நாடி ஷோதன பிராணாயாமம் என்றால் என்ன?
நாடி = நுண்ணிய சக்தியின் வழிகள்; ஷோதனம் = சுத்திகரித்தல்; பிராணாயாமம் = மூச்சுப் பயிற்சி.
நாடிகள் மனித உடலில் நுண்ணிய சக்தியின் வழித்தடங்களாகும். பல காரணங்களால் இவற்றில் சக்தியின் ஓட்டம் தடைப்படக்கூடும். நாடிகளை சுத்திகரித்து, மனதை அமைதிப்படுத்தும் மூச்சுப் பயிற்சியே நாடி ஷோதன பிராணாயாமம் ஆகும். அனுலோம விலோம பிராணாயாமம் என்றும் இந்த பயிற்சி அழைக்கப்படுகிறது.
நாடிகளில் அடைப்பை ஏற்படுத்துவது எது?
- மன அழுத்தம்
- உடலில் நச்சுத்தன்மை
- உடல் மற்றும் மனதில் ஏற்பட்ட காயங்கள்
- ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை
- போன்றவை நாடிகளில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.
நாடிகள் தடைப்படுவதின் விளைவுகள்
இடா, பிங்களா மற்றும் சுஷும்னா ஆகியவை மனித உடலின் மூன்று முக்கியமான நாடிகள் ஆகும். இடா சீராக செயல்படாவிட்டாலோ அல்லது அது தடைப்பட்டிருந்தாலோ, குளிர், மனச்சோர்வு, குறைந்த மன ஆற்றல், மந்தமான செரிமானம் மற்றும் இடது நாசித்துவார அடைப்பு ஆகியவற்றை உணர்வோம். பிங்களா சீராக செயல்படாவிட்டாலோ அல்லது அது தடைப்பட்டிருந்தாலோ, வெப்பம், கோபம், எரிச்சல், உடலில் அரிப்பு, தொண்டை மற்றும் சரும வறட்சி, அதிக பசி, அதீதமான உடல் ஆற்றல், அதிக பாலுணர்ச்சி மற்றும் வலது நாசித்துவார அடைப்பு ஆகியவற்றை உணர்வோம்.
நாடி ஷோதன பிராணாயாமம் செய்ய 3 காரணங்கள்
- மனதை தளர்வாக்கி, தியானத்தில் நுழைய நாடி சோதன பிராணாயாமம் நம்மை தயார் படுத்துகிறது.
- தினமும் ஒரு சில நிமிடங்கள் இதை பயிற்சி செய்வது மனதை அமைதியாகவும், சந்தோஷமாகவும், சாந்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
- நம்முள் குவிந்திருக்கும் பதட்டம் மற்றும் சோர்வை வெளியேற்ற இது உதவுகிறது.
இதை எப்படி செய்வது
- முதுகெலும்பை நேராகவும், தோள்களை தளர்வாகவும் விட்டு சௌகரியமாக அமர்ந்து கொள்ளவும. முகத்தில் ஒரு மென்மையான புன்னகை இருக்கட்டும்.
- இடது கையை இடது தொடைமேல் வைக்கவும். உள்ளங்கை மேல் நோக்கியோ அல்லது சின்முத்திரையிலோ (ஆள்காட்டி விரல் நுனியும், கட்டை விரல் நுனியும் ஒன்றையொன்று லேசாக தொட்டுக்கொண்டு) இருக்கட்டும்.
- வலது கை ஆள்காட்டிவிரல் நுனியையும் நடுவிரல் நுனியையும் புருவமத்தியில் வைக்கவும். மோதிர விரலையும், சுண்டு விரலையும் இடது நாசியின் மேலும், கட்டை விரலை வலது நாசியின் மேலும் மென்மையாக வைத்திருங்கள். மோதிர விரலையும், சுண்டு விரலையும் இடது நாசியை மூடித் திறக்கவும், கட்டை விரலை வலது நாசியை மூடித் திறக்கவும் பயன்படுத்தவும்.
- கட்டை விரலால் வலது நாசியை மென்மையாக அழுத்தி, இடது நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.
- இப்போது இடது நாசியால் மூச்சை உள்ளிழுத்து, மோதிர மற்றும் சுண்டு விரல்களால் இடது நாசியை மென்மையாக அழுத்தவும். வலது கட்டை விரலை வலது நாசியிலிருந்து அகற்றி, மூச்சை வலது நாசியால் வெளிவிடவும்.
- வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து இடது நாசி வழியாக வெளிவிடவும். இது நாடி ஷோதன பிராணாயாமத்தின் ஒரு சுற்றாகும். இதுபோலவே வலது, இடது நாசிகள் வழியாக மூச்சை மாறி மாறி உள்ளிழுத்து வெளிவிடவும்.
- இதுபோலவே இரு நாசிகள் வழியாகவும் மாறி மாறி சுவாசித்து 9 சுற்றுகளை முடிக்கவும். ஒவ்வொரு முறை மூச்சை வெளிவிடும்போதும், அதே நாசியின் வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். கண்களை மூடியே வைத்திருக்கவும். நீண்ட, ஆழமான, இலகுவான மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டுக்கொண்டே இருங்கள். முயற்சியின்றி, எளிதாக மூச்சு உள்ளேயும் வெளியேயும் செல்லட்டும்.
கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்
- மூச்சை பலமாக இழுக்கவேண்டாம். மூச்சின் ஓட்டம் மென்மையாகவும், இயற்கையாகவும் இருக்கட்டும். வாய் வழியாக மூச்சை இழுக்க வேண்டாம். மூச்சை எடுத்து விடும் போது எந்த ஒலியையும் எழுப்பவேண்டாம்.
- உஜ்ஜை மூச்சை பயன்படுத்தவேண்டாம்.
- நாசித்துவாரங்களின் மேலும், புருவமத்தியிலும் விரல்களை மென்மையாக, எந்தவித அழுத்தமுமில்லாமல் வைத்திருங்கள்.
- நாடி ஷோதன பிராணாயாமத்தை முடித்தவுடன் மந்தமாக உணர்ந்தாலோ, கொட்டாவி வந்தாலோ, மூச்சை உள்ளிழுக்கவும் வெளிவிடவும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தை சரிபார்க்கவும். உள்ளிழுக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, மூச்சை வெளிவிடும் நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.
குறிப்புகள்
- நாடி ஷோதன பிராணாயாமத்திற்கு பிறகு சிறிது நேரம் தியானம் செய்வது நல்லது.
- பத்ம சாதனாவின் ஒரு பகுதியாகவும் இந்த சுவாச நுட்பத்தை பயிலலாம்.
நாடி ஷோதன பிராணாயாமத்தின் நற்பயன்கள்
- மனதை அமைதியாகவும், நடுநிலையாகவும் வைத்திருப்பதற்கு இது ஒரு சிறந்த சுவாச நுட்பமாகும்.
- நம் மனம் கடந்த காலத்தை குறித்த வருத்தம் அல்லது பெருமை மற்றும் வருங்காலத்தை குறித்த கவலை ஆகியவற்றிலேயே உழலும் தன்மையை உடையது. அதை நிகழ்காலத்திற்கு கொண்டுவர நாடி ஷோதன பிராணாயாமம் உதவுகிறது.
- பெரும்பாலான இரத்தவோட்ட (சர்குலேஷன்) மற்றும் மூச்சு பிரச்சினைகளுக்கான சிகிச்சையாக செயல்படுகிறது.
- உடலிலும் மனத்திலும் சேர்ந்துள்ள அழுத்தத்தை வெளியேற்றி, தளர்வாக வைக்க உதவுகிறது.
- நம் ஆளுமையின் தர்க்க மற்றும் உணர்வு கூற்றின் மையங்களான, மூளையின் இடது மற்றும் வலது பகுதிகளை ஒத்திசைவாக வைக்க உதவுகிறது.
- நுண்ணிய சக்தி தடங்களான நாடிகளை சுத்திகரித்து சமநிலைப்படுத்த உதவுவதன் மூலம், உடல்முழுதும் உயிர்சக்தியான பிராணசக்தியின் சீரான ஓட்டத்தை உறுதிசெய்கிறது.
- உடல் வெப்பநிலையை சீராக வைக்கிறது.
பக்கவிளைவுகள்
ஏதுமில்லை. ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியர் ஒருவரிடமிருந்து இந்த சுவாச நுட்பத்தை கற்ற பிறகு, தினமும் 2-3 முறை, வெறும் வயிற்றில், இதை நீங்கள் பயிலலாம்.
உடலையும் மனதையும் பேண யோகப்பயிற்சி உதவுகிறது. பல ஆரோக்கிய நன்மைகளை இது தந்தாலும், மருந்துகளுக்கு இது ஒரு மாற்று அல்ல. பயிற்சி பெற்ற ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரின் மேற்பார்வையில் யோகாசனங்களை கற்பதும், பயிற்சி செய்வதும் முக்கியம். உங்களுக்கு ஏதாவது மருத்துவ பிரச்சினைகள் இருந்தால், மருத்துவர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரிடமிருந்து ஆலோசனை பெற்றபின், யோகாசனப் பயிற்சி செய்யவும். ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சி வகுப்புக்கு உங்கள் அருகாமையிலுள்ள வாழும் கலை மையத்தை அணுகுங்கள்.