மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டும் என்கிற விருப்பம் அனைவருக்கும் இருக்கும். முதலில், மன அழுத்தம் என்றால் என்ன என்று நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்களா? செய்ய வேண்டிய செயல்கள் அதிகமாகவும், நேரமும், ஆற்றலும் குறைவாகவும் இருந்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை குறைக்க ஒன்று வேலைச் சுமையை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது நேரத்தை அதிகரிக்க வேண்டும். இரண்டுமே சாத்தியமில்லை. எனவே, எஞ்சியிருப்பது உங்களது ஆற்றலை அதிகரிப்பதுதான்.
ஆற்றலை அதிகரிக்க நான்கு எளிதான வழிகள் உள்ளன:
- உணவை மிகவும் அதிகமாகவோ, அல்லது மிகவும் குறைவாகவோ இல்லாமல், மிதமான அளவில் உண்பது. போதுமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் கொண்ட ஒரு சீரான உணவு உட்கொள்ள வேண்டும்.
- 6 முதல் 8 மணிநேர தூக்கம் அவசியம், இதற்கு அதிகமாக அல்லது குறைவாக உறங்கக் கூடாது.
- சில ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்வது உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது.
- மனம் தியான நிலையில் சிறிது நேரம் இருந்தால் சில நிமிடங்கள் ஆழ்ந்த ஓய்வு கிட்டும். ஆழ்ந்த ஓய்வையே நான் தியானம் என்று அழைக்கிறேன். சில நிமிடங்கள் தியானம் புரிந்தால் பல விதமான மன அழுத்தங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடம் தியானம் செய்தால் போதும் – நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படமுடியும்.
மன அழுத்தத்தை வரும் முன்னமே தவிர்த்து விடுங்கள்
“வில் வித்தையை யுத்த களத்தில் கற்க முடியாது” என்று ஒரு பழமொழி உண்டு. யுத்தம் செய்வதற்கு முன்னாலேயே வில் வித்தையை கற்று நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே போல, மன அழுத்தம் இருக்கும் போது அதிலிருந்து நிவாரணம் பெற முயற்சிகளை செய்வது மிக மிக கடினம். அதனால் அந்நிலை வருவதற்கு முன்னரே தகுந்த நடவடிக்கைகளை எடுத்து, அந்நிலை வருவதை தவிர்க்கவேண்டும். ஒரு புதிய ராகத்தை மேடையில் ஏறிய பின்பு கற்றுக் கொள்வது என்பது இயலாது.
இதில் ஒப்புதல் இல்லாவிடிலும், இது ஒரு வழக்கு சொல், உண்மையில் முடியாது என்று எதுவும் இல்லை. நீங்கள் நடந்து கொள்ளும் விதம், உணவுப் பழக்கம், வாழ்க்கையில் விஷயங்களை நீங்கள் உணரும் விதம், உங்கள் தகவல் தொடர்புத் திறன், விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கூறும் திறன் ஆகியவற்றில்தான் மாற்றங்கள் செய்ய முயல வேண்டும் என்று நான் கூறுவேன். பொதுவாக, வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு பரந்த ஆன்ம உணர்வுடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் செயல்படும் திறன் அதிகமாகும்.

