பல எதிர்பாராத திருப்பங்களையும், சவால்களையும் கொண்டது வாழ்க்கை. துன்பத்தை எதிர்கொள்ளும்போதும், நோய்வாய்ப்படுதல், மரணம், விவாகரத்து, வேலை இழப்பு, தோல்வி போன்ற கடினமான, வலிமிகுந்த நிகழ்வுகளின் போதும் நீங்கள் நிலையிழக்கக்கூடும், காலின் கீழ் இருக்கும் தரை நழுவுவதைப் போல உணரக்கூடும்.

வாழ்க்கையில் கடினமான நேரங்கள் தவிர்க்க முடியாதவை; இப்படிப்பட்ட கடினமான நேரங்களில் உங்கள் உணர்ச்சிகள் மட்டுமல்லாமல் மனவலிமையும் சோதிக்கபடுகிறது. இதுபோன்ற நேரத்தில், வலுவான கையாளும் உத்திகளை கற்றுக்கொள்வது, அந்த தருணத்தின் போராட்டங்களைக் கடந்து, தொடர்ந்து சரியான பாதையில் பயணிக்க உதவும்.

வாழ்க்கை உங்களுக்கு கைநிறைய புளிப்பான எலுமிச்சம்பழங்களைக் கொடுக்கும்போது உங்களால் எலுமிச்சை ஜூஸ் தயாரிக்க முடியுமா?

சிலர் துன்பத்தின் முதல் அறிகுறியிலேயே நொறுங்கிப் போய், நீண்ட காலத்திற்கு மன அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். அக்கடினமான நேரத்தை கையாள்வதற்கு மாறாக, தப்பிக்கும் வழியை தேடுகிறார்கள்.

மாறாக, மற்றும் சிலர் வாழ்க்கை அவர்கள் முன் வீசும் எந்த சவாலையும் சந்திக்க மேலெழுகிறார்கள். பின்னடைவுகளை மறுதொடக்கமாக்கும் அபரிமிதமான ஆற்றல் அவர்களிடம் உள்ளது. துன்பத்தை வீரியம், உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கையுடன் அவர்கள் கையாள்கிறார்கள்.

இவர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால், மற்றவர்கள் ஒன்றை கைவிடத் தொடங்குபோதும், இவர்கள் முன்னேறிச் செல்ல உறுதி கொள்கிறார்கள். இவ்விடாமுயற்சிக்கு, மனவலிமை—முன்னோக்கிச் செல்லும் போது வரும் நிச்சயமின்மையையும், அசௌகரியங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை—மிகவும் இன்றியமையாதது. கடினமான சூழ்நிலைகளில் இவர்கள் அமைதியாகவும், பதற்றமின்றியும், சமநிலையோடும் இருக்கிறார்கள். தீர்வுகளைக் கண்டறியவும், சரியான பாதைக்கு திரும்பவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஏமாற்றங்கள் விரும்பியவற்றிலிருந்து தம்மை தடுக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. மாறாக, கவனத்தைக் குவித்து வெற்றிக்கான திட்டங்களை அவர்கள் தீட்டுகிறார்கள்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மேடுபள்ளங்களைச் சமாளித்து, மேலும் வலுவானவராகத் திரும்பி வருகிறீர்களா? அல்லது, புயல் அடித்து ஓயும் வரை, பாறையின் பின் ஒளிந்துகொள்கிறீர்களா? முன்னேறிச் செல்ல உதவும் வலிமையையும், விடாமுயற்சியையும் வளர்த்துக்கொள்வது எப்படி? அதன் ரகசியம் தான் என்ன?

“மனஉறுதி” – துன்பம் நேர்கையில் வலிமையோடிருத்தல்

பேச்சுவழக்கில் “மனஉறுதி” என்னும் சொல் கடினமான சூழலை எதிர்கொள்ள உதவும் நேர்மறை மனப்பண்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது.

எத்தகைய கடினமான சூழலிலும் கவனத்தையும், உறுதியையும் தக்கவைத்துக்கொள்ளும் திறன். நம் வாழ்வின் நிகழ்வுகள் நாம் நினைத்தப்படி ஒருபோதும் நடப்பதில்லை. ஆனால் இது நம்மை பாதை தவறச்செய்ய நாம் அனுமதிக்ககூடாது. தோல்வி நமக்கு கொடுக்கும் பலமான அடியைத் தவிர்த்து நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டுவரும் பண்பை வளர்த்துக்கொள்ள மனஉறுதி உதவுகிறது. வாழ்க்கை நம்மை மூழ்கடித்துவிடுமோ என்று தோன்றும்போது, அதாவது நமக்கு மிகுந்த வலிமைத் தேவைப்படும்போது, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க இந்த மீளும்தன்மையும், தாக்குப்பிடிக்கும் சக்தியும் நமக்கு உதவுகின்றன. அடிப்படையில், மனஉறுதி என்பது, சூழ்நிலை கடினமாக இருக்கும்போதும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லவும், தொடர்ந்து போராடவும், தொடர்ந்து முயற்சி செய்யவும் உங்களை உந்தும் உள்ளார்ந்த வலிமை மற்றும் உறுதியாகும்.

மனவலிமை ஏன் இன்றியமையாதது?

வாழ்க்கையிலிருந்து நீங்கள் மிக அதிகமாக பெற விரும்பினால் – மேம்பட்ட வேலையோ, போட்டிகள் நிறைந்த பணிச்சூழலோ, அல்லது எத்தனை தடைகளை சந்தித்திருந்தாலும் திறன்களை மேம்படுத்திக்கொள்ளுதலோ, எதுவாக இருந்தாலும் – மனவுறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

போதுமான மனவலிமை இல்லாது போனால், வாழ்க்கையின் சவால்கள் உங்களை தன் மீதே சந்தேகம் கொள்ளச்செய்யும், மேலும் பதற்றத்தையும் மனச்சோர்வையும் உண்டாக்கும். இத்தகைய சங்கடம் தரும் உணர்வுகள் எதிர்மறை எண்ணவோட்டத்திற்கு இட்டுச்சென்று உங்கள் நடவடிக்கைகளையும், செயல்திறனையும் மோசமாக பாதிக்கக்கூடும். கடினமான நேரத்தில் வலுவாக இருப்பதற்கு உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடவடிக்கைகளை கையாள வேண்டியிருக்கும்.

உடல்நலமோ, வணிகமோ, விளையாட்டோ, தொழிலோ, உறவுகளோ அல்லது பொதுவாக வாழ்க்கையோ—இலக்குகளை அடைவதில் மனஉறுதி ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நல்ல செய்திதான், ஏனென்றால் மனஉறுதியை வளர்த்துக்கொள்ள பல வழிகள் உள்ளன.

சவால்களை எதிர்கொள்ள மனஉறுதியை வளர்த்துக் கொள்ளுதல்

மீளும்தன்மையோடு இருக்கவும், மனரீதியாக உறுதியாக இருக்கவும் நாம் அனைவருமே கற்கமுடியும். உயர்மட்ட நிலைகளில் சிறப்பாக செயல்படவும், முன்னேறிச் செல்லவும் தேவையான உளவியல், உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக நிலையை தக்கவைத்துக்கொள்வது இதற்கு அவசியம்.

கடினமான நேரங்களிலிருந்து மீண்டுவரும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள 8 நுட்பங்கள் இதோ

1. நம்பிக்கை கொள்ளுங்கள்“உங்களால் கையாள முடியாத ஒரு பிரச்சினை ஒருபோதும் உங்களுக்கு தரப்படுவதில்லை. உங்கள் முன் தோன்றும் ஒவ்வொரு பிரச்சினையுமே, அதிலிருந்து வெளிவரத் தேவையான திறன், திறமை மற்றும் ஆற்றல் உங்களிடம் உள்ளன எனபதை உங்களுக்கு உணர்த்துகிறது. உங்களுடைய உண்மையான திறனை வெளிக்கொணரவே அச்சூழல் உருவாகிறது!” ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் இந்த சொற்களில் நம்மை மென்மேலே உயர்த்தும் ஞானம் பொதிந்துள்ளது. நடப்பதெல்லாம் ஒரு ஆசீர்வாதம் என்றும், எதுவுமே நிரந்தரமில்லை, இந்த கடினமான நேரமும் கடந்து போகும் என்றும் நம்புவது நமக்கு மிகவும் தேவைப்படும் பொறுமையையும் நேர்மறைத்தன்மையையும் அளிக்கிறது.

2. உங்கள் பார்வையை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரம், மகிழ்ச்சி மற்றும் வலி ஆகியவற்றின் கலவையே வாழ்க்கை. ஆனால், வலி தவிர்க்க முடியாதது என்றாலும் துன்பம் நமது தேர்வே என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். வாழ்க்கையைக் குறித்த ஒரு விசாலமானப் பார்வையைக் கொண்டிருப்பது வேதனை நிறைந்த நேரங்களில் முன்னோக்கி செல்ல தேவையான வலிமையை நமக்குத் தருகிறது.  இவ்வுலக்குக்கு உங்கள் தேவை உள்ளது என்பதை அறியுங்கள். எல்லையற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட உங்கள் வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம் ஆகும், ஏனென்றால் அது உங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணாக ஆகக்கூடும்.

3. மூச்சு விடத் தொடங்குங்கள். இந்தச் செயல் உண்மையில் மேம்பட்ட மனச்செயற்திறனுக்கு உங்கள் உடலைத் தயார் செய்கிறது.  கவனம் செலுத்துங்கள் – இப்போது நீங்கள் உங்கள் மூச்சை இறுகப்பிடித்து வைத்திருக்கிறீர்களா? எவ்வளவுக்கு எவ்வளவு மன அழுத்தமும் பதற்றமும் உள்ளனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு உங்களை அறியாமலேயே நீங்கள் மூச்சை பிடித்துவைத்திருக்கும் வாய்ப்பு உண்டு. மேலும், உங்களுக்கு தலைவலி, முதுகுவலி, தோள்களிலும் கழுத்து தசைகளிலும் இறுக்கம் ஆகியவை இருக்கக்கூடும்.

உங்களுக்கான ஒரு மருந்து இதோ:  5 – 7 ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து, மிக நிதானமாக வெளிவிடவும். 4 எண்ணிக்கைக்கு மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும், 4 எண்ணிக்கைக்கு பிடித்து வைக்கவும், 4 எண்ணிக்கைக்கு மிக மெதுவாக வெளிவிட்டு, 2 எண்ணிக்கை வரை நிறுத்தி வையுங்கள். இதை ஒரு நாளில் 3 முறை செய்யவும். உஜ்ஜயி மூச்சில் இதை செய்வது இன்னும் சக்திவாய்ந்தது. எந்த சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தாலும், நாள்முழுதும் நல்ல சுழற்சி மற்றும் நிலையான சுவாச ஓட்டத்தை இது உருவாக்குகிறது.

4. புன்னகை செய்யுங்கள், சிரியுங்கள். சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்போது, மனஉறுதியுள்ளவர்கள் மேலும் முன்னேறுகிறார்கள், அல்லவா? உங்கள் மகிழ்ச்சியின் அளவு நீங்கள் எதிர்கொண்ட சவாலான சூழ்நிலைகளைக் கொண்டு அளவிடப்படுகிறது. அனைத்தும் சரியாக நடக்கும்போது புன்னகைப்பது ஒன்றும் பெரிதல்ல! மாறாக எந்த சூழ்நிலையிலும், என்ன நிகழ்ந்தாலும் புன்னகைக்க முடிவது முதிர்ச்சி, வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தின் அறிகுறியாகும். ஒருவேளை நிஜமாகும் வரை அதைப் போலியாக செய்யவேண்டியிருக்கலாம். என்னால் நிலமையை சமாளிக்கமுடியாது என்று அடுத்த முறை உங்களுக்குத் தோன்றும்போது புன்னகைத்துப் பாருங்கள், எவ்வளவு நிம்மதியாகவும், நம்பிக்கையாகவும் உணர்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.

கடினமான நேரமே சிரிப்பதற்கு சிறந்த நேரம். உங்கள் நகைச்சுவையுணர்வை சோதித்துப் பார்க்க நீங்கள் இந்த நேரத்தை பயன்படுத்தலாம். உங்கள் உணர்வு நிலைக்கு மட்டும் அல்ல, உடல் நிலைக்கும் இது நல்லது. வேடிக்கையாக இருந்தாலும், தினமும் காலையில் 5 நிமிடம் அடிவயிற்றிலிருந்து சிரியுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை என்று மனஉறுதி மிக்கவர்கள் நம்புகிறார்கள் –  ஒரு இடமோ, பொருளோ, நபரோ அல்லது விஷயமோ அல்ல. அவர்கள் விழிப்புணர்வுடன் மகிழ்ச்சியாக இருக்க பயிற்சி செய்கிறார்கள், மேலும் அப்படி இருப்பது தன் கையில்தான் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். சரி, இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள் நீங்கள்?

5. பற்றற்று இருங்கள். இது எதுவுமே உங்களைப் பற்றியது அல்ல என்பதை நினைவில் கொண்டால் மிகக் கடினமான பின்னடைவுகளை சந்தித்தும்கூட நீங்கள் மேலும் வலிமையுடன் மீளமுடியும். எல்லாவற்றையும் உங்கள் தனிப்பட்ட பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, “எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?” என்று எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்காதீர்கள். எல்லாவற்றையும் உங்கள் மேல் ஏற்றிக்கொண்டு கழிவிரக்கத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம். மாறாக உங்களால் கட்டுப்படுத்தக் கூடியவையின் மீது கவனம் செலுத்துங்கள்.

6. மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை மேலே கொண்டுவாருங்கள். நானே பிரச்சினையில் சிக்கிகொண்டிருக்கும்போது மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்புங்கள், அது மிகவும் பயனளிப்பது. அறிவியல் கூட இதை நிரூபிக்கிறது. தொடர்ந்து மற்றவர்களுக்கு உதவுபவர்களுக்கு மனச்சோர்வும் வலிகளும் குறைந்து, அவர்கள் அமைதி மற்றும் மேம்பட்ட ஆரோக்கியத்தை அடைகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மேலும் அவர்கள் அதிக காலம் வாழவும் கூடும். திட்டமிடாத ஒரு நற்செயலை ஒவ்வொரு நாளும் செய்ய முயலுங்கள். இதனால் மற்றவர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் மனநிலையும் மேம்படுவதை நீங்கள் காண்பீர்கள். மகத்தான உள் வலிமையை நீங்கள் உணர்வீர்கள்.

7. மற்றவர்களுடன் இணைந்திருங்கள்மனிதன் ஒரு சமூக விலங்கு. நாம் ஆதரவிற்கும், மதிப்பிற்கும், தொடர்புகளுக்கும் ஏங்குகிறோம். மெண்டல் ஹெல்த் அமெரிக்கா என்னும் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பில் கலந்துகொண்டோர்களில் 71 சதவீதத்தினர் கடினமான நேரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் ஆதரவைத் தேடியவர்கள். கூட்டுக்குள் ஒடுங்காமல், வெளிவந்து கைப்பேசியை எடுத்து உங்கள் அன்பிற்குரியோரை தொடர்பு கொள்ளுங்கள்.

8. தியானம். “தியானம் என்பது உங்கள் மனதை அமைதிப்படுத்தம் வழி அல்ல. அது ஏற்கனவே மனதிலிருக்கும் – ஒருநாளில் ஒரு சராசரி நபருக்கு தோன்றும் 50000 எண்ணங்களின் அடியில் புதைந்திருக்கும் – அமைதிக்குள் நுழைவதற்கு ஒரு வழி.” – தீபக் சோப்ரா. மனஉறுதி என்பது மௌனத்தின் ஆற்றலைக் கொண்டு நம் உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் நடத்தையை கட்டுக்குள் வைத்து, வெற்றிக்கும் விடுதலைக்கும் வழிகோலுதலாகும். தியானத்தின் போது நாம் அனுபவிக்கும் மௌனமும் அமைதியும் நிறைந்த வெளி என்பது நுண்ணறிவின் வடிவமேயாகும். உணர்வு, எண்ணம் மற்றும் நடத்தைக்கு அப்பாற்பட்ட அறிதலாகும் அது. நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தாக்கம் செலுத்த தியானம் என்னும் ஆற்றல்மிகுந்த கருவியை நாம் பயன்படுத்தலாம்.

உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்துதல் (ட்ரான்ஸ்ஃபார்மிங் எமோஷன்ஸ்) என்னும் வழிகாட்டுதலுடன் கூடிய தியானத்தை இப்போதே முயன்று பாருங்கள்.

உடல்ரீதியாக துடிப்புடன் இருப்பது, சரியான உணவை உடலுக்கு எரிபொருளாக கொடுப்பது மற்றும் இரவில் நல்ல தூக்கம் ஆகியவற்றின் மூலம் உங்கள் உடலின் மேல் கவனம் செலுத்துங்கள். உடல்நலமே உங்களுடைய மிகச் சக்திவாய்ந்த வளம். அதைப் பேணுவது மேற்கண்ட 8 கருவிகளையும் சிறப்பாக பயன்படுத்த உங்களுக்கு உதவும்.

மனஉறுதியுள்ளவராக இருப்பதற்கு பயிற்சியும் விழிப்புணர்வும் அவசியம். பயன்தராத வழக்கங்களை மாற்றி பயனுள்ள வழக்கங்களைக் கற்க வேண்டியிருக்கும். அத்தோடு சில சமயம், உங்களுக்கு நீங்களே தடையாக இல்லாமல், அனைத்தையும் கட்டுப்படுத்த நினைக்காமல், விஷயங்களை அவற்றின் போக்கில் நடக்க விட வேண்டியும் இருக்கலாம். 

கடினமான நேரம் வரலாம்….ஆனால் மனஉறுதி உள்ளவர்கள் அப்போதும் முன்னோக்கிச் செல்கிறார்கள், நாமும் அப்படிப்பட்டவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். மகிழ்ச்சியாக இருங்கள், மன வலிமையுடன் இருங்கள், நீங்கள் எதிர்கொள்ளும் எந்தச் சூழலையும் உங்களால் கையாள முடியும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.

அன்பிற்குரியவரே! நீங்கள் தனியாக இல்லை, உங்களுடன் எவரோ ஒருவர் எப்போதும் இருக்கிறார்! நலமுடன் இருங்கள்!

சேஜல் ஷா, திறன் – வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி E-YRT 500) ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியர், ஒய் ஏ சி ஈபி (YACEP), வாழும் கலை ஆசிரியர், நியூயார்க்

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *