வாழ்க்கையின் முப்பரிமாணங்கள்

நாம், அனைவரின் இருப்பிற்கும், மூன்று பரிமாணங்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள வேண்டும் – விழிப்புநிலை, கனவு நிலை, உறக்க நிலை. நாம் இம்முப்பரிமாணங்களை நன்றாக புரிந்துக்கொள்வதில்லை – பொதுவாக அவற்றை உதாசீனப்படுத்துகிறோம்.

நமது கனவுகளின் மீது சிறிதளவும் கூட கவனம் செலுத்துவதில்லை. நமது ஆழ்ந்த உறக்கத்தின் மீது கவனம் வைப்பதில்லை; எண்ணுவதுகூட இல்லை. இப்படிச் செய்ய முடிந்தால், நாம் நான்காவது உணர்வு நிலையை அறிய முடியும் – இவையாவுமல்லாத, ஆனால் இவற்றுக்குப் பின்னணியில் உள்ள; தியானத்தில் உணரக்கூடிய அந்த ஒரு நிலை.

தினமும் இரவில் அல்லது மதியத்தில் உறங்கும் பொழுது, நம்முள் என்ன நிகழ்கிறது என்பதை அறிவோமா? உறக்கத்தின் மூன்று நிலைகளை நாம் அனுபவிக்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில், நாம் நம்மை இழக்கிறோம். அடுத்தது லேசான உறக்கம்.  பின்னர், கனவுகள் தோன்றும் விரைவான கண் இயக்கம் (REM) உள்ள உறக்கம்.

விழித்திருத்தலும், உறக்கமும், சூரியோதயம் மற்றும் இருள் போன்றவை.  கனவு நிலை என்பது இடையேயுள்ள அந்திப்பொழுதைப் போன்றது.  தியானம் என்பது விண்வெளிக்குப் பறப்பதைப் போன்றது; சூரிய அஸ்தமனம், சூரியோதயம், எதுவுமேயில்லாத அந்த விண்வெளிக்குப்  பறப்பதைப் போன்றது.

– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

உங்களது மூன்று உடல்கள்

நமக்கு மூன்று உடல்கள் இருப்பதாக பண்டைய வேதங்கள் கூறுகின்றன – ஸ்தூல உடல், சூக்ஷ்ம உடல் மற்றும் காரண உடல். நமது சூக்ஷ்ம உடல், எல்லா எண்ணங்களாலும் உணர்ச்சிகளாலும் செய்யப்பட்டது. நாம் விரைவான கண் இயக்க நிலையில் உறங்கும் பொழுது, நமது சூக்ஷ்ம உடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது கனவுநிலையில் இயங்குகிறது.

இதனால்தான் நாம் கனவுகளில் வண்ணங்களைக் காண முடிகிறது, நறுமணங்களை நுகர முடிகிறது, தொடு உணர்வு ஏற்படுகிறது – உங்களால் அன்பான அரவணைப்பையும் அனுபவிக்க முடிகிறது. ஐம்புலன்களின் பயன்பாடின்றி, நீங்கள் ஐம்புலன்களையும் நுகர்கிறீர்கள். கனவு நிலையில் நமது சூக்ஷ்ம உடல் இயங்கிக்கொண்டிருக்கிறது.

கனவுகளில் நிஜ உலகில் (நாம் நிஜம் என்று கருதும் உலகில்) நாம் செய்பவை அனைத்தையும் நாம் அனுபவபூர்வமாக உணர்கிறோம்.

விஞ்ஞானிகள், இதுவும்கூட நிஐம் அல்ல என்று கூறுகிறார்கள்

ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில், நாம் உடலின் மற்றொரு நிலை அல்லது மூன்றாவது பகுதியான காரண உடலை அனுபவிக்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் நமது காரண உடல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது சக்தியே அனைத்துமான ஒரு நிலை- அந்த நிலையில் நீங்கள் வரையறைகளை உணர்வதில்லை, உடலை உணர்வதேயில்லை. ஆனால் நாம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழுத்தெழும் போது, எவ்வாறு உணர்கிறோம் ? சுறுசுறுப்பாக !

நீங்கள் உங்கள் சூட்சும உடலிலேயே இருந்துக் கொண்டு இரவு முழுவதும் கனவு கண்டீர்களானால், விழித்தெழும்பொழுது மிகச்சோர்வாக உணர்வீர்கள். ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருப்பீர்களானால், அது நீங்கள் உங்கள் காரண உடலில் இருக்கும் நிகழ்வு ஆகும்; அந்த காரண உடல் நிலையே எல்லா சக்தி, உற்சாகம் மற்றும் கலகலப்பிற்கு மூலமாகும்.

ஆகையால் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழும்பொழுது மிகுந்த புத்துணர்வுடனும், சக்தியுடனும், ஆர்வத்துடனும் இருப்பதை உணர்வீர்கள். நாம் தினந்தோறும் இரவில் உறங்குகிறோம். ஆனால் உறக்கத்தை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை. ஆழ்ந்த உறக்கத்துடன் என்றும் கை குலுக்கியதில்லை; தியானம் இவற்றைச் செய்ய உதவுகிறது.

தியானம் என்பது உறக்கம் தானா?

தியானம் என்பது ஆழ்ந்த உறக்கத்தைப் போன்றது, ஆனால் ஆழ்ந்த உறக்கம் அல்ல. அதிக நேரம் உறங்கினால், நீங்கள் மிகுந்த சோர்வை உணர்வீர்கள். இதைப் போன்றே, போதையிலிருந்து மக்கள்  வெளிவரும் போது அதன் விளைவுகள் தொடர்கின்றன;  நீங்கள் அதிக சோர்வுடனும், சோம்பலுடனும், எதையும் செய்யத் தோன்றாமல் இருப்பீர்கள். போதை மருந்துகளை (இன்பமூட்டும் மருந்துகளை) உட்கொண்ட பிறகும் இதுவே நிகழ்கிறது. அதன் பின்னர் மக்கள் அடித்துப் போட்டது போல, சக்தி அனைத்தும் வடிந்து, குறைந்து, வலுவிழந்து  இருக்கிறார்கள.

தியானத்தின் போது, இது   நிகழ்வதில்லை.

உங்கள் உடலின்(காரண உடலின்) ஒரு பகுதியான, சக்தியின் ஆதாரத்தை பயன்படுத்திக் கொள்ள தியானம் உதவுகிறது. தியானம், அதிலிருந்து வெளிவரும் போது, உங்களது உணர்வு நிலையை உயர்த்தி, சக்தியை அதிகமாக்குகிறது;

ஆரோக்கியமானதும் ஆகும். நமது நோய் எதிர்ப்பு அமைப்பை ஐந்து மடங்கு உயர்த்துகிறது. தியானம் நமது நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகிறது என்பதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் உள்ளது.

குறிப்பாக கோவிட் நோய் பரவியிருந்த காலத்தில், உலகெங்கிலும் உள்ள உடல்நல கவனிப்பு வழங்குனர்கள், தியானப்பயிற்சி பயன்கொடுத்ததால், அதனை மேற்கொண்டனர். கோவிட் -19 சமயத்தில், உடல்நல கவனிப்பு வழங்குனர்கள் மற்றும் மருத்தவ சமூகத்தினர் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.

குறிப்பாக முதல் சில மாதங்கள், அதாவது தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு முன், என்ன செய்வதென்று அறியாமல் இருந்தனர். நோயாளிகளை எப்படி குணப்படுத்துவது? அந்த நேரத்தில் குருதேவ் உலகெங்கிலும் உள்ள மக்களை தினமும் இரண்டு முறை தியானம் மேற்கொள்ளச் செய்தார் . இதில் ஒரு மில்லியன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர் . அந்த அனுபவம் அருமையாக இருந்ததாகக் கருத்துரைத்தனர் . தங்களது சக்தியைத் தக்கவைத்து, அந்த கடினமான கால கட்டத்தைக் கடக்க அது பெரிதும் உதவியது என்று அவர்கள் கூறினார்கள்.

உணர்வில்லாமல் மௌனத்திற்குள் செல்வது உறக்கம்.  விருப்பப்பட்டு உணர்வோடு மௌனத்தில் செல்வது  தியானம். இது உங்களுக்கு அதிக சக்தியைத் தருகிறது; சூக்ஷ்மப் பரிமாணங்களின் தாழ்களைத் திறக்க உதவுகிறது.

– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

விடுதலைக்குரிய சீட்டு

ஐம்புலன்களின் மூலமே, மனது, அனைத்துடனும் ஒன்றி கலந்துவிடமுடியாத ஒரு நிலையை அடைகிறது. உங்கள் மனது ஐம்புலன்களிலிருந்து விடுபட்டு அகத்துள் ஒடுங்கும்பொழுது, என்ன நேர்கிறது? நீங்கள் பரிபூரணமாக லயத்தில் இருக்கிறீர்கள் (தாள கதியில் ஒன்றியிருக்கிறீர்கள்). இதுவே உறக்கத்தில் நிகழ்கிறது. உறங்கும்போது நீங்கள் எங்குள்ளீர்கள்? நீங்கள் கரைந்து போய்விட்டீர்கள்.