தியானம்
நாம் எட்டு வாரங்களுக்கு (அதாவது இரண்டு மாதங்கள்) ஒரு நாளைக்கு இரண்டு முறை 20 நிமிடங்கள் தியானம் செய்தால், மத்திய நரம்பு மண்டலத்தில் மூளை மற்றும் தண்டுவடத்தில் இருக்கும் மனது, நினைவு, உணர்ச்சி, அசைவுகள் இவற்றின் இயக்கத்திற்கு காரணமான சாம்பல் நிற திசுக்கள் அதிகரிக்கிறது மற்றும் மூளையின் அமைப்பு மாறுகிறது என்று இன்றைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தியானம் நமக்கு நற்பயன்களை அளிக்கிறது என்று நமக்கு முன்னமேயே தெரியும். ஆனால், இதை விஞ்ஞானிகள் சொல்லக் கேட்கும்போது, பற்பல ஆண்டுகள் பழமையான நமது பண்டைய அனுபவத்தை, உலகெங்கிலும் உள்ள பற்பல மக்களின் அனுபவத்தின் மூலம் மீண்டும் அது உறுதிப்படுத்துகிறது. எனவே, தியானம் மிக முக்கியம். இந்த உலகத்தில் ஒவ்வொரு இரண்டு விநாடிக்கும் 7 பேர் மன அழுத்தம் காரணமாக உயிர் இழக்கிறார்கள். தியானத்தின் மூலம் இது தவிர்க்கப்படலாம். எனவே, மன அழுத்தத்தை போக்க வழி, ‘ஆழ்ந்த தியானம்.’ ஆழ்ந்த தியானத்தின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம், மக்களின் முகத்தில் புன்னகையை மீண்டும் தவழச் செய்யலாம்.
மன அழுத்தமும் கல்வியும்
மன அழுத்தம், கோபம் மற்றும் வன்முறையை உருவாக்குகிறது, அல்லது அது மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்களை உருவாக்குகிறது. இதற்கெல்லாம் காரணம் நம் மனதை எப்படிக் கையாள்வது என்று யாரும் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை.
கல்வி என்பது வெறுமனே தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல, நீங்கள் யார், உங்கள் திறன் என்ன என்பதை உணர்ந்து கொள்வதாகும். இது உங்கள் இருப்பின் 7 வெவ்வேறு நிலைகளை அறிய கற்றுக்கொள்வது, அதாவது உடல் (body), சுவாசம் (breath), மனம் (mind), அறிவாற்றல் (intellect), நினைவகம் (memory), அகங்காரம் (ego) மற்றும் ஆத்மா (Self) நம் இருப்பின் இந்த நிலைகளைப் பற்றி நாம் முற்றிலும் அறியாதவர்களாக இருக்கிறோம், எனவே ஆத்திரம் அல்லது கோபம் நமக்குள் வரும்போது அதை எவ்வாறு கையாள்வது என்று நமக்கு தெரிவதில்லை. வீட்டிலோ அல்லது பள்ளியிலோ நம் மனதையும் உணர்ச்சிகளையும் எவ்வாறு கையாள்வது என்று யாரும் நமக்குக் கற்பிப்பதில்லை, எனவே இது நமக்குள்ளேயே புதைந்து கிடந்து, மனச்சோர்வாகவோ அல்லது ஆத்திரமாகவோ வெளிவரும்.
பள்ளி ஆசிரியர்களில் கணிசமான சதவீதம் பேர் மனச்சோர்வடைந்துள்ளனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆசிரியர்கள் மனச்சோர்வில் இருக்கும்போது, அவர்கள் மாணவர்களிடம் என்ன சொல்வார்கள்? அவர்கள் மனச்சோர்வை மட்டுமே மாணவர்களுக்கு அளிக்கிறார்கள்! மகிழ்ச்சியான நபர் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு பரப்புவார். மனச்சோர்வடைந்த நபர் மனச்சோர்வை மட்டுமே பரப்புவார். எனவே நாம் நம் குழந்தைகளுக்கு கோபம் மற்றும் வன்முறை அல்லாத கல்வியையே கற்பிக்க வேண்டும், அதாவது, வன்முறையற்ற தொடர்புடனும், பொறுமையுடனும் இருந்து அவைகளின் பார்வையை எப்படி விரிவு படுத்துவது என்பதையே கற்பிக்க வேண்டும்.
