நம்மில் பெரும்பாலானோர் தூக்கத்திலிருந்து விழிக்கவும், திட்டமிட்டப் பணியை நினைவுபடுத்தவும் அலாரத்தை நம்பியிருக்கிறோம். நம்மை முன்செலுத்த எச்சரிக்கை மணி நல்லதுதான் என்று நாம் நினைத்தாலும், அது ஒரு கட்டாயப் பழக்கமாக ஆகிவிடக்கூடும். அதாவது, அலாரத்தை சார்ந்து இருப்பது இரவில் உறக்கத்தை கெடுத்து, மறுநாள் வலுக்கட்டாயமாக பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்கலாம். தூக்கமின்மை, பதற்றம் மற்றும் மனஅழுத்தம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், ஓய்வின்மையை நாம் புறக்கணிக்க முடியாது.
இயல்பாக எப்படி நாமே விழித்துக் கொள்ளமுடியும் என்பதை அறிவதுதான் ஒரு நாளைத் தொடங்க சிறந்த வழி. சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் தேவைப்படும் என்பதால், இந்த நடைமுறையை நீங்கள் உடனே தொடங்க முடியாது. கீழேயுள்ள குறிப்புகள் தூக்கம் பற்றிய சில இரகசியங்களை வெளிப்படுத்தி, அலாரம் இல்லாமல் எழுந்திருக்க உங்களுக்கு உதவும்.
அலாரம் இல்லாமல் விழித்தெழ 10 அற்புதமான குறிப்புகள்
ஆக்கப்பூர்வமாக வேலைச் செய்யுங்கள்
அலாரமும், கடிகாரமும் இல்லாத நம் முன்னோர்களின் அன்றாட வாழ்க்கைமுறையை சற்றுத் திரும்பி பார்த்தால் அவர்கள் எவ்வளவு கட்டுக்கோப்பாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டு வியப்படைவீர்கள். அவர்களுடைய வாழ்க்கை எளிதாக இருந்தது வசதிகள் இல்லாததினால் மட்டுமல்ல, அன்றாட நடைமுறையில் அவர்களுக்கு இருந்த பிடிப்பினாலும், அர்ப்பணிப்பினாலும் கூடத்தான். விடிவதற்கு வெகு முன்னரே விழித்தெழுந்த அவர்கள் அந்தி சாய்ந்தவுடன் தூங்கச் சென்றார்கள். உங்கள் நாள் களைப்படைய வைத்திருந்தால் உங்களுக்கு நல்ல தூக்கம் வரலாம். ஆனால், உங்கள் நாள் எளிதாக இருந்திருந்தால், அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வருவதில்லை. எனவே, உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்ல உழைப்பைத் தந்தால்தான் நல்ல உறக்கம் வரும்.
மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், வேலை செய்வது எளிதாகிறது. இதுவே ஆக்கபூர்வமாக இருப்பதற்கான திறன்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
உங்கள் தூக்க நேரத்தைக் கணக்கிடுங்கள்
ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறு முறையில் இயங்குவதினால் இதைக் குறித்து பல விவாதங்கள் இருக்கின்றன என்ற போதிலும், தூங்கும் நேரத்தை கணக்கிடுவது ஒரு நல்ல பழக்கம். ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 மணி நேரமாவது நாம் தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் சொன்னாலும், இந்த எண்ணிக்கை நபருக்கு நபர் வேறுபடும். இது விரைவான கண் இயக்கம் (REM) நிலையை உள்ளடக்கிய தூக்கத்தின் படிநிலைகளைப் பொறுத்தது. சிலர் 4 மணி நேர தூக்கம் கிடைத்தாலே புத்துணர்வையும், ஆற்றலையும் உணரலாம். ஆனால் வேறு சிலருக்கு நன்றாக உணர 9 மணி நேர தூக்கம் தேவைப்படலாம். எனவே, உங்கள் உடலுக்கு ஏற்ற கால அளவைத் தெரிந்து கொள்வதும் அதற்கேற்ற அட்டவணையை பின்பற்றுவதும் முக்கியம். அப்படிச் செய்தால் விழித்தெழ உங்களுக்கு அலாரம் தேவைப்படாது.
உடல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்
உடல் சார்ந்த செயல்பாடுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தவோட்டம் செல்வதற்கு உதவுகின்றன. உடற்பயிற்சியின் போதும், ஓடும்போதும், தசைகள் வேலை செய்வதினால், உடலுக்கு உழைப்பு கிடைக்கிறது. இத்தூண்டுதல் நல்ல தூக்கம் வர உதவுகின்றது, வியர்வை சுரப்பிகளை தூண்டுகிறது, மற்றும் பதற்றத்தையும் அழுத்தத்தையும் தணிக்கிறது. ஆகவே, ஒரு விளையாட்டை தேர்வு செய்து அதில் ஈடுபடுங்கள். இச்செயல்பாடுகளை நீங்கள் விரும்பத் தொடங்கினால், பின் அவற்றை தொடர்வதை ஆவலுடன் எதிர்பார்ப்பீர்கள். அலாரம் இல்லாமல் விழித்தெழ இது ஒரு மகிழ்ச்சியான வழியாகும்.
உங்கள் மனதை ஈடுபடுத்துங்கள்
ஒவ்வொரு நாளும் படைப்பூக்கம் நிறைந்த ஏதாவது ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள். இத்தகைய புதுமையான ஆர்வம் உங்கள் மூளையின் செல்களை செயலூக்கத்துடன் வைத்திருக்கும். விழித்தெழும்போது ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபடும் உற்சாகத்தை உணர்வீர்கள். சுவையான ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்பு இருக்கும்போது, அலாரம் இல்லாமலேயே விழித்தெழுவீர்கள்.
வாழ்க்கையில் ஒழுங்கற்ற தன்மை உள்ளது, வாழ்க்கைக்கு ஒழுங்கு அவசியமானது. இரண்டையுமே நாம் மதிக்க வேண்டும். ஒழுங்கற்ற தன்மையிலிருந்து ஆனந்தம் கிடைக்கிறது, ஒழுங்கு சௌகரியம் அளிக்கிறது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
விழிப்புநிலை (மைண்ட்ஃபுல்னெஸ்) பயிலுங்கள்
தியானத்தினாலும், ஆழ்ந்த மூச்சின் மூலமும் விழிப்புநிலையை அடையலாம். துன்பம் நேர்கையில் இது உங்களை அமைதிப்படுத்தி, உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளிருந்தே கண்டடைய உதவுகிறது. நம் விழிப்புநிலை ஒவ்வொரு உணர்வையும், சூழலையும், செயலையும் குறித்த அறிதலை நமக்கு அளிக்கிறது. ஒவ்வொரு நாளையும் ஒரு புது மனநிலையில் தொடங்குவது குறித்த விழிப்புநிலை இருக்கும் போது, அலாரம் இல்லாமலேயே நாம் விழித்தெழுவோம்.
இயற்கையுடன் சிறிது நேரம் செலவழியுங்கள்
நாம் செய்யும் அனைத்து செயல்களும் இயற்கையிலிருந்தே வருகின்றன. ஆகவே, இயற்கையின் லயத்தை நாம் நம்ப வேண்டும். இயற்கையை நம்பும்போது, அதனுடன் ஒரு தொடர்பை உணர்வீர்கள். எழுந்திருக்கும்போதே, அந்நாளை தொடங்க உந்துதல் பெறுகிறீர்கள். இது வரை இவ்வனுபவத்தை நீங்கள் பெறவில்லை என்றால், தினமும் அரை மணி நேரமாவது இயற்கையுடன் செலவழியுங்கள். இயற்கையின் மாயாஜாலத்தை ரசிக்க, இலைகளின் சலசலப்பை, பறவைகளின் ஒலியை, பூக்கள் மலர்வதை, சில்வண்டுகளின் ரீங்காரத்தை விழிப்புநிலையுடன் கவனியுங்கள்.
உங்கள் உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்
உணவில் கலப்படம் மலிந்திருக்கும் இன்றைய சூழலில், நம் வயிற்றுக்குள் என்ன செல்கிறது என்பதைக் குறித்த கவனம் தேவை. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் துரித உணவு போன்றவற்றை சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகளினால் எப்பொழுதும் சோம்பேறித்தனமாக உணர்வீர்கள். பகலிலேயே தூங்குவீர்கள். மாறாக, புத்தம்புதிய பழங்கள், காய்கறிகள், மற்றும் வீட்டிலேயே சமைத்த உணவை உண்ணுவது ஊட்டச்சத்தை அளித்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. தூக்கத்தின் தரம் மேம்பட்டால், அலாரம் இல்லாமல் எப்படி எழுந்திருப்பது என்ற கவலையே இருக்காது!

உங்கள் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையின் கடிவாளம் உங்களிடம் இருக்கும்போது, உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பேற்கும்போது, வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ உந்தப்படுவீர்கள். உங்களை ஊக்குவிக்க சிறந்த நபர் நீங்களே. உங்கள் நாளை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளுங்கள்: புத்தகம் படியுங்கள், குளிர்ந்த நீரில் குளியுங்கள், இசையைக் கேளுங்கள், அல்லது ஒரு நண்பரைச் சந்தியுங்கள். வாழ்கையில் உத்வேகம் இருந்தால், உங்களை எழுப்ப அலாரம் தேவயில்லை.
விதி மற்றும் தன்விருப்பம் இரண்டுமே கலந்ததுதான் வாழ்க்கை. மழை வருவது விதி, ஆனால் அதில் நனைய வேண்டுமா இல்லையா என்பது தன்விருப்பம்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
படுக்கை நேர அட்டவணையை பின்பற்றுங்கள்
தூங்குவதற்கு முன் உங்களை மகிழ்சியாக வைத்துக் கொள்வது, உங்களை அமைதிப்படுத்தி, காலையில் உற்சாகமாக உணர வைக்கும். ஓரு நிலையான அட்டவணையை பின்பற்றவும். தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளவும். இலேசான உணவு உண்ணவும். வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். விளக்கை அணைப்பதற்கு முன், தியானம் செய்யவும் அல்லது ஏதாவதொரு புத்தகத்தை படிக்கவும். இது போன்ற நடைமுறையை தினமும் பின்பற்றினால், ஒரு படுக்கை நேர பழக்கத்தை கட்டமைத்துக் கொள்கிறீர்கள். அது உங்களுக்கு போதுமான ஓய்வை அளித்து, காலையில் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் விழித்தெழ உதவும்.
வெளிச்சத்தை சரிசெய்யுங்கள்
இடையூறில்லாத தூக்கத்திற்கு மங்கிய வெளிச்சமே சிறந்தது. தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக கைபேசி, டேப் போன்றவற்றை பயன்படுத்துவதை நிறுத்துவது ஒரு நல்ல பழக்கமாகும். ஏனென்றால் இந்தக் கருவிகளிலிருந்து வரும் கதிர்வீச்சு உங்களை தூங்கவிடாமல் செய்யலாம். மேலும், விழித்தவுடனேயே அவற்றை பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அது அன்றைய நாளுக்கான உற்சாகத்தைக் குலைக்கக்கூடும். ஒரு சிலநிமிடங்கள்தானே என்று நினைப்பது, படுக்கையிலேயே ஒரு சிலமணி நேரங்கள் கூட உங்களை சிக்க வைத்துவிடும். எழுந்தவுடனான சில மணி நேரங்களை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது உணர்வுகளுக்கு புத்துணர்வையூட்டி, அன்றைய நாளுக்கு உங்களை தயார் செய்கிறது. அலாரம் இல்லாமல் விழித்தெழ கொஞ்சம் பயிற்சித் தேவை. ஆனால், பழகிவிட்டால் பிறகு அலாரத்தின் தேவையே இருக்காது.
மதிப்பீடு முக்கியமானது
ஆடம்பரமும், சார்புத்தன்மையும் நிரம்பிய இன்றைய உலகில், வெளிப்புற காரணிகளின் தாக்கம் இல்லாமல் இயற்கையின் லயத்தை பின்பற்றுவது எளிதல்ல. எனவே, ஒவ்வொரு நிமிடமும் உங்களையே மாற்றியமைத்துக் கொள்ள உதவும் மதிப்பீடு இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அலாரம் இல்லாமல் எப்படி விழிப்பது என்பது அல்ல இங்கே கேள்வி. வெளிப்புற சூழலின் ஆதிக்கம் இல்லாமல் எதையும் இயல்பாக எப்படி செய்வது என்பதே முக்கியமான விஷயம். யாரிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது நீங்களே. ஏனென்றால் உங்கள் தேர்வே உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.