உங்களுக்கு எதன்மீது கோபம் ஏற்படுகிறது? மனிதர்கள், சம்பவங்கள், சூழ்நிலைகள்? பொருட்கள் மீது உங்களுக்கு கோபம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகையால் உங்கள் கோபம் அனைத்தும் மனிதர்கள் அல்லது சூழ்நிலைகள் மீதுதான் ஏற்படுகிறது. நீங்களும் உங்கள் மீதோ அல்லது வேறு ஒருவர் மீதோ கோபம் கொள்வதால், அந்த மனிதர்களில் உள்ளடக்கமே.
ஏதோ ஒரு பலவீனத்தால் நீங்கள் கோபப்படுகிறீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்ய விரும்பி, அதைச் செய்ய முடியாத பொழுது, அந்த இயலாமை உங்களுள் கோபத்தைத் தூண்டுகிறது.
நீங்கள் திறமை வாய்ந்தவராகவும், ஆற்றலுள்ளவராகவும் இருக்கும் பொழுது ஏன் கோபப்பட வேண்டும்? ஒரு எறும்பின் மீதோ அல்லது ஈயின் மீதோ உங்களுக்கு கோபம் ஏற்படுவதில்லை. நீங்கள் உங்களைவிட தாழ்ந்த நிலையில் உள்ளவர் மீதோ, ஒன்றின் மீதோ கோபப்படுவது இல்லை நம்மைவிட சிறந்தவர் அல்லது சக்தி வாய்ந்த ஒருவர் மீதுதான் கோபம் ஏற்படுகிறது. நம் திறனுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட ஒன்றை எதிர்கொள்ளும் பொழுது நமக்கு கோபம் ஏற்படுகிறது. ஒருவர் நாம் சொல்வதைக் கேட்பதில்லை என்று நமக்குத் தோன்றும் பொழுது கோபம் ஏற்படுகிறது. நம்மைவிட நம் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக கருதும் பொழுது, கோபம் எழுகிறது. எனவே கோபம் எழும்பொழுது வேதனை உண்டாகிறது.
கோபத்திலிருந்து விரைவில் விடுபடுவது அவசியம்
பேச்சிலும் செயலிலும் முழுமை பெற வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் கோபத்திற்குக் காரணமாகிறது. செயலில் முழுமை என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. பேச்சிலும், மனதளவிலும் மிகச்சரியாக செயல்படுவது என்பது 100 சதவிகிதம் சாத்தியமாக இருப்பினும் செயலில் 95 சதவிகிதமே சாத்தியமானது.
நீங்கள் கோபப்படும் தருணங்கள் எவ்வளவு கால அவகாசத்தில் ஏற்படுகின்றன? நீங்கள் கோபப்படும் தருணங்களின் எண்ணிக்கை உங்கள் சக்திக்கு எதிர்விகிதத்தில் உள்ளது. நீங்கள் எத்துணை சக்தி வாய்ந்தவராக இருக்கிறீர்களோ அத்துணை குறைவாக கோபத்திற்கு உள்ளாவீர்கள். எத்துணை பலவீனமாக உள்ளீர்களோ அத்துணை அதிகமாக கோபத்திற்கு உள்ளாவீர்கள். இதனை நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டும் : உங்களது சக்தி எதில் உள்ளது? எதனால் அதை இழக்கிறீர்கள்?
உங்களது தொலைநோக்கு மற்றும் வாழ்க்கையைப் பற்றியும், உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவு இரண்டாவது காரணியாகும். இதுவும் ஒரு பங்கு வகிக்கிறது. மூன்றாவது காரணி உங்களது பற்றுதல் – பற்றுதலே உங்களுக்குள் கோபத்தை எழச் செய்கிறது. நீங்கள் வேண்டுவனவற்றின் மீது உள்ள உங்கள் பந்தத்தில் தீவிரம், உங்கள் கோபத்திற்குப் பின்னால் இருப்பது உங்கள் ஆசையே, இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுகம், ஆசை அல்லது அகந்தையினால் ஏற்படும் கோபம் வேறு வகையானது. ஆனால், உங்கள் கோபம் கருணையாலோ, எதையாவது சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தாலோ வருகிறதானால், அது வேறுபட்டது. இத்தகைய கோபம் ஒரு தவறான உணர்வு அல்ல.
கோபத்தின் சுழற்சியை முறியடித்தல்
தாங்கள் தான் சரி என்று மக்கள் நினைப்பதால் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. தர்மத்தின் பாதையில் செல்கிறோம் என்ற எண்ணம் அவர்களுக்கு சண்டையிடுவதற்கான வலுவைத் தருகிறது. தவறு செய்வதாக ஒருவர் உணர்ந்தால் அவருக்கு சண்டையிடுவதற்கு பலம் இருக்காது. இந்த,தர்மத்தைப் பற்றிய குறுகிய,வரையரைக்குட்பட்ட புரிதல் உலகில் மிக மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. .உலகின் எல்லா போர்களும் இதனால் தொடங்கப்பட்டன.
நம்முடைய கண்ணோட்டத்தை விரிவாக்கி, விருப்பு வெறுப்பின்றி நிஜத்தை ஆராய்ந்து நோக்கும் பொழுது, நாம் காணக்கூடியது வேறொன்றாக இருக்கும். தர்மத்தின் பாதையைக் கடைப்பிடிப்பது பற்றிய நமது எண்ணமானது நம் மனக் கருத்தேயாகும்; எந்த ஒரு விளைவின் உண்மையான காரணமும் அதற்கு அப்பாற்பட்டது. அந்த உண்மையான மற்றும் அறுதியான காரணத்தைக் கண்டறிவதே ஞானமாகும்.
இந்த சுழற்சியை முறியடிக்க சில ஆலோசனைகள்:
கோபத்தில் உள்ளோரைப் பட்டாசுகளைப் போல் நடத்துங்கள்
கோபத்தோடு உள்ள ஒருவரை பட்டாசுப் போல கருதுங்கள். தீபாவளி சமயத்தில் பட்டாசுகளைப் பற்ற வைத்து, அங்கிருந்து விலகிச் சென்று,தூரத்திலிருந்து அவற்றை ரசிக்கிறோம்.சிறிது நேரத்திற்குப் பிறகு சிறிது நேரத்தில் அது அணைந்துவிடும். கோபமுள்ள மனிதரும் அது போலத்தான். ஆனால் நாம் பட்டாசுகளை வீட்டினுள் பற்ற வைப்பதில்லை; விலை மதிப்புள்ள எதையும் அதனருகில் வைப்பதில்லை. எனவே கோபமாக இருப்பவர்களைச் சுற்றி மதிப்பு மிக்க பொருட்கள் இல்லாதவாறுப் பார்த்துக் கொள்ளுங்கள். கோபமுள்ளவர்கள் இல்லையென்றால், இந்த உலகில் சுவாரஸ்யமே இருக்காது! என்பது இல்லை. எனவே உங்களைக் காத்துக்கொண்டு; தூரத்திலிருந்து கவனியுங்கள். அவர்களுடன் நேரடியாக ஈடுபடாதிருந்தால் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.
விழிப்புணர்வுடன் கோபத்தை வெல்லுங்கள்
நீங்கள் கோபப்படும் பொழுது அதனை வெளிப்படுத்தாமல் இருந்தால், நீங்கள் திணறிப்போவீர்கள். அதற்கு மாறாக, அதனை வெளிப்படுத்தும் பொழுது, நீங்கள் குற்ற உணர்வை அனுபவிப்பீர்கள். எனவே இவ்விரண்டையும் கடந்து செல்வதே விவேகமாகும். வாழ்க்கையை வேறொரு கண்ணோட்டத்துடன் நோக்குங்கள்.