உள்ளத்தில் அமைதி, உலகத்தில் அமைதி
இன்றைய உலகில் என்ன நடக்கிறது? மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது மற்றவர்களை காயப்படுத்துகிறார்கள். உங்கள் இயற்கை இயல்பை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும்போது, மற்றவர்கள் மீது கோபமாக இருக்கிறீர்கள், அது அவர்களைக் காயப்படுத்தியது அல்லவா? இதுதான் நம் அனுபவம். நாம் இயல்பாக இல்லாதபோது, நம் புலன்களை கட்டுபாட்டில் வைக்காமல் இருக்கும் போது , நம் அன்புக்குரியவர்களையும் நெருக்கமானவர்களையும் காயப்படுத்தும் விஷயங்களைச் செய்ய முனைகிறோம். எனவே, மன அழுத்தத்தில் மற்றவர்களையும் காயப்படுத்துகிறோம், நம்மை நாமேயும் காயப்படுத்திக்கொள்கிறோம். இதுதான் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, சமூகத்தில் அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான தார்மீகப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று நீங்கள் நினைக்கவில்லையா? நம்மைச் சுற்றி துயரத்தை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருந்தால் நாம் ஏன் வாழ்கிறோம்? வாழ்க்கையின் நோக்கம் என்ன? நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியைப் பரப்புவதாகும். மகிழ்ச்சி அலைகள் கொண்டு வாருங்கள்.
மகிழ்ச்சியின் ரகசியம்
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதைச் செய்தாலும், எதற்காக செய்கிறீர்கள்? அதிக மகிழ்ச்சி, இன்னும் அதிக மகிழ்ச்சி, இன்னும் அதிக மகிழ்ச்சி வேண்டும் என்பதுதானே நோக்கம்? மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, உலகை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவுக்கு ஞானம் இருக்கும்போது மட்டுமே மகிழ்ச்சி ஏற்பட முடியும். மன அழுத்தத்தைத் தவிர்க்க அல்லது மன அழுத்தம் வரும் போது அந்த மன அழுத்தத்தைத் தாங்க நமக்கு வாழ்க்கையில் தேவை என்ன? ஞானம், பரந்த பார்வை போன்றவை தேவை. ஏற்கனவே வந்துள்ள மன அழுத்தத்திலிருந்து விடுபட நமக்கு பயிற்சிகள் தேவை. சுவாசம், தியானம் என்பது போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். இதனால் தெளிவான ஞானம் மலர்ந்து, எதிர் காலத்தில் மன அழுத்தத்தைத் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
மக்கள் மீது நம்பிக்கை இருக்கும்போது, தகவல் தொடர்பு ஏற்படுகிறது, நம்பிக்கை உடைக்கப்படும்போது, தகவல் தொடர்பு மேலும் உடைந்து, பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது. எனவே ஒரு குடும்பத்திலோ, உறவிலோ, வணிகத்திலோ அல்லது நாடுகளுக்கு இடையிலோ, மிக முக்கியமானது தகவல் தொடர்பு, தகவல் தொடர்பு தகவல் தொடர்பே! இது இரண்டு இதயங்களுக்கிடையே தொடர்பு, ஒரு ஆன்மாவிற்கும், மற்றொரு ஆன்மாவிற்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் இருவரின் சிந்தனைகளுக்கிடையே உள்ள தொடர்பு. இவையே தகவல் தொடர்பின் மூன்று நிலைகள். தியானம் என்பது ஆன்மாவுக்கும் ஆன்மாவுக்கும் இடையிலான தொடர்பு.
உங்கள் கண்ணோட்டத்தை மாற்றுங்கள், உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
விழித்தெழுந்து பார்க்க வேண்டிய நேரம் இது. நாம் எப்போதும் நிரந்தரமாக இங்கே இருக்கப் போவதில்லை. நாம் இன்னும் 10 – 20 – 30 – 40 ஆண்டுகளோ இருக்கப் போகிறோம். நாம் வாழும் வரை, அதிகமான மக்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்ய முடியாதா? அதுதான் வாழும் கலை. வாழும் கலை என்பது உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் உயர் ஆற்றலுடன் தொடர்பு கொள்வது. வாழும் கலை ஒவ்வொருவரிடமும் புன்னகையை வரவழைத்து வருகிறது. வாழும் கலை என்பது நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொண்டிருப்பது.