நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்?

உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளதாகக் கூறப்படும் ஒரு பொதுவான உணவுத் திட்டத்தையா — ஆனால் அது உங்கள் உடலமைப்பிற்கு பொருந்துமா இல்லையா என்பது தெரியாத ஒன்றையா? அல்லது உங்கள் உடலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான, இயற்கையான மற்றும் சுவையான உணவையா?

இந்தக் கேள்வி மிகவும் எளிமையானதாகத் தோன்றுகிறது, இல்லையா? இயல்பாகவே, இரண்டாவது தேர்வே சிறந்ததாகத் தெரிகிறது. ஆரோக்கியம், இயற்கைத்தன்மை மற்றும் சுவை ஆகிய அனைத்தையும் கொண்டதாக அது இருக்கிறது. ஆனால் ஆச்சரியமாக, நம்மில் பெரும்பாலானவர்கள் அன்றாட வாழ்க்கையில் முதல் தேர்வைத்தான் செய்து வருகிறோம்.

நீங்கள் இதை நம்பாமல் இருக்கலாம். ஏனெனில் உங்கள் உணவில்: ரொட்டி, அரிசி, பருப்பு, பச்சைக் கீரைகள், பழங்கள், பருப்புவகைகள் (நட்ஸ்), பால், தயிர், தண்ணீர் போன்ற சத்தான உணவுகளைச் சேர்த்துள்ளீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான ஒவ்வொரு சத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் மிகுந்த கவனத்துடன் உணவுத் திட்டத்தை அமைத்திருக்கலாம். அப்படியானால், அது நல்ல ஆரோக்கியத்தைத் தர வேண்டாமா?  துரதிர்ஷ்டவசமாக, அப்படி இல்லாமலும் இருக்கலாம்.

பிரச்சினை என்னவென்றால், நீங்கள் பின்பற்றும் பொதுவான உணவுமுறை உங்கள் உடலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்காமல் இருக்கலாம். ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நம்மில் ஒவ்வொருவருக்கும்  தனிப்பட்ட உடல் தேவைகள் உள்ளன. வெவ்வேறு உடல் சமநிலையின்மைகள் (imbalances) உள்ளன. வெவ்வேறு வளர்சிதை மாற்ற விகிதங்கள்  உள்ளன. ஒருவருக்கு ஏற்ற உணவு, மற்றொருவருக்கு அதே அளவு நன்மை தராமல் இருக்கலாம்.

அப்படியானால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சிறந்த தேர்வை எப்படி செய்வது?

இதற்கான பதில்தான் இயற்கை மருத்துவ (Naturopathy) உணவுமுறை. இயற்கை மருத்துவம் என்பது உண்மையில் வேத காலம் தொட்டே இருந்து வரும் ஒரு மருத்துவ முறையாகும். வேதங்கள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானவை என்று கருதப்படுகின்றன.

அதர்வ வேதத்தில் இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை சிகிச்சை முறைகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் சமீப காலங்களில்தான் இயற்கை மருத்துவம் மீண்டும் அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம், நமது தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் உருவாகும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதுதான்.

இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை குறித்து உங்களுக்குள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும், அதைப் பற்றிய ஆர்வத்தைப் பூர்த்தி செய்யவும் உதவும் சில பொதுவான கேள்விகள் (FAQs) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. இயற்கை மருத்துவம் என்றால் என்ன?

இயற்கை மருத்துவம் என்பது நமது உடலில் உள்ள பஞ்சபூதங்களான காற்று, நீர், நெருப்பு, நிலம் மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் சமநிலையை ஏற்படுத்துவதன் மூலம் நோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளை குணப்படுத்தும் ஒரு மருத்துவ முறையாகும். இது அறுவைச் சிகிச்சை இல்லாதது , வலியற்றது, இயற்கை அடிப்படையிலானது ஆகும்.

இந்த சிகிச்சை முறை, உடலின் இயற்கையான குணமடையும் திறனை ஆதரித்து, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடலே தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ள உதவுகிறது. இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் “மருந்துகள்” பொதுவாக பின்வருவனவாக இருக்கும்: சரியான உணவு சேர்க்கைகள், இயற்கை மூலிகைகள், தனிநபருக்கேற்ற உணவுத் திட்டங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறைப் பழக்கங்கள். மேலும், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களான: புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை முற்றிலும் கைவிட ஊக்குவிக்கப்படுகிறது

2. இயற்கை மருத்துவம் எந்த வகையான நோய்கள் அல்லது உடல்நலக் கோளாறுகளுக்கு உதவுகிறது?

  • இயற்கை மருத்துவம் அறிகுறிகளை மட்டும் சிகிச்சையளிப்பதில்லை இயற்கை மருத்துவத்தின் அணுகுமுறை வெறும் நோயின் அறிகுறிகளை (Symptoms) குறைப்பதல்ல. அதனால், உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களும், முழுமையாக ஆரோக்கியமாக இருப்பவர்களும் இயற்கை மருத்துவ நிபுணரை அணுகலாம். இதன் மூலம், ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உடல்நலத்தைப் பராமரிக்கலாம். எதிர்கால நோய்களைத் தடுக்கலாம்.
  • தடுப்பு மருத்துவமாக (Preventive Care) சிறப்பாக செயல்படுகிறது இயற்கை மருத்துவம் முக்கியமாக நோய்களைத் தடுக்க உதவும் ஒரு மருத்துவ முறையாகக் கருதப்படுகிறது. எலும்பு முறிவு, மாரடைப்பு போன்ற திடீர் (Acute) மருத்துவ அவசர நிலைகளை நேரடியாக குணப்படுத்துவதாக இது கூறுவதில்லை. ஆனால்: அவற்றுக்கான ஆபத்து காரணிகளைக் குறைக்க, உடலை வலுப்படுத்த, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க உதவுவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளைத் தடுப்பதில் பங்களிக்க முடியும். மேலும், சில சமயங்களில் புற்றுநோய் சிகிச்சை பெறும் நபர்களுக்கு கீமோதெரபியுடன் ஊட்டச்சத்து சார்ந்த ஆதரவு (Nutrition Therapy) வழங்குவதன் மூலம் சிகிச்சையைச் சிறப்பாகச் சமாளிக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.
  • நீண்டகால (Chronic) நோய்களுக்கு உதவக்கூடும். இயற்கை மருத்துவம் குறிப்பாக பின்வரும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளில் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது: நீரிழிவு, ஹார்மோன் சமநிலைக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றில் இது அறிகுறிகளை மட்டும் குறைப்பதற்குப் பதிலாக, நோய்க்கான அடிப்படை காரணிகளை கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய முயற்சிக்கிறது.

நீண்ட காலமாக மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வது சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இயற்கை வழிமுறைகள் மூலம் உடலை ஆதரிப்பது பலருக்கு பயனுள்ள அணுகுமுறையாக இருக்கலாம். நீங்கள் உண்ணும் உணவை கவனமாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் உடல்நலத்தை மேம்படுத்தலாம், சில நோய்களின் அபாயத்தை குறைக்கலாம், உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறலாம்.

3. இயற்கை மருத்துவத்தில் உணவுமுறையின் பங்கு என்ன?

உணவுமுறை என்பது இயற்கை மருத்துவத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். மனிதர்களின் உடல் அமைப்பு பொதுவாக வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தன்மைகளாக வகைப்படுத்தப்படுகிறது. ஒருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப, இயற்கை மருத்துவ நிபுணர் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சையளிப்பார். அவற்றில் முக்கியமான ஒன்று உணவுமுறை ஆகும்.

உங்கள் உடல் தன்மைக்கு பொருந்தாத உணவுகளை உட்கொள்வது உடலில் பல்வேறு சமநிலையின்மைகளை உருவாக்கலாம். இந்த சமநிலையின்மைகளை சரிசெய்து, உடலை அதன் இயல்பான ஆரோக்கிய நிலைக்கு மீட்டெடுப்பதே இயற்கை மருத்துவ உணவுத் திட்டத்தின் நோக்கமாகும்.

உதாரணமாக, 25 வயதான சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, வெறும் வயிற்றில் இரத்தச் சர்க்கரை அளவு 240 ஆக இருந்ததால் நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தனது நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளை முயற்சித்த பிறகு, அவர் இயற்கை மருத்துவத்தை நாடினார்.

அவரது அனுபவத்தைப் பற்றி அவர் கூறியது:

“10 நாட்கள் இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்று, அதற்கேற்ப பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறையைப் பின்பற்றியபின், எனது உணவுக்கு முன் இரத்தச் சர்க்கரை அளவு 240  லிருந்து 140 ஆகக் குறைந்தது. மேலும் ஆறு மாதங்கள் தொடர்ந்து அந்த உணவுமுறையைப் பின்பற்றியபின், அது 101–102 அளவுக்கு குறைந்தது. அதன் பின்னர், நான் மருந்துகளை முற்றிலும் நிறுத்திவிட்டு, பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறையையே தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்!”

இருப்பினும், ஒவ்வொருவரின் உடலும் தனித்துவமான முறையில் செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஒருவருக்கு கிடைக்கும் பலன் மற்றொருவருக்கும் அதேபோல் கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.

4. இயற்கை மருத்துவ உணவுமுறை எனக்கு எவ்வாறு உதவும்?

உங்கள் உடலில் உள்ள இயல்பான குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக வழக்கமாக வழங்கப்படும் “மருந்துகளுக்கு” மாற்றாக, அவற்றிற்கு தேவையான ஊட்டச்சத்துகள் இயற்கை மருத்துவ உணவுமுறையிலேயே அடங்கியிருக்கும்.

இயற்கை மருத்துவ உணவுமுறை செய்யும் முக்கிய பணி என்னவென்றால், உங்கள் உடலில் உள்ள இயல்பான சமநிலையின்மைகளை சரிசெய்வதாகும். இந்த சமநிலையின்மைகளே பல நேரங்களில் சில உணவுகளின் மீது வெறுப்பு அல்லது அதிக விருப்பம் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கின்றன.
உதாரணமாக, உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் உணவுத் திட்டத்தில் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளும், அந்த கால்சியம் உடலால் சிறப்பாக உறிஞ்சப்பட உதவும் உணவு சேர்க்கைகளும் இடம்பெறும். இது, கால்சியம் மாத்திரைகளை மருந்தாக எடுத்துக்கொள்வதை விட இயற்கையான மற்றும் உடலுக்கு ஏற்ற அணுகுமுறையாக கருதப்படுகிறது. உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் பொதுவாக உடலால் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், இயற்கை மருத்துவ உணவுமுறை உங்களை இயற்கையின் அடிப்படைகளுக்கே மீண்டும் அழைத்துச் செல்கிறது. இதில், செயற்கை சேர்மங்கள், நிறமிகள், பாதுகாப்புப் பொருட்கள், இரசாயனங்கள் அல்லது மரபணு மாற்றங்கள்  இல்லாத, தூய்மையான மற்றும் இயற்கையான உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வகை உணவுகள் உங்கள் உடலில் பிராண சக்தி (Prana) அல்லது உயிர்ச் சக்தியை அதிகரித்து, உங்களை இலகுவாகவும் உற்சாகமாகவும் உணரச் செய்கின்றன. இதன் மூலம் மனம் தெளிவடைந்து, சுத்தமான மற்றும் நேர்மறையான சிந்தனைகள் உருவாக உதவுகிறது. மேலும், இது உடலிலும் மனதிலும் ஏற்படும் சோர்வு, மந்தநிலை மற்றும் களைப்பு போன்றவற்றைக் குறைத்து, புத்துணர்ச்சியுடனும் செயல்திறனுடனும் வாழ உதவுகிறது.

5. எனது உடல்நிலைக்கு ஏற்ற ஒரு நல்ல இயற்கை மருத்துவ உணவுமுறையை  பரிந்துரைக்க முடியுமா?

இயற்கை மருத்துவத்தில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான தீர்வு அல்லது உணவுத் திட்டம் கிடையாது. ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்குக்கூட அவர்களின் உடலமைப்பு, உடல்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் உணவுமுறைகள் வேறுபடும்.

மேலும், நீரிழிவு நோய்க்கு ஒரு தனி உணவுத் திட்டம், உயர் இரத்த அழுத்தத்திற்கு மற்றொரு திட்டம், ஹார்மோன் பிரச்சினைகளுக்கு இன்னொரு திட்டம் என்ற வகையில் குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் தனித்தனியான உணவுத் திட்டங்கள் இயற்கை மருத்துவத்தில் பொதுவாக இல்லை. ஆனால், உங்கள் வாழ்வின் தரத்தை உயர்த்தும் உணவுமுறை உண்டு.

