மனம் அசைவற்று இருக்கும்போது, எந்த எண்ணத்தையும் நிறைவேற்றும் சக்தியை அது பெறுகிறது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
பிராணாயாமம் என்றால் என்ன? பிராணாயாமம் என்பது அடிப்படையில் பிராணனின் பரிமாணத்தில் செயல்படுவதைக் குறிக்கிறது. பிராணன் என்பது நம் உடல் மற்றும் ஆழ்மனதளவில் தேவையான முக்கிய சக்தியாகும். இச்சக்தி இல்லையெனில் நம் உடல் அழிந்துவிடும். நம் உள்ளே இருக்கும் பிராண அல்லது உயிர் சக்தியே நம் மனத்திற்கு ஊட்டமளித்து உடலையும் உயிருடன் வைத்திருக்கிறது.
பிராணாயாமம் என்றால் என்ன?
யோகத்தின் நான்காவது அங்கம் பிராணாயாமம் என குறிப்பிடப்படுகிறது. இதனை அடிக்கடி பிராணாயாம யோகத்துடன் பயில வேண்டும். மூச்சைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனதின் சக்தியைக் கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. ”பிராணாயாமம்” என்னும் சொல், சமஸ்கிருத சொற்களான ”ப்ராணா” மற்றும் “ஆயமா” ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. இதன் மொழிபெயர்ப்பு “மூச்சு“ மற்றும் “விரிவாக்கம்” ஆகும். யோக சுவாசப் பயிற்சிகள் உங்கள் உயிர் சக்தியை கட்டுப்படுத்த உதவுகின்றன. இது “பிராணா” என்றும் அழைக்கப்படுகிறது.
பிராணாயாமம் என்னும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் ஆயிரமாண்டுகள் பழமையானவை மற்றும் இந்திய யோக மரபின் வழி வந்ததாகும். இது மூச்சை வெவ்வேறு நீளங்களில், அதிர்வெண்கள் மற்றும் கால அளவுகளில் ஒழுங்குபடுத்துவதை உள்ளடக்குகிறது. உடலையும் மனதையும் பிராணாயாமத்தின் மூலம் இணைப்பதே இதன் குறிக்கோள் ஆகும் உங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு அபரிமிதமான பிராண வாயுவை வழங்கி, குணமடைவதை ஊக்குவிக்கும் உடலியல் விளைவுகளையும் ஏற்படுத்துவது இதன் நோக்கம் ஆகும். பிராணாயாம யோகாவின் சுழற்சி கீழ்காணும் மூன்று நிலைகளைக் கொண்டது:
- பூரகம் (உள்ளிழுத்தல்)
- கும்பகம் (தக்க வைத்தல்)
- ரேசகம் (வெளி விடுதல்)
பிராணா என்றால் என்ன?
மூச்சுடன் தொடர்பு கொண்டது என்றாலும், பிராணா என்பது மூச்சு அல்ல. நம் உடலில் உள்ள நாடிகள் எனப்படும் ஆயிரக்கணக்கான நுண்ணிய சக்தி வழித்தடங்கள் மற்றும் சக்கரங்கள் எனப்படும் சக்தி மையங்கள் வழியாக பாயும் சக்தியே பிராணா ஆகும். அது நம் உடலைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை உருவாக்குகிறது. பிராணாவின் அளவும், தரமும், அது நாடிகள் மற்றும் சக்கரங்களின் வழியாக பாயும் விதமும் ஒருவரின் மன நிலையை தீர்மானிக்கின்றன.
நமது இயக்கம், பிராண சக்தி மற்றும் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் பாயும் பிரபஞ்ச சக்தி ஆகியவை நம் செயல்கள், எண்ணங்கள் மற்றும் நாம் சுவாசிக்கும் விதங்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பிராணாவின் அளவு அதிகமாகவும் அதன் ஓட்டம் தொடர்ச்சியாகவும், மென்மையாகவும், சீராகவும் இருந்தால், மனம் அமைதியாகவும், நேர்மறையாகவும், உற்சாகமாகவும் இருக்கும். எனினும், முச்சின் மேல் போதிய அறிவின்மை மற்றும் கவனமின்மை ஆகியவை நாடிகளிலும் சக்கரங்களிலும் சிறு அடைப்புகளை ஏற்படுத்தக் கூடும். துரதிர்ஷ்டவசமாக, இவை பாயும் பிராண ஓட்டத்தில் தடை மற்றும் சீரற்ற நிலையை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, கவலை, பயம், உறுதியின்மை, பதட்டம், முரண்பாடு போன்ற எதிர்மறை பண்புகளை நாம் உணரக்கூடும்.. எந்த ஒரு பிரச்சனையுமே முதலில் ஆழ்மன அளவில் உருவாகி பின் நம் உடலளவில் வெளிப்படுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு வெகு முன்னரே உங்கள் பிராண கோசத்தில் நோய்த்தன்மை வெளிப்படுகிறது.
பிராணாயாமத்தின் வகைகள்
ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் எளிமையாகச் செய்யப்படக் கூடியவை மற்றும் உடலுக்கும் மனத்திற்கும் மிகுந்த ஓய்வை அளிக்கக் கூடியவை என இந்தியாவின் பண்டைய ரிஷிகள் அறிந்திருந்தார்கள். பிராணாயாமம் என்றால் என்ன என்று நாம் ஏற்கனவே தெளிவாகத் தெரிந்து கொண்ட நிலையில், இப்போது நாம் பயிலக்கூடிய வெவ்வேறு வகையான பிராணாயாமங்கள் குறித்து பார்க்கலாம். இவ்வெவ்வேறு வகையான சுவாச நுட்பங்களை ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெறும் வயிற்றில் எளிதாகப் பயிலலாம்.
பிராணாயாமத்தின் வகைகள் குறித்தும், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்தும் நாம் ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.
1. பிராமரீ பிராணாயாமம்
உங்கள் மனம் செயல்பாட்டில் சலசலத்துக் கொண்டேயிருக்கிறதா? யாரோவொருவர் உங்களைப் பற்றி சொன்னதையே நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்த முடியவில்லையா? அமைதியான ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து, இவ்வகை பிராணாயாமத்தை மேற்கொண்டு சலசலத்துக் கொண்டேயிருக்கும் மனதை தணிக்கவும். உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த சுவாசநுட்பம் ஒரு வரப்பிரசாதமாகும்.
ரீங்கரிக்கும் தேனீ சுவாசம் என பொதுவாக குறிக்கப்படும் பிராமரீ பிராணாயாமம் என்பது யோக சுவாசப் பயிற்சியாகும். இப்பயிற்சி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, நம் உண்மையான சுயத்துடன் நம்மை மீண்டும் இணைக்க உதவுகிறது. ஆரம்பநிலை பயிற்சியாளர்களுக்கான, தேனீயின் மென்மையான ரீங்கார ஒலியிலிருந்து பெறப்பட்டது என பெயரிடப்பட்ட இப்பிராணாயாம பயிற்சியினை மேற்கொள்ளும் போது இந்த ஒலி தொண்டையின் பின்புறத்திலிருந்து எழுப்பப்படுகிறது.
பிராமரீ பிராணாயாமம் பற்றியும், அதை செய்யும் முறையைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
2. கபாலபாதி
கபாலபாதி என்னும் யோக சுவாசப் பயிற்சியாகும் பெயர் சமஸ்கிருத சொற்களான கபாலம் என்பதன் பொருள் “மண்டையோடு” மற்றும் பாதி என்பதன் பொருள் “ஒளிவிடுதல்” ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.
பல்வேறு ஆழ்ந்த சுவாச பயிற்சிகளில் இந்த பிராணாயாம யோகா மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உடலின் நச்சுத்தன்மையைப் போக்கி, சக்தியின் வழித்தடங்களை தூய்மைப்படுத்துவது இப்பிராணாயாமத்தின் நன்மைகளில் ஒன்றாகும்.
கபாலபாதி பிராணாயாமம் என்பது இடைநிலையில் இருந்து முதுநிலை சுவாசப் பயிற்சியாளர்களுக்கானது. இப்பிராணாயாமம் உங்கள் மார்புப் பகுதியை வலுப்படுத்தி, அடிவயிற்றிலுள்ள உறுப்புகளை சுத்திகரிக்கும் நேரத்தில், உங்கள் இரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்களுக்கும் சக்தியூட்டுகிறது.
3. பஸ்திரிகா பிராணாயாமம்
சக்தி குறைந்தது போல் உணர்கிறீர்களா? மூன்று சுற்றுகள் பஸ்திரிகா பிராணாயாமம் (துருத்தி மூச்சு) பயிற்சியின் மூலம் உங்கள் சக்தி நிலைகள் உயரப் பெறும்! அவ்வாறெனில், பஸ்திரிகா பிராணாயாமம் என்றால் என்ன?
துருத்தி மூச்சு என அழைக்கப்படும் பஸ்திரிகா பிராணாயாமம், ஆழ்ந்த மூச்சை தூண்டும் பயிற்சியாகும். இப்பயிற்சியானது நிலையான காற்றோட்டத்தின் வாயிலாக மூட்டப்படும் நெருப்பை ஒத்திருக்கிறது. துருத்தி என்னும் பொருள் கொண்ட பஸ்திரிகா என்னும் சமஸ்கிருத சொல்லானது, நுரையீரல் மற்றும் அடிவயிற்றை தீவிரமாக நிரப்புதல் மற்றும் காலிசெய்தல் (உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல்) ஆகியவற்றை உள்ளடக்கிய பயிற்சியாகும். இப்பயிற்சி உடல் மற்றும் மனத்தின் உள் வெப்பத்தை தூண்டி, அனைத்து மட்டங்களிலும் ஆரோக்கியமான செரிமானத்தை விருத்தி செய்கிறது.
பஸ்திரிகா பிராணாயாமத்தின் பயன்களைப் பற்றியும் அதை செய்வதைப் பற்றியும் மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
4. நாடி சோதன பிராணாயாமம்
செய்யும் வேலையில் கவனம் செலுத்த இயலவில்லையா? ஒன்பது சுற்று நாடி சோதன பிராணாயாமம் (மாற்று நாசித்துவார சுவாச நுட்பம்), அதைத் தொடர்ந்து 10 நிமிட தியானமும் செய்து பாருங்கள். நாடி சோதன பிராணாயாமம் மூளையின் இரண்டு அரைக்கோளங்களுக்கு இடையில் இணைக்கத்தை கொண்டு வருவதன் மூலம், மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துகிறது.
நாடி சோதன பிராணாயாமம் எனப்படும் மாற்று நாசித்துவார பிராணாயாமம், பல பயன்களைக் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியாகும்.
சோதனா என்றால் சமஸ்கிருதத்தில் “சுத்திகரித்தல்” என்று பொருள், ’நாடி’ எனும் சொல் “வழித்தடம் அல்லது ஓட்டம்” என்பதைக் குறிக்கிறது. மனம் – உடல் வழித்தடங்களை முழுமையாக சுத்தப்படுத்துவதோடு, சுத்திகரித்து சமநிலைப்படுத்துவதே நாடி சோதன பிராணாயாமத்தின் முக்கிய குறிக்கோளாகும். இது மூன்று தோஷங்களையும் சமன்படுத்துகிறது. இது ஒவ்வொருவருக்கும் உகந்த நல்ல பயிற்சியாகும்.
நாடி சோதன பிராணாயாமா குறித்த விவரங்களையும், அதை செய்வது குறித்தும் அறிந்து கொள்ளுங்கள்.
பிராணாயாமத்தின் பயன்கள்
பிராணாயாமம் என்றால் என்ன என்றும், அதன் வகைகள் யாவை எனவும் நாம் தெரிந்து கொண்டோம். தற்போது பிராணாயாமத்தின் பலன்கள் மீது கவனம் செலுத்தலாம். முறையான ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அடியோடு மாற்றி விடும்.
யோக சுவாசப் பயிற்சிகளினால் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து பல மருத்துவம் மற்றும் அறிவியல் வெளியீடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓவ்வொரு வகை பிராணாயாம நுட்பத்திற்கும், அதற்கேயுரிய தனித்துவமான அம்சங்களும், பயன்முடிவுகளும் இருந்தாலும், பிராணாயாமத்தின் பொதுவான நலன்களை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இவற்றில் ஏதேனும் ஒரு நன்மையை வேண்டி பிராணாயாமப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள விரும்பினால், அதை சரியான முறையில் பயன்படுத்த ஏதுவாக முதலில் அந்நுட்பம் குறித்த முழு விவரங்களை ஆராய்வதோடு, ஏதாவது முன்னெச்சரிக்கைகளோ அல்லது எதிர்மறை விளைவுகளோ இருக்கக் கூடுமா என்பதையும் உணர்ந்து கொள்ளவும்.
பிராணாயாமத்தின் பொதுவான பலன்கள்:
- பிராணாவின் அளவு மற்றும் தரத்தை உயர்த்துவது மற்றும் மேம்படுத்துவதன் மூலம், நம் சக்தியின் அளவு உயர்கிறது.
- நாடி மற்றும் சக்கரங்களில் அடைப்பை நீக்கி, நம் ஒளிவட்டத்தை விரிவுபடுத்தி, மனநிலையை மேம்படுத்துகிறது.
- ஒருவரை ஆற்றல் மிக்கவராகவும், உற்சாகமானவராகவும், அமைதியானவராகவும், நேர்மறையாளராகவும் உருவாக்குகிறது. இத்தகைய மனநிலையானது சிறந்த முடிவுகளை எடுக்கவும், கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கும் மன வலிமையைத் தருவதோடு, மகிழ்ச்சியாக இருக்கவும் உதவுகிறது.
- உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றிற்கிடையே இணைக்கத்தை கொண்டு வருவதன் மூலம், ஒருவரை உடல், மனம் மற்றும் ஆன்மீக தளங்களில் வலிமையானவராக ஆக்குகிறது.
- இது மனதிற்கு தெளிவையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.
தியானமும், பிராணாயாமமும் நம்மை சிறப்பானவராக வெளிப்படுத்த உதவுகின்றன
நம் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதும், மற்றவர்களின் உணர்வுகளை சரியாகப் புரிந்துகொள்வதும் மிகக் கடினமான செயலாகும். இத்திறன் இல்லாமையே இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளதால், இத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒருபோதும் துல்லியமாக அமையாது, சில ஏற்றத் தாழ்வுகள் நிகழத்தான் செய்யும். அதாவது, நாம் என்ன உண்ர்கிறோமோ, அதை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போவதைப் போன்று, மற்றவர்கள் உணர்வதை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.
இது வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், நாம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் நம்மால் மற்றவர்களின் மனதை சற்று அதிகமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் தியானம், பிராணாயாமம் போன்றவற்றை செய்வது மிகவும் அவசியமாகிறது. இது நமக்கு உள்ளார்ந்த தெளிவை தரும். இதனால் நம்மை மற்றவர்கள் நன்றாகப் புரிந்து கொள்வதையும், நம் கருத்துக்களை சிறப்பாக வெளிப்படுத்த முடிவதையும் உணர்வோம்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
நமது சுவாசம் நமது உணர்வுகளுடன் தொடர்புள்ளது. ஒவ்வொரு உணர்வுக்கும், சுவாசத்தில் ஒரு குறிப்பிட்ட தாளம் உள்ளது. எனவே, உங்கள் உணர்வுகளை நேரடியாகக் கையாள இயலாத போது, சுவாசத்தின் உதவியுடன் நீங்கள் அதைச் செய்ய இயலும்.
நீங்கள் நாடகத்துறையில் இருப்பவரென்றால், உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டுமாயின், சுவாசத்தை வேகமாக வெளிப்படுத்துமாறு இயக்குநர் கூறுவது உங்களுக்குத் தெரியும், ஓரு அமைதியான காட்சி என்றால், அந்த இயக்குநர் உங்களை மென்மையாகவும், மெதுவாகவும் சுவாசிக்கச் சொல்வார். நாம் நமது மூச்சின் தாளத்தை புரிந்து கொண்டால், மனதை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அப்போது, நம்மால் கோபம், பொறாமை, பேராசை போன்ற எதிர்மறை உணர்வுகளை வென்று, இதயபூர்வமாக அதிகமாக புன்னகைக்க முடியும்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
குறிப்பு: யோகப் பயிற்சி உடலையும் மனதையும் மேம்படுத்த உதவுகிறது என்றாலும், அது மருத்துவத்திற்கான மாற்று அல்ல. பயிற்சி பெற்ற ஓரு யோகா ஆசிரியரின் மேற்பார்வையில் யோகாவை கற்றுக்கொள்வதும், பயிற்சி செய்வதும் அவசியமாகும். உங்களுக்கு ஏதாவது மருத்துவ பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவரையும், ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரையும் கலந்தாலோசித்த பிறகே யோகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பிராணாயாமம் அல்லது சுவாசப் பயிற்சிகள் நுட்பமான உயிர் சக்தியைக் கையாள்வதால் இந்த நுட்பங்களில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வது நல்லதல்ல.










