நான் எப்பொழுது உறங்க வேண்டும்?
இயல்பே தர்மமாகும்: உடலுக்கென்று ஒரு தர்மம் உள்ளது. உடலுக்கு உறக்கம் தேவைப்பட்டால், நீங்கள் அதற்கு ஓய்வை அளிக்க வேண்டும். ஆனால், உடலுக்கு உறக்கம் அவசியமாகும் பொழுது, நாம் என்ன செய்கிறோம்? ஒரு ஸ்வாரஸ்யமான படத்திற்காக தொலைக்காட்சிப் பெட்டியை இயக்குகிறோம். நாம் உடலின் இயல்புக்கு எதிராகச் செயல்படுகிறோம். உடலுக்கென்று கோரிக்கைகள் உள்ளன. நாம் அவைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.
நான் எவ்வளவு உறங்க வேண்டும்?
ஆற்றலின் நான்கு மூலங்கள்:
-
உணவு: இந்தியாவில், பண்டைய காலத்தில் ஒருவரின் நடத்தை விசித்திரமாக இருந்தால் “நீ ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” என்று கேட்பதற்கு பதிலாக “இவருக்கு என்ன உணவு கொடுத்தீர்கள்?” அல்லது “நீ என்ன உணவு உட்கொண்டாய்?” என்று மக்கள் கேட்பார்கள். இது ஒரு விதத்தில் சரிதான். உணவே ஆற்றலின் முதல் ஆதாரமாகும்.
-
உறக்கம்: நல்ல மனநிலையில் உள்ள ஒருவரை, நீங்கள் இரண்டு நாட்களுக்கு உறங்கவிடவில்லை என்றால், அவர் இயல்பாக நடந்து கொள்ள மாட்டார். அவரது நடத்தையில் கடுமையான மாற்றம் ஏற்படும். எனவே, உறக்கம் அல்லது சரியான ஓய்வு அவசியம்.
-
மூச்சு: ஆற்றலின் மூன்றாவது மூலமாகும். ஒரு சில நிமிடங்கள் செய்யப்படும் ஆழ்ந்த சுவாசம் மற்றும் யோகா உடலையும் மனதையும் ஊக்குவித்து, உற்சாகத்தை அதிகரிக்கிறது. ஆன்மாவை உயர்த்துகிறது
-
மகிழ்ச்சியான மனநிலை: மனம் சுகமாக இருக்கும் பொழுது, அதிக அமைதியுடனும் சலனம் இல்லாமலும் இருக்கிறது. ஒரு சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை மகிழ்ச்சியாகவும் ஓய்வாகவும் இருக்கச் செய்கிறது.
உங்களுக்கு சரியான அளவு உறக்கம் தேவை ; ஆறு முதல் எட்டு மணி நேரமாவது தேவை. உங்களுக்கு ஏதேனும் ஒன்றில் மிகையான ஆர்வம் உள்ளபொழுது, வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் உள்ள பொழுது, வேறொன்றும் பொருட்டாகத் தெரிவதில்லை. உங்களுக்குள் அதற்கான ஆற்றல் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் உறக்கத்திற்கும், ஓய்விற்கும் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உறக்கம் மிகவும் அவசியமானது.
உறங்குவதற்கு தயாராகுவது எப்படி?
சாதாரணமாக நாம் படுக்கைக்குச் செல்லும்பொழுது, நம்மிடம் இல்லாதவற்றைப் பற்றியும், எவற்றில் தோல்வி அடைந்துள்ளோமோ அவற்றைப் பற்றியும் யோசிக்கிறோம். படுக்கைக்குச் செல்வதற்கு சற்று முன்பு, உங்கள் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், மற்றவர்களின் நிந்தனைகளையும் நினைத்துக் கொண்டிருந்தால், அவையாவும் நம் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. இதை விதைத்துவிட்டு,பின்பு உறங்குகிறீர்கள். பிறகு காலையில் சோர்வுடன், முற்றிலும் களைத்து, எதிர்மறை எண்ணங்களுடனும், சலிப்புடனும் விழித்தெழுகிறீர்கள்.
மாறாக இரவில் உங்களது சாதனைகள், வாழ்க்கையின் நல்ல நிகழ்வுகள், நல்ல எண்ணங்கள், நல்லாசிகள், நல்ல தருணங்கள் .இவற்றைப்பற்றி சிந்தித்து, பிறகு படுக்கைக்குச் செல்லுங்கள். அல்லது பிரார்த்தனை செய்யுங்கள். அந்த பிரார்த்தனை – வாழ்க்கையில் நான் எவற்றிற்கு நன்றியுடன் இருக்கிறேனோ, அவற்றைப் பற்றி நினைத்துக் கொள்வது.
இத்தகைய எண்ணங்களை சிந்தையில் வையுங்கள். அதற்குப் பின் ஓய்வாக உறங்கச் செல்லுங்கள்.
காலையில் விழித்தெழும்பொழுது புத்துணர்வுடனும், உயிர்ப்புடனும் இருப்பீர்கள். உங்களது நேர்மறை எண்ணங்களை படுக்கப் போகும் முன் விதைத்து, அதற்குப் பின் விழித்தெழுந்தால், நீங்கள் மிக்க புத்துணர்வுடன் இருப்பீர்கள்.
இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு விழிப்புணர்வோடு முயற்சி எடுங்கள். இதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழியாகும். நேர்மறையான வித்துக்களை நம்முள் விதைத்துக் கொண்டிருப்பதே இதன் ரகசியமாகும். இதை நீங்கள் எப்படிச் செய்வீர்கள்? மூச்சு பயிற்சி மற்றும் தியானம். பிறகு இவை அனைத்தும் நிகழும்.
விரைவாக உறங்குவதற்கான 12 எளிய ஆலோசனைகள்
-
‘சட்டென்று’ என்பதை விட்டுவிடவும்: வேகமாக நான் உறங்க வேண்டும் என்பதே முதன்மையான தடையாகிறது. இது நம்மை விழித்திருக்கச் செய்கிறது. அந்த ‘சட்டென்று’ என்பதை விட்டுவிட்டால், நீங்கள் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவீர்கள்.
-
தாமதமாக உண்ண வேண்டாம்: இரவு உணவைத் தாமதமாக உட்கொள்வது இரண்டாவது தடை. உங்களது அதிக வளர்சிதை மாற்ற விகிதமும் (high metabolic rate) ஒரு காரணம். உணவை சரியான அளவில் உட்கொள்வது உதவும்- மிக அதிகமாகவும் இல்லாமல், மிக குறைவாகவும் இல்லாமல்.
-
பிராணாயாமம் செய்யவும்: சிறிது மூச்சுப் பயிற்சி, பிராணாயாமம் உதவும். இது கண்டிப்பாக உதவும். ஆழ்ந்த மூச்சு எடுத்தலும் உங்களுக்கு உதவும். சிறிதளவு யோகா பயிற்சி கூட உதவும்.
-
தியானம் செய்யவும்: தியானம் செய்வது நிச்சயமாக உதவும். அதிகமாக தியானப் பயிற்சி செய்யுங்கள். பன்முறை தியானம் செய்யுங்கள். (தியானப் பயிற்சி கற்க இங்கு கிளிக் செய்யவும்).
-
கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் விட்டுவிடவும்: மூன்றாவது தடை கவலைகள். நாளையைப் பற்றி அல்லது கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி நினைத்து கவலை கொள்கிறீர்கள். கடந்த கால நினைவுகள் அல்லது எதிர் காலத்தைப் பற்றி கவலை கொள்வது தூக்கமின்மைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
-
யோக நித்ரா: உங்களால் உறங்க முடியவில்லை என்றால், யோக நித்ரா செய்யுங்கள் படுத்துக் கொண்டு வாழும் கலை செயலியில் அல்லது குருதேவரின் அலைவரிசையில் யோக நித்ராவை இயக்குங்கள். உங்கள் கவனத்தை உடலின் வெவ்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லுங்கள். இது உங்களை உறக்கத்தில் ஆழ்த்த உதவும்.
-
மெல்லிசையைக் கேட்கவும்: வாய்மொழியிலா மெல்லிசை, மற்றும் வாத்திய இசையும்கூட உதவும். உங்கள் உடல் முழுவதும் அந்த இசை பரவுவதை உணருங்கள். படுத்துக் கொண்டு, உங்களுக்கு பரிச்சயமில்லாத வாத்திய இசையைக் கேளுங்கள். தெரிந்த இசையைக் கேட்க முயன்றால் நீங்கள் அதனுடன், பாடலின் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு பாடத் தொடங்குவீர்கள். ஆனால் நீங்கள் பரிச்சயமில்லாத மெல்லிசையைத் தேர்ந்தெடுத்தால், அது உங்களை உறக்கத்தில் ஆழ்த்தக்கூடும்.
-
பால் அருந்தவும்: சிறிதளவு வெதுவெதுப்பான பால் அல்லது குளிர்ந்த பாலையோ கூட படுக்கைக்குச் செல்லுமுன் அருந்துவது பலருக்கு உதவியாக உள்ளது.
-
மின்னணு சாதனங்களை அணைத்து விடுங்கள்: கண்டிப்பாக உங்களது மின்னணு சாதனங்களை படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அணைத்து விடுங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பிலிருந்து விழித்த பின் ஒரு மணி நேரம் வரை கைபேசி / தொலைபேசியின் உபயோகத்திற்கு தடை விதித்துக் கொள்ளுங்கள்.
-
கடுமையாக உழைக்கவும்: நாள் முழுவதும் கடுமையாக வேலை செய்து களைத்த ஒருவர், கொசுத்தொல்லை இருந்தாலும் அயர்ந்து உறங்குவார். கொசுக்கடியை விடுங்கள், எலிக்கடி இருந்தாலும், அவரது உறக்கம் கலைவதில்லை. ஆனால் பகற்பொழுதை வீணடித்தால், மென்மையான ,சுகமான மெத்தை இருந்தாலும் கூட, உங்களால் இரவில் உறங்க முடியாது. நீங்கள் புரண்டு புரண்டு படுப்பீர்கள். ஒரு கொசுவின் ரீங்காரம் கூட உங்களை விழித்திருக்கச் செய்யும். .உங்கள் தூக்கமற்ற இரவிற்கு கொசு பொறுப்பல்ல. உங்களது சோம்பேறித்தனம் உங்களை உறங்கவிடாது .காலை முதல் மெத்தையில் படுத்துக் கிடந்தால், உங்களால் எவ்வாறு உறங்க முடியும். அதிகமாக தூங்குபவர்கள் உறக்கத்தின் சுகத்தை உணர முடியாது. ஆனால் வயல்களில் கடுமையாக உழைத்து சோர்வடைபவர்கள் உறக்கத்தில் திருப்தியடைகிறார்கள்.
ஓய்வாய் நன்றாக உறங்குவதற்காக சக்தி வாய்ந்த நுட்பங்களைப் பற்றி கற்பதற்கு வாழும் கலையின் “கவலை மற்றும் தூக்கக்கோளாறுகள் நிவாரண பணிமனையில்” சேர்ந்து கொள்ளுங்கள்.
வெகுமதி : உறக்கம் மற்றும் வெளிப்பாடு
இரவில் நீங்கள் ஒன்றை விருப்பப்பட்டால் – நீங்கள் சிறிது தேநீர், தண்ணீர் அல்லது பழரசம் அருந்த விருப்பப்பட்டால், அவ்வாறு செய்யாமல் படுக்கச் சென்றுவிட்டால், இரவில் என்ன நிகழ்கிறது? உங்கள் கனவில், நீங்கள் இவற்றை அருந்திக் கொண்டே இருப்பீர்கள் அல்லது உங்களால் ஆழ்ந்து உறங்க முடியாது.
நல்ல உறக்கத்திற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? மனதளவில் விட்டுவிடுங்கள். விட்டுவிடும் பொழுது, ரகசியம் என்னவென்றால், உங்களது ஆசை நிறைவேறுகிறது.
உங்களது ஆசையை பற்றிக் கொண்டே இருக்கும் பொழுது, அது நிறைவேறுவது இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களுக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. அதை உங்கள் குருவிடம் அல்லது மேலான சக்தியிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வாக இருங்கள். ஆசையை விட்டுவிடும் பொழுது மட்டுமே, உங்களால் ஓய்வாக இருக்க முடியும். நீங்கள் உங்கள் உண்மையான இயல்புடன் ஒன்றியிருக்க முடியும்.











