யாரையாவது மகிழ்விப்பதே உங்களுடைய நோக்கமாக இருந்தால், அது உங்களை எப்போதும் விழிப்புடன் வைத்திருக்கும், மேலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் உங்களை மட்டும் மகிழ்விப்பதே உங்கள் குறிக்கோளாக இருந்தால், கவலை மற்றும் மனச்சோர்வு பின்தொடரும்.
“என்னை பற்றி என்ன? என்னைப் பற்றி என்ன?” இதுதான் இந்த மனநிலைக்கு (மனச்சோர்வு) காரணமான மந்திரம் –. இதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் சுறுசுறுப்பான, ஊக்கமூட்டும் சூழலை உருவாக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மனச்சோர்விலிருந்து வெளிவருவதற்கு உண்மையில் உதவுவது சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதாகும்.’சமுதாயத்திற்கு என்னால் என்ன செய்ய இயலும்’ என்ற சிந்தையில் இருத்தல், பெரிய இலக்கில் ஈடுபடுதல், வாழ்க்கையின் மொத்த கவனத்தையும் மாற்றி, ‘நான்,எனது’ என்ற வழக்கமான சிந்தையிலிருந்து விடுபட வைக்கிறது. சேவை, தியாக மனப்பான்மை,மற்றும் சமுக பங்கேற்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தில் வேரூன்றிய சமுதாயங்களில் மனச்சோர்வுப் பிரச்சினைகள் மற்றும் தற்கொலை நிகழ்வுகள் காணப்படுவதில்லை.
மனச்சோர்வு என்பது வாழ்க்கையைப் பற்றிய மாற்றிக் கொள்ள முடியாத புரிதலின் அறிகுறியாகும். வாழ்க்கையில் எல்லாமே முடிந்துவிட்டது, மாறப்போவது ஒன்றும் இல்லை, இனி வேறெதுவும் இல்லை, போக்கிடம் ஏதும் இல்லை என்று நினைக்கும் பொழுதுதான், நீங்கள் மனச்சோர்வடைகிறீர்கள்.
பிராண சக்தி குறையும்போது நீங்கள் மனச்சோர்வடைகிறீர்கள். பிராண சக்தி அதிகமாக உள்ளபொழுது, நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள். சரியான மூச்சுப்பயிற்சி, சிறிது தியானம், மற்றும் அன்பான நட்பு சூழலின் சத்சங்கம் ஆகியவையின் மூலம், உயிர்சக்தியை அதிகப்படுத்த முடியும்.
பெரிய காரணங்களைப்பற்றி கவலைக்கொள்ளுங்கள்
உங்கள் சொந்த வாழ்க்கையை உற்று கவனியுங்கள் . நீங்கள் இந்த கிரகத்தில் 80 வருடங்கள் வாழ்வீர்களாயின், அவற்றுள் 40 வருடங்கள் உறக்கத்திலும், ஓய்விலும் சென்றுவிடுகின்றன. பத்து வருடங்கள் குளியலறையிலும், கழிவறையிலும் கழிந்துவிடுகின்றன. எட்டு வருடங்கள் உண்பதிலும், பருகுவதிலும், மற்றும் ஒரு இரண்டு வருடங்கள் போக்குவரத்து நெரிசல்களிலும் சென்றுவிடுகின்றன. வாழ்க்கை அதிவேகமாக முடிந்து கொண்டிருக்கிறது . திடீரென்று ஒரு நாள், நீங்கள் விழித்தெழுந்து, எல்லாமே கனவு என்பதை உணர்வீர்கள். நமக்கு இந்த பரந்த கண்ணோட்டம் இருக்கும்போது, அற்பமான விஷயங்கள் நம்மைச் சலனப்படுத்தாது.
நாம் கவலைப்படுவது எல்லாம் சிறிய விஷயங்களைப் பற்றியே ஆகும். நாம் புவி வெப்பமடைதல் எதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கவலைப்படுகிறோமா?
ஒரு சிறு தூசி கூட, முடிவற்ற உங்களது பார்வையை மறைக்கக்கூடும். இதைப் போலவே, நம்முள் அளவற்ற செல்வம் இருக்கிறது. அவை அனைத்தையும், மனதில் தோன்றும் அற்ப விஷயங்கள் மறைத்துவிடுகின்றன.
