கர்மா என்றால் என்ன?
கர்மா என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல், இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பலர் கர்மாவை, பற்றுதலாகவும், விதியாகவும் பார்க்கிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்தில் கர்மா என்ற சொல், செய்யும் செயலை மட்டுமே குறிக்கிறது.
ஒரு சில செயல்கள் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் ஒரு உணர்வாக மறைந்திருக்கலாம். சில செயல்கள் நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருக்கலாம். தற்போது நடைபெறும் செயல்களின் விளைவாக எதிர் காலத்தில் சில செயல்கள் நடக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இவை கர்மாவின் (செயல்களின்) மூன்று வடிவங்கள் ஆகும்.
ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் இருந்து எழும்போது, அந்த ஆசை அல்லது உணர்வு கர்மா ஆகிறது. இது சூட்சும கர்மா (கண்ணுக்கு தெரியாத சூட்சும நிலையில் செயல் படுத்தல்). உதாரணமாக, ஒரு புதிய கட்டடத்தை கட்ட உங்கள் மனதில் ஒரு ஆசை உதித்த அந்தத் தருணத்திலேயே, அந்தக் கட்டடத்திற்கான வேலைகள் துவங்கி விடுகின்றன. அதே போல, கட்டிடக் கலைஞர் வீட்டின் வரைபடத்தை உருவாக்கும் நேரத்திலேயே, வீட்டின் கட்டுமானம் ஏற்கனவே ஒரு வகையில் தொடங்கி விட்டது என்றே கொள்ளலாம்.
ஸ்தூல கர்மா என்பது பொருட்களின் அடிப்படையில் நடைபெறும் செயல் — எடுத்துக்காட்டாக, செங்கல், கற்கள் மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றைப் கொண்டு அந்த வீட்டை கட்டுவது போன்ற கண்ணுக்குப் புலப்படும் செயல்களை ஸ்தூல கர்மா என்கிறோம்.
எனவே, கர்மா என்பது பஞ்ச பூதங்களின் எல்லைக்கு அப்பால் எழும் சூட்சும ஆசைகள் அல்லது உணர்வுகள் மற்றும் ஐந்து முக்கிய பூதங்களின் உலகில் நடைபெறும் செயல்களும் சேர்ந்து கர்மா என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. மேலும், (செயலின் விளைவாக) மனதில் பதிந்திருக்கும் எந்தப் பதிவுகளும் கூட ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மாவாக மாறுகின்றன.
நீங்கள் தற்போது செய்யும் செயல் உங்கள் மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்குகின்றன. இந்த தாக்கம் அல்லது எண்ணங்கள் எதிர்காலத்தில் இதே போன்ற செயல்களை ஈர்க்கலாம் அல்லது செய்ய வைக்கலாம்.
நல்லவர்களுக்கு கெட்டது ஏன் நடக்கிறது?
சஞ்சித கர்மா என்பது நாம் நம்முடன் கொண்டு வந்த கர்மா. பிராரப்த கர்மா என்பது இப்போது பலன்தர தொடங்கியுள்ள கர்மா. ஆகாமி கர்மா என்பது எதிர்காலத்தில் நமக்கு ஏற்படக்கூடிய கர்மா. நமது சஞ்சித கர்மாவை எரிக்கலாம், அல்லது அகற்றலாம். ஆன்மீக பயிற்சிகள், பிரார்த்தனை, சேவை, நம்மைச் சுற்றியுள்ள மக்களையும், இயற்கையையும் நேசிப்பது, தியானம் போன்றவை நாம் பெற்ற கர்மாவை அழிக்க உதவுகின்றன.
ஏன் கெட்ட விஷயங்கள் நல்லவர்களுக்கு நடக்கின்றன?’ என்று சில நேரங்களில் மக்கள் கேட்கிறார்கள், நீங்கள் இன்று நல்லவராக இருக்கிறீர்கள், ஆனால் நேற்று என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஏற்கனவே பலன் தரத் தொடங்கியுள்ள பிராரப்த கர்மாவை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். ஏற்கனவே பயணத்தில் இருக்கும் காரில் செல்வது போல இது ! நீங்கள் விரைவு சாலையில் (freeway) சென்று கொண்டிருக்கம் போது, வெளியேறும் வழியைத் (exit) தவறவிட்டால், அடுத்த வெளியேறும் வழிக்குதான் செல்ல வேண்டும். ஆனால் நீங்கள் பாதைக்கோட்டை (lane) மாற்ற எந்த தடையும் இல்லை! நீங்கள் வேகமான பாதைக்கோட்டிலோ அல்லது மெதுவான பாதைக்கோட்டிலோ செல்லலாம். இதற்கு சுதந்திரம் இருக்கிறது என்றும் சொல்லலாம், மற்றொரு கோணத்தில் சுதந்திரம் இல்லை என்றும் சொல்லலாம்.
ஆகாமி கர்மா என்பது எதிர்காலத்தில் நாம் செய்யக்கூடியது (அல்லது அனுபவிக்கக் கூடியது). நீங்கள் இன்று இயற்கையின் சில விதிகளை மீறினால், எதிர்காலத்தில் அதன் விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நீங்கள் இப்போது ஏதாவது செய்தால், எதிர்காலத்தில் நீங்கள் ஏதாவது அனுபவிக்கப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் கர்மாவின் விளைவுகளை நாம் அனுபவிக்க வேண்டும். அதுவே எதிர்காலக் கர்மா ஆகும்.
நல்லவர்களுக்கு “ஏன் கெட்ட விஷயங்கள் நடக்கின்றன?” என்று சில நேரங்களில் மக்கள் கேட்கிறார்கள். நீங்கள் இன்று நன்றாக இருக்கிறீர்கள், ஆனால் நேற்று என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. நீ விதைக்கிறபடியே பயிர் அறுப்பாய். ஆனால் ஒவ்வொரு கர்மாவுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு.
கர்மாவை எரிப்பது எப்படி?
முக்கியமாக ஐந்து விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் சஞ்சித கர்மாவிலிருந்தும் — நீங்கள் முற்பிறவியில் இருந்தும் அல்லது கடந்த காலத்திலிருந்து பெற்ற கர்மாவிலிருந்தும் — நமக்கு வருகின்றன. இவை (1) பிறப்பு, பிறந்த இடம் (2) உங்களுடைய பெற்றோர் (3) உங்கள் கல்வி மற்றும் கல்வி முறை, கல்வி பட்டம் மற்றும் நீங்கள் எவ்வளவு அறிவைப் பெறுகிறீர்கள். (4) செல்வம், செல்வத்தின் ஆதாரம். (5) இறுதியாக உங்கள் நீண்ட ஆயுள் மற்றும் மரண முறை. இந்த ஐந்து விஷயங்களும் நம் சஞ்சித கர்மாவிலிருந்து வருகின்றன.
இப்போது, நாம் எவ்வளவு செல்வந்தர்களாக ஆகிறோம், நமது விழிப்புணர்வில், நமது திருமணத்தில், நமது குழந்தைகளில், நமது சமூகப் பணிகளில் நாம் எவ்வளவு முன்னேற முடிகிறது – இவை அனைத்தும் பிராரப்த கர்மா ஆகும். ஆகாமி கர்மா என்பது, இந்த வாழ்க்கையில் மேற்கொள்ளும் செயல்களின் விளைவுகள் — நாம் மேற்கொள்ளும் செயல்கள் எதிர்காலத்தில் விளைவிக்கும் கர்மா. எனவே இப்போது செயல்படவும், அதிக கர்மாவைப் பெறவும் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் உள்ளது. ஆனால் உங்களுக்கு என்றே மாற்ற முடியாத ஒரு குறிப்பிட்ட விதி வழங்கப்பட்டுள்ளது.
எந்த செயல்கள் கர்மவினைக்கு உட்படாது?
மேலும், கர்மாவில் இரண்டு பிரிவுகள் உள்ளன: முதலில் மனதில் பதிக்கப்பட்ட பதிவுகளால் ஏற்படும் கர்மா மற்றும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் மூலம் நடைபெறும் கர்மா. இரண்டாவது ஒருவரின் இயல்புக்கு வெளியே நடக்கும் மற்றொரு வகை செயல் உள்ளது, அங்கு நீங்கள் அதை ஒரு செயல் என்று கூட அழைக்கவில்லை. இது ஒரு தன்னிச்சையான செயலைப் போல தன்னிச்சையாக நிகழ்கிறது. ஒரு குழந்தை திடீரென கீழே விழுகிறது, நீங்கள் தன்னிச்சையாக சென்று குழந்தையை தூக்குகிறீர்கள், ஏனென்றால் அது உங்கள் இயல்பில் உள்ளது – யாராவது சிக்கலில் இருக்கும்போது அவர்களுக்கு உதவுவது உங்களுக்குள் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கர்மா மூடப்பட்ட கதவல்ல. இது ஒரு திறந்த சாத்தியக்கூறு.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
அந்த நிலையில், உங்கள் செயல் கடவுளின் செயலுக்கு ஒத்ததாக இருக்கிறது – அங்கு தன்னிச்சையான தன்மை உள்ளது. தன்னிச்சையாகச் செய்யப்படும் ஒரு செயல் எந்த கர்மாவையும் உருவாக்காது, ஏனெனில் அது உங்கள் இயல்பிலிருந்து வெளிப்படுகிறது. அதனால்தான் புலியோ, சிங்கமோ வேட்டையாடும்போது, அது எந்த கர்மாவையும் பெறுவதில்லை. ஒரு பூனை ஒரு எலியைக் கொன்றால், அது அதன் இயல்பில் இருப்பதால் அதற்கு கர்மா கிடைப்பதில்லை. எல்லாமே கர்மாதான், ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கர்மாவைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது இயற்கை.
மேற்கூறியவை அனைத்தும் தனிப்பட்ட கர்மாக்கள் என்றாலும், குடும்ப கர்மா, சமூக கர்மா மற்றும் ஒரு காலம், ஒரு சகாப்தத்தின் கர்மா ஆகியவையும் உள்ளன. ஒரு விமான விபத்து நடக்கும்போது, அதே கர்மா உள்ளவர்கள் அதே விமானத்தில் இருப்பார்கள். சிலர் அதில் இல்லையென்றால், விமானம் எரிந்து போன போதிலும் அவர்கள் தப்பித்து விமானத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள். எந்த கர்மா ஆழமான மட்டத்தில் என்ன விளைவைக் கொண்டு வருகிறது என்பதைக் குறிப்பிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
ஆனால் கர்மா மூடப்பட்ட கதவல்ல. இது ஒரு திறந்த சாத்தியகக்கூறு.











