தூங்குவதற்கு ஏற்ற சிறந்த திசை எது?
ஆயுர்வேதத்தில் முக்கோண அமைப்பில் ஆரோக்கியத்திற்கான மூன்று தன்மைகள் உள்ளன. அவை, உணவு (ஆஹார்) ,சமச்சீர் வாழ்க்கை (விஹார்), தூக்கம் (நித்ரா) என்பன. நிம்மதியான தூக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, எனவே, ஆயுர்வேதத்தில் சிறந்த தூக்கத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள் உறுதியாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும் தூங்கும் போது தலை எந்த திசையில் இருக்க வேண்டும்? உறங்குவதற்கு அறிவியல் பூர்வமாக எந்த திசை சிறந்தது? வாஸ்து சாஸ்திரப்படியும், ஆயுர்வேதத்தின்படியும் எந்த திசையில் தூங்குவது சிறந்தது? தினமும் நாம் எந்த திசையில் தூங்க வேண்டும்?
நல்ல தூக்கத்திற்கு வலம் மற்றும் இடப்பக்கங்களில், எப்பக்கத்தில் படுத்துத் தூங்க வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
தூங்குவதற்கு ஏற்ற திசைகளாக அறிவியல் கூறுவது என்ன?
தூக்கத்தின் திசையானது புவி காந்த குறுக்கீட்டைத் தவிர்க்கும் நோக்கம் கொண்டதாக அமைதல் வேண்டும். பூமியே மிகப்பெரிய காந்தம். அதனுடைய தாக்கம் மனிதர் மீது ஏற்படுத்தும் பாதிப்பு புள்ளிவிவர ரீதியாக. குறிப்பிடத்தக்கது.
பூமியின் காந்த நேர்மறையான துருவம் வடக்கு நோக்கியும், எதிர்மறை துருவம் தெற்கு நோக்கியும் உள்ளது. மனிதனின் தலை ஒரு காந்தத்தின் நேர்மறை பக்கமாகவும், கால்கள் எதிர்மறையாகவும் உள்ளன. தலையை வடக்கு நோக்கி வைத்து படுக்கும் பொழுது நேர்மறை துருவங்கள் எதிர்ப்பதால், நம்மிடம் மன அழுத்தம், சோர்வு போன்ற தாக்கங்கள் உண்டாகலாம். எனவே நாம் தலையை வடக்கில் வைத்து தூங்கக் கூடாது.
தூங்குவதற்கு ஏற்ற திசையாக வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகின்றது?
வாஸ்து சாஸ்திரம் என்பது ஆயுர்வேதத்தின் சகோதரி அறிவியல் என அழைக்கப்படுகிறது. இது திசைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டிடக்கலை மற்றும் சுற்றுச்சூழல்கலையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு உதவுகிறது. வாஸ்துவின் நோக்கம், பண்டைய இயற்கையின் ஐந்து மஹாபூதங்கள் — ஆகாசம், வாயு, அக்னி, நீர் மற்றும் பூமி, திசைகள் மற்றும் ஆற்றல் புலங்களை ஒருங்கிணைத்து வாழ்விடம் மற்றும் பணியிடங்களை சிறப்பாக வடிவமைக்க உதவுவதாகும், இது மேம்பட்ட ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக வாழவும், செயல்படவும் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குவதாகும்.

வட அமெரிக்காவின் முன்னணி வாஸ்து நிபுணர் மைக்கேல் மாஸ்டரோவிடம் தூங்குவதற்கு ஏற்ற திசைகள் பற்றி கேட்டேன். அவர் அளித்த அறிவுரை என்னவென்றால்: “நாங்கள் ஒருபோதும் வடக்கு நோக்கி தலை வைத்து தூங்குவதில்லை, ஏனென்றால் நேர்மறை காந்த ஆற்றல் வட துருவத்திலிருந்து வருகிறது, மேலும் நமது உடல், நமது தலையில் நேர்மறை துருவமுனைப்பு கொண்ட ஒரு காந்தம், எனவே இது காந்தங்களின் இரண்டு நேர்மறை முனைகளை ஒன்றாகக் கொண்டுவருவது போன்றது அவை ஒன்றையொன்று எதிர்ப்பதால் இரத்த ஓட்டம், இரத்த சுழற்சி, செரிமானம் போன்றவற்றில் தொல்லைகளை ஏற்படுத்துகிறது. இது நிம்மதியான தூக்கத்தைத் தராது. உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், தெற்கு திசையில் தூங்குவது மிகவும் நன்மை பயக்கும். இந்தப் பரிந்துரைகள் தெற்கு அரைக்கோளத்தில் மாறாது.”
தூங்கும் திசைகள் பற்றி வேதங்கள் கூறுவது என்ன?
பிராச்யம் திஸி ஸ்திதா தேவதத்
பூஜார்த்தம் ச தச்சிரஹ (சுஷ்ருத சம்ஹிதா -19.6).
சுஷ்ருத சம்ஹிதா, தூங்கும்போது தலை கிழக்கு திசையில் இருக்க பரிந்துரைக்கிறது. தெற்கு நோக்கி கால்கள் வைத்து தூங்கினால், பிராணசக்தி இழப்பு ஏற்படும். காரணம், இயற்கையான உயிர் சக்தியான கரிம சக்தி – ஜைவிக் ஊர்ஜா (jaivik ūrjā) வடக்கிலிருந்து தெற்காக சுழல்கிறது. பிராணவாயு, உடலில் உள்ள பாதங்கள் வழியாகவும் அதேசமயம் ஒரு உயிர் குடிலில் (foetus) ஆன்மா நுழையும் இடம் தலையின் வழியாகவும் இருக்கும்.
யதா ஸ்வகீயானயஜினானி சர்வே சம்ஸ்தீர்ய வீராஹ் சிஷூ புர்தர்ணயம்
அகஸ்தசஸ்தாம் (தக்ஷிணாம்). அபிதோ திசம் து சிராம்ஷி தேஹாம். குரு சத்தமானாம் (மகாபாரதம்)
கிருஷ்ணர், தர்மருக்கு அறிவுரை கூறும் போது “தலையை தெற்கு நோக்கியும் கால்களை வடக்கு நோக்கியும் வைத்து தூங்குங்கள்” என்று கூறுகிறார்.
வடக்கில் தலை வைத்து தூங்குவது
வடக்குகில் தலை வைத்து தூங்குவது யாருக்கும் பரிந்துரை செய்யப்படவில்லை. வடக்கில் தலை வைத்து தூங்குவதால் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒருங்கிணைப்பு சீர்குலைகிறது. உடலின் ஆற்றலையும் வெளித்தள்ளிவிடுகிறது. இது மருத்துவரீதியான அறிக்கையாகும். மருத்துவரீதியாகவும், மனித உடலில் உள்ள இரும்புச்சத்து மூளையில் உறைவதால் இரத்த அழுத்தம், அதிக மன அழுத்தம், உடல் நலம், மனநலம் தொடர்பான கோளாறுகள், தூக்கமின்மை யாவும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
டாக்டர் வசந்த் லாட் கூறுவது யாதெனில் “இந்து மத வழக்கப்படி இறந்தவர்களின் உடலை மட்டுமே வடக்குப் பக்கம் தலைவைத்துப் படுக்க வைப்பார்கள். உடல் தகனம் செய்யப்படும் வரை இறந்த உடலை வடக்கு நோக்கி தலை வைத்து இருக்கும்படி படுக்க வைப்பார்கள். ஏனெனில் வடக்கு திசைதான் ஆன்மா உடலை விட்டு வெளியேறும் பாதை என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறுகிறார்.
