இன்றைய வேகம் மற்றும் குழப்பங்கள் நிறைந்த உலகில், மனஅமைதியையும், ஆரோக்கியத்தையும் பேணுவது பலருக்கு இன்றியமையாததாகி விட்டது. தியானம் என்பது அசையும் நிலையிலிருந்து அசைவற்ற நிலைக்கும் மற்றும் ஒலியிலிருந்து மௌனத்திற்கும் செல்லும் பயணமாகும். தியானம் செய்ய வேண்டிய அவசியம் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது, ஏனெனில் குன்றாத மகிழ்ச்சியைத் தேடுவது, சிதைவுறாத அல்லது எதிர்மறை உணர்ச்சிகளாக மாறாத அன்பைத் தேடுவது மனித வாழ்க்கையின் இயல்பான போக்கு. தியானம் உங்களுக்கு அந்நியமானதா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் நீங்கள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தியானத்தில் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் எதுவும் செய்யாமல் இருந்தீர்கள். நீங்கள் உங்கள் உணவை மெல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை – அது உங்கள் வயிற்றில் நேரடியாக செலுத்தப்பட்டது, நீங்கள் அங்கு மகிழ்ச்சியுடன் திரவத்தில் மிதந்து கொண்டிருந்தீர்கள், சில நேரங்களில் இங்கேயும் அங்கேயும் உதைத்துக் கொண்டிருந்தீர்கள், ஆனால் பெரும்பாலான நேரங்களில் மகிழ்ச்சியுடன் அங்கேயே மிதந்து கொண்டிருந்தீர்கள். அதுதான் தியானம் அல்லது முழுமையான ஆறுதல்.
தியானம் என்பது ஒலியிலிருந்து மௌனத்தை நோக்கிய பயணம்
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஆன்மாவிற்கான உணவு
தியானம் நம் வாழ்வில் கொண்டு வரும் நன்மைகளைப் பார்த்தால், அது நமது வாழ்விற்கு மிகப் பொருத்தமானதும், அவசியமானதும் ஆகும். பண்டைய காலங்களில் தியானம் ஞானம் பெறவும், சுயத்தைக் கண்டறியவும் பயன்பட்டது. அது துயரத்தை நீக்கவும், பிரச்சினைகளை சமாளிக்கவும், திறன்களை மேம்படுத்தவும் ஆகிய மூன்று விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இன்று சமூகக் பிரச்சனைகள், மனஅழுத்தம் மற்றும் மனஇறுக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு தியானம் தேவை. உங்கள் வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கும் போது தியானத்தின் தேவையும் அதிகரிக்கிறது. உங்களுக்கு செய்வதற்கு எதுவும் இல்லையெனில், உங்களுக்கு தியானம் கூடத் தேவையிராது. உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாகவும், நேரம் குறைவாகவும், ஆசைகளும், குறிக்கோளும் இருக்கும் போது, தியானம் மிக அவசியமாகிறது. தியானம் உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து உங்களுக்கு வலிமையைத் தருவது மட்டுமல்லாமல், சவால்களை எதிர்கொள்ளும் உங்கள் திறனையும் மேம்படுத்துகிறது. தியானம் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. இசை உணர்ச்சிகளுக்கு உணவு; ஞானம் அறிவாற்றலுக்கு உணவு; பொழுதுபோக்கு மனதுக்கு உணவு; தியானம் நம் ஆன்மாவிற்கு உணவு. அது மனதிற்கு சக்தியளிப்பது.
இயற்கையான நேர்மறைத்தன்மை
சில நேரங்களில் நீங்கள் யாரையாவது சந்தித்து, எந்த காரணமும் இல்லாமல், அவர்களிடம் பேச விரும்பாமல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே சமயம், நீங்கள் அடிக்கடி சந்திக்காத சிலருடன் நெருக்கமாகவும், சௌகரியமாகவும் உணர்கிறீர்கள். இது நேர்மறை ஆற்றலால் ஏற்படுகிறது. தியானம் நம்மைச் சுற்றி நேர்மறை மற்றும் இணக்கமான ஆற்றலை உருவாக்குகிறது.
குறைவான நேரத்தில் ஆழமான ஓய்வு
தற்சமயம் தியானம் எவ்வாறு உயர் மனஅழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய், சருமப் பிரச்னைகள். நரம்பு மண்டல பிரச்னைகள் மற்றும் பல பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது உடல் மற்றும் மன நோய்களைத் தடுக்க மிகவும் உதவுகிறது. இது அறிவுக்கூர்மை, தீவிர கவனம், விழப்புணர்வு, கிரகிக்கும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நீங்கள் இலகுவானராகவும், மென்மையானவராகவும், பவித்திரமானவராகவும் உணர்வீர்கள். நீங்கள் கடந்தகால குப்பைகளை விட்டு விடுவீர்கள். இது உங்களைச் சுற்றி நேர்மறையான அதிரலைகளை உருவாக்கி, மற்றவர்களுடனான உங்களின் நடத்தையிலும், உங்களுடனான மற்றவர்களின் நடத்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தியானம் குறைவான நேரத்தில் ஆழமான ஓய்வைத் தருகிறது.
கவனம் மற்றும் தெளிவு
தியானம் நம்மை நிகழ் தருணத்தில் வாழ உதவுகிறது. மனம் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் ஊசலாடுகிறது. நாம் கடந்த காலத்தைப் பற்றி கோபமாகவோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி எப்போதும் கவலையாகவோ இருக்கிறோம். ஆனால் தியானம் மனதை கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் ஊசலாட விடாமல் நிகழ்காலத்தில் இருக்க உதவுகிறது. ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும் தியானம் மேம்படுத்துகிறது. நீங்கள் விஷயங்களை உணரும் விதத்தை இது மேம்படுத்துகிறது. மேலும் மனதிற்கு தெளிவைத் தருகிறது.
எனக்குள் அமைதி புவியில் அமைதி
இது உங்களைச் சுற்றியுள்ள மக்களுடனான உங்கள் தொடர்புகளை மேம்படுத்துகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள், வெவ்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். பொதுவாக, மன அழுத்தம் மற்றும் வன்முறை இல்லாத சமூகம், தனிநபர்களின் அமைதி மற்றும் ஆரோக்கியம், துயரமில்லாத ஆன்மா என அனைத்தும் தியானத்தின் பக்க விளைவுகள்.
தியானத்தில், குணமடையும் தன்மை நடைபெறும். மனம் அமைதியாகவும், விழிப்புடனும், முழுமையான திருப்தியுடனும் இருக்கும் போது, அது ஒரு லேசர் கற்றை போல மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். எனவே குணமடையும் தன்மை நடைபெறும்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இன்று, உலகத்தின் புரிந்துணர்வு மேம்பட்டு வருகிறது; மறுபுறம், எதிர்மறை மற்றும் அமைதியின்மை அனைத்தையும் நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் அதே நேரத்தில், பெருவாரியான மக்கள் உலகத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். மேலும் அதிகமான மக்கள் உலகிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். பூமியின் ஒரு பகுதியில் நீண்ட கோடை இருந்தால், மற்றொரு பகுதியில் நீண்ட குளிர்காலம் இருக்கும். உலகில் உங்களுக்குக் கிடைக்கும் பகல் நேரமும் இரவின் அளவும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன. ஆழ்ந்து பார்க்கும் போது, ஒரு பெரிய சக்தி இந்த பூமி கிரகத்தை கவனித்துக் கொள்கிறது என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும், மேலும் அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் வேலையைச் செய்து வருகிறது. ஆனால் அது நாம் எதையும் செய்யாமல் இருப்பதற்கு ஒரு சாக்குப்போக்கு அல்ல.
செயலும் தியானமும் சமநிலையில் இருக்கும்போது வாழ்க்கை இயல்பாகவே மலர்கிறது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
அகஅமைதி இல்லையென்றால் புறஅமைதி இருக்க முடியாது. தியானம் அகஅமைதியை உறுதி செய்கிறது. அகத்தில் அமைதி இருக்கும்போது, புறத்திலேயும் அமைதியை அடைய முடியும். நீங்கள் கலக்கமடைந்தால், விரக்தியடைந்தால், வெளியே அமைதியை உருவாக்க முடியாது. “தொண்டு வீட்டிலிருந்து தொடங்குகிறது” என்று சொல்வது போல். வெற்று கிண்ணத்துடன் தொண்டு செய்ய முடியாது. அதில் ஏற்கனவே ஏதாவது இருக்க வேண்டும். அதே போல், அமைதியைக் கொடுக்க உங்களிடம் அமைதி இருக்க வேண்டும். மேலும் வார்த்தைகளால் மட்டும் அமைதியை வெளிப்படுத்த இயலாது. அமைதி என்பது ஒரு அதிர்வு. எனவே நீங்கள் அமைதியாகவும், சாந்தமான மனஉணர்வுடனும் இருக்கும்போது, உங்கள் வலிமை பன்மடங்கு அதிகரிக்கிறது. நீங்கள் மிகவும் வலுவாக இருக்கும் போது, எந்த இடத்திற்கும் சென்று அமைதியைப் பற்றி பேசலாம். எனவே தியானம் உங்களுக்கு உள் வலிமையைத் தருகிறது. மேலும் அது உங்களைச் சுற்றி அமைதியான அதிர்வுகளைப் பரப்புகிறது. அதனால்தான் அமைதிக்காக தியானம் அவசியம்.
தியானத்தைக் கற்றுக் கொள்ளவும், தனிமனித அமைதியைத் தாண்டி, அமைதியான சமுதாயத்தினால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கவும், இன்றே ‘ஆனந்த அனுபவம்’ என்னும் பயிற்சிக்கு பதிவு செய்யவும்.











