1. தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துதல்
தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துதல் அல்ல. ஒருமுகப்படுத்துதல் என்பது தியானத்தின் ஒரு பயனாகும். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு முயற்சி தேவைப்படும். ஆனால் தியானம் என்பது மனதை முழுமையாக தளரவிடுவதாகும்.
மனதின் முழுமையான தளர்வே தியானம் என்பதாகும்.மனதை ஒருமுகப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடும் போது மனதை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். நீங்கள் அந்நிலையில் ஆழ்ந்த ஓய்வு நிலையில் இருக்கிறீர்கள். மனம் தளர்வடையும் போது தான் மனதை நாம் நன்றாக ஒருமுகப்படுத்த முடியும்.
2. தியானம் என்பது ஒரு மதச்சார்புடைய பயிற்சி
யோகா மற்றும் தியானம் என்பவை உலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் கடந்த பழங்கால நடைமுறைகள் ஆகும். தியானத்திற்கு எந்த மதத்திலும் தடையில்லை. சொல்லப்போனால், தியானம் என்பது மதங்களையும், நாடுகளையும், நம்பிக்கைகளையும் இணைக்கும் ஒரு பாலமாக இருக்கிறது. எப்படி சூரியன் அனைவருக்கும் ஒளியை வழங்குகிறதோ, காற்று அனைவருக்கும் வீசுகிறதோ, அதுபோல தியானம் அனைவருக்கும் பயனை அளிக்கிறது.
எல்லா பின்னணியிலும், மதத்திலும், கலாச்சாரத்திலும் உள்ள மக்களை, ஒரு கொண்டாட்ட உணர்வுடன் தியானம் செய்ய வருமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
3. தியானம் செய்ய பத்மாசனத்தில் உட்காரவேண்டும்
பதஞ்சலி யோக சூத்திரங்கள் என்பது, மனதின் இயல்பை அறிவியல் முறையில் விரிவாக விளக்கும் ஒரு ஆய்வாகும். ‘ஸ்திரம் சுகம் ஆசனம்’என்பது மகரிஷி பதஞ்சலி அவர்களின் யோக சூத்திரமாகும்.
பதஞ்சலி மகரிஷி “தியானம் செய்யும்போது முக்கியமாக, வசதியாகவும் நிலையாகவும் இருப்பது அவசியம்• என்று கூறுகிறார். இது நமக்கு ஆழமான அனுபவத்தைப் பெற துணைபுரிகிறது. நீங்கள் காலை மடக்கி உட்காரலாம், நாற்காலியில் இருக்கலாம், சோபாவில் கூட அமரலாம் — அனைத்தும் சரிதான். ஆனால் உங்கள் தியானத்தைத் தொடங்கும் போது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். உங்கள் தலை , கழுத்து மற்றும் தோள்களைத் தளர்த்திக் கொள்ள வேண்டும்.
4. தியானம் வயதானவர்களுக்கு மட்டுமே உரியது
தியானம் உலகளாவியது மட்டுமல்லாது, அனைத்து வயதினரின் வாழ்க்கை நலத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எட்டு அல்லது ஒன்பது போன்ற இளம் வயதிலேயே தியானம் செய்யத் தொடங்கலாம். குளிப்பது உடலை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறதோ, அதைப்போல தியானம் மனதைத் தெளிவாகவும் மன அழுத்தம் இல்லாமலும் வைத்திருக்க உதவுகிறது.
5. தியானம் உளவசிய நிலை (ஹிப்னாடிசம்) போன்றது
தியானம் உள்ளத்தை வசியப்படுத்தும் நிலைக்கு (ஹிப்னாடிசம்) ஆன மாற்று மருந்து. உள்ளத்தை வசியப்படுத்தும் போது ஒரு மனிதர் தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய மாட்டார். ஆனால் தியானம் என்பது ஒவ்வொரு நொடியிலும் முழுமையான விழிப்புணர்வுடன் இருப்பது. உள்ளத்தை வசியப்படுத்தும் நிலையானது (ஹிப்னாடிசம்) ஒருவரை அவர்களின் மனத்தில் ஏற்கனவே உள்ள பதிவுகளுக்குள் இழுத்துச் செல்கிறது. தியானமோ அவரது மனதில் உள்ள பதிவுகளில் இருந்து முழுமையாக அவரை விடுவிக்கிறது. தியானம் நமது மெய் உணர்வை புத்தம் புதியதாகவும் தெளிவாகவும் ஆக்குகிறது. உள்ளத்தை வசியப்படுத்தும் முறையானது வளர்சிதை மாற்ற நடவடிக்கையை (மெடபாலிக் ஆக்டிவிட்டி) அதிகரிக்கிறது. தியானமோ அதை குறைக்கிறது.
நீங்கள் தினமும் பிராணாயாமம் மற்றும் தியானம் செய்தால் யாரும் உங்களின் உள்ளத்தை வசியப்படுத்த (ஹிப்னாடிசம்) இயலாது.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
6. தியானம் என்பது சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது
எண்ணங்கள் அழைப்பின் மூலம் நம்மிடம் வருவதில்லை. அவை வந்த பிறகு தான் நாம் அவற்றைப் பற்றி அறிகிறோம். எண்ணங்கள் வானத்தில் உள்ள மேகங்கள் போன்றவை. அவை தாமாக வரும். தாமாகவே போகும். சிந்தனைகளை கட்டுப்படுத்த ஒரு முயற்சி தேவைப்படுகிறது. ஆனால், மனதை ஓய்வடையச் செய்ய முயற்சியின்மை தேவை. நாம் நல்ல எண்ணங்களுக்காக ஏங்கவும் வேண்டாம். கெட்ட எண்ணங்களை வெறுக்கவும் வேண்டாம். எண்ணங்களை நீங்கள் ஒரு சாட்சியாக பார்த்து அவற்றைக் கடந்து ஆழமான அமைதியான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
7. தியானம் பிரச்சனைகளிலிருந்து ஓடி ஒளியும் வழி
மாறாக, தியானம் பிரச்சனைகளை புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஆற்றலைத் தருகிறது. இனிமையான மற்றும் ஆக்கபூர்வமான வழிமுறைகளில் சூழ்நிலைகளைக் கையாளும் திறனை உங்களிடம் வளர்க்கிறது. சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படும் திறனைப் பெற வைக்கிறது. கடந்த காலத்தை நினைத்து நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவும் மாட்டீர்கள். தியானம் உள்ளார்ந்த வலிமையையும் தன்னம்பிக்கையும் வளர்க்கிறது. வாழ்க்கையில் சவால்கள் வந்தாலும் தியானம் நம்மை நம்பிக்கையுடன் முன்னேற உதவுகிறது.
8. ஆனந்தத்தை அனுபவிக்க மணிக் கணக்கில் தியானம் செய்ய வேண்டும்
ஆழ்ந்த அனுபவத்தைப் பெற மணிக்கணக்கில் உட்கார வேண்டியதில்லை. உங்களது ஆதாரத்துடன் இணைப்பு ஒரே ஒரு நொடியில் கூட நிகழலாம்.. 20 நிமிட சகஜ் சமாதி தியானம் ஒரு நாளைக்கு இருமுறை செய்தால் போதும். தினமும் தியானம் செய்தால் தியானத்தின் தரம் மேம்படும். மேலும் தியானத்தின் நன்மைகளை அனுபவிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
9. தியானம் செய்தால் துறவி(சன்னியாசி) ஆகிவிடுவீர்கள்
தியானம் செய்யவோ அல்லது ஆன்மீகப் பாதையில் முன்னேறவோ நீங்கள் உலக வாழ்க்கையை விட்டு விட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் நீங்கள் தியானம் செய்யும்போது உங்கள் மகிழ்ச்சியின் தரம் மேம்படும். நிம்மதியான மனம் ஏற்படும். மகிழ்ச்சியாக இருக்க முடியும். உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.
10. குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட திசைகளை நோக்கி தியானம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்
எந்த நேரமும் தியானம் செய்வதற்கு ஏற்ற நேரம் ஆகும். எல்லா திசைகளும் தியானம் செய்வதற்கு ஏற்றது. நல்லது. நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால் வயிறு நிரம்பி இருக்கக்கூடாது. இல்லையெனில் தியானம் செய்வதற்குப் பதிலாகத் தூங்கி விடுவீர்கள். சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின்போதும் தியானம் செய்வது நல்லது. இது நாள் முழுவதும் உங்களை அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
தியானத்தைப் பற்றி பொதுவாக நிலவும் தவறான நம்பிக்கைகளை நாங்கள் நீக்கியுள்ளோம் என்று நம்புகிறோம். தியானத்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மாற்றங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றிய தக்க தெளிவும் இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கும்.