யோகப்பயிற்சியின் ஆரம்பநிலையில் இருக்கிறீர்கள் என்றால், கீழ்காணும் யோகாசனங்கள் உங்கள் காலையைத் தொடங்க சிறந்தவை. இவை ஆரம்பநிலை பயில்வோருக்கு ஏற்றவையாக அடையாளம் காணப்பட்டிருகின்றன. தானாகவேயோ அல்லது ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலுடனோ இவ்வற்றை நீங்கள் எளிதாக செய்யலாம்.
கீழ்காணும் நிலைகளில் செய்யக்கூடிய நான்கு அடிப்படை யோகாசனத் தொகுப்புகளை தருகிறோம்:
- நின்ற நிலை யோகாசனங்கள்
- அமர்ந்த நிலை யோகாசனங்கள்
- வயிற்றின் மேல் படுத்து செய்யும் யோகாசனங்கள்
- முதுகின் மேல் படுத்து செய்யும் யோகாசனங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகாசனங்களை அதே வரிசையில் பின்பற்றப் பரிந்துரைக்கிறோம்:
- நின்ற நிலை ஆசனங்களில் தொடங்கவும்
- பின்னர் அமர்ந்த நிலை ஆசனங்களை செய்யவும்
- பின்னர், வயிற்றின் மேல் படுத்து செய்யும் ஆசனங்களுக்குச் செல்லவும்
- இறுதியாக, முதுகின் மேல் படுத்து செய்யும் ஆசனங்களுடன் முடிக்கவும்
நின்ற நிலை யோகாசனங்கள்
1. கோணாசனம்

பக்கவாட்டில் சாயும் ஆசனமான கோணாசனத்திற்கு ஒரு கையை மேலே வான் நோக்கித் தூக்கவும். மற்றொரு கையை காலின் மேல் ஓய்வாக வைத்திருக்கவும்.
நன்மைகள்: நெகிழ்வுத்தன்மை, சமநிலை மற்றும் வலிமையை அதிகரிக்கிறது. முதுகுத்தண்டிலும், இடுப்பிலும் உள்ள அழுத்தத்தையும், இறுக்கத்தையும் தளர்த்துகிறது. மலச்சிக்கலை சரி செய்யவும் இது உதவுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால், இடுப்பு, முதுகுத்தண்டு அல்லது கழுத்தில் சமீபத்திய அல்லது நாள்பட்ட காயம் உள்ளவர்கள். உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள். ஒற்றைத் தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள்.
கோணாசனம் – 2 என்பது கோணாசனத்தின் மற்றொரு வடிவமாகும். இரண்டு கைகளையும் பயன்படுத்தி பக்கவாட்டில் சாயவும்.
2. கடிசக்ராசனம்

நின்ற நிலையில் முதுகுத்தண்டைத் திருப்பிச் செய்யும் கடிசக்ராசனம், முதுகுத்தண்டு மற்றும் இடுப்புக்கு நீட்சியளிக்கவும், வளைக்கவும் உதவுகிறது.
நன்மைகள்: இந்த ஆசனம் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. முதுகுத்தண்டு, கழுத்து, மற்றும் தோள்களை வலுப்படுத்துகிறது. மேசையில் அமர்ந்தபடியே வேலை செய்வோருக்கு சிறந்த நன்மைகளைத் தருகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: குடலிறக்கம் என்னும் ஹெர்னியா உள்ளவர்கள். முதுகுத்தண்டில் பிரச்சினை உள்ளவர்கள், முழங்கால் காயம் உள்ளவர்கள். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள்.
3. ஹஸ்தபாதாசனம்

நின்றபடி முன்புறம் குனிந்து செய்யும் ஹஸ்தபாதாசனம் ஆரம்பநிலை யோகாவின் அடிப்படை ஆசனங்களில் ஒன்றாகும். உடலை முன்புறமாக வளைத்து, கைகளை பாதங்களுக்கு நெருக்கமாக தரையில் ஊன்றவும்.
நன்மைகள்: நரம்பு மண்டலத்திற்கு சக்தியூட்டுகிறது. முதுகுத்தண்டை வளையும் தன்மையுடன் வைக்கிறது. முதுகில் உள்ள தசைகளுக்கு நீட்சியளிக்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முதுகில், கழுத்தில் அல்லது காலில் சமீபத்திய அல்லது நாள்பட்ட காயம் உள்ளவர்கள். முதுகுத்தண்டில் பிரச்சினை உள்ளவர்கள்.
4. அர்தசக்ராசனம்

நின்ற நிலையில், அரை சக்கர வடிவத்தில் அல்லது அரை பிறை (அர்தசந்திர) வடிவத்தில் உடல் இருக்குமாறு கைகளையும் கால்களையும் பின்னோக்கி வளைக்கவும்.
நன்மைகள்: உடலின் முன்பகுதிக்கு நீட்சியளித்து, கை மற்றும் தோள் தசைகளை முடுக்குகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கைகள், மணிக்கட்டு, தோள்கள், கழுத்து, முதுகு அல்லது இடுப்பில் சமீபத்திய அல்லது நாள்பட்ட காயங்கள் இருப்பவர்கள். சமநிலையில் இருப்பதையோ பின்புறம் சாய்வதையோ கடினமாக்கும் மருத்துவப் பிரச்சினைகள் இருப்பவர்கள்.
5. த்ரிகோணாசனம்

