கவலை அல்லது பதட்டம் நமது தனிப்பட்ட, சமூக, மற்றும் தொழில் வாழ்க்கையில் குறுக்கிட்டு சிரமப்படுத்துகிறது. இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், இந்த உள் நிகழ்வு உடலில் உள்ள மற்ற நிகழ்வுகளுடன் இணைந்து செயல்படுகிறது . உதாரணத்திற்கு, உடல் நடுக்கம் ஏற்படும்போது, அது முதலில் உங்கள் முகத்தில் வியர்வை துளிகளைக் கொண்டு வந்து வாயை உலரச் செய்யும். இந்த அறிகுறிகள் காலையில் மலச்சிக்கலையோ, மார்பு வலியையோ ஏற்படுத்தலாம், மேலும் இரவில் தூக்கமின்மையையும் விளைவிக்கலாம். இதிலிருந்து தெளிவான புரிதல் என்னவென்றால், கவலையினால் வரும் அறிகுறிகளின் வீச்சு மின்காந்த நிறமாலையைப் போலவே பரந்ததாகும்.
இருப்பினும், பரந்த அலை விரியம் போன்ற இந்த அறிகுறிகளின் மூலக்காரணம் ஒன்றுதான் : உடலின் வாத தோஷம் எனப்படும் வாயுக்கூறு ஏற்றத்தாழ்வு.
ஒரு தோஷத்தை சமநிலையில் வைக்க, குறிப்பிட்ட தோஷத்திற்கு நேர்மாறான குணங்களைக் கொண்ட உணவு மற்றும் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். வாத தோஷம், லேசான தன்மை, வறட்சி, குளிர்ச்சி மற்றும் கடினத்தன்மை போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. எனவே, அதை சமநிலையில் வைக்க, வெதுவெதுப்பு, திடம், எண்ணெய்ப் பசை ஆகியவற்றுடன் கூடிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
பதட்டத்தைக் கடக்க பக்க விளைவுகள் இல்லாத முறைகள்
மேலே கூறப்பட்ட தத்துவத்தை, எளிய பரிகாரங்கள் மூலம் நடைமுறைப்படுத்த முடியும். பதட்டத்திற்கான ஆயுர்வேத சிகிச்சைகள் பின்வருமாறு:
-
வாதத்தை கட்டுப்படுத்தும் உணவுமுறையை பின்பற்றுங்கள்
உங்கள் உணவில் இனிப்பு, உப்பு மற்றும் புளிப்புச் சுவைகளை சேர்க்கவும். துவர்ப்பு, கசப்பு மற்றும் அதிக மசாலா கலந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். இனிப்பு என்று சொல்லும்போது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களைத் தவிர்த்து, பழங்கள் போன்ற இயற்கையான இனிப்பு உணவுப் பொருட்களைச் சேர்க்கவும் . குளிர்ந்த மற்றும் உலர்ந்த உணவுகளுக்குப் பதிலாக சூடான, எண்ணெய் மற்றும் ஈரப்பதமான உணவுகளைச் சேர்க்கவும்.
-
மூலிகை மருந்துகளால் உங்கள் உடலை இதமாக வைத்துக் கொள்ளுங்கள்
அஸ்வகந்தா, சங்குபுஷ்பி மற்றும் பிராஹ்மி போன்ற மூலிகை மருந்துகள் நரம்பு மண்டலத்தைத் தளர்த்தி மூளையில் நச்சுத்தன்மையை நீக்குகின்றன. இருப்பினும், அவற்றை உட்கொள்வதற்கு முன்பு ஒரு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. ஆயுர்வேத மருத்துவர், ஒருவரின் உடல் கட்டமைப்பிற்கு ஏற்ப மருந்துகளை பரிந்துரைப்பார். சிறந்த பொருத்தமான மருத்துவ பரிந்துரைகளைப் பெற ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
-
சிறப்பு ஆயுர்வேத மசாஜ் பெறுங்கள்
ஷிலா அப்யங்கா (Shila Abhyanga) என்பது உடலை ஆழமாக தளர்த்தும் ஒரு சிறப்பு ஆயுர்வேத மசாஜ் ஆகும். இது சிறப்பு ஆயுர்வேத எண்ணெய்கள் மற்றும் பசால்ட் கற்களை தண்ணீரில் சூடாக்குவதை உள்ளடக்கியது. கற்களிலிருந்து வரும் வெப்பம் வாதத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமநிலையில் வைக்கவும், உடலிலும் மனதிலும் அமைதியை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
-
தினமும் ஒரே கால அட்டவணையை கடைபிடியுங்கள்
ஒரே கால அட்டவணையை பின்பற்றுவது வாதத்தை சமநிலையில் கொண்டுவர பெரிதும் உதவுகிறது. எனவே, தூங்குவதற்கும், எழுந்திருப்பதற்கும், உணவை உட்கொள்வதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைப் பின்பற்றுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
-
யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் செய்யுங்கள்
யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை பதட்டத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பண்டைய பயிற்சிகளை செய்வதற்கு தினமும் சிறிது நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம் என பரிந்துரைக்கப்படுகிறது. இம்மாதிரியான பயிற்சிகள் உங்களை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல் நீங்கள் மிகவும் திறமையுடன் செயல்படவும், நன்கு கவனம் செலுத்தவும் ஏதுவாக இருக்கும்.
உங்களுக்கு அருகிலுள்ள ஸ்ரீ ஸ்ரீ யோகா மற்றும் ஆனந்த அனுபவ பயிற்சியில் கலந்து கொண்டு யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!