உங்களது உணர்வுகளை அலங்காரங்களாகக் காணுங்கள்- கேக்கின் மீதுள்ள விதவிதமான நிறங்களும், வடிவமைப்புகளும் கொண்ட ஐசிங்கைப் போல. அந்த அலங்காரம், அந்த கேக்கின் உண்மையான தரத்திற்கோ சுவைக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது. அதேபோல, உங்கள் உணர்வுகள் உங்களை கட்டுப்படுத்தவோ, குற்றவுணர்ச்சி அளிக்கவோ கூடாது. உங்களது விழிப்புணர்வு விரிவடையும் பொழுது இது நிகழ்கிறது.
நவராத்திரி சமயத்தில், நமது மனதைப் பக்தி அலையில் மூழ்கடிப்பதற்காக, சத்சங்கங்களில் ஈடுபடுகிறோம் மற்றும் உபவாசங்களைக் கடைப்பிடிக்கிறோம். இவ்விதமாகக் கோபம் மற்றும் இதர எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் எல்லா வாய்ப்புகளையும் தவிர்க்கலாம்.
ஆக்ரோஷத்தை உங்கள் வலிமையினால் சமாளியுங்கள்
உங்களுக்குள் ஆக்ரோஷம் ஏன் எழுகிறது? உங்களை விட வேறொருவர் வலிமை வாய்ந்தவராகத் தோன்றும் பொழுது நீங்கள் ஆக்ரோஷம் அடைகிறீர்கள். இல்லையா? இதைப் பற்றி யோசியுங்கள். ஒருவர் உங்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவராக இருக்கும் பொழுது அல்லது உங்களைவிட வலிமையற்றவராகவோ இருக்கும் பொழுது நீங்கள் ஆக்ரோஷம் அடைவதில்லை. ஆனால் ஒருவர் உங்களுக்கு சமமானவர் என்றோ அல்லது உங்களை விட சற்று பலம் கூடுதலாகவோ அல்லது குறைந்தவராகவோ நினைக்கும் பொழுது ஆக்ரோஷம் அடைகிறீர்கள். இது உங்களது வலிமையைப் பற்றிய அறியாமையாலேயே. விழித்தெழுங்கள் ! நீங்கள் யார், யாரிடம் கோபம் கொள்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
ஒரு கொசுவினை அழிக்க முற்படும் பொழுது நீங்கள் ஆக்ரோஷம் அடைவதில்லை. அது ஒரு பெரும் பொருட்டல்ல; வெறும் கொசுதான் என்பது உங்களுக்குத் தெரியும். அது போலவே உங்களது வலிமையை அறிந்து கொள்ளுங்கள்.
சிறிதளவு குறைபாடு மனதை ஆரோக்கியமாக வைக்கும்
முழுமையின் அதீத எதிர்பார்ப்பு, கோபம் மற்றும் வன்முறையை மனதில் எழச் செய்யும். குறைபாட்டை ஏற்றுக் கொள்வது கடினமாகிறது. சில நேரங்களில் விஷயங்கள் திட்டமிட்டபடி செல்லாமல் போகலாம். அதனைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
சிறிதளவு குறைபாட்டிற்கு இடம் கொடுப்பது அவசியம். இது உங்களுக்கு அதிக பொறுமையைத் தரும். பொறுமை அதிகரித்த நிலையில், கோபம் குறைவாக இருக்கும். கோபம் குறைந்த நிலையில் வன்முறை நிகழாது.
அன்பிற்கு ஞானம் என்ற கவசத்தைக் கொடுங்கள்
நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என்றால் அது உங்களைப் புண்படுத்துகிறது. ஏனெனில், யாரோ தெருவில் போகும் ஒருவர் உங்களைப் புண்படுத்தவில்லையே! நீங்கள் நேசிக்கும் ஒருவர் அல்லது உங்களுக்கு நெருங்கியவராக நீங்கள் கருதும் ஒருவர், உங்களை நலன் விசாரிக்கவில்லை அல்லது உங்களைக் கண்டு புன்னகைக்கவில்லை என்னும் பொழுது நீங்கள் வருத்தப்படுகிறீர்கள்.
மக்கள் மனம் புண்படும்பொழுது, மனம் இறுகி, கல்நெஞ்சோடு, கொடூரமாக நடந்துக் கொள்கிறார்கள். அன்பு ஒரு சிறந்த, மென்மையான உணர்வாகும். இது எளிதில் புண்படக்கூடியது. இது சட்டென்று வெறுப்பு, கோபம், குற்றம் சாட்டல், வன்மம், கசப்பு அல்லது பொறாமையாக மாறிவிடும்.
இத்தனை மென்மையான உணர்வு சமூகத்தால் சிதைக்கப்படாமல் பாதுகாப்பது எப்படி? – ஞானம். இதுவே அன்பைப் பாதுகாக்கக் கூடிய சரியான கவசமாகும். ஞானம் என்பது அன்பின் தூய்மையைப் பாதுகாக்கிறது, அன்பின் தூய்மையைப் பராமரித்து, எல்லா வித சிதைவுகளிலிருந்தும் விலக்கி வைக்கிறது. துறவிகளின் அன்பு களங்கமற்றது. ஏனெனில் அதை பாதுகாக்க ஞானம் என்ற கவசம் உள்ளது.
மேலும், சாதனாவில் ஆழ்ந்து செல்லும் பொழுது, அன்பை மிக நுண்ணிய நிலைகளில் உணர முடியும்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒன்றைப் பற்றி கோபப்படுவது முட்டாள்தனத்தின் ஒரு அறிகுறி ஆகும். நிகழ் காலத்தில் நடக்கும் ஒன்றின் மீது உங்களுக்கு கோபம் ஏற்படுகிறது. ஆனால் கோபத்திற்கு கோபத்துடன் எதிர்வினையாற்றுவது அறிவீனம் ! ஒருவர் தவறுக்கு மேல் தவறு செய்வாராயின், அவரிடம் கோபம் கொள்ளலாம். ஆனால் அது உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள்.
ஆரோக்கியமான கோபம் (Arogya vardhak gussa) – நீரில் வரையப்பட்ட கோடானது இருக்கும் கால வரை அளவு மட்டுமே நிலைத்திருக்கும் கோபமானது, ஆரோக்கியமான கோபமாகும். ஒருவர் தவறு செய்யும் பொழுது கோபப்படாமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. ஆனால், அதனால் ஆட்கொள்ளப்படுவது புத்திசாலித்தனம் அல்ல. சாதனா மனதை விகாரங்களில் அதாவது உங்களை உங்களிடமிருந்து பிரிக்கும் சிதைவுகளில் இருந்து காத்து உங்களை நீங்களாக இருக்கச் செய்கிறது.
கோபம் எப்போது நல்லதும் அவசியமானதும் ஆகிறது ?
சில சமயங்களில் நமது கோபத்தை வெளிப்படுத்துவது அவசியமாகிறது வெளிக்காட்டுவதற்காக மட்டுமே உள்ள கோபம் ஒரு ஆயுதமாக உபயோகிக்கப்பட வேண்டும். அப்படியென்றால், நீங்கள் கோபப்படுகிறீர்கள், ஆனால் உள்ளுக்குள் அமைதியாகவும்,சலனமற்றும் இருக்கிறீர்கள். இத்தகைய கோபத்தின் வெளிப்பாடு உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தாது. நீங்கள் பதற்றமாகவும், மனக்கொதிப்புடனும் இருக்க மாட்டீர்கள்.
ஒரு தாய் தன் குழந்தையை ஏதாவது ஒரு காரணத்திற்காக கடிந்து பேசுகிறாள். ஆனால் அதே சமயம் தன் கணவனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். அவள் ஒருவரை சினத்துடன் கடிந்து கொண்டே மற்றொருவரைக் கண்டு புன்னகைக்கலாம். இந்த கோபம் அவளைத் தொந்தரவு செய்யாது, அவளுக்கு தலைவலியை ஏற்படுத்தாது. அது அவளுடைய உறக்கத்தைக் கெடுக்காது. எனவே வெளிப்படுத்துவதற்காக மட்டுமே உபயோகிக்கப்படும் கோபம் சரியானதே.
மற்றவரின் நலனுக்காக கோபப்படுவது சரி, ஆனால் சுயநலத்துக்காக அல்ல. .அது உங்களுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கும். நம்மை ஒருவர் அவமதிக்கிறார் என்பதற்காக கோபப்படுவது உங்களுக்கு மட்டுமே தீங்கை விளைவிக்கும். வேறொருவருக்கும் அல்ல.ஒருவர் தீங்கிழைப்பதைத் தடுப்பதற்காக கோபம் கொள்வது உண்மையில் நன்மை பயப்பதாகும்.
‘நான்,என் அல்லது எனது’ ஆகியவற்றால் எழும் கோபம் வேதனைக்கும், விரக்திக்கும் காரணமாகிறது. ஒருவர் தனது பாதையில் முட்டாள்தனமாக செயல்படுகிறார் என்பதை நீங்கள் உணர்ந்து ,அவரிடம் கோபம் கொள்கிறீர்கள் (அவரைத் திருத்துவதற்காக). அந்தக் கோபம் உண்மையில் நன்மை பயப்பதாகும்.
கடந்த காலத்தைப் பற்றிய அடக்கப்பட்ட கோபம்
கோபம் என்பது ஒரு தனிப்பட்ட ஆற்றல் அல்ல. ஆற்றல் என்பது ஒன்றேயாகு ம்- இது கோபம், இரக்கம், அன்பு மற்றும் பெருந்தன்மை ஆகியவையாக வெளிப்படுகின்றது. இது இரண்டு வேறுப்பட்ட ஆற்றல்கள் அல்ல; மாறாக, இது வெவ்வேறு வண்ணங்களில் திகழும் ஒரே சக்தியாகும் – ஒரே மின்சாரம், குளிர் சாதன பெட்டி, மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகளுக்கு உபயோகப்படுவது போல.
உங்கள் கோபத்தை அடக்கிவிட்டீர்கள் என்று எண்ண வேண்டாம். உங்களுடைய ஞானம் விருத்தியாகும் பொழுது, உண்மையையும் யதார்த்தத்தையும் தெளிவாகப் பார்ப்பதற்கான கண்கள் உங்களுக்குத் திறக்கப்படும். அப்போதுதான், கடந்த காலத்தில் நீங்கள் கொண்டிருந்த கோபம் என்பது, உங்கள் அறிவீனம் மற்றும் ஞானத்தின் குறைபாடு ஆகியவற்றினால் என்பதை உணர்வீர்கள்.
கோபத்தை அறிவு பூர்வமாக கட்டுப்படுத்துதல்
கோபத்தை அறிவு பூர்வமாக கட்டுப்படுத்தும் பொழுது நீங்கள் குற்ற உணர்வை அனுபவிக்கிறீர்கள். அதனை வெளிப்படுத்தவில்லை என்றால் அடக்கிவிட்டதாக எண்ணுகிறீர்கள். இவ்விரண்டையும் கடப்பதற்கு வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில் நோக்கவும் – ஒரு பரந்த கண்ணோட்டத்தை மேற்கொள்ளவும்.
உங்கள் வாழ்க்கையின் சூழல் அமைப்பை, மாற்றிக்கொள்ளும் பொழுது, நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு போராட்டமாக காண மாட்டீர்கள். இந்த உணர்வுகள் வாஸ்தவத்தில் உங்களை பந்தப்படுத்துவதோ, குற்ற உணர்வில் ஆழ்த்துவதோ, திணர வைப்பதோ இல்லை என்பதை உணர்வீர்கள். இவை யாவும் அலங்காரங்களே. உண்மையில் அலங்காரங்கள் பொருளின் தன்மையை பாதிப்பதில்லை – கேக்கின் மீது ஐசிங்கை (பனிப் பூச்சு) வெவ்வேறு நிறங்களில் உண்டாக்குவதைப் போல.
இந்து மத புராணங்களில் மஹா விஷ்ணு, தனது கோபத்துடன் போராடிய ஒரு கதை உள்ளது. மஹா விஷ்ணுவின் காதில் சேர்ந்த மெழுகிலிருந்து பிறந்த மது, கைடபா என்ற இரண்டு அரக்கர்கள் அவரைத் தொல்லைப் படுத்தினார்கள். மது என்றால் கோபம், கைடபா என்றால் வெறுப்பு. மஹா விஷ்ணு இவர்களுடன் ஆயிரம் வருடங்கள் போராடினார். ஆயினும் அவர்களை வெல்ல முடியவில்லை.
எனவே தேவிக்கு- தெய்வீக உணர்விற்கு அழைப்பு விடுத்தார். இறை உணர்வு எழும்பொழுது, கோபமும் வெறுப்பும் கரைந்து விடுகின்றன. நீரின் உதவியுடன் மது கைடபர்களை தேவி அழித்தார். இங்கு நீர் என்பது அன்பைக் குறிக்கிறது. எனவே அன்பின் உதவியுடன், இறை உணர்வு கோபத்தையும், வெறுப்பையும் அழித்தது. உணர்வு நிலையில் அன்பு நிறையும் பொழுது, கோபம், வெறுப்பு இருப்பது இல்லை – நித்திய அன்பு மட்டுமே நிலைத்திருக்கும்.
விழிப்புணர்வை எப்படி உயர்த்துவது
முழு விழிப்புணர்வுடன் வெளிப்படுத்தப்படும் கோபம் ஒரு வகையானது. .மற்றொரு வகை ,விழிப்பணர்வு இன்றி அறியாமையோடு வெளிப்படுத்தப்படுவது.
எனவே கோபம் எழுவதை உணரும்பொழுது, அதற்கு சற்றுமுன், உங்கள் உடலில் சில உணர்வுகளை அனுபவிக்கிறீர்கள் – உங்கள் உச்சந்தலையில் அல்லது நெற்றியில் அல்லது தலையின் பின்புறத்தில் ஒரு சிலிர்ப்பு உணர்வு அல்லது கழுத்து அல்லது தோள்பட்டை பகுதியில் விறைப்பு. அந்த அனைத்து உணர்வுகளையும் அதே நொடியில் கவனிப்பது ஒரு திறனாகும். அந்த உணர்வுகளை உற்று நோக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டால் நீங்கள் கோபத்தை எளிதில் வெல்ல முடியும். இதனால் தான் தியானப்பயிற்சி முக்கியமாகிறது. தியானத்தினாலன்றி வேறு எதனாலும் கோபத்தை அடக்க முடியாது.
தியானத்தின் செயல்பாடு
முன்பு நீங்கள் கோபப்படும் பொழுது உங்கள் கோபம் வெகு நேரம் நிலைத்திருக்கும். நீங்கள் சமீபத்தில் தியானம் செய்யத் தொடங்கியிருந்தால், உங்களுக்குக் கோபம் இப்பொழுதும் ஏற்படுகிறது. ஆனால் அது விரைவில் அடங்கி விடுகிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நான்கு ஐந்து நிமிடங்களுக்குள் உங்கள் கோபம் மறைந்து விடுகிறது அல்லவா? ஆம் என்றால், அதை நீங்கள் மிகப் பெரிய நேர்மறை முன்னேற்றமாகவே பார்க்க வேண்டும்.