‘நான், எனது, என்னுடைய’  என்கிற உணர்வே பிணைப்பிற்கு காரணம். இந்த உணர்வு கரைந்து மறையும் போது விடுதலைக் கிடைக்கிறது. நீங்கள் இருபத்து நான்கு மணி நேரமும் கட்டுண்டு இருக்கமுடியாது. ஆகையால் உறங்கச்  செல்கிறீர்கள். உறக்கத்தில், ‘நான், எனது, என்னுடைய’ என்கிற உணர்வை இழக்கிறோம். உறங்கிக்கொண்டிருக்கும் போது நீங்கள் என்னவாக, எங்கு இருக்கிறீர்கள்?

உங்கள் பெயரையும், அடையாளத்தையும் இழந்து விடுகிறீர்கள். உங்கள் உடல் படுக்கையின் மீது கிடப்பதைக் கூட நீங்கள் அறிவது இல்லை . உங்களது ஒவ்வொரு அடையாளத்தையும் இழக்கிறீர்கள். இது ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் உறக்கம் என்று உங்களால் கூற முடியாது; எவராலும் அதை எடுத்துக்கொள்ள முடியாது . உறக்கம் என்பது உறக்கம். அங்கு ஸ்ரீஸ்ரீயும் இல்லை, ரவிசங்கரும் இல்லை . எவரும் இல்லை – எந்தப் பெயரும் இல்லை; எந்த உருவமும் இல்லை. உறக்கம் மட்டும் தான்.

மாறாக, தியானம் என்பது, விழிப்புணர்வோடு, என்னுள் இருக்கும் அந்த ‘நான்’ என்பதை கரையச் செய்வதாகும். எப்போது ‘நான்’ என்பது இல்லாமல் போகிறதோ,  அப்போது தான் சுதந்திரம், அப்போது தான் விடுதலை.

நாள் முழுவதும் கடினமாக உழைத்தபின் கொசுத்தொல்லை இருந்தாலும் ஒருவர் நன்றாக உறங்குவார். நீங்கள் சுகமாக உறங்குவதற்கு, கடினமாக வேலை செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கையில், நாம் எதிரெதிரான அனுபவங்களை மாறிமாறி மட்டுமே உணர முடியும். ஆனால் சமாதி நிலையின் ஆனந்தம் இதைவிட மிகவும் பெரிதானது. தியானம் உங்களை எதிரெதிரான  மதிப்புகளைக் கடந்து எடுத்துச்செல்கிறது.

யோக நித்ரா(NSDR : Non – Sleep Deep Rest:உறக்கம்அல்லாத ஆழ்ந்த ஓய்வு)

இயற்கை உங்களை விழிப்புணர்வு  இல்லாமல் மௌனத்தில் செல்ல நிர்பந்திக்கிறது. அதுவே உறக்கமாகும். உறக்கம் உங்களுக்கு சக்தியைத் தருகிறது. அதிகமாக கனாக் காண்பதும், பற்பல விஷயங்களில் ஈடுபட விரும்புவதும், இன்றைய காலகட்டத்தில் தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாகின்றன. ”நான் வேண்டுவது எதுவுமில்லை, நான் செய்வது ஒன்றும் இல்லை “- இவ்விரண்டையும் நினைவில் வைத்தால், நீங்கள் ஒரு குழந்தையைப் போல உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள்.

விழிப்புணர்வோடு உறங்கச் செல்வது யோக நித்ரா ஆகும். உங்களுக்கு உறங்குவதில் பிரச்சினையிருந்தால், நீங்கள் யோக நித்ரா செய்து பார்க்கலாம். உறக்கத்திற்கான இணையதள யோகா பயிற்சியும் உள்ளது . நீங்கள் அதில் கலந்து கொள்ளலாம். வாழும் கலை நிகழ்த்தும் பயிற்சிப் பட்டறையில், கவலை மற்றும் தூக்கக் கோளாறுகளின் நிவாரணத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

தியானத்தின் போது ஏற்படும் உறக்கம்

பார்வையாளர்களில் ஒருவர் பின்வரும் கேள்வியைக் கேட்டார்: “தியானத்தின் போது உறங்குவது சரியா?”

குருதேவரின் விடை: ” உங்கள் குறட்டை மற்றவர்களைத் தொந்தரவு செய்யாதவரை, பிரச்சினை இல்லை! தியானம் என்பது ஆழ்ந்த ஓய்வு . சமாதி என்பது என்ன? இது மில்லியன் வருடங்கள் ஓய்வெடுப்பதற்கு இணையானது. நீங்கள் ஒரு வினாடி மட்டுமே தியானம் செய்தாலும் கூட, அதற்கு முன்பும் பின்பும் உறங்கினால் பிரச்சினை இல்லை.”

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *