர்சன் கிரியா, தியானம் போன்ற நடைமுறைகளை தொடர்ந்து மேற்கொள்வதும் அவசியம்.
- பணிபுரியும் பெண்கள் – ஆண்களுடன் ஒப்பிடும்போது, பணிபுரியும் பெண்கள் பல்வேறு பொறுப்புகளை ஒரே நேரத்தில் நிர்வகிக்க வேண்டியிருக்கும். வீட்டுப் பணிகள், குழந்தைகள், அவர்களின் பாடப்பணிகள், மேலும் தனிப்பட்ட அலுவலகப் பொறுப்புகள் என அனைத்தையும் சமநிலையுடன் நடத்த வேண்டும். இயல்பாகவே பெண்கள் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வதில் திறமைசாலிகளாக இருந்தாலும், இத்தனைப் பொறுப்புகளுக்கிடையிலும் மன அமைதியைப் பேணுவது பெரும் உள்ளார்ந்த வலிமையை நாடுகிறது. இந்த உள்ளார்ந்த வலிமையை ருத்ரம் ஜபம் செய்வதாலும், குறிப்பாக சிவராத்திரி நாளில் ருத்ர பூஜையில் பங்கேற்பதாலும் வளர்த்தெடுக்க முடியும்.
- தலைவர்கள் – வணிகத் தலைவர்களாக இருந்தாலும், அரசியல் தலைவர்களாக இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஒரு குழுவை வழிநடத்த வேண்டியவர்களே. ஒரு குழுவை சிறப்பாக வழிநடத்த, அவசரமான, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை எடுக்கக் கூடாது. குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் கூறியதுபோல, “ஒரு தலைவர் முன் நின்று அல்ல, பின்னிருந்து வழிநடத்த வேண்டும்.” இப்படிப் பின்னிருந்து வழிநடத்த, ஆழமான குணநலனும் மனத் தெளிவும் தேவைப்படுகிறது. ருத்ர பூஜையில் தொடர்ந்து பங்கேற்பதும் அல்லது அதை முறையாகச் செய்வதும், அசைக்க முடியாத அந்த உள்ளார்ந்த ஆழத்தை வளர்க்க உதவுகிறது.
- இளைஞர்கள் – இளைஞர்கள் மற்றும் பதின்பருவத்தினர் வளரும்போது ஹார்மோன் சார்ந்த மற்றும் உணர்வுபூர்வமான கொந்தளிப்புகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள். சிவராத்திரி அன்று ஸ்ரீ ருத்ரத்தில் பங்கேற்பது அவர்கள் அமைதியடைய உதவுகிறது. மனம் அமைதியாகும் போது, சூழ்நிலை, ஹார்மோன் மாற்றம், உந்துதல்கள் மற்றும் உணர்ச்சிபெருக்கினால் நிலைகுலையாமல், அவைகளை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தும் திறனை இளைஞர்கள் அடைகிறார்கள்.
ருத்ரம் சங்கல்பம்
சங்கல்பம் என்ற சொல்லின் பொருள் அர்ப்பணிப்பு அல்லது உறுதியேற்றல் ஆகும். பொதுவாக நாம் ஏதாவது ஒரு நல்ல நோக்கத்திற்கு உறுதியேற்கிறோம். ஆனால், ருத்ர சங்கல்பத்தைப் பொருத்த வரை, இதில் நம் சங்கல்பத்தை நாம் ருத்திர பூஜைக்கு அர்ப்பணிக்கிறோம். நம்முடைய ஆசை, உறுதி அல்லது நடக்க வேண்டும் என்று நாம் விரும்பும் ஏதோ ஒன்று தான் சங்கல்பம் எனப்படுகிறது, நம் ஆழத்தில் இருந்து எழும் ஒரு நோக்கமாகும் அது. அதை பற்றி எண்ணிக் கொண்டே இருந்தால், அதையே நினைத்துக் கொண்டிருந்தால், அதை குறித்த பரபரப்பு நமக்கு ஏற்பட்டு, நாம் விரக்தியடையக் கூடும். அதன் காரணமாக நம் விருப்பம் நிறைவேறாமல் போகலாம். ஒரு விஷயத்தை நடக்க வைப்பது எதுவென்றால், நாம் விரும்புவது நடக்கும் என்னும் நம்பிக்கையே.
நம் சங்கல்பத்தை அர்ப்பணிப்பதும் அதே பலனைத் தருகிறது. நம் விருப்பத்தின்/ நோக்கத்தின் அடையாளமாக கையில் சிறிது அரிசியும், சில மலர்களையும் எடுத்துக் கொண்டு, நாம் விரும்பியது நிறைவேறவேண்டும் என்னும் எண்ணத்தோடு அவற்றை தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்கிறோம். நாம் விரும்பியதோ அல்லது அதைவிட சிறந்த வேறொன்றோ நிச்சயம் நடக்கும் என்ற முழு நம்பிக்கையோடு நாம் அந்த சங்கல்பத்தை தெய்வத்திற்கு அர்ப்பணிக்கிறோம். அப்படி செய்தால், பரபரப்பு நீங்கி, நாம் விரும்பியதோ அல்லது அதைவிட சிறந்ததோ நடக்கும் என்ற நம்பிக்கையில் அமைதியாக உணர்கிறோம். அசைக்க முடியாத அந்த நம்பிக்கையே நம் சங்கல்பத்தை உண்மையாக்கும் சக்தியைத் தருகிறது.











