இன்றையக் காலக்கட்டத்தில் பலர் மனச்சோர்விற்கு இரையாகிறார்கள். பரபரப்பான மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம், அதிர்ச்சிகரமான வாழ்க்கை அனுபவங்களை எதிர்கொள்ள இயலாமை – இவற்றுள் எவையும் காரணமாக அமையலாம். மனச்சோர்வின் அறிகுறிகள், அதன் தீவிரம் மற்றும் தனிநபரைப் பொறுத்து மாறுபடலாம். இது அந்த நபருக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கடினமான அனுபவமாகும். உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி உலகெங்கிலும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட எல்லா வயது மக்களும் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள்.
நல்ல செய்தி: யோகா, தியானம் மற்றும் நல்ல உணவுப் பழக்கங்கள் போன்ற சில எளிமையான வாழ்க்கைமுறை மாற்றங்கள், இவை மனச் சோர்விலிருந்து மீள உதவுகின்றன. இந்தக் கொள்கை எவ்வாறு செயல்படுகிறது? ஆயுர்வேதத்தின்படி, மனச்சோர்வு என்பது உடல் – மனத் தொகுப்பின் தாழ்ந்த பிராணசக்தியின் அறிகுறியாகும். உற்சாகம், ஆனந்தம், அமைதி ஆகியவற்றின் காரணம் பிராண சக்தியாகும். இடைவிடாத யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் பிராணசக்தியை அதிகரிக்கச்செய்து மனச்சோர்வின் அறிகுறிகளை விலக்குகின்றன. யோகா பயிற்சி மனச்சோர்வினால் அவதிபடுபவர்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது என்பதைப் பல விஞ்ஞான ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.
குணமடைந்துக் கொண்டிருக்கும் கட்டத்தில், தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம்.குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகிறார் “வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும், துன்பமும் கலந்தது. வலி தவிர்க்கமுடியாதது, ஆனால் துன்பப்படுவது என்பது நம் தேர்வுக்கு உட்பட்டது. வாழ்க்கையைப் பற்றிய பரந்தக் கண்ணோட்டம், வேதனை மிக்க காலங்களில் முன்னோக்கிச் செல்வதற்குரிய சக்தியைத் தருகிறது. நீங்கள் இந்த உலகிற்கு மிகவும் அவசியமானவர் என்பதை உணருங்கள். எண்ணற்ற சாத்தியக் கூறுகளைக் கொண்ட இந்த வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம் – ஏனெனில் வாழ்க்கை நமக்கும் மற்ற பலருக்கும், ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியின் ஊற்றாக அமையக்கூடியது.”
மனச் சோர்வை குறைப்பதற்கான யோகாசனங்கள்
சிசுவாசனா

- ஆழ்ந்த ஓய்வைத் தருகிறது
- நரம்புமண்டலத்தைஅமைதிப்படுத்திப்படுத்தி மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது.
ஹலாசனா

- நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தையும் சோர்வையும் குறைக்கிறது.
- தைராய்டு சுரப்பியைத் தூண்டி, மனதை உற்சாகப்படுத்தி நமது சக்தியை அதிகப்படுத்துகிறது.
சவாசனா

- ஆழ்ந்த தியான நிலையின் ஓய்வைப் பெற உதவுகிறது . இது மனச்சோர்விற்கு முக்கிய காரணமான மன அழுத்தத்தை நீக்குகிறது.
- மனச்சோர்விற்கும் பதட்டத்திற்கும் காரணமாக உள்ள வாயுவின் சமநிலமையின்மையை (வாத தோஷம்) குறைக்க உதவுகிறது.
- புத்துயிர்ப்பும், புத்துணர்ச்சியும் பெற உதவுகிறது.
அதோ முக ஸ்வானாசனா

