நீங்கள் சிறுவயதில் உடல்நலக்குறைவாக இருந்த காலங்கள் நினைவிலிருக்கிறதா? சளி அல்லது காய்ச்சல் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன், இந்திய வீடுகளில் பல குழந்தைகளுக்கு மூலிகைகளால் செய்யப்பட்ட சூடான கஷாயம் அல்லது மஞ்சள் சேர்க்கப்பட்ட பால் குடிக்க தரப்பட்டிருக்கும். அந்த பானத்தைத் தவிர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகளுடன், முகம் சுழித்தல், அல்லது இறுதியில் கண்ணீர் மல்க குடித்த அனுபவங்களும் சேர்ந்திருக்கும். வாழ்க்கையில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது? பெரியவர்கள் குழந்தைப் பருவ  நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் குழந்தைகள் விரைவில் பெரியவர்களாக ஆக விரும்புகிறார்கள்!

2020-க்கு வரும்போது, “கஷாயம்” என்ற சொல் நல்ல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பயமற்ற வாழ்க்கைக்கு இணையாக மாறிவிட்டது. தொற்றுநோய் காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய எல்லா விஷயங்களையும் நீங்கள் பின்பற்றியிருக்கிறீர்கள். கஷாயம் செய்முறை பற்றிய உரையாடல்கள் அதிகரித்தன; தினமும் ஒரு தம்ளர் குடித்தால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மனநிம்மதியும் ஏற்பட்டது.

ஆனால் ஏன் கஷாயம் ஒரு அமுதம் என்று கருதப்படுகிறது? அது மீண்டும் பிரபலமானதற்கான காரணம் என்ன?

கஷாயத்தின் மீது ஆர்வம்

இன்று “பிரபலமானது” என்று கருதப்படும் கஷாயம், உண்மையில் கடந்த 5,000 ஆண்டுகளாக உபயோகத்தில் இருந்து வருகிறது. ஆயுர்வேதத்தின் படி, கஷாயம் ஒரு அனுமதிக்கப்பட்ட மருத்துவ முறையாகும். இது பொதுவாக கிடைக்கும் மூலிகைகளை வெவ்வேறு அளவுகளில் கலந்து தயாரிக்கப்படும் ஒரு மருந்தாகும்; இது பலவிதமான நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த மூலிகைகளில் சில மிகவும் சாதாரணமானவை, எங்கும் எளிதில் கிடைப்பவை. எனவே அவற்றின் குணப்படுத்தும் திறனைப் பற்றி கூட சிலருக்கு சந்தேகம் எழுகின்றது.

‘இது ஒன்றும் அறிய மூலிகை அல்லவே.’
‘ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்தால் போதுமா?’
‘ஆனால் இது எங்கும் எளிதாக கிடைக்கின்றதே!’
‘இது எப்படி பயனுள்ளதாக இருக்கும்?’

இதுவே இந்த இந்திய பாரம்பரிய முறையின் பெருமை. நம் முன்னோர்கள் உணவை “ஆத்மா”விற்கான உணவாகவே கருதினர். உடல் என்பது வாழ்க்கையின் உயர்ந்த இலக்குகளை அடைய உதவும் ஒரு கருவியாகவே பார்க்கப்படுகிறது. அந்தக் கருவி சீராக இயங்கினால்தான், இலக்கை அடைய முடியும். உணவு மருந்தாகவே கருதப்படுகிறது; அதே நேரத்தில் அது புனிதமானதுமாகும். அது உடலையும் மனதையும் குணப்படுத்துகிறது.உள்ளிருந்து நம்மை வலுப்படுத்தி, வெளியுலகமான “சம்சாரம்” எனும் வாழ்க்கையில் முழுத்திறனை வெளிப்படுத்த உதவுகிறது.

அதனால் தான் நம் சமையலறைகள் காலத்தை வென்ற தனித்துவமான மூலிகைகளால் நிரம்பியிருக்கின்றன என்று தோன்றுகிறது. இப்போது பல்வேறு கலாச்சாரங்களும் புவியியல் பகுதிகளும் அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

இப்போது நம்முடைய அந்த மந்திர பானமான எளிய கஷாயத்திற்குத் திரும்புவோம். அதை நீங்கள் அழகாக உரையிலிட்டு அதிக விலைக்கு விற்கலாம்; அல்லது வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம் — எந்த முறையிலும் அது நமக்கு நன்மையே தருகிறது.

கஷாயத்தை முன்னிலைப்படுத்துதல்

2020 ஏப்ரலில் இந்தியாவின் சுகாதார அமைச்சகமான ஆயுஷ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில வழிமுறைகளை அறிவித்தபோது, பலர் உடனே செயல்பட்டார்கள். தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் இருந்து வந்த கஷாயம் தயாரிக்கும் முறைகள் அவசரஅவசரமாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பகிரப்பட்டன. சந்தை ஆய்வு நிறுவனமான நீல்சன் வெளியிட்ட அறிக்கையின்படி, அரசாங்கம் வழங்கிய இந்த தகவல்கள் மஞ்சள், தேன், மற்றும் ஷவனப்பிராஷ் போன்ற வீட்டுச் சிகிச்சைகளை மேலும் பிரபலமாக்கின.

ஒரே மாதிரியான மசாலா மற்றும் மூலிகைகள் பயன்படுத்தப்பட்டாலும், கஷாயத்தின் சுவை மாறுபடலாம்.

கஷாயம் எப்படி செயல்படுகிறது?

இலவங்கப்பட்டை, கிராம்பு, துளசி இலைகள், மஞ்சள் தூள் போன்ற மசாலா மற்றும் மூலிகைகள் கொதிக்க வைக்கப்படும்போது, அவை தங்களின் சாறுகளையும் சத்துக்களையும் வெளியிடுகின்றன. இந்த சாறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கையின் சமையலறையிலிருந்து:

  • சீந்தில் – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  • நெல்லிக்காய் – ஆன்டிஆக்ஸிடென்ட்; வைட்டமின் சி நிறைந்தது
  • துளசி – மூலிகை; மேல்சுவாசப் பாதை பிரச்சனைகளை குறைக்க உதவும்; கிருமி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, இதயத்தை பாதுகாக்கும் மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கும்
  • மஞ்சள் – அழற்சி எதிர்ப்பு; சளியை குறைக்கும்; ஆன்டிஆக்ஸிடென்ட்
  • சீரகம் – வயிற்று கோளாறுகளை குறைக்கும்
  • மிளகு – செரிமானம் மற்றும் சுவாச அமைப்பிற்கு உதவும்

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அறிந்துகொள்ளுங்கள்

ஆயுர்வேதத்தின் படி, நோய் எதிர்ப்பு சக்தி மூன்று விதமாக  வகைப்படுத்தப்படுகிறது:

சஹஜம்  (இயற்கையிலேயே / பிறப்பிலேயே உள்ள): இது பெற்றோரிடமிருந்து மரபாக கிடைக்கும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அல்லது உடல் வலிமையாகும். ஆயுர்வேத மரபணு கோட்பாட்டின்படி, மரபணு காரணிகள் செல்களின் மட்டத்தில் தீர்மானிக்கப்படுகின்றன. பெற்றோர் இருவரின் மரபணு அமைப்பு ஆரோக்கியமாக இருந்தால், அதே ஆரோக்கியம் குழந்தைகளிலும் காணப்படும். சில நோய்களுக்கான சாத்தியக்கூறுகள் \இருந்தால், அவை அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகின்றது.

காலஜம் (பருவகாலம் சார்ந்தது): காலஜ பலம் என்பது பருவ காலத்தைச் சார்ந்த காரணிகளால் தீர்மானிக்கப்படும் வலிமையாகும்.  பருவ காலங்கள் (மழை, வெப்பம், குளிர்) மற்றும் ஒருவரின் வயது ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கின்றன. நாள் நேரம், பருவநிலை, மற்றும் வயது ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முக்கியமான காரணிகள். பொதுவாக காலை நேரத்தில் நோய் எதிப்பு சக்தி மாலையைவிட அதிகமாக இருக்கும்.  சில இடங்களில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக உடல் ஆரோக்கியம் அதிகமாக இருக்கும்.

யுக்திக்ருதம் (பெறப்பட்ட / அடைந்த): யுக்திக்ருத பலம் என்பது உணவு, வாழ்க்கை முறை, ரசாயன சிகிச்சை (ரசாயனம்), மற்றும் யோகம் போன்ற பழக்கவழக்கங்களின் மூலம் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கிறது. ரசாயனம் என்பது ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்றாகும்; இது உடல்நலத்தை பராமரிப்பதைக் குறிக்கிறது. இது உடல் மற்றும் மனம் இரண்டிலும் புத்துணர்ச்சி அளித்து, நோய்களுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது.

கஷாயம் அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு பயனுள்ள வழியாகும். எனினும், நல்ல உடல்நலமும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமான மற்றும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையின் விளைவுகளாகும்.

தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆனால், கோவிட்-19 என கண்டறியப்பட்டால், இதை மட்டும் மருந்தாக பயன்படுத்த முடியாது.

கஷாயம் என்பது வாழ்க்கை முறையில் சேர்க்க வேண்டிய ஒரு பகுதிதான். நல்ல தூக்கம், சத்தான உணவு, மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இன்றியமையாதவை.

அமிலத்தன்மை (அசிடிட்டி) அல்லது பிற அறிகுறிகள் இருந்தால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் கஷாயத்தை எடுத்துக்கொள்ளலாம். இதற்காக ஒரு ஆயுர்வேத மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

நீங்கள் தினசரி மஞ்சள் பால் குடித்து வந்தால், ஒரு சிட்டிகை மஞ்சள் போதுமானது.

எதையும் அதிகமாக எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். மூலிகைகளை குறைந்த அளவில் பயன்படுத்தவும். அதிகப்படியான பயன்பாடு மூக்கில் இரத்தம் வருதல் மற்றும் நீடித்த அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

சில பொருட்கள் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே பயன்படுத்த ஏற்றவை. பருவ மாற்றங்களைப் புரிந்து கொள்ளுவது முக்கியம்; ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை கேட்பது நல்லது .

இதமளிக்கும் கஷாயம் செய்முறை

2 டீஸ்பூன் வெல்லம்
1/4 டீஸ்பூன் இஞ்சி பொடி
1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி
1/4 டீஸ்பூன் மிளகு
1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
5–7 துளசி இலைகள்

மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் ஒரு தம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, ஆறியபின் வெது வெதுப்பாக இருக்கும் போது குடிக்கவும்.

இதனை நீங்கள் விரும்பலாம், மிகவும் விரும்பலாம். தவிர்க்கவும் முடியும். ஆனால், இந்த “சூப்பர் ஹீரோ” பானத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த தகவல்கள், ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் நிஷா மணிகண்டன் எழுதியுள்ள ‘ஆயுர்வேதா  சிம்பிளிபைட் : பாடி -மைண்ட் மேட்ரிக்ஸ்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், அதை மேம்படுத்தும் ரகசியங்களை தெரிந்து கொள்ளவும், ஆன்லைன் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளவும்.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *