இன்றைய காலத்தில் தவறான உட்காரும் நிலை (posture) அல்லது வேலை காரணமாக நீண்ட நேரம் தொடர்ந்து அமர்ந்து இருப்பது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே முதுகுவலி மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. ஆனால், உடலின் ஒருபக்கத்தில் மட்டும் ஏற்படும் முதுகுவலியின் உண்மையான காரணம் நீண்ட காலம் கண்டறியப்படாமல் போகலாம். சிலருக்கு தொடர்ந்து கூர்மையான அல்லது முள் குத்துவது போன்ற வலி இருக்கும்; மற்றவர்களுக்கு வலி சிறிது நேரம் குறைந்து மீண்டும் தோன்றும். ஒருபக்க முதுகுவலி பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒருபக்க முதுகுவலிக்கான காரணங்கள்
இடது அல்லது வலதுபக்க முதுகுவலிக்கான காரணங்கள் பின்வருமாறு:
- காயம்
எலும்புகளின் அடர்த்தி குறைவு அல்லது முடக்குவாதம் போன்ற காரணங்களால் சிறிய காயங்கள்கூட முதியவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
- அதிகப்படியான உடற்பயிற்சி
மிகவும் தீவிரமான உடற்பயிற்சி அல்லது விளையாட்டு செயல்பாடுகள் தசைகளில் அதிக அழுத்தத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தி, குத்துவது போன்ற வலியை உருவாக்கலாம்.
- திசு தொடர்பான காரணங்கள்
உடலின் ஒரு பக்கத்தில் தசைகள் அல்லது மூட்டுகள் இறுக்கமாக இருப்பது, குறைந்த உடல் இயக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, நீண்டநேரம் அமர்ந்து இருப்பது அல்லது தவறான உட்காரும் நிலை ஆகியவை திசு சார்ந்த ஒருபக்க முதுகுவலியை ஏற்படுத்தக்கூடும்.
- உட்புற உடல்நலப் பிரச்சினைகள்
சில சமயங்களில் பலவீனமான வளர்சிதை மாற்றம், சிறுநீரகத் தொற்று, அல்லது சிறுநீரகக் கற்கள் ஆகியவை ஒருபக்க முதுகு வலிக்கு வழிவகுக்கலாம். சரியான காரணத்தை அறிய, இதனுடன் தொடர்புடைய பிற அறிகுறிகளைக் கண்காணிப்பது அவசியம். எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் ஒழுங்கின்மை ஆகியவை வலதுபக்க அடிமுதுகுவலிக்குக் காரணமாகலாம்.
- கர்ப்ப காலம்
கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பதால் வயிற்றுத் தசைகள் பலவீனமடைகின்றன. இதன் விளைவாக முதுகுத்தண்டிற்கு கிடைக்கும் ஆதரவு குறைகிறது. இதனுடன் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் பெண்களிடம் ஒருபக்கமுதுகுவலியை உருவாக்கக்கூடும்.
வலியை எவ்வாறு குணப்படுத்துவது?
ஒருபக்க முதுகுவலிக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். வலி தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உள்ளதா அல்லது இடம் மாறுகிறதா என்பதை அடையாளம் காண்பது அவசியம். உதாரணத்திற்கு நரம்பு அழுத்தத்தினால் ஏற்படும் சியாட்டிகா வலி எரிச்சலுடன் கூடிய ஒருபக்க அடிமுதுகு வலியாகத் தோன்றி பின்னர் கால்களுக்கு மாறுகிறது.
உடற்பரிசோதனைக்குப் பிறகு வலிக்கான சரியான காரணத்தை அறிய பல சோதனைகள் உள்ளன. அவற்றில் சில – எக்ஸ் – ரே, எலும்பு ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் இரத்த பரிசோதனைகள். மருத்துவ சிகிச்சை, வலியின் மூல காரணத்தை நிவர்த்தி செய்யும் என்றாலும், ஒருபக்க முதுகுவலியிலிருந்து நன்றாக குணமடைய இந்த வீட்டு வைத்தியங்களைச் செய்து பாருங்கள்.
- உங்கள் உடலின் சைகைகளை கவனியுங்கள்
உங்களது உடல் அவ்வப்போது ஓய்வு தேவைப்படுவது, உணவு உட்கொள்ள வேண்டியது, உடலை நீட்டிப் பயிற்சி செய்ய வேண்டியது போன்ற பல்வேறு சைகைகளை வழங்குகிறது. அவற்றைப் புறக்கணிக்க வேண்டாம். முதுகுவலி நிவாரணத்திற்கான யோக ஆசனங்களை தொடர்ந்து மற்றும் முறையாகப் பயிற்சி செய்தால், உங்கள் நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். ஆனால், பயிற்சியின் போது அசௌகரியம் அல்லது அதிக வலி ஏற்பட்டால் உடனடியாக நிறுத்த வேண்டும்.
- வாழ்க்கைமுறையில் நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வாருங்கள்
வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒழுக்கமான வாழ்க்கையே சிறந்த தீர்வாகும். உங்கள் முதுகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகள் எவை என்பதை அறிந்து அவற்றை தொடர்ந்து செய்யுங்கள். உடல்நலத்திற்கு ஏற்ற சத்தான உணவுமுறையை கடைப்பிடியுங்கள். சில உணவுகள் உட்புற உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, இடது மேல்பக்க முதுகுவலியைத் தூண்டக்கூடும். எனவே சுத்தமான மற்றும் சமநிலையான உணவுமுறை மிகவும் அவசியம். சரியான உடற்பயிற்சி, நல்ல உட்காரும் நிலை, போதுமான ஓய்வு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் ஒருபக்க முதுகுவலியை கட்டுப்படுத்தவும், மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும்.
- சித்தரத்தை வேர்
சித்தரத்தை வேர், அழற்சி எதிர்ப்பு (anti inflammatory) தன்மைகளுக்கான ஒரு மூலிகையாகும். வேரினைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி பின்பு அந்த தேநீரை அருந்தலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது, ஒருபக்க முதுகு வலியிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்க உதவும்.
- முதுகுத்தண்டை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
அதிகமாக உண்பது, புகைப்பிடித்தல், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை போன்ற முதுகுத்தண்டை பலவீனப்படுத்தக்கூடிய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். வலுவான முதுகுத்தண்டு எலும்புகளை ஆரோக்கியமாகவும் தசைகளை நெகிழ்வாகவும் வைத்திருக்க உதவும்.
- வெப்ப அல்லது குளிர் ஒத்தடம்
உங்களது ஒருபக்க முதுகுவலியின் தன்மையைப் பொறுத்து வெப்ப அல்லது குளிர் சிகிச்சையை கையாளுங்கள். தசைவலி, இறுக்கம் அல்லது சோர்வைக் குறைக்க வெப்ப ஒத்தடம் (Hot Compress) உதவும். அழற்சி அல்லது வீக்கம் இருந்தால் குளிர் ஒத்தடம் (Ice Pack) பயன்படுத்துவது சிறந்தது.
- மனஒருமைப்பாடு மற்றும் தியானம்
மனஒருமைப்பாடு மற்றும் தியானம் நம்மை நிகழ்காலத்தில் முழுமையாக கவனம் செலுத்தச் செய்து, நமது உள்ளுணர்வைக் கேட்க உதவுகின்றன. தொடர்ச்சியான தியானப் பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனநிலையை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இது நேர்மறையான சுயசிந்தனையை (Positive Self-Talk) ஊக்குவித்து, உடல்நிலையில் நல்ல மாற்றங்களை உருவாக்க உதவுகிறது. மேலும், மனஒருமைப்பாடு நமது ஆரோக்கியத்திற்கு சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க கவனத்தைத் திருப்புகிறது. சௌகரியமான காலணிகள், சரியான அல்லது தவறான உட்காரும் நிலை, முறையான ஓய்வு போன்றவைகள் நம் கவனத்தில் முதன்மையான இடத்தை வகுக்கக் தொடங்குகின்றன.
வலிநிவாரணிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் வலியை தற்காலிகமாகக் குறைக்க உதவலாம். இருப்பினும், மேலே கூறப்பட்ட இயற்கை மற்றும் வாழ்க்கைமுறை உங்களிடம் நேர்மறையான மனப்போக்கை உருவாக்கி, உடல்நிலையை இயற்கையாக மேம்படுத்த உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், மனஅழுத்தத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தவும் இங்கு சேருங்கள்.