நமக்கு பரந்த கண்ணோட்டம் இருக்கும் போது சிறிய பிரச்சினைகள் சவால்களாகத் தோன்றுவதில்லை. நீங்கள் பெரிய சவால்களைச் சிந்தையில் வைத்து, இந்த வையகத்தை ஒரு விளையாட்டு அரங்கமாகக் காணத் தொடங்குவீர்கள். ஒருவித பொறுப்புணர்வு ஏற்பட்டு, விவேகம் உதயமாகி, இந்த உலகை, அடுத்த தலைமுறையினருக்கு, மேலும் உகந்த இடமாக விட்டுச் செல்வது எப்படி என்று சிந்திக்கத் தொடங்குவீர்கள்.
வாழ்க்கை அர்த்தமற்றது என்று நீங்கள் கருதும் பொழுது, ஒரு வெறுமை உங்களுக்குள் தோன்றுகிறது. இதனால் நீங்கள் மனசோர்வு அடைகிறீர்கள். இது உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய பிரச்சினை. யூகே(U.Ķ)இல், மக்கள் தொகையில் 18 சதவிகிதம் பேர் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காக, ஒரு தனிப்பட்ட மந்திரியை நியமித்துள்ளார்கள்.
உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum), சமீபத்திய கூற்றின்படி, உலக மக்களின் மனநலத்தின் மீது மனச்சோர்வின் தாக்கம், பெரிதளவில் உள்ளது. வணிக சமூகம் இதை உணரத் தொடங்கிவிட்டது. இது ஒரு வரவேற்கத்தக்க அறிகுறியாகும்.
இலட்சியவாதத்தின் பற்றாக்குறையே, இன்றைய இளைஞர்களின் மனச்சோர்வுக்கு முக்கிய காரணமாகும். இந்த இளைஞர்கள் போட்டி உலகத்தைக் கண்டு அச்சத்தில் இருக்கிறார்கள், அல்லது கடுமையான தூண்டுதல்களால் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. அவர்களுக்கு ஊக்குவிப்பு தேவை. அவர்களின் உற்சாகத்தை உயர்த்தும் ஊக்குவிப்பு ஆன்மீகம் ஆகும்.
பதட்டத்தை எதிர்கொள்ளுதல்
தீவிர அணுகுமுறை மனச்சோர்விற்கு மாற்று மருந்தாகும். எதிர்த்து போராடுவதற்கு போதிய நம் இல்லாத பொழுது மனச்சோர்வு ஏற்படத் தொடங்குகிறது. மனச்சோர்வு என்பது ஆற்றலின் குறைபாடு; கோபம் மற்றும் தீவிரத் தன்மை என்பது சக்தியின் பிரவாகமாகும். பகவத் கீதையில், அர்ச்சுனன் மனச்சோர்வுடன் இருந்த பொழுது, கிருஷ்ணர், அவனை, எதிர்த்து போராட ஊக்குவித்தார்; இவ்வாறு அர்ச்சுனனின் சக்தியை மீட்டுக் கொடுத்தார். மனச்சோர்வுடன் உள்ளபொழுது ஒரு இலக்கிற்காக, ஏதேனும் ஒரு இலக்கிற்காகப் போராடுங்கள். ஆனால் தீவிரத் தன்மை ஒரு வரம்பினைக் கடக்கும் போது, அது மீண்டும் மனச்சோர்விற்கு வழிவகுக்கிறது . அதுவே அசோக மன்னருக்கு நிகழ்ந்தது- கலிங்கப் போரை வென்றபோதும் கூட, அவர் மனச்சோர்வு அடைந்தார். அவர் புத்தரிடம் அடைக்கலம் புக நேர்ந்தது.
தீவிரத் தன்மையில் அல்லது மனச்சோர்வில் சிக்கிக் கொள்ளாதவர்கள் விவேகிகள் ஆவார்கள். அதுவே ஒரு யோகியின் மூல மந்திரமாகும் . விழித்தெழுங்கள்! நீங்கள் ஒரு யோகி என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
தியானம், சேவை, ஞானம், விவேகம் ஆகியவற்றின் மூலம், ஒருவரின் மனதை உற்சாகப்படுத்துவது ஆன்மீகமாகும். ஆன்மீகத்தின் உதவியால் மனச்சோர்வை முறியடிக்க முடியும்.கடந்தகாலத்தில், இளைஞர்களுக்கு, எதிர்நோக்க, விஷயங்கள் இருந்தன. ஆராய்ந்தறிவதற்கு வையகம் முழுவதும் இருந்தது. வென்றடைவதற்கு இலக்குகள் இருந்தன. இன்று, முயற்சி ஏதுமின்றி, அத்தகைய அனுபவங்கள், விரல் நுனியில் இளைஞர்களுக்கு கிட்டிவிடுகின்றன. இணையத்தின் உதவியால், உலகத்தின் எல்லா அனுபவங்களையும் அவர்கள் பெறமுடிகிறது. குழந்தைகள் கூட உலகம் முழுவதையும் கண்டறிந்தவர்கள் போல அளவளாவுகிறார்கள்.
மனமும், புலன்களும் கையாளக்கூடியதை மீறிய அனுபவங்களை, அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எல்லாவற்றின் மீதும் வெகு விரைவில் விரக்தி அடைகிறார்கள். அவர்களை சரியான பாதையில் செலுத்தும்பொழுது, அவர்கள் மேலும் ஆராய்ந்தறிந்து, அதிக படைப்பாற்றல் உள்ளவராகிறார்கள். இந்த வழிகாட்டுதல் மாற்றுவதால் மட்டும், தீவிரத்தன்மையும் மனச்சோர்வும் இளம் வயதிலேயே ஏற்பட்டுவிடுகின்றன.
சிறிது ஆன்மீகம் மற்றும் மதிப்புகள் அடிப்படையிலான கல்வி, இவற்றுடன் நன்கு வேரூன்றிய மனித விழுமியங்கள் (human values), அனைத்தையும், மிகுந்த நேர்மறையான திசையில், புரட்டி போடுகின்றன. இவை இல்லாத போது, அநேக சமயங்களில், இளைஞர்களை தீயபழக்கங்கள் ஆட்கொள்கின்றன. தீவிரத் தன்மை, மனச்சோர்வு மற்றும் சமூக விரோதப் போக்குகள் ஊடுருவத்தொடங்குகின்றன.
தனிமையை பேரின்பமாக்குதல்
தனிமை என்பதன் சமஸ்கிருதச் சொல் ஏகாந்தம் ஆகும். இதன் பொருள்- ‘தனிமையின் முடிவு’ ஆகும்.உடன் இருப்பவர்களை மாற்றுவதாலும், அவர்கள் நம்மிடம் அதிக இரக்கம் காட்டுபவர்களாயினும், புரிந்து கொள்பவர்களாக அமைந்தாலும், தனிமை முற்றுப்பெறாது. உங்களது இயல்பான தன்மையை நீங்களாகவே கண்டுணரும் போதுதான் இது முற்றுப்பெறும். ஆன்மாவில் ஆறுதல் கொள்ளுவது மட்டுமே விரக்தி மற்றும் துயரத்திலிருந்து ஒருவரை விடுவிக்க முடியும்.
செல்வம், பாராட்டு, மற்றவர்களின் அங்கீகாரம், புகழ்ச்சி, இவையாவும் நம்முள் நிலவும் அதிருப்தியை கையாள உதவுவதில்லை. நீங்கள் துன்பத்திற்கு விடைகொடுக்க, முற்றிலும் வித்தியாசமான ஒரு பரிமாணத்துடன் இணைத்துக் கொள்ளவேண்டும் – ஒரு திடப்படுத்தப்பட்ட மௌனம், வெடித்துப் பொங்கும் ஒரு பேரின்பம், மற்றும், அந்த நித்தியத்தின் ஒரு காட்சி, உங்களுக்குள்ளும், நீங்களாகவும் இருப்பது – நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் ஆயிற்று.
கையேடின்றி இயக்க முடியாத ஒரு இயந்திரத்தால் நமக்கு பயனேதும் இல்லை. ஆன்மீக அறிவு வாழ்க்கைக்கு கையேடு போன்றது. எப்படி காரை ஓட்டுவதற்கு, ஸ்டியரிங் வீல், க்ளட்ச், பிரேக் முதலியவற்றை இயக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமோ, அப்படியே, மனதை ஒருநிலையில் நிறுத்துவதற்கு, உயிர்சக்தியின் அடிப்படை கோட்பாடுகளை அறிந்திருக்கவேண்டும். இதுவே பிராணாயாமத்தின் மொத்த அறிவியல் ஆகும்.
நமது பிராணசக்தி அல்லது உயிர்சக்தி மேலும் கீழும் ஊசலாடும் பொழுது, நமது மனமும் உணர்ச்சிகளின் (ரோலர் கோஸ்டர்) ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்படுகிறது. மனதை மனதின் அளவிலிருந்து கையாள முடியாது . ஒருவர் நேர்மறை எண்ணங்களை வலுக்கட்டாயமாக தன் மேல் திணித்துக்கொள்வது உதவாது; பல சமயங்களில் இது அவர்களைப் பழைய நிலைக்கே கொண்டுச் சென்றுவிடுகிறது.
மனச்சோர்வை எதிர்க்கும் மருந்துகள், தொடக்கத்தில் உதவுவது போல தோன்றினாலும், நாளடைவில் அவர்களை அந்த நிலைமையிலிருந்து விடுவிப்பதற்குப் பதிலாக மருந்துகளின் மீது சார்ந்திருக்கச் செய்கிறது . இதனால்தான் மூச்சைப் பற்றிய ரகசியத்தினை அறிந்திருத்தல், வாழ்க்கையில் திட்டவட்டமான மாற்றத்தைக் ஏற்படுத்துகிறது.
சுதர்சன கிரியா போன்ற மூச்சு பயிற்சிகள், நமது உயிர்சக்தியையும், அதன் மூலம் நம் மனதையும் ஒருநிலைப்படுத்துகின்றன. தியானப் பயிற்சியின் உதவியால் வெளிப்படுத்தப்பட்ட நம் அகத்தின் பரிமாணம், நம்மை வெகுவாக வளப்படுத்துகிறது. அதன் தாக்கம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் படர்ந்து பரவுகிறது.
தற்கொலை ஏன் விடுதலை அல்ல?
வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும், வலியும் சேர்ந்தது. வலி தவிர்க்க முடியாதது, ஆனால் வேதனை நாம் விருப்பத்திற்கு உட்பட்டது. வாழ்க்கையைப் பற்றிய பரந்த கண்ணோட்டம், வேதனை மிக்க காலங்களில் நாம் முன்னோக்கி செல்வதற்குரிய சக்தியைத் தருகிறது. நீங்கள் இந்த உலகத்திற்கு மிகவும் அவசியமானவர் என்பதை உணருங்கள். எண்ணற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட இந்த வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம்; ஏனெனில், வாழ்க்கை நமக்கும் மற்ற பலருக்கும் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் ஊற்றாக அமைகிறது.
மக்கள் துன்பத்திலிருந்து விடுபட தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அந்த முயற்சி அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இது குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒருவர், வெளியில் சென்று தனது ஜாக்கெட்டினைக் கழற்றி நீக்குவதற்கு ஒப்பாகும். இதனால் குளிர் குறைவதற்கு வாய்ப்பு உண்டா?
தற்கொலை செய்து கொள்ளும் மக்கள், வாழ்க்கையின் மீதுள்ள அதீதப் பற்றுதலினால், அந்த நிலைமையை உணர்கிறார்கள். இன்பம் தரும், சந்தோசம் தரும், ஒன்றின்மீது அதிக பிடிப்பு வைத்துள்ளதால், அவர்கள் தங்களை மாய்த்துக்கொள்ள முனைகிறார்கள். அதற்குப்பின், இன்னும் பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளதை உணர்கிறார்கள்.
அவர்கள், ‘இறைவா! என்னுள் கடுமையான வேதனையை தோற்றுவித்த இந்த ஆசைகள் மற்றும் சஞ்சலங்கள் இன்னும் மறைந்தபாடில்லை. எனது உடல் அழிந்து விட்டது, ஆனால் வேதனை எஞ்சியுள்ளது’ என்று எண்ணுகிறார்கள்.
உடலின் மூலம் மட்டும் தான் நீங்கள் வேதனையை அகற்ற முடியும், மற்றும் துன்பத்தை நீக்கமுடியும். மாறாக, வேதனையைப் போக்க உதவும் அந்த கருவியையே நீங்கள் அழித்துக் கொள்கிறீர்கள். சக்தி குறையும் போது, நீங்கள் மனச்சோர்வு அடைகிறீர்கள். அதுவே மேலும் குறையும் போது, தற்கொலை எண்ணங்கள் எழுகின்றன. பிராணசக்தி அதிகமாக உள்ள போது, இந்த எண்ணம் தோன்றாது. பிராணசக்தி அதிகமாக உள்ள போது, நீங்கள் உங்கள் மீதோ, மற்றவர்கள் மீதோ, வன்முறையைக் கையாள மாட்டீர்கள். சரியான மூச்சுப் பயிற்சிகள் மூலமும், சிறிது தியானம் மற்றும் நல்ல, நேயமிக்க சத்சங்கத்துடனும் இருக்கும் போது, சக்தி அதிகரிக்கக்கூடும்.
தற்கொலைப் போக்கு உள்ள ஒருவரை, தியானப் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகளைச் செய்வித்து , அவர்களது சக்தி நிலையை உயர்த்தக்கூடியவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் தியானம் செய்து, வெறுமையாக, காலியாக ஆகுங்கள். நாம் மன அழுத்தம் மற்றும் வன்முறையிலிருந்து விடுபட்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தியானமே இதற்குரிய மார்க்கமாகும். தியானத்தில் அமரும் போது, பலமுறை, மனம் அங்குமிங்கும் அலைப்பாய்கிறது. அங்குதான் சுதர்சன கிரியா என்னும் மூச்சுப்பயிற்சி மற்றும் யோகா, மனதை சாந்தப்படுத்தி, அமைதியடையச் செய்கிறது.
தற்கொலை எண்ணம் தோன்றினால், பின்வருவனவற்றைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.
1. இது உங்கள் பிராண சக்தியின் குறைவினால் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதனால் அதிகமாக பிராணாயாமம் செய்யுங்கள்.
2. பல கோடி மக்கள், உங்களைவிட அதிகமான துன்பத்தில் இருக்கிறார்கள்; அவர்களைப் பாருங்கள். உங்கள் துன்பம் சிறிதாகும் போது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றாது.
3. நீங்கள் இந்த உலகத்திற்குத் தேவை. உங்களால் உபயோகம் உள்ளது. நீங்கள் இந்த உலகத்தில் செய்ய வேண்டியது இருக்கிறது.
மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம். தங்கள் கௌரவத்தையும், சமூகத்தில் உள்ளத் தகுதியையும் இழந்துவிட்டதாக எண்ணி, மக்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். என்ன தகுதி? என்ன கௌரவம்? உங்கள் கௌரவத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்க யாருக்கு நேரம் இருக்கிறது? எல்லோரும், அவரவர் சொந்தப் பிரச்சினைகளிலும், எண்ணங்களிலும் சிக்கியுள்ளார்கள். அவர்களால் தங்கள் சிந்தையிலிருந்தே வெளிவர முடிவதில்லை. அப்படி இருக்கையில், உங்களைப் பற்றி யோசிப்பதற்கு அவர்களுக்கு ஏது நேரம்? சமுதாயம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்று கவலைப்படுவது பயனற்றதாகும். வாழ்க்கை என்பது சொத்து சுகங்களுக்கு அப்பாற்பட்டது. வாழ்க்கை என்பது மற்றவரது தூற்றுதல் அல்லது பாராட்டுதலையும் விட மேலானது. வாழ்க்கை என்பது உறவை அல்லது செய்யும் தொழிலை விட மேலானது.
உறவுமுறையில், மற்றும் செய்யும் தொழிலில் தோல்வி, அடையவிழைவதை அடைய இயலாமல் இருப்பது – ஆகியவை தற்கொலை செய்வதற்கான காரணம். ஆனால் வாழ்க்கை என்பது உங்கள் உள்ளுணர்வில், உங்கள் மனதில் எழும்பும் சிறிய ஆசைகளைவிட மிகப் பெரிதானது . வாழ்க்கையைப் பரந்த கண்ணோட்டத்துடன் நோக்குங்கள்; ஏதேனும் ஒருவித சமூகப் பணியில் அல்லது சேவையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் . சேவை, மக்களை ஆரோக்கியமான மனநிலையில் வைத்து, அவர்களை மனச்சோர்விலிருந்து பாதுகாக்கிறது.
இங்கு பதிவுச் செய்யப்பட்ட கருத்துகள், முறையான மருத்துவ ஆலோசனை, வியாதி நிர்ணயம், சிகிச்சை ஆகியவற்றிற்கு, மாற்றாக பரிந்துரைக்கப்பட்டவை அல்ல. உங்களது உடல் நலம் சார்ந்த வினாக்களுக்கு, எப்பொழுதும் உங்கள் மருத்துவரையோ அல்லது பயிற்சி பெற்ற நலக்கவனிப்பு வழங்குனரையோ (health provider) அணுகுங்கள் .