கிழக்கில் தலை வைத்து தூங்குவது
சூரியன் கிழக்கில் உதிக்கிறது. எனவே, இந்த திசை நேர்மறை அலைகள் எழும்பும் திசையாகவும், செயல்பாட்டின் ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சி தரும் திசையாகவும் கருதப்படுகிறது. நாம் தலையை கிழக்குத் திசையில் வைத்து தூங்கும்போது, சூரிய சக்தி தலையின் வழியாக உடலுக்குள் நுழைந்து, பின்னர் கால்கள் வழியாக வெளியேறுகிறது. இதனால், தலை சிறிது குளிர்ந்தும், கால்கள் வெப்பமடைந்தும் இருக்கின்றன, இது நிம்மதியான தூக்கத்தையும், சரியான ஆற்றல் சுழற்சியையும் ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில், இது நினைவாற்றலை மேம்படுத்துகிறது, கவனத்தை அதிகரிக்கிறது, மேலும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை செய்கிறது.
இது தியானம் மற்றும் ஆன்மீக பயிற்சிகளுக்கும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. கிழக்கில் தலை வைத்து மேற்கில் கால் இருக்குமாறு படுத்துத் தூங்குவது, படைப்பாற்றலை மிகவும் சிறப்பாக ஆக்குகிறது. கருத்தரிப்பதற்கும், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற நாடிகளைச் சமன் செய்வதற்கும் ஏற்ற திசையாக கிழக்குத் திசை அமைந்துள்ளது.
இந்த திசையில் தூங்குபவர்களுக்கு வடக்கு – தெற்கு திசையில் தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது REM (விரைவான கண் இயக்கம்) தூக்க சுழற்சிகள் மற்றும் கண் இயக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன, இது குறைவான கனவுகளையும், நல்ல தூக்கத்தையும் குறிக்கிறது.

மேற்கில் தலை வைத்து தூங்குவது
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தூங்குவது நல்லதல்ல. ராஜஸ குணங்களான உழைப்பு, செயல், ஆர்வம், போராட்டம் போன்ற இயல்புகளுடன் தொடர்புடையதால், மேற்கு திசை அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. தூக்கம் கெடுகிறது. ஒரு சிலர் இது ஒரு நடுநிலை தூக்க நிலையை வழங்குவதாக நினைக்கின்றனர். வாஸ்து சாஸ்திரப்படி மேற்கு நோக்கி தலை வைத்துத் தூங்குவது அமைதி இல்லாத தொல்லைகள் தரும் தூக்கமாக அமைந்துவிடுகிறது. கனவுகள் மற்றும் வன்முறை போக்குகளுக்கு வழி வகுத்து விடுகிறது.
தெற்கில் தலை வைத்து தூங்குவது
காந்தங்களின் கோட்பாட்டின்படி பார்த்தால், எதிர்மறை தெற்கு மற்றும் நேர்மறை தலைக்கு இடையேயான பரஸ்பர ஈர்ப்பு தூக்கத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குகிறது. புராணத்தின்படி தெற்கு திசை எமனுக்கு உரியது. மேலும் மரணத்தின் அமைதியைப் போல ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கும் ஊக்கம் கொடுப்பதாக தெற்கு அமைந்து விடுகிறது. வாஸ்து நிபுணர்கள், இந்த திசையில் தூங்குவதை, சிறந்த உடல்நலத்திற்கும், இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக்கும், நல்ல சக்தியை ஊக்குவிப்பதற்கும், செல்வம், வளம் மற்றும் குடும்ப ஒற்றுமைக்கான சீரான சூழலை உருவாக்குவதற்கும் மிகச் சிறந்ததாகக் கருதுகின்றனர்.
வாதநாடி அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி பதட்டம் அடைவார்கள். குளிர்ந்த கைகளை உடைய அவர்கள் தெற்கு, தென்கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்கினால் மிகவும் நல்லதாக இருக்கும்.
பித்த நாடி அதிகமுடையவர்கள் வடமேற்கு திசையில் தலை வைத்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை (பித்தநாடி சமனாகும் வரை) தூங்கலாம்.
கப நாடி குறைபாடு உடையவர்கள் மேற்கு நோக்கி தலைவைத்துத் தூங்கலாம். கபகுறைபாடு சமநிலைக்கு வரும்வரை மேற்கில் தலை வைத்து தூங்குவது நல்லது.
2009 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள இமயமலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (HIMS) ஒன்றில் உடலியல் துறையில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு திசையில் தலை வைத்துத் தூங்கும் போது இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சீரம் சாடிகோல் (ஹார்மோன் சுரப்பி) போன்றவைகளில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா என்பதைப் பார்க்க ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தெற்கு திசையில் தலை வைத்துத் தூங்க அறிவுறுத்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் குறைந்த SPB (சிஸ்டாலிக் ரத்த அழுத்தம்) இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் DRP சராசரி ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு (HR), சீரம் சாடிகோல் (ஹார்மோன் சுரப்பி) மிகவும் சரியாக அமைந்திருந்தன. இவை யாவும் புள்ளி விவர ரீதியான முக்கிய கண்டுபிடிப்புகள். இருந்தாலும், வெவ்வேறு குழுக்கள் மேலும் ஆய்வுகள் தேவை என்று கருதுகின்றன.
நவீன அறிவியலும், வாஸ்து மற்றும் ஆயுர்வேத நூல்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உறங்கும் திசை பற்றிய பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.
முடிவுரை
- தெற்கு – வடக்கு : தெற்கே தலையும் வடக்கே காலும் வைத்து தூங்குவது சரியானதாகும்.
- கிழக்கு – மேற்கு : .கிழக்கே தலை வைத்து மேற்கே கால் வைத்து தூங்குவதும் சரியானதாகும்.
- மேற்கே தலை வைத்து தூங்குவதை கூடுமானவரை தவிர்க்கவே வேண்டும்.
- ஒருபோதும் தலையை வடக்கு நோக்கி வைத்து தூங்க வேண்டாம்.

தூங்க சரியான பக்கம் எது?
வலப்பக்கமாக படுத்து உறக்கம் கொள்ளலாமா ? ஆயுர்வேதமானது, உங்களை இடப்பக்கத்தில் தூங்கலாம் என்று சிபாரிசு செய்கிறது. ஏனெனில், நீங்கள் சரியாக சுவாசிக்க முடியும். இடப்பக்கம் படுத்து உறங்குவது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து மற்றும் சிறந்த உடல் ஆரோக்கியத்தை விளைவிப்பதாகவும் அமைகிறது.
உடற்கூறியல் குறித்த உன்னதமான யோக வெளிப்பாடு:
- போகி என்பவன் வயிற்றில் தூங்குகிறான்.
- ரோகி என்பவன் முதுகில் தூங்குகிறான்.
- யோகி என்பவன் பக்கவாட்டில் தூங்குகிறான்.
பக்கவாட்டில் தூங்குவது சூரிய நாடி (வலப்பக்க நாசித்துளை), சந்திர நாடி (இடப்பக்க நாசித்துளை) இரண்டையும் சீராக செயல்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள பிராண ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. உயிர் அணுக்களைத் தெய்வீக உணர்வுகளுடன் சீரமைத்து விழித்திருக்கும் நிலையில் வைத்திருக்க உதவுகிறது. நமது உடல் மற்றும் மனதை பாதுகாக்க உதவுகிறது.
வலப்பக்கம் தூங்கும்போது சக்தி களம் வழியாக உணர்வுகளுடன் (சைதன்யா) செல்லும் இந்த ஓட்டமானது நம் உடலுக்கு உயிர் கொடுப்பது மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றிய சூழ்நிலைகளில் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே சரியான திசையில் தலை வைத்து தூங்குங்கள்.
அனுராதா குப்தா, பொறியியல் வல்லுநர் மற்றும் எம்.பி.ஏ படித்தவர். ஆயுர்வேத ஆலோசகராக ஒரு பெரிய நிறுவனத்தின் பின்னணியைக் கொண்டவர். வாழும் கலை மற்றும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சேவை செய்கிறார். அவரை நீங்கள் முகநூலில் தொடர்பு கொள்ளலாம்.