கால்களுக்கிடையே இடைவெளி விட்டு நிற்கவும். ஒரு கையை பாதத்தை நோக்கி நீட்டவும். மற்றொரு கையை வானை நோக்கி உயர்த்தி, ஒரு முக்கோண வடிவத்தை உருவாக்கவும்.
நன்மைகள்: முக்கோண ஆசனம் என்னும் த்ரிகோணாசனம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. பதட்டம், அழுத்தம் மற்றும் முதுகு வலியைக் குறைக்கிறது. உடல் மற்றும் மனத்தின் சமநிலையை பேணுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால், கால், இடுப்பு அல்லது முதுகில் சமீபத்திய அல்லது நாள்பட்ட காயம் உள்ளவர்கள். இதய நோய், தலைச்சுற்றல் அல்லது சமநிலை பேணுவதை கடினமாக்கும் மருத்துவ பிரச்சினைகள் இருப்பவர்கள்.
6. வீரபத்ராசனம்

இந்த ஆசனத்திற்கு ஒரு காலை முன்புறமும், மற்றொன்றை பின்புறமும் வைத்து நிற்கவும். இரு கைகளையும் பக்கவாட்டில் தோள்களூக்கு நேராக நீட்டவும்.
நன்மைகள்: போர்வீரன் ஆசனம் என்னும் வீரபத்ராசனம் ஸ்டேமினாவை, அதாவது தாக்குபிடிக்கும் சக்தியை, அதிகரிக்கிறது. கைகளை வலுப்படுத்துகிறது. தைரியத்தையும், நளினத்தையும் கொடுக்கிறது. அமர்ந்துகொண்டே வேலை செய்பவர்களுக்கு இது சிறந்த ஆசனமாகும். ஃப்ரோஸன் ஷோல்டர் என்னும் உறைந்த தோள்பட்டைகளுக்கும் இது நன்மை பயக்கும்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால், கால், இடுப்பு அல்லது முதுகில் சமீபத்திய அல்லது நாள்பட்ட காயம் உள்ளவர்கள். உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள்.
7. ப்ரசரித பாதஹஸ்தாசனம்

ப்ரசரித பாதஹஸ்தாசனம் செய்ய, இரு கால்களிடையே நிறைய இடைவெளி விட்டு நிற்கவும். உடலின் மேற்பகுதியை இடுப்பிலிருந்து வளைத்து தரையை நோக்கி குனியவும். கைகளை தலைக்கு மேல் நீட்டி கைவிரல்களை கோர்க்கவும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்கட்டும்.
நன்மைகள்: இது ஓய்வுதரும் ஆசனமாகவும், அடிப்படை ஆசனமாகவும் கருதப்படுகிறது. பின் தொடையின் தசைகள், இடுப்பு மற்றும் கீழ் முதுகிற்கு நீட்சியளித்து மனதை அமைதிப்படுத்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கீழ் முதுகில் வலி, முழங்கால் காயம் அல்லது பின் தொடை தசை நார் இறுக்கம் ஆகியவை இருந்தால், மேல் உடலை தாங்கவும், கீழ் முதுகில் அழுத்தத்தை குறைக்கவும் கட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், கழுத்திலோ முதுகுத்தண்டிலோ காயம் உள்ளவர்கள் முன்புறம் அதிகம் வளைவதைத் தவிர்த்து, தலையை உயர்த்தியே வைத்திருக்கவும். கர்ப்பகாலத்தின் இறுதி மூன்று மாதங்களில் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். அல்லது கருவிகளின் துணையோடு உதவியோடு மாற்றி அமைத்துக் கொள்ளவும்.
8. வ்ருக்ஷாசனம்

யோக வ்ருக்ஷாசனம் – ஒரு காலை மடித்து தலைக்கு மேல் கைகளை குவித்து மரம் போன்ற தோற்றத்தில் நிற்கும் ஆசனம்.
இது கால்களைப் வலுப்படுத்தி சமநிலை மற்றும் உறுதித்தன்மையை பேணுகிறது. வ்ருக்ஷாசனம் செய்வதற்கு, ஒரு காலை நன்றாக தரையில் ஊன்றி நிற்கவும். மறு காலை மடித்து, ஊன்றிய காலின் தொடையின் மேல் பாதத்தை வைக்கவும். இது ஒரு மரத்தின் அடிப்பகுதியைப் போல இருக்கும். கைகளை தலைக்கு மேல் தூக்கிக் குவிக்கவும்.
நன்மைகள்: ஒருமுகத்தன்மையை அதிகரிக்க வ்ருக்ஷாசனம் சிறந்த பயிற்சியாகும். இது கால்களை வலுப்படுத்துகிறது, சமநிலையை பேணுகிறது, மற்றும் இடுப்பை விரிவடைய செய்கிறது. இடுப்பு பகுதியிலிருந்து தொடைகளுக்கு பரவும் ஸியாடிகா வலியை குறைக்க உதவுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால், கணுக்கால், அல்லது இடுப்பில் காயங்கள் உள்ளவர்கள். உயர் இரத்த அழுத்தம், வெர்டிகோ தலைச்சுற்றல் உள்ளவர்கள்.
9. பஷ்சிம நமஸ்காராசனம்

பஷ்சிம நமஸ்காராசனத்திற்கு, கைகளை முதுகின் பின்புறம் கொண்டு சென்று பிரார்த்தனை செய்வதுபோல் கூப்பவும். விரல்நுனிகள் மேல் நோக்கி இருக்கட்டும்.
நன்மைகள்: மார்பையும், தோள்களையும் விரிவடைய செய்கிறது. உடற்பாங்கை மேம்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: தோள்பட்டை காயங்கள், தோள்களைச் சுற்றியுள்ள தசைகளில் தோள்பட்டை எலும்பு உராய்வது (ரோட்டேட்டர் க்ஃப் இம்பிஞ்ச்மெண்ட்) ஆகியவை இருந்தால் இந்த ஆசனத்தை தகுந்த மாற்றங்களுடன் செய்யவோ, அல்லது முற்றிலும் தவிர்க்கவோ வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில், தோள்களில் அழுத்தத்தைக் குறைக்க கைகளுக்கு இடையே ஒரு பட்டையையோ, அல்லது ஒரு துண்டையோ வைத்துக்கொள்ளவும்.
10. கருடாசனம்

கருடாசனத்தில் கழுகுபோல் தோற்றமளிக்க கைகளையும், கால்களையும் பின்னிக் கொள்ளவும். கால்கள், கணுக்கால்கள் மற்றும் ஆதார தசைகளை (கோர் மஸில்ஸை) வலுப்படுத்தும் இந்த ஆசனத்தை செய்வதற்கு ஒருமுகத்தன்மையும், நிலைத்தன்மையும் தேவை.
நன்மைகள்: சமநிலையை பேணி, ஒருங்கிணைப்பையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்தும் ஓர் ஆசனம் இது. இடுப்பு, தொடைகள் மற்றும் மேல் முதுகுக்கு இது நீட்சியளிக்கிறது. ருமாடிசம் என்னும் முடக்குவாதத்திற்கும், ஸியாடிகாவுக்கும் சிறந்த யோகாசனம் இது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால் காயம், கழுத்து வலி மற்றும் கீழ் முதுகில் பிரச்சினை உள்ளவர்கள்.
11. உத்கடாசனம்

ஆரம்பநிலை பயில்வோருக்கான உத்கடாச்னம் என்னும் நாற்காலி ஆசனம், கால்கள், முதுகு மற்றும் ஆதார தசைகளை வலுப்படுத்தும் ஆசனமாகும். இரு கால்களையும் நன்றாக ஊன்றி, இடுப்பைத் தாழ்த்தி, முழங்காலை வளைத்து, இருகைகளையும் நீட்டி, ஒரு கற்பனையான நாற்காலியில் உட்கார்வதுபோல் செய்யவும்.
நன்மைகள்: கீழ் முதுகையும், மேல் உடற்பகுதியையும் வலுப்படுத்துகிறது. உடலுக்கு சமநிலை அளிக்கிறது. மனவுறுதியை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால், கணுக்கால் காயம் உள்ளவர்கள், கீழ் முதுகில் பிரச்சினை உள்ளவர்கள்.
அமர்ந்த நிலை ஆசனங்கள்
1. ஜானு சிரசாசனம்

ஜானு சிரசாசனம் என்பது பின் தொடை தசை நார், கீழ் முதுகு மற்றும் இடுப்புக்கு நீட்சியளிக்கும் யோகாசனமாகும். ஒரு காலை தரையில் நீட்டி அமரவும். பாதநுனி மேல் நோக்கி இருக்கட்டும். மற்றொரு காலை மடித்து, பாதம் நீட்டி இருக்கும் கால்தொடையின் உள்பகுதியைத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும். பின்னர் நீட்டி இருக்கும் காலின் மேல் உடலை வளைத்து, கைகளால் பாதத்தைத் தொட முயற்சிக்கவும்.
நன்மைகள்: கீழ் முதுகுக்கு நீட்சியளித்து, வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை மசாஜ் செய்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கால்களில் காயம் அல்லது கீழ் முதுகு பிரச்சினைகள் உள்ளவர்கள்
2. பஷ்சிமோத்தானாசனம்

இது பின் தொடையின் தசை நார், கீழ் முதுகு மற்றும் முதுகுத்தண்டிற்கு நீட்சியளிக்கும் யோகாசனம். இந்த ஆசனத்தை செய்ய, இரு கால்களையும் முன்புறம் நீட்டி அமரவும். உடலை முன்புறமாக கால்களின் மேல் வளைத்து, இரு கைகளையும் கணுக்கால் அல்லது பாதத்தை நோக்கி நீட்டவும்.
நன்மைகள்: பஷ்சிமோத்தானாசனம் இடுப்பு மற்றும் அடிவயிற்றின் உறுப்புகளை மசாஜ் செய்கிறது, தோள்பட்டையை முடுக்குகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கீழ் முதுகு அல்லது பின் தொடை தசை நார் காயம் உள்ளவர்கள்.
3. பூர்வோத்தானாசனம்

பூர்வோத்தானாசனம் கைகள், தோள் மற்றும் ஆதார தசைகளுக்கானது. உடலின் எடையை கை மற்றும் கால்களில் தாங்கி, மார்பு மற்றும் இடுப்புப் பகுதிகளை மேல் நோக்கி உயர்தவும்.
நன்மைகள்: தைராய்டு சுரப்பியை தூண்டுகிறது, சுவாச செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: மணிக்கட்டு, தோள் அல்லது கழுத்தில் காயம் உள்ளவர்கள். கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
4. அர்த மத்ஸ்யேந்திராசனம்