6. பொதுவாக ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, உடல் எடை குறைப்பு அல்லது முகப்பருவை நீக்க விரும்புபவர்களுக்கு  இயற்கை மருத்துவ உணவுமுறை உதவுமா?

ஆம், இந்த உணவுமுறை உங்கள் பிரகிருதி  அல்லது உடலமைப்பிற்கு ஏற்ப, உங்கள் உடலின் தேவைகளைப் பொருத்து தனிப்பயனாக்கப்படுகிறது. எனவே, உங்கள் உடலில் உள்ள சமநிலையின்மைகள் சரிசெய்யப்பட்டவுடன், உங்கள் பிரச்சினையும் தானாகவே தீர்ந்து, இயல்பான நிலைக்குத் திரும்பும்.

உடல் எடை குறைப்பு மற்றும் முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்காக, இயற்கை மருத்துவ உணவுமுறையுடன் சேர்த்து யோகா, நீச்சல் அல்லது நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளையும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

7. பொதுவாக இயற்கை மருத்துவ உணவுமுறையில் எந்த வகையான உணவுகள் இடம்பெறுகின்றன?

இயற்கை மருத்துவ உணவுமுறையில், இயன்றவரை இயற்கையான நிலையில் இருக்கும் உணவுகள் இடம்பெறும். அவற்றில் செயற்கை சேர்மங்கள், பாதுகாப்புப் பொருட்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இருப்பதில்லை.

இந்த உணவுமுறையில் நீங்கள் பின்வரும் உணவுகளைக் காணலாம்:

  • தீட்டப்படாத அரிசி மற்றும் சிறுதானியங்கள் போன்ற முழுமையான உணவுகள்
  • அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள்
  • ஆவியில் வேகவைத்த மற்றும் தண்ணீரில் வேகவைத்த காய்கறிகள்
  • பச்சைக் கீரைகள் மற்றும் சாலட்கள்
  • மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்
  • உலர் பழங்கள்  அவற்றின்  பால் மற்றும் அவற்றிலிருந்து  தயாரிக்கப்படும்    எண்ணெய்கள்
  • எண்ணெய் விதைகள்
  • பால் பொருட்கள் (செரிமானத் திறனுக்கு ஏற்ப)
  • புளிக்கவைக்கப்பட்ட உணவுகள்
  • இயற்கையான வடிவிலுள்ள உப்பு – கல் உப்பு அல்லது கடல் உப்பு
  • இயற்கை பழச்சாறுகள் (சதைப்பகுதியுடன் அல்லது இல்லாமல்; நிறமிகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாதவை)
  • உலர் பழங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் லட்டு, எள்ளுருண்டை போன்ற பாரம்பரிய உணவுகள்

உங்களுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் அளிக்கும் அனைத்து உணவுகளும் இயற்கை மருத்துவ உணவுமுறையில் முக்கிய பங்குவகிக்கின்றன. இயல்பாகவே,  ஒவ்வொருவரின் உடலமைப்பு, கலாச்சாரப் பின்னணி, வாழும் பகுதி மற்றும் பாரம்பரியங்களைப் பொறுத்து சரியான உணவுப் பட்டியல் மாறுபடும்.

அதாவது,  நீங்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தால், உங்கள் உணவுமுறையில் கோதுமை அடிப்படையிலான உணவுகள், கிச்சடி மற்றும் லஸ்ஸி (மோர்) போன்றவை இடம்பெறலாம். மறுபுறம், தென்னிந்தியரின் உணவுத் திட்டத்தில் பொங்கல் மற்றும் தயிர் சாதம் போன்ற அரிசி அடிப்படையிலான உணவுகள் இடம்பெறலாம்.

உங்களுக்கு ஆற்றலை அளிக்கும் அதே உணவு, மற்றவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, சிலர் அதிகாலையில் எழுந்தவுடன் காபி  குடிப்பது நாள் முழுவதும் அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதாக உணர்கிறார்கள். மாறாக, மற்றவர்கள் அது தங்களுக்கு குமட்டலையும் அமிலத்தன்மையையும் ஏற்படுத்துகிறது என்று கருதுகிறார்கள்.

8. இயற்கை மருத்துவ உணவுமுறையில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் ஏதேனும் உள்ளனவா?

  • அனைத்து வகையான பதப்படுத்தப்பட்ட  உணவுப் பொருட்கள்:

அ) வெள்ளை/பழுப்பு சர்க்கரை – இதற்குப் பதிலாக பனைச் சர்க்கரை, தேங்காய் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் பயன்படுத்தலாம்.

ஆ) அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு – அதற்குப் பதிலாக இயற்கையான கல் உப்பு அல்லது கடல் உப்பைப் பயன்படுத்தலாம்.

  • சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், உதாரணமாக வெள்ளை அரிசி, மைதா மற்றும் தீட்டப்பட்ட சிறுதானியங்கள் – இவற்றிற்குப் பதிலாக சிவப்பு அல்லது பழுப்பு அரிசி மற்றும் தீட்டப்படாத சிறுதானியங்களைப் பயன்படுத்தலாம்.
  • எண்ணெய் அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவுகள் – அதற்குப் பதிலாக பாரம்பரிய அடுப்பில் சுட்டவை, எண்ணெய் இல்லாமல் வறுத்தவை அல்லது வெயிலில் உலர்த்தப்பட்டவற்றைப் பயன்படுத்தலாம்.
  • A2 நெய் மட்டுமே உணவில் சேர்க்கப்பட வேண்டும்; அதுவும் அளவோடு – தினமும் சுமார் ஒன்றேகால் கரண்டி அளவு.

9. சிறந்த ஆரோக்கியத்தை அடைவதற்கு இயற்கை மருத்துவ உணவுமுறை மட்டும் போதுமா?

இயற்கை மருத்துவ உணவுமுறை, இயற்கை மருத்துவ சிகிச்சையின் அடிப்படைப் பகுதியாகும். இருப்பினும், முழுமையான ஆரோக்கியத்தைப் பெற இந்த உணவுமுறையுடன் சேர்த்து இயற்கை மருத்துவத்தின் பிற முறைகளையும் பயன்படுத்துவது இன்றியமையாதது.

அவற்றில்  சில கீழ்கண்டவாறு

  • மூலிகைகள்
  • அக்குபஞ்சர்
  • அக்குபிரஷர்
  • யோகா
  • தியானம்
  • பிராணாயாமம் அல்லது சுவாசப் பயிற்சிகள்
  • மர்ம சிகிச்சை – உடலின் முக்கியமான புள்ளிகளில் (மர்மப் புள்ளிகள்) மென்மையான தொடுதல்கள்
  • மேரு சிகிச்சை  – முதுகுத்தண்டில் மென்மையான தொடுதல்கள்
  • நீர் சிகிச்சை
  • மண் சிகிச்சை – உடலில் உள்ள நச்சுக்களை நீக்க மண்ணின் குணப்படுத்தும் தன்மைகளைப் பயன்படுத்துதல்
  • பிரத்யாகாரம்  – வெளிப்புற தாக்கங்களின் மீது ஆளுமை பெறுதல்

ஒரு இயற்கை மருத்துவ நிபுணர், உங்களுக்கு மிகவும் பொருத்தமான உணவுமுறையைத் தீர்மானிக்க நாடி பரிசோதனை, இரத்தப் பரிசோதனை அறிக்கைகளுடன், விரிவான கேள்விகள் மற்றும் உடல் பரிசோதனைகளையும் மேற்கொள்ளலாம் .

இயற்கை மருத்துவ உணவுமுறை உங்கள் இயல்பான உடலமைப்பையும் தன்மையையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுவதால், நீங்கள் உணவின் மூலமாகவே நல்ல ஆரோக்கியத்தை அடைய முடியும்.

நீங்கள் உங்கள் இயல்பான நிலையிலிருந்து விலகும்போது, அது விக்ருதி என்று அழைக்கப்படுகிறது; இதுவே உடல்நலக் கோளாறுகளுக்கான மூலக் காரணமாகும். நீங்கள் உங்கள் இயல்பான தன்மைக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதுவே முழுமையான நலவாழ்விற்கான சிறந்த வழிமுறையாகும்.

நீங்கள் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் உள்ள ஒரு இயற்கை மருத்துவ நிபுணரை அணுகலாம்.

(இந்தக் கட்டுரை, ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மருத்துவமனையின் இயற்கை மருத்துவ நிபுணரும், வாழும்கலை ஆசிரியருமான டாக்டர் சூர்யா ரமேஷ் அவர்களின் விரிவான பங்களிப்புகளுடன் எழுதப்பட்டது.)

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *