“தேடல் உள்ளவர்” இயல்பிலேயே ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தின் சிறு பொறி என்பதை அறிந்தவர். அதனால் அவர்கள் மோசமாக இருக்க முடியாது. நான் உங்களுக்குச் சொல்கிறேன், படைப்பாளர் மூலம் உருவாக்கப்பட்ட கெட்ட மனிதர் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஒளி இருக்கிறது.”
மக்களின் நற்குணத்தை நீங்கள் நம்புகிறீர்களா?
அடிப்படையில், உலகில் இரண்டு வகையான அணுகுமுறைகள் அல்லது இரண்டு வகையான மக்கள் உள்ளனர்:
- எல்லா மக்களும் இயல்பிலேயே கெட்டவர்கள் என்று நினைப்பவர்கள்.
- அவர்களின் நடத்தையில் கொஞ்சம் மோசமாக இருந்தாலும், அடிப்படையில் எல்லோரும் உள்ளுக்குள் நல்லவர்கள் என்று நினைப்பவர்கள்; கெட்ட நடத்தை வெறும் மேலோட்டமாகவே இருக்கும்.
முதல் வகை மக்கள் யாரையும் நம்பமாட்டார்கள். இரண்டாவது வகை மக்கள் எவரையும் அதிகமாக சந்தேகப்பட மாட்டார்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரிகிறதா? நீங்கள் இயல்பாகவே அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்தால்
உங்கள் சந்தேகம் மேலோட்டமானது மட்டுமே. நீங்கள் யாரையும் ஆழமாக சந்தேகிக்க மாட்டீர்கள், ஏனென்றால் அங்கு இருக்கும் எல்லோரிடமும் உள்ள நற்குணங்களையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எல்லோருடைய நற்குணங்களையும் நம்புகிறீர்கள்.
மற்ற நபர்களுக்கு இந்த நம்பிக்கை பெரிய பிரச்சினையாக உள்ளது, ஏனென்றால் அவர்கள் உள்ளார்ந்த பண்பில் அனைவரையும் மோசம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வெளியே நல்லவர்களாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் நல்லவர்கள் அல்ல. இந்தமனப்பான்மை – உங்கள் மனதில் உள்ள இந்த அனுமானம் — யாரையும் நம்பாமல் இருக்கச் செய்கிறது.
ஞானம் என்பது, எதிர்மறை தன்மையை மேலோட்டமாக மட்டுமே பார்ப்பது
ஒரு நபரிடம் ஏதேனும் தவறு இருப்பதைக் கண்டால், அதுதான் அந்த நபரின் உண்மையான இயல்பு என்று நீங்கள் நினைப்பது மிகவும் சுவாரஸ்யமானது.
ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சென்ற வருடம், இந்தியாவின் வடமாநில நகரங்களில் ஒன்றில் பெரிய சத்சங்கத்திற்குச் சென்றிருந்தேன். சத்சங்கத்தில், ஒரு மோசமான நபர் அங்கே வந்து மேடையில் ஏறி, அங்குமிங்கும் நகரத் தொடங்கினார். எல்லா பத்திரிக்கையாளர்களும் மற்றும் ஒவ்வொருவரும், “இந்த ஆள் ஒரு குற்றவாளி, இவன் எப்படி குருதேவரை அணுகினான்? குருதேவருடன் அவர் எப்படி நிற்கிறார்?”
இந்த மனிதர் மிகவும் மோசமானன்; அவன் “என்னால் ஒரு போன் செய்து செய்து எந்த விமானத்தையும் நிறுத்த முடியும்” என்று கூறுவான். எந்த டாக்சி ஓட்டுனரையும் காரை விட்டு இறங்கச் சொல்லிவிட்டு டாக்ஸியை எடுத்துக்கொண்டு போவான். அவன் ஒரு பெரிய குற்றப் பதிவு உள்ள ஒருவன். அதனால் அவன் மேடைக்கு வந்ததும் அனைவரும் “குருதேவ் இதை எப்படி அனுமதித்தார்?” என்று வியந்தனர்.
உங்களுக்குத் தெரியுமா, எந்தப் பயிற்சியோ அல்லது எதையும் செய்யாத அதே நபர், மூன்று மாதங்களுக்குப் பிறகு, சிவராத்திரி அன்று பெங்களூரு ஆசிரமத்திற்கு என்னைச் சந்திக்க வந்தார். அவர் தனது பாக்கெட்டிலிருந்து என் படத்தை எடுத்து, “குருதேவ், இந்தப் படத்தை நான் என் பாக்கெட்டில் வைத்ததிலிருந்து, என்னால் என் வேலையைச் செய்ய முடியவில்லை. என்ன ஆயிற்று? நீங்கள் என்ன செய்தீர்கள்? என் வாழ்க்கை முழுவதும் தலைகீழாக உள்ளது; என் முழு வாழ்க்கையும் மாறிவிட்டது. இங்கே நிறைய மகிழ்ச்சி இருக்கிறது! இப்போது இந்த மகிழ்ச்சியை என் மாநிலத்திற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்றார்.
அனைவராலும் சமூக விரோதியாகக் கருதப்பட்ட அதே நபர் தான் இவர். பத்திரிகையாளர்கள் கூட அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். பொதுவாக பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். ஆனால், அவர்கள் “இந்த ஆள் பயங்கரமானவன்” என்கிறார்கள்
உலகம் நீங்கள் பார்ப்பது போல் உள்ளது
உங்களுக்குத் தெரியும், நாம் மக்களை எப்படி காண்கிறோமோ, அதைப்போலவே உலகமும் நம்மிடம் தோன்றுகிறது.
சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி இருக்கிறது:
“யதா த்ருஷ்டி ததா ஸ்ருஷ்டி” – உலகத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ, அப்படித்தான் உலகம் உங்களுக்காக ஆகிறது.
நீங்கள் உலகத்தை முழுவதும் மோசமான மனிதர்களால் நிரம்பியுள்ளது எனக் காண்கிறீர்கள் என்றால், உங்கள் அனுபவத்திலும் அந்த மாதிரியான நிகழ்வுகளே நடைபெறும். நீங்கள் உலகத்தை நல்ல மனதுள்ள மக்களால் நிரம்பியுள்ளது எனக் காண்கிறீர்கள் என்றால், ஒரு மோசமான குற்றவாளியிடமும் கூட, ஒரு நல்ல மனிதர் ஒளிந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதை நீங்கள் அங்கீகரிப்பீர்கள்.
எனவே, மக்களை மதிப்பிடாதீர்கள், அல்லது அவர்களை கெட்டவர்கள் அல்லது நல்லவர்கள் என்று முத்திரை குத்தாதீர்கள். பல வழிகளிலும், பல மனிதர்களிலும், பல மனநிலைகளிலும், பல வண்ணங்களி்லும் உள்ளத்திலும் தன்னை வெளிப்படுத்தும் ஒரே ஒருதெய்வீகம் மட்டுமே உள்ளது. அது ஒரு ஒளி. இதை நம்மால் அங்கீகரிக்க முடிந்தால், நம் இதயத்திற்கு ஓர் ஆழமான அமைதி கிடைக்கும், அத்தகைய நம்பிக்கையும் ,உறுதியும் கிடைப்பதால் நம்மை எதுவும் அசைக்க முடியாது.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி இருக்கிறது
ஒரு தேடுபவர் , உள்ளார்ந்த ரீதியில், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தின் ஒரு சிறு பொறி. எனவே, அவர்கள் கெட்டவர்களாக இருக்க முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். படைப்பாளரால் படைக்கப்பட்ட மோசமான மனிதர் இல்லை. என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் – கெட்டவர் இல்லை. எல்லோரிடமும் ஒளி இருக்கிறது. எங்கோ அது மறைந்திருக்கிறது, எங்கோ அது உறக்கத்தில் இருக்கிறது, எங்கோ அது அதிக செயல்பாட்டில் இருக்கிறது.
எனவே இவை இரண்டும்தான் பாதைகள். நீங்கள் எந்தப் பக்கம் செல்கிறீர்கள் என்பதை உங்கள் மனதில் பாருங்கள். நீங்கள் நம்பிக்கையை நோக்கிச் செல்கிறீர்களா, அல்லது சந்தேகத்தை நோக்கிச் செல்கிறீர்களா? நீங்கள் மற்றவர்களை வெறுக்கிறீர்கள் அல்லது உங்களை வெறுக்கிறீர்கள் என்றால், அதற்கு ஒரு மாற்றத்தைக் கொடுத்து, “இல்லை, உள்ளார்ந்த ரீதியில் எல்லோரும் நல்லவர்கள்” என்று சொல்ல வேண்டிய நேரம் இது.






