சிவபெருமானின் தெய்வீக வாசஸ்தலமாக போற்றப்படும் கைலாய மலை, அதன் கம்பீரமான அழகாலும் அருகில் அமைந்துள்ள மானசரோவர் ஏரியாலும் புகழ்பெற்றது. இந்த ஏரி கைலாத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.

மானசரோவர் என்பது திபெத்தில் (சீனா) அமைந்துள்ள ஒரு பெரிய நன்னீர் ஏரியாகும். இது இந்துக்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித யாத்திரைத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் இவ்விடத்தின் அழகையும் புனிதத்தையும் அனுபவிக்க வருகை தருகின்றனர்.

கைலாய மலையும், சம்சானம் எனப்படும் தகனஸ்தலமும் சிவபெருமானின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. “கைலாம்” என்பது  ‘கொண்டாட்டம் மட்டுமே இருக்கும் இடம்’ என்பதையும்; “சம்சானம்” என்பது ‘வெறுமை மட்டுமே இருக்கும் இடம்’ என்பதையும் குறிக்கும். தெய்வீகம் வெறுமையிலும் உள்ளது; கொண்டாட்டத்திலும் உள்ளது. உங்களுக்குள்கூட வெறுமையும் உள்ளது; கொண்டாட்டமும் உள்ளது.”

சிவபெருமானைப் பற்றிய குருதேவரின் உரையிலிருந்து

மானசரோவரின் அர்த்தமும் வரலாறும்

புராணக் கதைகளின்படி, பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள் நீராடும் புனிதத் தலமாக மானசரோவர் ஏரி கருதப்படுகிறது. இந்து சமய நம்பிக்கையின்படி, இந்த ஏரி முதலில் பிரம்மாவின் மனதில் உருவானதாக கருதப்படுகிறது,  எனவே இது மானசரோவர் என்று அழைக்கப்படுகிறது. “மானசரோவர்” என்ற பெயர் இரண்டு சமஸ்கிருதச் சொற்களின் சேர்க்கையாகும்: “மானஸ்” என்பது ‘மனம்’ அல்லது ‘அறிவு’ என்பதைக் குறிக்கும்; “சரோவர்” என்பது ‘ஏரி’ என்பதைக் குறிக்கும்.

கைலாயம் – மானசரோவரில் தெய்வங்கள் தங்கி தியானம் செய்கின்றன என்று நம்பப்படுகிறது. இவ்விடம் தனித்துவமான ஆன்மிக ஆற்றலை (aura) கொண்டதாக கருதப்படுகிறது. மானசரோவர் ஏரி, தெய்வங்களின் மனதைப் போல அமைதியானதும், மலைபோல் உறுதியானதும், என ஒப்பிடப்படுகிறது.

ஏன் மானசரோவருக்கு செல்ல வேண்டும்?

1. மத முக்கியத்துவம்

சாஸ்திரங்களின்படி மானசரோவர் ஏரி  புனிதமானதாகக்  கருதப்படுகிறது. இதன் அழகும் ஆன்மிக முக்கியத்துவமும் பல்வேறு மறை நூல்களில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.

இந்து சமயத்தில், சாஸ்திரங்களின்படி கைலாய – மானசரோவரில் நீராடுவது அல்லது அங்குள்ள நீரை அருந்துவது, அனைத்து பாவங்களையும் நீக்கும் என நம்பப்படுகிறது.

ஜைன மத நம்பிக்கையின்படி, முதல் தீர்த்தங்கரரான பகவான் ரிஷபதேவர் இவ்விடத்தில் மோட்சம் பெற்றதாக கருதப்படுகிறது.

புத்த மதத்தின்படி, கைலாய மலை மேரு பர்வதம் என்று அழைக்கப்படுகிறது மேலும் புத்தர் இங்கு தங்கியிருந்து தியானம் செய்ததாகக் கருதப்படுகிறது.

போன் (Bon) மத நம்பிக்கையின்படி, “ஜாங் ஜூங்” (Zhang Zhung) என்பது திபெத்திலுள்ள ஒரு புனிதத் தலம். போன் மதத்தின் நிறுவனர் டோனாபா ஷெர்னாப், திபெத்துக்கு முதல் முறையாக சென்றபோது இந்த ஏரியில் நீராடியதாகக் கருதப்படுகிறது.

சீக்கிய மத நம்பிக்கையின்படி, மதத்தை நிறுவியவரும், பத்து சீக்கிய குருக்களின் முதல்வருமான குருநானக்தேவ் இவ்விடத்தில் தியானம் கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

2. புவியியல் முக்கியத்துவம்

கைலாய மலை பூமியின் மையப்பகுதியாக கருதப்படுகிறது; இதைச் சுற்றி ஆறு மலைத்தொடர்கள் அமைந்துள்ளன என்று நம்பப்படுகிறது. கைலாசத்தின் பரப்பளவு முழு பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக மதிக்கப்படுகிறது. இயற்கை அழகில் சிறந்து விளங்குவதுடன், மானசரோவர் உலகின் மிக உயரமான  நன்னீர் ஏரியாகும்.   இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,557 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆகையால், உலகின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாக இது விளங்குகிறது.  ஆன்மிக தியான நிலையான சமாதியில் ஆழ்ந்து செல்ல இவ்விடம் சிறந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஏரி, பிரம்மபுத்ரா, காக்ரா, சிந்து, சட்லெஜ் ஆகிய நான்கு முக்கிய நதிகளின் பிறப்பிடமாகும்.

3. மருத்துவ முக்கியத்துவம்

மானசரோவர் பயணம், கைலாயத்தைச் சுற்றியுள்ள மூலிகைகள் மற்றும் செடிகள் குறித்து  அறிந்துகொள்ள ஒரு  சிறந்த வாய்ப்பாகும்.  இங்கு சுற்றுப்பகுதியில்  வளரும் காட்டு மலர்கள் மற்றும் செடிகள் மருத்துவப் பயன்கள் கொண்டவை. “நாகமணி” போன்ற சில மலர்கள் பாம்புக் கல்லைப் போன்ற வடிவத்தில் இருந்து, அதன் அழகால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. “பிச்சுக் காஸ்” (Stinging nettle) எனப்படும் செடி மானசரோவர் பகுதியில் வளரும் முக்கியமான மூலிகையாகும். இது மூட்டு வலி போன்ற நோய்களை குணப்படுத்த உதவுவதுடன், அக்குபங்க்சர் போன்ற சிகிச்சை முறைகளிலும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

4. சுற்றுலா ஈர்ப்பு

இயற்கை, ஏரிகள், பனிமலைகள் மற்றும் பசுமை சூழல் ஆகியவற்றை விரும்புவோருக்கு மானசரோவர் ஒரு சொர்க்கம் போன்றது. மலையைச் சுற்றி இயற்கை வளம் நிரம்பிய தோட்டங்கள் காணப்படுகின்றன. தாமரை, லில்லி போன்ற அழகிய மலர்களும், அன்னப்பறவைகளும் ஏரியின் அழகை மேலும் அதிகரிக்கின்றன.

சூரிய உதயத்தின் போது கைலாய மலை உச்சி தங்க நிறத்தில் ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ்விடத்தின் ஒழுங்கும் இயற்கை அழகும் மனதை மயக்கும். ஆசியாவின் மிகவும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், சவாலானதும், அதிகம் பார்வையிடப்படும் யாத்திரைகளில்  ஒன்றாக மானசரோவர் கருதப்படுகிறது.

மானசரோவர் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

மானசரோவருக்கான பயணமே ஒரு புத்துணர்ச்சி தரும், சாகசம் நிறைந்த அனுபவமாக இருக்கும். அதற்குப் பிறகும், உங்கள் பயணத்தை மேலும் சிறப்பாக்கும் சில முக்கிய இடங்கள் அருகிலேயே உள்ளன. வரும் அனுபவங்களை தவறவிடாமல் அனுபவிக்க இவ்விடங்களையும் கண்டுகளிக்கலாம்.

கௌரி குண்ட்: “பார்வதி சரோவர்” என்றும் அழைக்கப்படும் இவ்விடம் பல புராணக் கதைகளுடன் தொடர்புடையது. பார்வதி தேவி இங்கு நீராடியதாகவும், இங்குதான் அவள் விநாயகரை படைத்ததாகவும் நம்பப்படுகிறது.  இது “கருணையின் ஏரி” என்றும் அழைக்கப்படுகிறது.

ராக்ஷஸ் ஏரி: “அசுரர்களின் ஏரி அல்லது  பேய்களின் ஏரி”  என்றும் அழைக்கப்படுகிறது.  ராவணன் வாழ்ந்த இடம் என்று நம்பப்படுவதால், “ராவணன் ஏரி” என்று அழைக்கப்படுகிறது. இது திபெத்தின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியில்  டோலா, டோப்செர்மா, லச்சாடோ, டோஷர்பா என்னும்  நான்கு தீவுகள் உள்ளன. ஏரியின் நீர் மிகுந்த உப்புத்தன்மை மற்றும் விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுவதால், அருகில் வசிக்கும் மக்கள் இதில் நீராடுவதில்லை

கைலாய பரிக்ரமா: கைலாய மலை சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக இருப்பிடமாக அறியப்படுகிறது. சிவபுராணத்தின்படி, இந்த மலையைச் சுற்றி வரும் பரிக்ரமா  அனைத்து பாவங்களையும் நீக்கும் என நம்பப்படுகிறது. இந்த பரிக்ரமா சுமார் 53 கிலோமீட்டர் தூரம் கொண்டது;  இதை முடிக்க பொதுவாக 3 நாட்கள் ஆகும். கடுமையான காலநிலை, ஆக்சிஜன் குறைபாடு போன்ற சவால்களை எதிர்கொண்டு மேற்கொள்ள வேண்டிய சாகசமான ஆன்மிகப் பயணமாக இது விளங்குகிறது.

கைலாயம்  – மானசரோவருக்கு செல்ல சிறந்த காலம்

மானசரோவருக்கு சென்றவர்கள் கூறுவதுபோல், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள கோடை காலமே சிறந்தது. இந்த நேரத்தில் பனி உருகத் தொடங்குவதால், வானிலை சற்று மிதமாக இருக்கும். நடைபயணம், சுற்றுலா மற்றும் இயற்கை அழகை அனுபவிக்க இது உகந்த காலமாகும்.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *