தியானம் என்றால் என்ன?

தியானம் என்பது மனதை குழப்பமான நிலையிலிருந்து பேரின்ப நிலைக்கு நகர்த்தும் ஒரு புலமையாகும். அமைதியின்மையிலிருந்து ஆழ்ந்த அமைதிக்குச் செல்லும் வழியாகும். அன்றாட நடவடிக்கைகளில், மனம் ஏராளமான பதிவுகள், கவலைகள் மற்றும் பதற்றங்களைச் சேகரிக்கிறது. அவை நம்மை மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்காது. அவை நம் உள்ளுணர்வையும், மகிழ்ச்சியையும் தடுக்கின்றன. பதிவுகள் மனதைக் களங்கப்படுத்தி  நிறைய மனரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

எனவே, தியானம் என்பது குறுகிய காலத்தில் மனதை அமைதிப்படுத்தும் ஒரு புலமையாகும். 15 – 20 நிமிடங்களில், நீங்கள் ஆழ்ந்த ஓய்வை அனுபவிக்க முடியும். இது மிகுந்த ஓய்வுகளை விட மிகவும் ஆழமானது. தியானக் கலை நமது மன விழிப்புணர்வையும், உடல் நலனையும் அதிகரிக்கிறது மற்றும் உணர்வுகளின் நல்லிணக்கத்தை உயர்த்துகிறது.

தியான நிலை என்பது எல்லா அனுபவங்களும் எழும் மூலமாகும் மேலும், எல்லா அனுபவங்களும் இறுதியில் திரும்பும் ஒரு மூலமாகும்.

அது, ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும், சாந்தியையும்  உணரச்செய்யும். உள்ளார்ந்த மௌன நிலையாகும்.

மூன்று வகையான ஞானம்

முதல் நிலை, நம் புலன்கள் மூலம் நாம் பெறும் ஞானம். ஐந்து புலன்களும் நமக்கு ஞானத்தைத் தருகின்றன. பார்ப்பதன் மூலம் அறிவைப் பெறுகிறோம், கேட்பதன் மூலம், தொடுவதன் மூலம், நுகர்தலின் மூலம் , சுவைப்பதன் மூலமும் நாம் ஞானத்தைப் பெறுகிறோம். இது ஞானத்தின் ஒரு நிலை.

ஞானத்தின் இரண்டாவது நிலை என்பது புத்தி பூர்வமாக பெறப்படுவது. புத்தி பூர்வமாக பெறப்படும் ஞானம்,  புலன்களின் மூலம் பெறப்படும்  ஞானத்தைவிட  மேன்மையானது. சூர்யோதயத்தையும், அஸ்தமனத்தையும் நாம் காண்கிறோம்,  ஆனால்,  புத்தி கூர்மை   மூலம், சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை என்பதை நாம் அறிவோம். அதனால்  புத்தி பூர்வமான ஞானம்  உயர்ந்தது.

 புத்தி பூர்வமாக பெறப்படும் ஞானத்தை விட மற்றொரு உயர்ந்த ஞானம்  உள்ளது. அது உள்ளுணர்வின் மூலம் பெறப்படும் ஞானமாகும். உங்கள் வயிற்றுக்கு குழியில் ஏதோ ஒன்று உங்களுக்குச் சொல்கிறது. — அந்த “ஏதோ ஒன்று” ஆழமான அமைதியிலிருந்து வருகின்றது. அந்த ஆழத்திலிருந்து தான் படைப்பாற்றலும், கண்டுபிடிப்புகளும் வருகின்றன. இதையெல்லாம் உருவாக்கும் அந்த விழிப்புணர்வின் நிலையே அறிவின் மூன்றாவது நிலையாகும்.

தியானம் இந்த மூன்றாவது நிலையான உள்ளுணர்வு ஞானத்தின் கதவைக் திறக்கிறது.

மகிழ்ச்சியின் மூன்று நிலைகள்

  • நமது புலன்கள் புலன் பொருள்களில் ஈடுபடும் போது — கண்கள் பார்ப்பதில், காதுகள் கேட்பதில் மூழ்கியிருக்கும் போது — நாம் ஒரு வகையான மகிழ்ச்சியைப் பெறுகிறோம். ஆனால் அந்த உணர்வு மூலம் மகிழ்வதற்கான திறன் குறைந்துகொண்டே செல்கிறது. இது அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும் — அவை அளிக்கின்ற மகிழ்ச்சி ஒரு வரம்புக்குள் தான் இருக்கும்.
  • இரண்டாவது நிலையான மகிழ்ச்சி என்பது நாம் ஏதாவது படைப்பாற்றலுடன் செய்கிறபோது, எதையாவது புதிதாக கண்டுபிடிக்கின்றபோது ஏற்படுகிறது — உதாரணமாக கவிதையொன்றை எழுதும்போதும், சமையலிலே புதிய உணவுவகையொன்றை உருவாக்கும்போதும் கிடைப்பது.
  • மூன்றாவது நிலை மகிழ்ச்சி குறையாதது. அது புலன்களிலிருந்தோ படைப்பாற்றலிலிருந்தோ வருவதில்லை. அறிவு, அமைதி மற்றும் மகிழ்ச்சி. இந்த மூன்றும் வேறு ஒரு நிலையிலிருந்து வருகின்றன.

இந்த மூன்று விஷயங்களுக்கும் ஆதாரம் தியானம். தியானம் நம்மை மூன்றாவது நிலை மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்கிறது.

தியானத்தின் நிலைகள்

ஆரம்பத்தில், தியானம் வெறும் ஓய்வைத்தருகிறது.  இரண்டாம் நிலையில், தியானம் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது. நீங்கள் அதிக சுறுசுறுப்பாக உணர்கிறீர்கள்.  மூன்றாவது நிலையில், தியானத்தின் மூலம் படைப்பாற்றலை பெறுகிறோம். தியானத்தின் நான்காவது நிலை,உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது, மேலும் தியானத்தின் ஐந்தாவது நிலையில் கிடைக்கும் பலன்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அது முழுமையான பிரபஞ்சத்துடன் ஒருமித்த நிலையாகும். ஐந்தாவது நிலைக்குச் செல்லும் முன் தியானத்தை நிறுத்த வேண்டாம்.

தியானத்தின் 10 நடைமுறை நன்மைகள்

விடாமுயற்சியுடன் பயிற்சி செய்யும்போது தியானம், பின்வரும் நன்மைகளைத் தருகிறது: 

  1. மனத் தெளிவு

    தியானம், ஏக்கம் மற்றும் வெறுப்புக்கு அப்பாற்பட்ட அமைதியான மனதை உருவாக்குகிறது. ஒரு ஏரியின் மேற்பரப்பில் அலைகள் இருந்தால்,  ஆழத்தைக் காண முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல், மனம் அமைதியாக இல்லாவிட்டால், நமக்குள் இருக்கும் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் நாம் அனுபவிக்க முடியாது. தியானம் செய்வதால் நிகழ் தருணத்தை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு தருணத்தையும் ஆழ்ந்து முழுமையாக, வாழ முடியும்.

    தியானம் உங்களை கூர்மையாகவும், மகிழ்ச்சியாகவும், உள்ளுணர்வுடனும் இருக்கச் செய்கிறது. பொதுவாக சரியான நேரத்தில் சரியான சிந்தனை உங்களிடம் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் இல்லையா? இதுவே உள்ளூணர்வு.

    மனம் காமம், பேராசை, உடைமை உணர்வு மற்றும் ஆணவம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டிருக்கும்போது நாம் பிறந்தபோது இருந்த கபடமற்ற மனநிலையில் இருக்கும். இந்த நிலையில் ​​இயற்கை உங்கள் பேச்சைக் கேட்கும், உங்களுக்கு மனத்தெளிவு கிடைக்கும்.

  2. நல்ல ஆரோக்கியம்

    ஆரோக்கியம் என்றால் என்ன? ஆரோக்கியமாக இருப்பது என்றால் என்ன?

    ஒருவர் உடல் ரீதியாக வலுவாகவும், மன ரீதியாக அமைதியாகவும், நிலையாகவும், உள்ளுக்குள் உணர்வு ரீதியாக மென்மையாகவும் இருக்கும்போது, ​​அவர் ஆரோக்கியமாக இருப்பார். மனம் இறுக்கமாக இருந்தால், தீர்மானிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது, அது ஆரோக்கியமான மனநிலை அல்ல.

    ஆரோக்கியமாக இருப்பது என்பது உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள் வரையிலும் சீரான இயக்கமாகும். சமஸ்கிருதத்தில், ஸ்வஸ்த்யா என்ற சொல் உள்ளது. ஸ்வஸ்த்யா என்றால் ஆரோக்கியம். அதற்கு தன்னில் நிலைபெறுதல் என்றும் பொருள். சுயத்தில்.

    நிலைபெறுதல் என்பதே ஆரோக்கியத்தின் உண்மை வடிவம். அதை எவ்வாறு பெறுவது? அதை பிராணயாமா மற்றும் தியானம் செய்வதன் மூலம் பெறலாம்.

  3. மகிழ்ச்சி

    மகிழ்ச்சி நிகழ்தருணத்தில் இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி தியானம். தியானப் பயிற்சி நம் மனதையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. சிறந்த வழிபாட்டு முறை (பூஜை) மகிழ்ச்சியாக இருப்பதுதான். நீங்கள் மகிழ்ச்சியற்றவராக இருந்தால், நிலவு கூட உங்களை எரிச்சலூட்டுகிறது, இனிமையான விஷயங்கள் குமட்டலை ஏற்படுத்துகின்றன, இசை உங்களைத் தொந்தரவு செய்கிறது. நீங்கள் மையத்தில் அமைதியாக இருக்கும்போது, ​​ உள்மன இரைச்சல் கூட இசையாக இருக்கும், மேகங்கள் மாயாஜாலமாக இருக்கும், மழை என்பது திரவவடிவான அன்பு. எனவே மகிழ்ச்சியாக இருங்கள்!

  4. கூர்மையான கவனம்

    புன்னகை, சிரிப்பு மற்றும் தியானம் ஆகியவை மனித வாழ்க்கையின் சிறப்புகள். தியானம், கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் மனதை கூர்மையாக்குகிறது, அதேசமயம் ஓய்வின் மூலம் மனதை விரிவுபடுத்துகிறது. மனம் “மனமற்ற” நிலையில் சென்று, அதன் மூலத்திலிருந்து மீண்டும் வருகிறது — இதுவே தியானம். தியானம் என்பது இயக்கத்திலிருந்து அமைதிக்கும், ஒலியிலிருந்து, மௌனத்திற்கும் செல்லும் பயணம் ஆகும்.

  5. மேம்பபட்ட ஆற்றல்

    ஆழ்ந்த ஓய்வும், சுறுசுறுப்பான செயல்பாடும் ஒன்றுக்கொன்று பூர்த்தி செய்கின்றன. உங்கள் மனதுக்கும், உடலுக்கும் ஆழ்ந்த ஓய்வு.

    கொடுக்கவில்லை என்றால், நீங்கள் எப்படி முழு செயல்பாட்டுடன்   சுறுசுறுப்பாக இருக்க முடியும்? ஒருபோதும் தூங்காத ஒருவர் சுறுசுறுப்பாக உணரவே முடியாது.

    நாம் பல செயல்களில் ஈடுபடும்போது, ​​மனபாரம் அதிகரித்து அதன் விளைவாக ஆற்றல் குறைகிறது.

    பின்னர் மீண்டும் புத்துணர்ச்சி பெற தியானம் செய்ய வேண்டிய தருணம் இது. தியானம் என்பது நமது மூலத்திற்குத் திரும்புவதாகும், அந்த மூலம் அளவிட முடியாத, அளவுகடந்த ஆற்றலுடையது.

  6. குறைந்த மன அழுத்தம்

    மன அழுத்தம் என்பது — அதிக வேலை செய்ய வேண்டி இருப்பதும், அதற்குத் தேவையான நேரமோ ஆற்றலோ இல்லாததுமே ஆகும்.

    நம்மிடம் நிறைய வேலை இருக்க, நேரமும் ஆற்றலும் குறைவாக இருந்தால், நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். எனவே, உங்கள் பணிச்சுமையைக் குறைக்கவும், இது இப்போதெல்லாம் சாத்தியமில்லை, அல்லது உங்கள் நேரத்தை அதிகரிக்கவும் – இதுவும் சாத்தியமில்லை. எனவே, நம்மிடம் எஞ்சியிருப்பது உங்கள் ஆற்றல் அளவை அதிகரிப்பதுதான்.

    இப்போது நம் ஆற்றல் அளவை எவ்வாறு அதிகரிப்பது?

    • சரியான அளவு உணவு: அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்ல – போதுமான அளவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களைக் கொண்ட ஒரு சமச்சீர் உணவு.
    • சரியான அளவு தூக்கம்: 6 – 8 மணிநேர தூக்கம் — அதிகமாகவோ, குறைவாகவோ இல்லை.
    • ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள்: இது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
    • உங்கள் ஆற்றலை அதிகரிக்க மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழி
    • சில மணித்துளிகள் தியான மனநிலையுடன் இருத்தல்: ஆழ்ந்த ஓய்வு – என்பது தியானம் என்று அழைக்கப்படுகிறது.சில நிமிடங்கள் ஆழமான ஓய்வு — விழிப்புடனான ஆழமான ஓய்வே “தியானம்” என்று அழைக்கப்படுகிறது. சில நிமிட தியானம் அனைத்து வகையான மன அழுத்தத்தையும் குறைக்கும். காலையிலும் மாலையிலும் 15 – 20 நிமிடங்கள் தியானம் செய்தால், அது போதுமானது. அது உங்களை தொடர்ந்து செயல்பட வைக்கும்.
  7. வெளிப்படுத்தப்படாத படைப்பாற்றல்

    நீங்கள் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும்போது ​​அல்லது ஒரு கூட்டத்தில் இருக்கும்போது, கலக்கமுடன் இருக்கும்போது, ​​உங்களிடமிருந்து எந்த ஆக்கப்பூர்வமான செயல்களும் வெளிவருவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். சில படைப்பு உள்ளடக்கங்களைச் செய்ய, யாரும் இல்லாத ஒரு மூலைக்குச் செல்ல வேண்டும், யாரும் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள், அங்கு நீங்கள் மௌனமாக அமர்ந்து நெற்றிப்பொட்டில் சிறிது தட்டுவீர்கள் — அப்பொழுதுதான் ஏதாவது படைப்பாக வெளிவரும். தியானம் என்பது உங்களுக்குள் ஆழமாகச் சென்று அனுபவிக்கிற செயல். சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானம் உங்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர உதவுகின்றன.

  8. நிறைவேறிய ஆசைகள்

    தியானத்தால் உங்கள் மகிழ்ச்சியடையும் திறனும், உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் திறனும் அதிகரிக்கிறது. உங்களுக்காக நீங்கள் எதையும் விரும்பாதபோது, ​​மற்றவர்களின் ஆசைகளை நீங்கள் நிறைவேற்ற முடியும்.

  9. மேம்பட்ட இருப்புநிலை

    கூகிள் உங்களுக்கு வழங்க முடியாத ஒன்று உள்ளது. அதுதான் அதிர்வுகள். நம் உடல்களை விட நம் அதிர்வுகள் மூலம் நாம் அதிகமாக வெளிப்படுத்துகிறோம். ஆனால் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ நம் அதிர்வுகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை யாரும் கற்பிப்பதில்லை..

    தியானம் நம் உடலில் இருந்து, நம் உடலின் ஒவ்வொரு செல்லிலிருந்தும் வரும் அதிர்வுகளை மேலும் நேர்மறையாக மாற்றுகிறது.

  10. மகிழ்ச்சியான உறவுகள்

    தியானம் உங்கள் பார்வையை மாற்ற உதவுகிறது. நீங்கள் விஷயங்களைப் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்ற இது உதவுகிறது. நீங்கள் மக்களுடன் எப்படிப் பழகுகிறீர்கள், என்ன சொல்கிறீர்கள், வெவ்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை மேம்படுத்த மனதில் தெளிவைக் கொண்டுவருகிறது மற்றும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடனான உங்கள் உறவை வலுப்படுத்த உங்களுக்கு உதவுகிறது.

காணொளி:   நீங்கள் ஏன் தினமும் தியானம் செய்ய வேண்டும்!

முடிவுரை

தியானம் உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் நன்மைகளைப் பார்த்தால், அது இந்தக் காலத்தில் மிகவும் பொருத்தமானதாகவும், மிகவும் அவசியமானதாகவும் உணர்கிறோம். பண்டைய காலங்களில், தியானம், ஞானம் பெறவும், சுயத்தைக் கண்டறியவும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் தியானம் என்பது துயரங்களிலிருந்து விடுபடவும், பிரச்சினைகளை வெல்லவும் ஒரு வழியாகும். தியானம் என்பது ஒருவரின் திறன்களை மேம்படுத்துவதற்கான வழியாகும். இன்றைய சமுதாயக் கேடுகளை நீங்கள் பார்த்தால் – மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். அவற்றில் இருந்து விடுபட தியானம் சிறந்த வழியாகும்.

வாழ்க்கையில் உங்களுக்கு அதிக பொறுப்பு இருந்தால், தியானத்திற்கான தேவை அதிகமாகும். நீங்கள் செய்யவேண்டியது எதுவும் இல்லையென்றால், தியானம் அவ்வளவாக தேவைப்படாது. – ஏனென்றால் உங்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் எவ்வளவு பரபரப்பாக இருக்கிறீர்களோ, அவ்வளவு குறைவான நேரமும், அதிக வேலையும், அதிக ஆசைகளும், அதிக லட்சியங்களும் இருக்கும் – நீங்கள் தியானத்தில்  ஈடுபட வேண்டிய அவசியம் அதிகமாகும். தியானம் உங்களை மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுவிப்பது மட்டுமல்லாமல், சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்துகிறது.

தியானம் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. தியானம் என்பது ஆன்மாவிற்கு உணவு. அது மனதிற்கு உற்சாகத்தை அளிக்கிறது. இது உடலுக்கு ஒரு உயிர்நாடி. இது உங்கள் உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது, உங்கள் நரம்பு மண்டலத்திற்கு உதவுகிறது, உங்கள் மனதையும், விழிப்புணர்வையும், உணர்வையும் மேம்படுத்தி உங்களை சரியான முறையில் வெளிப்படுத்த உதவுகிறது. உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? எல்லாம் வந்துவிட்டது!

எனவே தியானத்தின் நன்மைகள் ஏராளம்! நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், தியானம் செய்ய வேண்டும் என்று கூறலாம்..

சஹஜ் சமாதி தியான யோகாவுடன் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான உங்கள் பயணத்தைத் இன்றே தொடங்குங்கள்!

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *