யோக நித்திரை என்பது ஆழ்ந்த ஓய்வை அனுபவிப்பதற்கும் நமது செயல்திறனை அதிகரிப்பதற்கும் ஒரு விலைமதிப்பற்ற நுட்பமாகும். இது ஒரு வழிகாட்டுதலும் கூடிய தியானம் போன்றது, நாம் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. யோக நித்திரையின் தொடர் பயிற்சி நமக்கு ஆழ்ந்த ஓய்வை அளிக்கிறது மற்றும் அதிர்ச்சிகள் மற்றும் மன அழுத்தத்தை விடுவிக்க உதவுகிறது. 20 நிமிட யோக நித்திரை அல்லது யோகத் தூக்கம் பிற்பகல் தூக்கத்தை விட ஆழ்ந்த ஓய்வைத் தரும். யோக நித்திரை அமைதியான விழிப்புணர்வை உள்ளடக்கியது.
யோக நித்திரைக்கும் தூக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகள்

தூக்கம் என்பது விழிப்பு, கனவு, தூக்கம் மற்றும் 4 வது துரிய நிலை அல்லது சமாதி என்னும் நமது நான்கு இயற்கையான நிலைகளில் ஒன்றாகும்-. பொதுவாக, நாம் விழிப்பு நிலையிலிருந்து கனவு நிலைக்கும் அதிலிருந்து தூக்கத்திற்கு நகர்கிறோம். நாம் தூங்குவதற்கு படுத்துக் கொள்ளும்போது இது இயல்பான பொறிமுறையாகும். ஆனால் உறக்கத்தில் முழுமையாக விழிப்புநிலையை இழந்து, ஐம்புலன்களும் அடங்குகின்றன. புலன்களின் அடைப்பு நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஆனால் யோக நித்திரையில், புலன்கள் ஓய்வில் இருந்தாலும், ஒலி அல்லது அறிவுறுத்தலின் மூலத்தின் மீது மென்மையான கவனம் செலுத்தப்படுவதால், நாம் விழிப்புணர்வைத் தக்க வைத்துக் கொள்கிறோம். யோக நித்திரையில், பயிற்சி பெற்ற யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ், உடலின் வெவ்வேறு பகுதிகள் மூலம் அந்த விழிப்புணர்வை சுழற்சி முறையில் பிரயோகிக்கிறோம். யோக நித்திரையில், நாம் சுவாசத்தின் உதவியையும் எடுத்துக்கொள்கிறோம்.
எனவே சுவாசத்தின் உதவியுடன் உடல் முழுவதும் நம் விழிப்புணர்வை நகர்த்துவதன் மூலம், சாதாரண தூக்கத்தை விட ஆழமான ஓய்வைப் பெறுகிறோம்.
யோகாவில், விழிப்புணர்வே ஆற்றல்தான். எனவே, உங்கள் முழங்கால்களைப் பற்றி நீங்கள் அறிந்தவுடன், நீங்கள் அந்த பாகத்திற்கு ஆற்றல் அளிக்கிறீர்கள்; உங்கள் விழிப்புணர்வை உங்கள் கீழ் முதுகில் கொண்டு வந்தால், உங்கள் கீழ் முதுகுக்கு ஆற்றலை அனுப்புகிறீர்கள். இதேபோல், யோக நித்திரையில், உங்கள் விழிப்புணர்வை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வருவதும், அவற்றை நினைவுடன் தளர்த்துவதும் உங்கள் முழு உடலையும் மனதையும் ஆழமாக உற்சாகப்படுத்துகிறது.
யோக நித்திரையும் தியானமும்
யோக நித்ரா உங்களை ஒரு தியான நிலைக்கு கொண்டு வருகிறது, இது படுத்துக் கொண்டு செய்யும் ஒரு வித தியானத்தைத் தவிர வேறில்லை.
ஆழ்ந்த ஓய்வு மற்றும் செயல்பாடு ஆகியவை ஒன்றையொன்று நிரப்புபவை. உங்கள் மனதுக்கும் உடலுக்கும் ஆழ்ந்த ஓய்வு கொடுக்காவிட்டால் நீங்கள் எவ்வாறு சுறுசுறுப்பாக இருக்க முடியும்? ஒருபோதும் தூங்காத ஒருவரால் ஆற்றலை உணர முடியாது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
யோக நித்திரை பயிற்சியின் முக்கியத்துவம்
நம் அன்றாட வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். மனதளவில், நமக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் இரண்டும் உள்ளன. நம்மிடம் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளும் உள்ளன. எனவே எண்ணங்கள் என்றால் என்ன, உணர்ச்சிகள் என்றால் என்ன? எண்ணங்கள் மனதளவில் சில ஆற்றல் அலைகள், மற்றும் உணர்ச்சிகள் உணர்வளவில் சில ஆற்றல் அலைகள். நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமது சூட்சும உடலில் உள்ள பிராணனை நகர்த்துகின்றன. இது நேர்மறையான ஒன்றாக இருந்தால், அது நமது நரம்பு மண்டலத்தின் உற்சாகத்தையும் தூண்டுதலையும் தருகிறது. எதிர்மறையான ஒன்று நமது நரம்பு மண்டலத்தை சுருங்கச் செய்கிறது அல்லது சுருக்குகிறது. நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும், அலுவலகத்தில் இருந்தாலும், வீட்டில் இருந்தாலும் அல்லது பல்வேறு வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும்போதும் நம் வாழ்வில் எல்லா நேரங்களிலும் இந்த உற்சாகம் அல்லது விரிவாக்கம் மற்றும் சுருக்கத்திற்கு இடையில் ஊசலாடிக் கொண்டே இருக்கிறோம், இது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் அளவில் மன அழுத்தத்தைக் கொண்டுவருகிறது. நமது நரம்பு மண்டலம் இவை அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டே இருக்கிறது.
இப்போது யோக நித்திரை செய்யும்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். நாம் படுத்திருக்கும்போது, ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலால், மிகுந்த ஓய்வுடன் இருக்கிறோம். பின்னர் நாம் நமது விழிப்புணர்வை உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்த ஆரம்பிக்கிறோம், மேலும் நாம் நிதானமான முறையில் சுவாசிக்கிறோம். எப்போதும் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் சுழற்சியில் இருக்கும் மனம், திட்டமிடுதல் அல்லது வருத்தம், கோபம் அல்லது பதட்டத்தில் சிக்கிக்கொண்டு மெதுவாக அந்த வளையத்திலிருந்து வெளியேறி நிகழ்காலத்திற்கு வரத் தொடங்குகிறது. உங்கள் மனம் முற்றிலும் நிகழ் தருணத்தில் இருக்கும்போது; நீங்கள் எதுவும் செய்யவில்லை, நீங்கள் எதையும் திட்டமிடவில்லை, நீங்கள் சிந்திக்கவில்லை. உங்கள் மனம் கடந்த காலத்தில் இல்லை, கோபம் அல்லது வருத்தம் இல்லை. மனம் நிகழ்காலத்திற்கு வந்தவுடன், அது எதைப் பற்றிக் கொண்டாலும், கடந்த காலம் மற்றும் எதிர்காலம், கடந்த காலத்தின் பதிவுகள் மற்றும் எதிர்காலத்தின் கவலைகள் விலகி மனம் தளர ஆரம்பிக்கிறது. நரம்பு மண்டலம் ஆழ்ந்த தளர்வு நிலையை அடைகிறது, அங்கு மனம் பதிவுகளை வெளியேற்றத் தொடங்குகிறது. என்ன பதிவுகள் வெளியேற்றப்படுகின்றன என்பது நமக்கு தெரியாது, ஆனால் அவை வெளியேற்றப்படுகின்றன என்பது மட்டும் உறுதி. இது மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எண்ணங்கள் மூலம் நீங்கள் சேகரித்த மன அழுத்தத்தை நீங்கள் விடுவிக்கிறீர்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் மூலம் நீங்கள் சேகரித்த உணர்ச்சி மன அழுத்தத்தை வெளியிடுகிறீர்கள், நீங்கள் படுத்துக் கொண்டு ஆழமாக சுவாசிப்பதால், தசைகளின் உண்மையான உடல் சோர்வும் வெளியேற்றப்படுகிறது. எனவே யோக நித்திரை என்பது உடல், மன மற்றும் உணர்ச்சி அழுத்தங்களை முழுமையாக வெளியேற்றுவதாகும்.
யோக நித்திரையை தொடர்ந்து பயிற்சி செய்வது ஆழமாக பதிந்திருக்கும் அதிர்ச்சிகளை அகற்றும்
யோக நித்திரையின் தொடர்ச்சியான பயிற்சி ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருகிறது. நீங்கள் யோக நித்திரையைத் தொடர்ந்து செய்யும்போது, ஆரம்பத்தில் அது தினசரி சாதாரணமாக எழும் அல்லது சிறிய சிறிய அழுத்தங்களை வெளியேற்றுகிறது. ஆனால் நீங்கள் யோக நித்திரையை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து தவறாமல் செய்தால், அந்த பயிற்சியே ஆழமாகிவிட்டால், உங்கள் மன-உடல் கூட்டு அமைப்பிலிருந்து விடுவிக்க முடியாத ஆழமான அதிர்ச்சிகளையும், மிகவும் பழைய நினைவுகளையும் கூட நீங்கள் வெளியேற்றுவீர்கள்.
வழக்கமான யோகா பயிற்சியாளர்களும் அறிய வேண்டிய யோகநித்திரையின் முக்கியத்துவம
நாம் யோகா பயிற்சி செய்யும் போது, உடல் அளவில் முயற்சி செய்கிறோம். நம் அன்றாட வாழ்க்கையில், நாம் கடினமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுகிறோம் என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். நாம் எல்லா நேரமும் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு இருக்கிறோம். எனவே இப்போது யோகாவும் இம்மாதிரி “ஏதாவது செய்வதன்” ஒரு பகுதியாகும். ஆனால் யோக நித்திரை அல்லது தியானத்தின் போது மட்டும்தான் நீங்கள் எதுவும் செய்யாத நிலையை அடைந்து ஓய்வெடுப்பதற்காக மட்டுமே ஓய்வெடுக்கும் மிக அபூர்வமான நேரங்களில் ஒன்று. இதற்கு அதிக முயற்சி இல்லை, ஏனென்றால் ‘செய்வது’ என்று வந்து விட்டாலே, சோர்வுக்கும் ஆயாசத்திற்கும் வழி வகுக்கிறது. எனவே நீங்கள் யோகா செய்தாலும், அதன் முடிவில் முயற்சி இருக்கிறது; ஆனால் யோக நித்திரையில் நீங்கள் முயற்சியற்ற நிலைக்குச் செல்கிறீர்கள், இது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் தேவைப்படும் ஆழமான ஓய்வின் வடிவமாகும்.
குருதேவ் கூறுவது போல, நீங்கள் ஒரு அம்பை வெகுதூரம் எய்ய விரும்பினால், அதை பின்னோக்கி நன்கு இழுக்க வேண்டும். எனவே, நாம் மிகவும் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் 24 மணி நேரமும் பல பணிகளை மேற்கொள்ளும்போது, ஓய்வின் தரமும் சமமாக ஆழமானதாக இருக்க வேண்டும். நிறைய செயல்பாடுகள் இருக்கும்போது, நாம் என்ன செய்கிறோம் என்பதில் மிகவும் திறமையாக இருக்க நமக்கு உயர்ந்த தரமான ஓய்வு தேவை.
எந்த ஒரு ஆசன வரிசையின் முடிவிலும் யோகா நித்ராவைச் சேர்ப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் உடலுக்கும் மனதுக்கும் ஆசனங்களின் விளைவுகளை ஒருங்கிணைக்க நேரம் தேவை.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
யோக நித்திரை செய்யும்போது மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்
- உங்கள் உடலைத் தளர்த்தி கொள்ளுங்கள். நீங்கள் யோக நித்திரை செய்வதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் ஆசை அல்லது சங்கல்பம் இருந்தால், அவற்றை 2-3 முறை மனதில் கொண்டு வந்து, பின்னர் அவைகளை முழுமையாக விட்டுவிடுங்கள்.
- மெதுவாக இந்த மூன்று விஷயங்களை மனதில் கொள்ளுங்கள் – “எனக்கு எதுவும் வேண்டாம், நான் எதுவும் செய்யவில்லை, நான் ஒன்றுமில்லை”. பிறகு முழுவதுமாக விட்டு விடுங்கள்.
- பயிற்சியை தவறாமல், தொடர்ந்து ஒழுக்கமான முறையில் செய்யுங்கள்.
- இந்த நடைமுறையை மரியாதையுடன் அணுகுங்கள். இந்த நடைமுறைகளை நீங்கள் மரியாதையுடன் செய்யும்போது, அனுபவம் ஆழமாகவும் மேம்பட்டதாகவும் இருக்கும்.