இது முதுகுத்தண்டு மற்றும் இடுப்பை முறுக்கும் ஓர் ஆசனம். ஒரு காலை மடித்து மற்றொரு காலை அதன் மேல் குறுக்காக குத்துக்கால் இட்டு அமரவும். மடிந்திருக்கும் கால் புறமாக மேல் உடலை திருப்பவும். மற்றொரு கையை பின்புறமாகத் தரையில் ஊன்றவும்.
நன்மைகள்: இந்த ஆசனம் முதுகுத்தண்டை நெகிழ்வாக வைத்திருக்க உதவும். நுறையீரல்களுக்கு பிராண வாயுவின் விநியோகத்தை அதிகரிக்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கீழ் முதுகு அல்லது கழுத்தில் காயம் உள்ளவர்கள். கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
5. பத்தகோணாசனம்

இது இடுப்பு, தொடை மற்றும், இடுப்பும் தொடையும் இணையும் பகுதிக்கான ஆசனமாகும். அமர்ந்த நிலையில் பாதங்களின் அடிப்பகுதியை ஒன்றொடொன்று சேர்த்து வைக்கவும். பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் போல முழங்கால்களை வெளிப்புறமாக விரிக்கவும்.
நன்மைகள்: சிறுநீர்ப்பை பிரச்சினைகளுக்கு உதவுகிறது. மாதவிடாய் அசௌகரியங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால் காயம் அல்லது கீழ் முதுகில் பிரச்சினை உள்ளவர்கள். கருவுற்ற பெண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாத காலங்களில் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
6. பத்மாசனம்

பத்மாசனம் சுவாசப் பயிற்சிகளுக்கும் தியானத்திற்கும் பயன்படுத்தப்படும் ஆசனமாகும். இடது பாதத்தை வலது தொடை மேலும், வலது பாதத்தை இடது தொடை மேலும் வைத்து ஒரு ஸ்திரமான, சௌகரியமான நிலையில் அமரவும்.
நன்மைகள்: இது தியானத்திற்கு உகந்த ஆசனமாகும். மாதவிடாய் அசௌகரியங்களை தணிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. பதட்டத்தைத் தணிக்கவும் நீங்கள் இந்த ஆசனத்தை செய்யலாம்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால் அல்லது இடுப்பில் காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். கருவுற்ற பெண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாத காலங்களில் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
7. மார்ஜரியாசனம்

இது முதுகுத்தண்டு, கழுத்து மற்றும் இடுப்புக்கான ஆசனமாகும். உடலை ஒரு பூனையைப் போல மாறி மாறி நீட்டியும், வளைத்தும் இந்த ஆசனம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் எதிர் ஆசனமான பசு ஆசனத்துடன் இது தொடர்ச்சியாக ஒரே ஒழுக்கில் செய்யப்படுகிறது.
நன்மைகள்: மனதுக்கு ஒய்வளிக்கிறது. முதுகுத்தண்டை நெகிழ்வாக வைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மைக்கு இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்யலாம்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கழுத்து அல்லது கீழ் முதுகில் காயம் உள்ளவர்கள். கருவுற்றப் பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
8. ஏகபாத ராஜ கபோதாசனம்

இது இடுப்பு, தொடைகள், முதுகு மற்றும் மார்பு பகுதிக்கான ஆசனமாகும். இந்த ஆசனத்தில் உடல் கைகளாலும் முழங்கால்களாலும் தாங்கப் படுகிறது. ஒரு காலை உடலுக்கு பின்புறமாக நீட்டவும், மற்றொரு காலை உடலின் கீழ் வளைக்கவும்.
நன்மைகள்: இந்த ஆசனம் பதட்டத்தை தணித்து மன அழுத்தத்தை குறைக்கிறது. இடுப்பிலிருந்து தொடைகள் மற்றும் கால்களுக்கு பரவும் வலி இருப்பவர்களுக்கு இது சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால், இடுப்பு மற்றும் கீழ் முதுகில் காயம் உள்ளவர்கள். கருவுற்ற பெண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாத காலங்களில் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
9. சிசு ஆசனம்

சிசு ஆசனம் என்கிற குழந்தை ஆசனம் இடுப்பு, தொடைகள் மற்றும் கீழ் முதுகுக்கானது. தரையில் முட்டிப் போட்டு அமரவும். இரு முழங்கால்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கட்டும். உடலை முன்புறம் வளைத்து, தலையை விரிப்பின் மேல் ஓய்வாக வைக்கவும்.
நன்மைகள்: நரம்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும் இந்த ஆசனம், மலச்சிக்கலையும் தீர்க்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால் அல்லது கணுக்கால் காயம் உள்ளவர்கள். கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
10. சக்கி சலனாசனா

ஆட்டுக்கலில் மாவு திரிப்பது போன்ற செயல்பாடு கொண்ட சக்கி சலனாசனம் உடலுக்கு சிறந்த பயிற்சியாகும். இது மேல் உடலை வலப்புறமாகவும், பிறகு இடப்புறமாகவும் பல முறை சுழற்றிச் செய்யப்படுகிறது.
நன்மைகள்: அடி வயிற்றில் கொழுப்பை கரைக்க உதவும். செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. முதுகுத்தண்டை நெகிழ்வாக வைக்கிறது. முதுகிலும் கழுத்திலும் அழுத்தத்தை விடுவிக்கிறது. உடலில் இரத்தவோட்டத்தை மேம்படுத்துகிறது. மாதவிடாய் கால வலி நிவாரணத்திற்கும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முதுகில் அல்லது முழங்காலில் காயம் உள்ளவர்கள், முதுகுத்தண்டில் பிரச்சினை உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும். கர்ப்பமுற்ற பெண்களுக்கு இது பரிந்துரைக்கப் படுவதில்லை.
11. வஜ்ராசனம்

வஜ்ராசனம் தரையில் அமர்ந்து செய்யப்படுகிறது. தரையில் முட்டியிட்டு, குதிகால்களின் மேல் அமரவும். கால் விரல்கள் சேர்ந்தும், முழங்கால்கள் இடைவெளி விட்டும் இருக்கட்டும். கைகளை முழங்கால்களின் மேல் வைத்துக் கொள்ளவும். முதுகுத்தண்டு நேராக இருக்கட்டும்.
நன்மைகள்: இது தியானத்திற்கு உகந்த ஆசனமாகக் கருதப்படுகிறது. சாபிட்ட பின் இந்த ஆசனத்தை செய்வது செரிமானத்திற்கு உதவி, இரத்தவோட்டத்தை மேம்படுத்துகிறது. பதட்டம் மற்றும் அழுத்தத்தைத் தணிக்க உதவும் இந்த ஆசனம், முதுகு மற்றும் கால் தசைகளை வலுப்படுத்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முழங்கால், முதுகு அல்லது கணுக்காலில் காயம் உள்ளவர்கள்
12. கோமுகாசனம்

கோமுகாசனம் இடுப்பு, தொடை மற்றும் தோள்களுக்கான ஆசனமாகும். இந்த ஆசனத்தை செய்வதற்கு, ஒரு கையை உயர்த்தி தலைக்கு பின்புறமாக கீழ்நோக்கிக் கொண்டு செல்லவும். மற்றொரு கையை முதுகுக்கு பின்புறமாக வளைத்து மேல் முதுகை நோக்கிக் கொண்டு செல்லவும். இரு கைகளையும் ஒன்றை ஒன்று நோக்கிச் செலுத்தித் தொட முயற்சிக்கவும்.
நன்மைகள்: பதட்டம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இடுப்பிலிருந்து தொடைக்கு பரவும் வலியை குணப்படுத்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: தோள் அல்லது மணிக்கட்டில் காயம் உள்ளவர்கள். கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதங்களில் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
வயிற்றின் மேல் படுத்தவாக்கில் செய்யும் ஆசனங்கள்
1. வசிஷ்டாசனம்

சமநிலை பேணும் இந்த ஆசனம், கைகள், ஆதார தசைகள் மற்றும் இடுப்புக்கான ஆசனமாகும். இந்த ஆசனத்தில் உடலின் எடை ஒரு கையினால் தாங்கப்படுகிறது. தலையிலிருந்து கால் வரை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி, கால்களை நேராக நீட்டவும்.
நன்மைகள்: அடிவயிற்றை வலுப்படுத்துகிறது. சமநிலை பேண உதவுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: மணிக்கட்டு அல்லது தோளில் காயம் உள்ளவர்கள். கருவுற்ற பெண்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் மூன்று மாத காலங்களில் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
2. அதோமுக ஸ்வானாசனம்

அதோமுக ஸ்வானாசனம் கைகள், கால்கள், முதுகு மற்றும் ஆதார தசைகளுக்கானது. கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி, மேல் உடலை தலைகீழாக வளைக்கவும். இடுப்பை கூரையை நோக்கி உயர்த்தவும்.
நன்மைகள்: முதுகுத்தண்டிற்கு நீட்சியளிப்பதோடு, மனதையும் அமைதிப்படுத்துகிறது. தலைவலி, தூக்கமின்மை மற்றும் சோர்வைப் போக்க உதவுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: மணிக்கட்டு, முழங்கை மற்றும் தோள்களில் காயம் உள்ளவர்கள். கருவுற்ற பெண்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் மூன்று மாத காலங்களில் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
3. மகர அதோமுக ஸ்வானாசனம்

மகர அதோமுக ஸ்வானாசனம் அல்லது டால்ஃபின் பலகை ஆசனம் பெரும்பாலும் கீழ் நோக்கிய நாய் ஆசனத்திற்கு (அதோமுக ஸ்வானாசனத்திற்கு) தயாராகும் விதமாகச் செய்யப்படுகிறது. இந்த ஆசனத்தில் உடலின் எடையை புஜங்களும், முன்கைகளும் தாங்குகின்றன. கால்களை பின்னோக்கி நீட்டவும். முதுகை ஆர்ச் வடிவில் வளைக்கவும்.
நன்மைகள்: இது வலு மற்றும் சக்தியூட்டும் ஆசனமாகும். ஆதார தசைகளை வலுப்படுத்தவும், உடற்பாங்கை மேம்படுத்தவும், தோள்கள், கைகள் மற்றும் கால்களை நெகிழ்வாக வைக்கவும் இந்த ஆசனம் உதவுகிறது. சமநிலையையும், ஒத்திசைவையும் பேணுவதற்கும் இது ஒரு சிறந்த ஆசனம்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: மணிக்கட்டில் காயம் உள்ளவர்களும், கார்பெல் டனல் சிண்ட்ரோம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை சற்று மாற்றி செய்யவோ அல்லது முற்றிலுமாக தவிர்க்கவோ வேண்டும். இந்த நிலைகள் இருந்தால், கைகளை கட்டைகளின் மேலோ அல்லது சுறுட்டிய விரிப்பின் மேலோ வைத்து மணிக்கட்டில் அழுத்தம் கொடுப்பதைக் குறைக்கலாம்.
4. தனுராசனம்

தனுராசனம் செயலூக்கமும் சக்தியும் அளிக்கும் ஆசனமாகும். இந்த ஆசனத்தில் உடலின் எடை வயிற்றுப் பகுதியினால் தாங்கப்படுகிறது. கால்களை உயர்த்தி, பின்புறமாக வில்போல் வளைத்து, கைகளால் கணுக்கால்களை பிடிக்கவும். இது முதுகு, கழுத்து மற்றும் கால்களுக்கு நீட்சியளித்து வலுப்படுத்துகிறது.
நன்மைகள்: இந்த ஆசனம் உடற்பாங்கை மேம்படுத்தி, நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, செரிமானம் மற்றும் இனபெருக்கத்திற்கான உறுப்புகளை தூண்டுகிறது. சமநிலையையும், ஒத்திசைவையும் பேணுவதற்கும் இது ஒரு சிறந்த ஆசனமாகும். மாதவிடாய் காலத்திலும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முதுகில் காயம் உள்ளவர்கள், ஸ்பைனல் ஸ்டெனோஸிஸ் மற்றும் ஹெர்னியேடெட் டிஸ்க் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை அதற்கு தகுந்தாற்போல் போர்வை அல்லது கட்டைகள் போன்ற கருவிகளின் உதவியுடன் மாற்றியமைத்து செய்யவேண்டும். அல்லது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் கழுத்தில் காயம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்வதை தவிர்க்கவும். அல்லது தலையையும், கழுத்தையும் தளர்வாக தரையில் வைத்தபடி செய்யவும்.
5. புஜங்காசனம்

பெரும்பாலும், குறிப்பிட்ட வரிசையில் செய்யப்படும் ஆசனங்களின் தொடர்ச்சியில் ஒரு ஆசனமாக, அதாவது, விநியாச தொடர்ச்சியின் ஒரு அங்கமாக, புஜங்காசனம் செய்யப்படுகிறது. இந்த ஆசனத்தை செய்ய, வயிற்றின் மேல் படுத்து கைகளை தோள்களுக்கு கீழே, முழங்கைகள் உடலோடு ஒட்டி இருக்கும்படி, வைக்கவும். மார்பை தரையிலிருந்து உயர்த்தி, தலையையும், கழுத்தையும் நீட்டவும்.
நன்மைகள்: இது சோர்வையும், அழுத்தத்தையும் குறைக்கும், சுவாச கோளாறுகள் உள்ளவர்களுக்கு உதவும் ஆசனம்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: வீக்கம் மற்றும் முதுகிலோ கழுத்திலோ காயம் உள்ளவர்கள். முதுகுத்தண்டில் காயம் அல்லது ஸ்லிப்ட் டிஸ்க் உள்ளவர்கள். கர்ப்ப காலத்தின் இறுதியில் உள்ள பெண்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கவும் அல்லது தகுந்த மாற்றங்களோடு செய்யவும்.
6. சலம்ப புஜங்காசனம்

சலம்ப புஜங்காசனம் மென்மையாக முதுகை வளைக்கும் ஒரு ஆசனமாகும். இது மார்ப்புபகுதியையும் இதயத்தையும் விரிவடையச் செய்கிறது.
நன்மைகள்: இது இரத்தவோட்டத்தை மேம்படுத்தவும், முதுகுக்கு நீட்சியளிக்கவும் உதவுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கழுத்திலோ, முதுகிலோ, தோள்களிலோ காயம் உள்ளவர்கள். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும் அல்லது யோகா ஆசிரியரின் வழிக்காட்டுதலின் கீழ் தகுந்த மாற்றங்களுடன் செய்ய வேண்டும். மேலும் கருவுற்ற பெண்கள் இந்த ஆசனத்தை மாற்றியமைத்து செய்யவும், அல்லது முற்றிலும் தவிர்க்கவும்.
7. விபரீத சலபாசனம்

இந்த ஆசனத்தை செய்ய, தரையில் வயிற்றின் மேல் படுத்து, கைகளை தலைக்கு மேல் நீட்டவும். கால்களை சேர்த்து வைத்து தரையிலிருந்து உயர்த்தவும்.
நன்மைகள்: உடற்பாங்கை மேம்படுத்தும் ஆசனமாக இது கருதப்படுகிறது. நெகிழ்வுத்தன்மைக்கும், முதுகு, இடுப்பு மற்றும் கால்களை வலுப்படுத்தவும் இது சிறந்த ஆசனமாக கருதப்படுகிறது. சமநிலை மற்றும் ஒத்திசைவை மேம்படுத்தவும் இது சிறந்தது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முதுகில் காயம் உள்ளவர்கள், ஸ்பைனல் ஸ்டெனோஸிஸ் மற்றும் ஹெர்னியேடட் டிஸ்க் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை அதற்கு தகுந்தாற்போல் போர்வை அல்லது கட்டைகள் போன்ற கருவிகளின் உதவியுடன் மாற்றியமைத்து செய்யவேண்டும். அல்லது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
8. சலபாசனம்

வயிற்றின் மேல் படுத்து, உள்ளங்கைகளை முஷ்டியாக்கி தொடைகளின் கீழ் கீழ் நோக்கி வைத்து, உடலின் எடையை அவ்வற்றில் தாங்கவும். பின்னர் கால்களையும் உடலின் மேற்பகுதியையும் தரையிலிருந்து உயர்த்தவும். முதுகு, கழுத்து மற்றும் கால்களை வலுப்படுத்த உதவும் இந்த ஆசனம் ஒரு இடைநிலை பயிற்சியாகும்.
நன்மைகள்: முதுகின் நெகிழ்வுத்தன்மையையும், செரிமானத்தையும் இந்த ஆசனம் மேம்படுத்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கீழ் முதுகு, கழுத்து மற்றும் மணிக்கட்டில் காயம் உள்ளவர்கள். அடிவயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், கருவுற்ற பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
9. ஊர்த்துவமுக ஸ்வானாசனம்

ஊர்த்துவமுக ஸ்வானாசனத்தை செய்ய வயிற்றின் மேல் படுத்து, கைகளை தரையில் நேராக ஊன்றி, மார்புப் பகுதியை தரையிலிருந்து உயர்த்தவும்.
நன்மைகள்: இது முதுகுத்தண்டு, மார்பு மற்றும் கால்களுக்கு நீட்சியளித்து, கைகள், தோள்கள் மற்றும் முதுகு தசைகளை வலுப்படுத்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கார்பெல் டனல் ஸிண்ட்ரோம் உள்ளவர்கள், மணிக்கட்டு மற்றும் தோள்களில் காயம் உள்ளவர்கள். அடிவயிற்றில் அழுத்தம் ஏற்படுத்துவதால், கருவுற்ற பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். கீழ் முதுகில் வலி அல்லது காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமுடன் செய்யவும்.
முதுகுபுறமாகப் படுத்து செய்யும் ஆசனங்கள்
1. நௌகாசனம்

ஆரம்ப நிலை பயில்வோருக்கான ஆசங்களின் ஒரு வகையான நௌகாசனத்தில் நம் உடலை படகு போல வளைக்கிறோம். இது அடிவயிறு மற்றும் கீழ் முதுகுக்கு இரத்தவோட்டத்தையும், பிராண வாயுவின் ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.
நன்மைகள்: குடலிறக்கம் என்னும் ஹெர்னியா உள்ளவர்களுக்கு பயனளிக்கிறது. வயிற்றுக் கொழுப்பை கரைக்கவும், செரிமான கோளாறுகளை சரி செய்யவும், இரத்தவோட்டத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: வயிற்றில் சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்திருந்தாலோ, அல்லது குடற்புண் (அல்சர்) இருந்தாலோ இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.
2. சேது பந்தாசனம்

உடலை பாலம் போன்ற உருவில் அமைக்கும் ஆசனமான சேது பந்தாசனத்தில் உடலின் எடையை கைகள், கால்கள் மற்றும் முதுகு தாங்குகின்றன. இடைநிலை ஆசனமான இது பல உடல் மற்றும் மன நலன்களைத் தருகிறது.
நன்மைகள்: இது மூளையை அமைதிப்படுத்தி, பதட்டத்தையும் தைராய்டு பிரச்சினைகளையும் குறைக்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கழுத்து அல்லது முதுகுத்தண்டில் காயம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கடுமையான கண் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
3. மத்ஸ்யாசனம்

மத்ஸ்யாசனம் செய்ய முதுகின் மேல் படுத்து, கைகளை முழுமையாகத் தரையில் ஊன்றி, மார்பையும் தலையையும் உயர்த்தவும். இது கழுத்து, தொண்டை மற்றும் மார்புக்கு நல்ல நீட்சியளிக்கிறது.
நன்மைகள்: இந்த ஆசனம் சுவாசப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. உடற்பாங்கை மேம்படுத்தவும், தைராய்டு சுரப்பியைத் தூண்டவும், அழுத்தம் மற்றும் பதட்டத்தை தணிக்கவும் இந்த ஆசனத்தைச் செய்யலாம்.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கழுத்து அல்லது தோள்களில் காயம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சமீபத்தில் கழுத்தில், தோள்களில் அல்லது கைகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பவர்கள். முதுகில் பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
4. பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் ஆரம்ப நிலை பயில்வோருக்கான ஓர் ஆசனமாகும். முதுகின் மேல் படுத்து, கால்களை மடித்து, உயர்த்தி, வயிற்றுப் பகுதிக்கு மென்மையான அழுத்தத்தைத் தரவும்.
நன்மைகள்: செரிமானத்திற்கு உதவுகிறது. கீழ் முதுகிற்கும், இடுப்புக்கும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. வாயுவை வெளியேற்றுகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: ஹெர்னியா, அல்சரெடிவ் கொலைடிஸ், கடுமையான முதுகு அல்லது இடுப்பு பிரச்சினை உள்ளவர்கள், சமீபத்தில் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தவர்கள். கருவுற்ற பெண்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
5. சர்வாங்காசனம்

சர்வாங்காசனத்தில் கால்களை கூரையை நோக்கி நேராக உயர்த்தி உடலின் முழு எடையையும், தோள்கள் மற்றும் கழுத்தினால் தாங்குகிறோம். இது முதுநிலை பயில்வோருக்கான ஆசனமாகும். உடலுக்கும் மற்றும் மனத்திற்கும் பல பயன்களைத் தருகிறது. இரத்தவோட்டத்தை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
நன்மைகள்: மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வேரிகோஸ் வெயின்ஸிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இரத்தவோட்டத்தை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கழுத்தில் அல்லது முதுகுத்தண்டில் காயம் உள்ளவர்கள். உயர் இரத்த அழுத்தம், குளோகோமா, டிடேச்ட் ரெடினா (விழித்திரை விலகல்) அல்லது வேறு ஏதாவது தீவிர கண் பிரச்சினைகள் உள்ளவர்கள். கர்ப்பகாலத்திலும், மாதவிடாய் சுழற்சியின் போதும் பெண்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
6. ஹலாசனம்

ஆரம்ப நிலை பயில்வோருக்கான ஹலாசனம் செய்ய, முதுகின்மேல் படுத்து, இரு கால்களையும் உயர்த்தி, வளைத்து, தலைக்கு பின்னால் தரையில் படும்படி வைக்க வேண்டும். இது கழுத்து, முதுகு மற்றும் கால்களுக்கு நீட்சியளிக்கிறது. நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.
நன்மைகள்: நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, அழுத்தத்தைத் விடுவித்து, நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: கழுத்தில் அல்லது முதுகுத்தண்டில் காயம் உள்ளவர்கள். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள். கழுத்து, தோள் அல்லது முதுகுப்பகுதியில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்கள். கர்ப்பகாலத்திலும், மாதவிடாய் சுழற்சியின் போதும் பெண்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
7. நடராஜாசனம்

இந்த ஆசனத்தின் பெயரிலேயே உள்ள குறிப்பின் படி, இந்த ஆசனத்தைச் செய்ய மல்லாந்து படுத்தபடி, உடலை முறுக்கி, ஒரு காலில் உடல் எடையைத் தாங்கவும். மறு கையை தரையின் மேல் தோள்களுக்கு நேராக நீட்டவும்.
நன்மைகள்: இது உடலுக்கும் மனதுக்கும் ஆழ்ந்த ஓய்வைத் தருகிறது. கால்களை வலுப்படுத்தி, சமநிலை மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்துகிறது. மார்பு, முதுகு மற்றும் இடுப்பின் தசைகளுக்கு நீட்சியளிக்கிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: Pகணுக்கால், முழங்கால் அல்லது இடுப்பில் சமீபத்திய அல்லது நாள்பட்ட காயம் உள்ளவர்கள், சமநிலை பேணுவதில் பிரச்சினை உள்ளவர்கள்
8. விஷ்ணு ஆசனம்

விஷ்ணு ஆசனம் பெரும்பாலும் ஓய்வெடுக்கவும், மன அழுத்தத்தைத் தணிக்கவும் செய்யப்படும் ஒரு ஆசனமாகும். கால்களை ஓய்வாக நீட்டி, தரையில் பக்கவாட்டில் படுக்கவும். கையை மடித்து, முழங்கையை தரையில் ஊன்றி, உள்ளங்கையால் தலைக்கு முட்டுக் கொடுக்கவும். மற்றொரு உள்ளங்கையை ஓய்வாக தரையில் வைத்திருக்கவும்.
நன்மைகள்: மனதை அமைதிப்படுத்தவும், பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் தணிக்கவும், தூக்கத்தின் தரத்தை உயர்த்தவும் உதவும் இந்த ஆசனம், மறுசீரமைப்புக்கான ஆசனமாகக் கருதப்படுகிறது. முதுகிலும் இடுப்பிலும் நெகிழ்வுத்தன்மையை அடையவும், உடல் முழுவதிலும் இரத்தவோட்டத்தை சீர்படுத்தவும் சிறந்த ஆசனம் இது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்: முதுகில் காயம், ஸ்பைனல் ஸ்டெனோஸிஸ், ஹெர்னியேடட் டிஸ்க் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும் அல்லது போர்வை மற்றும் கட்டைகளின் துணைக்கொண்டு மாற்றி அமைத்துச் செய்யவும்.
9. சவாசனம்

தரையில் மல்லாந்துப் படுத்து, கைகால்களை நீட்டி, ஓய்வாக வைக்கவும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வையும் புத்துணர்ச்சியையும் அளிக்க அமைதியான, சாந்தமான ஒரு வெளியை உண்டாக்கும் இது, யோகத்தில் ஒரு முக்கியமான ஆசனம் ஆகும். பெரும்பாலும் யோகப்பயிற்சியின் இறுதியில் செய்யப்படும் இந்த ஆசனம் மனத்தை அமைதிப்படுத்தவும், அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தணிக்கவும், தூக்கத்தின் தரத்தை உயர்த்தவும் உதவுகிறது.
நன்மைகள்: இந்த ஆசனம் ஆழ்ந்த ஒய்வுடனான ஒரு தியான நிலையை தருகிறது. இரத்த அழுத்தத்தையும், கவலையையும் குறைத்து தூக்கத்தின் தரத்தை உயர்த்துகிறது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் முதுகில் காயம், ஸ்பைனல் ஸ்டெனோஸிஸ், ஹெர்னியேடட் டிஸ்க் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும் அல்லது போர்வை மற்றும் கட்டைகளின் துணைக்கொண்டு மாற்றி அமைத்துச் செய்யவும்.
யோகப்பயிற்சி உடலையும் மனத்தையும் பேணி, பல ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், அது மருத்துவத்திற்கு மாற்று அல்ல. பயிற்சி பெற்ற யோக ஆசிரியர் ஒருவரிடமிருந்து கற்பதும் அவர் மேற்பார்வையில் யோகப்பயிற்சி செய்வதும் இன்றியமையாதது. உங்களுக்கு ஏதேனும் மருத்துவப் பிரச்சினைகள் இருந்தால், ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரையும் மருத்துவரையும் கலந்தாலோசித்த பின்னரே யோகப்பயிற்சி செய்யவேண்டும். உங்கள் அருகில் உள்ள வாழும் கலை மையத்தில் ஸ்ரீ ஸ்ரீ யோகா பயிற்சிக்கு இங்கே பார்க்கவும்.