- உடலுக்கு சக்தியும், புத்துயிர்ப்பும் தருகிறது.
- மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி மனதை உற்சாகப்படுத்துகிறது.
- தலைவலி, தூக்கமின்மை மற்றும் சோர்வைப் போக்க உதவுகிறது.
சேது பந்தாசனா

- மூளையை அமைதிப்படுத்தி பதட்டத்தையும் மனச் சோர்வையும் குறைக்கிறது.
- நுரையீரலை விரிவுபடுத்துகிறது . மனநிலை ஊசலாட்டத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும் தைராய்டு பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது.
மூச்சுப்பயிற்சிகள்
மூச்சுப் பயிற்சிகளும் பிராணாயாமங்களும், குறிப்பாக, மனச்சோர்விலிருந்து மீள்வதற்கு உதவும் பயனுள்ள உத்திகளாகும்.
பிராமரி பிராணாயாமம்
- குழப்பமான மனதை சாந்தப்படுத்த உதவுகிறது.
- தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
நாடி ஷோதன் பிராணாயாமம்

- கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளை அகற்றி, மனதை நிகழ்கணத்தில் நிலைநிறுத்த உதவுகிறது.
- நாடிகளை( ஆற்றல் தடங்களை, ஆற்றல் சேனல்களை) சுத்தப்படுத்தி, பிராண சக்தியின் சீரான ஓட்டத்தை உறுதிப்படுத்துகிறது.
- நாள்பட்ட மன அழுத்தத்தை நீக்கி, மனச்சோர்வைத் தவிர்க்கிறது.
பன்னிரண்டிற்கும் மேற்பட்ட வெளியிடப்பட்ட ஆய்வுகளில், சுதர்சன கிரியா (SKY) மற்றும் அதைச் சார்ந்த மூச்சுப் பயிற்சிகளைக் கற்று, அவைகளை பயிற்சி செய்து வருபவர்கள், மனச்சோர்விலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மீண்டிருக்கிறார்கள் என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எத்தகைய தீவிரமான மனச்சோர்வாயினும், மீட்பு விகிதம் 67 – 73% உள்ளதாக இந்த ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
சில கூடுதல் குறிப்புகள்
- சமூக சேவையில் ஈடுபடுதல்: ‘சமூகத்திற்கு என்னால் என்ன செய்ய முடியும்’ என்ற சிந்தையில் இருத்தல் – பெரிய இலக்குகளை நோக்கிய செயல்களில் ஈடுபடுதல், நம்முடைய வாழ்க்கையின் மொத்த கவனத்தையும் மாற்றி ‘நான், எனது’ என்ற வழக்கமான சிந்தையிலிருந்து விடுபட வைக்கிறது.
- எதை உண்ணுகிறீர்களோ அதுவாகவே இருக்கிறீர்கள்: நீங்கள் எதை உண்ணுகிறீர்கள் என்பதில் கவனம் வைத்திருப்பதும் அவசியமாகும். அதிக பிராணசக்தியுடைய, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகள், மனதிற்கும், உடலுக்கும் சுகத்தை அளிக்கின்றன.
- மந்திரங்களை உச்சாடனம் செய்தல்: உச்சாடனம் செய்தல் ஆற்றலை அதிகரித்து மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
யோகா பயிற்சி உடலையும் மனதையும் விருத்திப்படுத்தி, ஆரோக்கியத்திற்கான பல நற்பயன்களைக் கொடுக்கிறது. இருப்பினும், இது மருந்திற்கு மாற்றல்ல. தேர்ந்த ஸ்ரீஸ்ரீ யோகா ஆசிரியரின் மேற்பார்வையில் யோகாசனங்களைக் கற்றுப் பயிற்சி செய்வது அவசியம். மருத்துவ ரீதியாக ஏதேனும் பிரச்சினை இருப்பின், மருத்துவரை மற்றும் ஸ்ரீஸ்ரீ யோகா ஆசிரியரைக் கலந்தாலோசித்தப் பிறகே யோகாசனங்களைப் பயிற்சி செய்ய வேண்டும்.











