நாள் முழுவதும் தும்மிக் கொண்டிருப்பதால் உங்கள் மூக்கு சிவந்துள்ளதா? அல்லது எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு , இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, உங்கள் உடல் சூட்டினை கண்காணித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்களா? இவை கண்ணிற்கு புலனாகும் சில ஜலதோஷ அறிகுறிகள்; ஆனால் நம்முள் இன்னும் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நீங்கள் தொண்டை வலி, மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல் மற்றும் அல்லது காய்ச்சல் ஆகியவற்றால் அவதிப்பட்டால் உங்களுக்கு அநேகமாக ஜலதோஷம் பிடித்திருக்கிறது. இதனை விஞ்ஞானிகள் நாசோபார்ங்கிடிஸ் என்று செல்லமாக அழைப்பார்கள்.
மேலும், நீங்கள் பருவநிலை மாறும்பொழுது,
அதற்கேற்ப சுலபமாக ஈடுகொடுக்க முடியாதவராய், மகரந்தத்தை சுவாசித்தவுடனேயே தும்மிக்கொண்டு இருப்பவராய், அடிக்கடி ஏதோ ஒரு காரணத்தால் நோய்வாய்ப்படும் ஒருவராய் இருப்பீர்களாயின், அதிக அக்கறை எடுக்க வேண்டி வரும்.
சளி பிடித்தால் என்ன செய்வது? மருந்து கடையில் கேட்டு வாங்கி மாத்திரையை விழுங்குவீர்களா? உங்களது ஜலதோக்ஷத்தை இது எத்தனை முறை குணப்படுத்தியுள்ளது? ஒவ்வொரு முறை சளி பிடிக்கும் பொழுதும் அதே மாத்திரையை எடுத்துக் கொள்வது வைரஸை உங்களையும், உங்கள் மாத்திரையையும் அலட்சியப்படுத்த வைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இது மாற்றத்திற்கான நேரம்! கண்டிப்பாக பலன்களை அளிக்கக்கூடிய பக்க விளைவுகள் இல்லாத சில இயற்கை சிகிச்சை முறைகளைக் காண்போம்.
1. உங்களது எதிர்ப்பு சக்தியை வலுவாக்க தியானம் செய்யுங்கள்
ஓய்வைத்தரும் பண்டைய நுட்பமான ‘தியானம்’, உங்களது ஜலதோஷத்தை போக்க உதவும் என்று நீங்கள் அறிவீர்களா? எதிர்ப்பு சக்தியும், உடல்நலமும் நேர்விகிதத்தில் இணைந்துள்ளன என்பதை இந்நேரம் நன்கு உணர்ந்திருப்பீர்கள். உங்களது எதிர்ப்பு சக்தி எத்தனை வலுவாக உள்ளதோ அத்தனை ஆரோக்கியமாக நீங்கள் இருப்பீர்கள். தியானம் செய்வது எப்படி உங்களை குணப்படுத்தும் என்பதை நீங்கள் யோசித்துள்ளீர்களா?
இப்படி யோசியுங்கள்: எதிர்ப்பு சக்தி என்பது எதிரிகளாகும் சாத்தியமுள்ள ஆன்டிஜன் என்றழைக்கப்படுபவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் படையைப் போன்றது. தியானம் செய்வது ஒரு காயமுற்ற வீரருக்கு (அதாவது நோயால் அவதியுறும் உங்களுக்கு) முதலுதவி போன்றது; உங்கள் படையின் வல்லமையை அதிகரிக்கச் செய்கிறது. (அதாவது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது).
உடல் நலம் இல்லாத எல்லா நாட்களிலும், இது சமநிலையை மீட்க உதவுகிறது, எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது, மற்றும் உடலையும் மனதையும் குணப்படுத்துகிறது. உடல் நலத்துடன் உள்ள மற்ற எல்லா நாட்களிலும் தியானம் உங்களைப் பாதுகாத்து, நோய்கள் உங்கள் உடலை அண்டவிடாமல் இருக்க சிறந்த வீீரர்களை அளிக்கிறது.
நோயுற்றிருக்கும் பொழுது தியானம் வேறு ஒரு வழியிலும் நம் உடலை குணப்படுகிறது.
உடல் நலம் இல்லாத பொழுது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? நீங்கள் சக்தி குறைந்தது போல உணர்ந்தால், அதற்கு காரணம், நோய் உங்கள் சக்தியை எடுத்துக் கொள்கிறது. அதற்கு மாறாக, நல்ல உடல் நலம் உங்கள் உயர் சக்தி நிலைகளோடு தொடர்பு கொண்டுள்ளது.
அது போன்ற சமயங்களில் நாம் தியானம் செய்தால், அது நமது உயிர் சக்தியை (பிராணாவை) அதிகரிக்க உதவும். இதன் மூலம் எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கப்படுகிறது. முன்பைவிட வலுப்பெற்ற எதிர்ப்பு சக்தி அமைப்பு, ஜலதோஷம் போன்ற நோய்களை எதிர்க்க உதவுகிறது.
குணமாகும் சமயம் இது! இனணயதளத்தின் வழியாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
அவர்களால் வழிகாட்டப்பட்ட எங்களது தியானம் ஒன்றை செய்து பாருங்கள்.
2. பிராணாயாமா, யோகா மற்றும் ஒலி சிகிச்சை
குழந்தைகள் விளையாடும் விதத்தையும், உறங்கும் முறையையும் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் அல்லது உங்கள் குழந்தை புகைப்படத்திற்காக எப்படி போஸ் கொடுத்தீர்கள் என்று பின்நோக்கிச் சென்று பாருங்கள். உடலை வைத்திருக்கும் நிலைகளையும், உறங்கும் பொழுது விரல்களைக் குறிப்பிட்ட அமைப்பில் வைத்திருக்கும் முறையையும் கவனியுங்கள்.
யோகாவையும் பிராணாயாமத்தையும், நீங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டுதான் அறிய வேண்டும் என்பதல்ல. குழந்தைகளில் நீங்கள் காண்பதைப் போல இது உங்களுள் இயற்கையாகவே ஆழப்பதிந்துள்ளது.
அக்னி முத்திரை மற்றும் வாயுமுத்திரையுடன் பிராணாயாமம் செய்வது அமிலத்தன்மையை ஏற்படுத்தாமல், இருமல் சளிகட்டினை கரைக்க உதவுகிறது.
அக்னி முத்திரையை எப்படி செய்ய வேண்டும்?
மோதிர விரலை மடக்கி, அதன் நுனிப் பகுதியை கட்டை விரலின் அடித்தளத்தில் வைக்கவும். கட்டை விரலின் நுனியால் மடிக்கப்பட்ட மோதிர விரலின் நடு எலும்புப் பகுதியை அழுத்தவும். மீதமுள்ள மூன்று விரல்களையும் நேராக நீட்டி வைக்கவும்.
வாயு முத்திரையை எப்படி செய்ய வேண்டும்?
உங்கள் ஆள்காட்டி விரலை மடக்கி, அதன் நுனியைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள மேட்டின் மீது லேசாக வைக்கவும். கட்டை விரலால் உங்கள் ஆள்காட்டி விரலின் நடு எலும்புப் பகுதியை லேசாக அழுத்தவும்.
மீதமுள்ள மூன்று விரல்களையும் நேராக நீட்டி வைக்கவும். ஒவ்வொரு பிராணாயாமத்தையும் மூன்று நிமிடங்களுக்கு செய்யவும். ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறைகள் செய்யவும்.
மூச்செடுப்பது போன்ற ஒரு எளிமையான செய்கை வாஸ்தவத்தில் ஆரோக்கியமான வாழ்கையின் இரகசியத்தை தன் வசம் அடக்கியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சுதர்சன கிரியா மற்றும் பஸ்திரிகா பயிற்சிகளின் மூலம் நாம் மூச்செடுக்கும் முறையை கட்டுப்படுத்தினால், எல்லா நிலைகளிலும் (உடல் மற்றும் உணர்ச்சி ரீதிகள் உட்பட), நமது சம நிலையை மீட்க உதவும். மூச்சு நமது பிராணாவின்(உயிர்சக்தியின்) முக்கிய மூலமாகும். நாம் சுதர்சன கிரியா(தாள கதியோடு செய்யப்படும் முச்சுப்பயிற்சி) செய்யும்பொழுது, நமது மூச்சு தாள கதியோடு இயங்கி, நோய்கள் உண்டாக்கும் அல்லது அதிகரிக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.
கோமுகாசனம் (பசு முக ஆசனம்) புஜங்காசனம் (கோப்ரா போஸ்) போன்ற யோகாசனங்களும் உங்கள் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குணமடைந்த பிறகும் கூட இந்த ஆசனங்களை நீங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு தொடர்ந்து செய்யலாம்.
3. ஒலியும் கூட குணப்படுத்த முடியும்
ஒலி சிகிச்சையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சமஸ்கிருத உச்சாடனங்கள் ஏற்படுத்தும் ஒலிகள் நேர்மறை அதிர்வுகளை உண்டாக்குகின்றன. நேர்மறை அதிர்வுகள் நமது சக்தியை உயர்த்துகின்றன. சளியுடன் போராடும் பொழுது உச்சாடனங்களைக் கேட்பது சளியை எதிர்த்து போராடுவதற்கான சக்தியை உங்கள் உடலுக்குத் தருகிறது.
இந்த உச்சாடனங்களை கண்களை மூடிக்கொண்டு நீங்கள் கேட்கும் பொழுது ஆழ்ந்த ஓய்வு நிலைக்குச் சென்று விடுகிறீர்கள் எனபதை கவனித்திருப்பீர்கள். அதுவே தியான நிலை. உச்சாடனங்களே குணப்படுத்துவதை துவக்கி வைக்கின்றன. நீங்கள் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டும் கூட உச்சாடனங்களைக் கேட்கலாம். நீங்கள் உறங்கிவிட்டால் கவலைப்பட வேண்டாம் — இது நல்லது. ஏனென்றால், உங்களது அதிகரித்த ஆற்றல் அளவு, இப்பொழுது உங்களை குணப்படுத்த திசைதிருப்பப்பட்டுள்ளது.
4. உங்களுக்கு(உடல் நலத்தில் ) குறை ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்
நீங்களே கூறுங்கள்– உங்களுக்கு சளி பிடித்திருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்த அந்த நொடியில் உங்களது முதல் தற்காப்பு அரண் என்ன? படுக்கையில் சரண் அடைவதா? அல்லது எழுந்து நின்று முன்னோக்கிச் செல்வதா?
உங்கள் மனதில் தான் எல்லாம் இருக்கிறது என்று அறிந்திருக்கிறீர்களா? ஒரு விஷயத்தை நீங்கள் அணுகி சிந்திக்கும் முறையை மாற்றும் பொழுது, அது உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். உங்கள் மனம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது உங்களைக் குணப்படுத்த முடியும். மருந்துகளின் பலன்களைக் காண்பதற்கு அவற்றின் மீதும், மருத்துவர் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. நம்பிக்கை நம்மை குணப்படுத்த உதவும் ஒரு பெரும் பக்கபலம். முதலில் இது நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், அது
நிஜமாகும் வரை நம்புவதாக நீங்கள் பாவிக்கலாம்.
எனினும் நாங்கள் கூறும் ஆலோசனை- உங்கள் ஜலதோஷம் கடுமையாகி, நீங்கள் மிகவும் சோர்வுற்றிருந்தால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இளைப்பாறுங்கள்; ஆனால் அதே சமயம் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று எப்பொழுதும் நம்பி இருங்கள்.
மேலும் சில ஆலோசனைகளுக்கு, இந்த கட்டுரைக்கு தொடர்ச்சியாக விரைவில் வரப்போகும் கட்டுரையைப் படியுங்கள்.
—-ரவீஷா கதூரியா அவர்களால் எழுதப்பட்டது.
பாரதி ஹரீஷ்(சஹஜ் சமாஜ தியான ஆசிரியர்) அவர்களின் தியான உள்ளீடுகள் மற்றும் டாக்டர் ஷிஷா தாகூர்(ஆயுர்வேத நிபுணர்)அவர்களின் ஆயுர்வேத உள்ளீடுகளின் அடிப்படையில்.











