மனவுறுதியை அதிகரிக்க வேண்டுமா? அன்பு செலுத்துங்கள்
எது சரி, எது நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால், பெரும்பாலும் அதை செய்வதற்கான மனவுறுதி நம்மிடம் இல்லாதது போல் உணர்கிறோம்.
உங்களுக்கு உண்மையிலேயே மனவுறுதி இல்லையென்றால், எப்படி மேம்படுத்துவது என்பதைப் பற்றிய இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கமாட்டீர்கள். நீங்கள் செயலாக உருமாற்றும் ஒவ்வொரு எண்ணத்திற்குப் பின்னும் ஓரளவு மனவுறுதி இருக்கிறது. “எழுந்து அடுத்த அறைக்குப் போக வேண்டும்” என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும்போது அச்செயலை நீங்கள் செய்கிறீர்கள். இதுகூட மனவுறுதியையே குறிக்கிறது. மனவுறுதி அறவே இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை.
உங்கள் மனது ஏதோவொரு பழக்கத்திற்கோ, ஆசைக்கோ வசப்பட்டிருப்பதால் சில விஷயங்கள் நடப்பதில்லை. இதனால், “எனக்கு மனவுறுதி இல்லை,” என்று நீங்கள் நினைக்கத் தொடங்குகிறீர்கள். ஆனால் மனம் என்று ஒன்று இருக்கும்வரை, உறுதியும் இருக்கும்.
எனக்கு மனவுறுதி இல்லை என்று கூறும்போது, உங்கள் கைகளை நீங்களே கட்டி கொண்டு விடுகிறீர்கள். உங்கள் நெற்றியில் “நான் பலவீனமானவர்,” என்று நீங்களே முத்திரை குத்திக்கொண்டு விடுகிறீர்கள்.
மாறாக, உங்களுள் இருக்கும் துணிவைத் தட்டி எழுப்புங்கள். ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான நேரத்தில் உங்களுக்கு தேவையான பலம் கிடைக்கும். அனைத்து ஆற்றலும், வலிமையும் உங்களிடமே உள்ளன.
முப்பது நாட்கள் தொடர்ந்து பிராணாயாமம் செய்தால் ஒரு மில்லியன் டாலர் கிடைக்கும் என்று யாராவது உங்களிடம் சொன்னால், நீங்கள் ஒரு நாள் கூட அதைத் தவற விடமாட்டீர்கள். தூக்கத்தையும், உணவையும் தவற விட்டாலும், பிராணாயாமத்தை தவற விடமாட்டீர்கள். அதற்கான சக்தியை பேராசை உள்ளிருந்து எழுப்பிவிடுகிறது. அதேபோல, அச்சமும் கூட: பிராணாயாமம் செய்யாவிட்டால் நோய்வாய்ப்படுவீர்கள் என்று யாராவது சொன்னால், நீங்கள் அதைத் தவறாமல் செய்வீர்கள். அன்பு, அச்சம், பேராசை ஆகியவை மனவுறுதியை அதிகரிக்க சிறந்த வழிகளாகும்.
மில்லியன் டாலர் கேள்வி
முப்பது நாட்களுக்கு அல்லது ஒரு மாதத்திற்கு புகை பிடிக்காவிட்டால் ஒரு மில்லியன் டாலர் அல்லது ஒரு மில்லியன் யூரோ கிடைக்கும் என்று யாரோ உங்களிடம் சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். உடனே, நீங்கள், “என்ன, 30 நாட்கள் மட்டும்தானா? சில மாதங்களில் 30 நாட்கள் உள்ளன, சிலவற்றில் 31 நாட்கள், பிப்ரவரியில் நாட்களின் எண்ணிக்கை குறைவு. உறுதியாக பணம் கிடைக்க வேண்டும், அதனால் நான் 35 நாட்கள் புகை பிடிக்க மாட்டேன்,” என்று சொல்வீர்கள்.
அகந்தை, அன்பு, பக்தி, பேராசை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கூட இல்லாத ஒருவருக்கு மனவுறுதியும் குறைவாகவே இருக்கும்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஒரு பழக்கத்தை விட வேறு ஏதோ ஒன்றுக்கு நீங்கள் அதிக மதிப்பளித்தால், அது நிச்சயம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால், அந்த பழக்கம் தானாகவே நின்று விடும். நோய் எதிப்புசக்தி குறைபாடு (AIDS)பயத்தால் ஒழுக்கக்கேடான உறவுகள் பெரிதளவில் குறைந்துள்ளன. அதே போல, ஒரு பெரிய லட்சியத்திற்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்வது, சிறிய ஈர்ப்புகளை வெல்ல உதவுகிறது.
எது நல்லது, எதைச் செய்ய வேண்டும் என்று அறிவுப்பூர்வமாக மட்டுமே தெரிந்து கொள்ளும்போது, நீங்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். உங்கள் சௌகரிய மண்டலத்திற்கு உள்ளேயே இருக்க விரும்புவீர்கள். அப்போது மனவுறுதி குறைகிறது. உங்கள் துணிவை அதிகரியுங்கள் அல்லது எதன் மீதாவது அன்பு செலுத்துங்கள். ஒரு லட்சியத்திற்கான அர்ப்பணிப்பு, அச்சம், பேராசை போன்றவை மனவுறுதியை அதிகரிக்கின்றன.
அகங்காரம் உள்ளவர்களுக்கும் துணிவு அதிகம் இருக்கும். அவர்களை ஒரு செயலுக்கு உறுதிப்பாட்டுடன், சோம்பலிலிருந்து விடுபடச் செய்வது மிகவும் சுலபம். அகங்காரம் இல்லாதவர்கள் மிகுந்த அன்பும், சரணாகதியும் கொண்டவர்கள். மனவுறுதியை வளர்த்துக் கொள்வது அவர்களுக்கு எளிதே. அகங்காரமோ, அன்போ, பக்தியோ, பேராசையோ இல்லாதவர்களுக்கு மனவுறுதி குறைவாகவே இருக்கும் . பேராசைப்படுங்கள் அல்லது பயப்படுங்கள். அல்லது உங்கள் அன்பை வளர்த்து சரணடையுங்கள். உண்மையான ஞானத்தின் மூலம் உங்கள் துணிவை அதிகரிக்க முடியும்.
சோம்பல் காத்திருக்கும் போது
சோம்பல்தான் மனவுறுதி இல்லாததுபோல் உங்களை உணரச்செய்கிறது. “நாளை 6 மணிக்கு எழுந்து பிராணாயாமம் செய்வேன்” என உறுதியெடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் காலையில், “இன்று குளிராக இருக்கிறது. இன்று இரவோ, நாளையோ செய்து கொள்ளலாம்,” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வீர்கள். உங்கள் உடல் சோர்ந்து இருப்பதாலும், மனம் சோர்ந்து இருப்பதாலும், தவறான உணவு வகைகளை உண்பதாலும்தான் இது நடக்கிறது. இது ஒரு கட்டத்தை அடையும்போது, எரிச்சலடைந்து, இதைக் குறித்து ஏதாவது செய்ய நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்து அதற்கான நடவடிக்கையை எடுக்க ஆரம்பிக்கிறீர்கள்.
என்றோ ஒரு நாள், சோம்பியிருப்பதில் சலிப்படைவீர்கள். இங்கே தீப்பற்றிக் கொண்டிருக்கிறது என்று யாரோ ஒருவர் சொன்னால், உங்கள் சோம்பல் மறைந்துவிடும். அவசர நிலை சோம்பேறித்தனத்தை ஒழிக்கிறது. அல்லது உங்கள் மனதில் ஒரு முடிச்சு அவிழ்ந்து, உங்கள் இதயத்தில் அன்பு ஊற்றெடுக்கும்போதும் சோம்பல் மறைந்து விடும். ஏதாவது ஒன்றைப் பற்றியோ, ஒருவரைக் குறித்தோ பேரார்வம் கொள்ளும்போது, விழிப்பும் ஆற்றலும் அடைவீர்கள். அன்பு, அச்சம் அல்லது பேராசையின் மூலம் சோம்பலை வெல்லமுடியும். இவற்றில் ஒன்றுகூட இல்லையென்றால், நீங்கள் எல்லாவற்றையும் தள்ளிப் போடுவீர்கள். தள்ளிப் போடப்போட அச்சம் வரலாம். பின்னர், அச்சத்தினால் செயல்படத் தொடங்குவீர்கள்.
தள்ளிப் போடுவதைத் தவிர்க்க அன்பு ஒரு சிறந்த வழியாகும். உங்கள் கூடப் பிறந்தவரையோ, அவர் மகளையோ விமான நிலையத்திலிருந்து அதிகாலையில் அழைத்து வருவதாக வாக்களித்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். சோம்பலாக உணர்ந்தாலும் கூட, காலையில் விழித்தெழுந்து, அவர்களைச் சந்திக்க விரைவீர்கள். எங்கிருந்தோ அந்த சக்தி உங்களுக்கு வந்துவிடும்.