ஆன்மிகத்தின் பொருள் நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலர் இதை மதத்துடனும், இயற்கையுடனும், சிலர் இதை இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாத்திய சக்தி என்றும், மேலும் சிலர் இது நம்முள் உள்ள ஆன்மாவுடன் ஒரு இணைதும் நம்புகிறார்கள். நீங்கள் அதை எப்படி உணர்ந்தாலும், ஆன்மீகத்தில் பற்பல நன்மைகள் உள்ளன. உங்களில் நேர்மறையான மாற்றத்தைத் தூண்டுவதிலிருந்து, வாழ்க்கையில் உங்களுள் மன நிறைவை அதிகரிப்பது வரை, ஆன்மீகம் பல பரிமாணங்களைக் கொண்டது.
பண்டைய இந்திய வரலாற்றில் அறிவியலும், ஆன்மீகமும் ஒருபோதும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. இவை இரண்டும் வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை பூர்த்தி செய்கின்றன – ஒன்று உடல் சார்ந்தது, மற்றொன்று சூட்சுமமானது. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல, ஆனால் ஒன்றையொன்று நிறைவு செய்கின்றன. சீரான வாழ்க்கைக்கும், நமது உண்மையான அடையாளத்தை உணரவும் ஆன்மீகம் மிகவும் அவசியம்.
உலக விஷயங்களை புரிந்துகொள்வது அறிவியல். ‘நான் யார்’ என்பதைப் புரிந்துகொள்வதே ஆன்மீகம்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஆன்மீகம் ஏன் முக்கியமானது?
நாம் அறிந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் நமது அடிப்படை அடையாளம் ஆன்மீகம்தான் அல்லவா? கடந்த காலத்தின் வேதனைகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும் துவண்டு போகாமல், நமது ஆன்மாவுடன் இணைவதற்கும், நிகழ் தருணத்தில் மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழ்வதற்கும் ஆன்மீகம் உதவுகிறது.
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுகிறீர்களா?
நிரந்தரமான நிம்மதிக்காக நீங்கள் ஏதோவொரு விதத்தில் ஏங்கிக்கொண்டு இருக்கிறீர்களா?
நீங்கள் பிரார்த்தனையின் போதும், தியானிக்கும் போதும் அமைதியை அனுபவிக்கிறீர்களா?
நீங்கள் கருணையோடு மற்றவர்களுக்கு உதவும்போது ஆழ்ந்த திருப்தியை உணர்கிறீர்களா?
நீங்கள் ஒரு தெய்வீக சக்தியிடம் சரணடையும் போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா?
மேலே உள்ள கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் ‘ஆம்’ என்று பதிலளித்திருந்தால், நீங்கள் உண்மையில் ஆன்மீகவாதி. ஆம், அமைதியாக வாழ ஆன்மீகம் அவசியம்.
ஆன்மாவை வளர்க்கும் எதுவுமே ஆன்மிகம். சரியான ஓய்வு, கொஞ்சம் ஞானம், உங்கள் பார்வையை விரிவுபடுத்துதல் இவை அனைத்துமே ஆன்மீகத்தின் அங்கங்களாகும். நாகரிகமான உலகில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவை அனைத்தும் தேவை.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஆன்மீக பயிற்சியை மேம்படுத்த 7 வழிகள்
தியானம் உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை கவனத்துடன் எதிர்கொள்ள உதவுகிறது.. இது உங்கள் புலன்களை அமைதிப்படுத்தி, சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்துகிறது. ஐந்தே நிமிடங்கள் தியானம் செய்தாலும்கூட மன அழுத்தம், பதற்றம் மற்றும் எதிர்மறை உணர்வுகளான, கோபம், மன உளைச்சல், அகந்தை, பொறாமை போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவும். சிறிய விவரங்களான : நிகழ்தருணத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றிய புரிதல் உள்ளதா, நீங்கள் என்ன செய்கிறீர்கள் ஆகியவற்றில் கவனத்தோடு செயல்பட சில வழிகளாகும்.. தியானத்தின் மூலம் கவனம் பெரிதும் மேம்படுத்தப்படுகிறது.
- யோகா மற்றும் பிராணாயாமம்
யோகா நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக ஆக்குகிறது மற்றும் நமது உயிர்ச்சக்தியை அதிகரிக்கிறது, நம்முள் உறையும் ஆன்மாவுடன் எளிதில் இணைக்க உதவுகிறது. மனதை வலுப்படுத்துவதன் மூலம் உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்க யோகா ஒரு சிறந்த நுட்பமாகும். பிராணாயாமம் சுவாசத்தை மேம்படுத்தி, விழிப்புணர்வை அதிகரிக்கிறது. நீங்கள் ஆன்மீகப் பாதையில் முன்னேற விரும்பினால் தியானமும் பிராணாயாமமும் மிகவும் அவசியம்.
- இரக்கம் மற்றும் மன்னிக்கும் தன்மை
லௌகீக இன்பங்களிலிருந்து விலகி, ஆன்மீகத்தை நோக்கி உங்கள் வாழ்க்கையை செலுத்தும்போது, நீங்கள் இரக்கம், மன்னிக்கும் தன்மை மற்றும் அன்பை வளர்த்துக் கொள்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களை அந்நியர்களாக பார்க்காமல் அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள். சொந்தம் வளர்ந்து, நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஒரு அடிப்படை தெய்வீக பிணைப்பை (தெய்வீக உணர்வு) படிப்படியாக உங்களுக்கு உணர்த்துகிறது.
ஆன்மீகம் என்பது உலகில் உள்ள அனைத்து மக்களுடனும் சொந்தமான உணர்வு.
~ குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
- மனநிறைவு மற்றும் நன்றியுணர்வு
உங்களுக்கு வழங்கப்பட்டதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் இல்லாததைப் பற்றி புகார் செய்வதை விட, இருப்பதை நினைத்து நன்றியுணர்வைக் கடைப்பிடிக்கவும். ஆன்மீக நோக்கில், திருப்தியாக இருப்பவர்தான் செல்வந்தராக கருதப்படுகிறார். வாழ்க்கையின் பல கட்டங்களில், ஆடம்பரங்களை நாடும்போது, மக்கள், ஒரு நாள் அனைத்தும் மறைந்துவிடும் என்பதை மறந்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை அறிந்து, உங்களிடம் உள்ளவற்றிற்கு எப்போதும் நன்றியுடன் இருப்பது, உங்களுக்கு வளமான, நிறைவான வாழ்க்கையைத் தரும்.
உங்கள் உள்ளத்தில் நன்றியுணர்வு நிலைத்திருக்கும்போது, அந்த நன்றியுணர்வே உங்களிடமிருந்து அருளாக பெருக்கெடுக்கிறது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
- லயத்தோடு கூடிய சுவாசம்
சுதர்சன கிரியா போன்ற தாள லயத்தோடு கூடிய சுவாச நுட்பங்கள் சுவாசக் குழாய்களை விரிவாக்கி, மனஅழுத்தத்தின் பிடியிலிருந்து விடுவித்து, வாழ்க்கையின் பிரகாசமான தருணங்களை காண உதவுகிறது இது உங்கள் விழிப்புணர்வை உயர்த்தி, மேலும், நிகழ்தருணத்தில் கவனம் செலுத்தி, நம்பிக்கையுடன் அமைதியாக, வாழ வைக்கிறது. அது மட்டும் அல்லாமல், சுதர்சன கிரியா நோய்களிலிருந்து குணமடையவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
- தன்னலமற்ற சேவை
தன்னலமற்ற சேவை ஆன்மீகத்தின் இன்றியமையாத அங்கமாகும். ஆன்மீகத்தை கடைப்பிடிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று மற்றவர்களுக்கு உதவுவதாகும். நீங்கள் ஒரு நல்ல நோக்கத்துக்கு, தன்னார்வத் தொண்டு செய்து மற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பின்தங்கியவர்களுக்கு உதவுவதும், சமூகத்திற்கு திருப்பித் தருவதும் ஆழ்ந்த திருப்தியைத் தருகிறது. நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதையும் இது காட்டுகிறது மற்றும் உங்களை அடக்கத்துடனும், பணிவுடனும் வைத்திருக்கிறது.
ஒருவரின் மனநிலையை மேம்படுத்துவதே சிறந்த சேவையாகும்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
- உங்கள் உள்நோக்கிய பார்வை
உங்கள் ஆற்றலை செயலாக்கவும் சிறப்பாக மாற்றவும் எது உதவுகிறது என்பதைக் கண்டறிய பார்வையை உள்நோக்கி செலுத்துங்கள் அது நாட்குறிப்பு எழுதுவது, பாடுவது, ஓவியம் வரைவது அல்லது நடனம் போன்ற பொழுதுபோக்காக இருக்கலாம். சிலர் மலைப்பகுதிகளுக்குச் சென்று இயற்கையுடன் நேரத்தை செலவிடுகிறார்கள். இது மிகவும் நிவாரணம் அளிக்கும் தன்மை கொண்டதாகக் கூறப்படுகிறது. நம்பிக்கைக்குரியவர்களிடம் உங்களில் புதைந்து கிடக்கும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தின் அர்த்தத்தை அறிய, நிம்மதி அளிக்கும் நுட்பம் என்ன என்பதைக் கண்டறிந்து அதை பின்பற்றுங்கள்
இறுதிக் குறிப்பு
ஆன்மீக வலிமை, வாழ்க்கையில் சிறிய மற்றும் பெரிய பின்னடைவுகளுக்குள் விழாமல் கடந்து செல்ல உதவுகிறது. ஆன்மீகத்துடன், மனித வாழ்க்கைக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்தப் போரில் நீங்கள் தனியாக இல்லை. நீங்கள் வாழ்க்கையை ஒரு சிறந்த கோணத்தில் மதிப்பீடு செய்கிறீர்கள், மேலும் சரியான மதிப்பீடுகளுடன் நோக்கத்துடன் வாழ ஆரம்பிக்கிறீர்கள். வாழ்க்கையின் பிரச்சினைகளை வெல்வதை விட அவற்றிலிருந்து தப்பிக்க இதை விட சிறந்த வழியில்லை, அல்லவா?
உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத மகிழ்ச்சியைக் கொண்டு வருவதே ஆன்மீகத்தின் குறிக்கோள்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்











