வினாடிகள் கழிகின்றன. மதிப்பெண்கள் சமமாக உள்ளன. உங்கள் ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு முகபாவனையிலும் அனைவரின் பார்வையும் நிலைத்திருப்பதால் பதற்றம் தெளிவாகத் தெரிகிறது. உங்களைச் சுற்றியுள்ள காற்றில் நம்பிக்கை, பயம், உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை நீங்கள் உணர முடியும். நீங்கள் அந்த சத்தத்தை அடக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும் – கெஞ்சல்கள், ஆரவாரங்கள், கண்டன ஒலிகள், கூச்சல்கள் என எல்லாவற்றிலும் உங்கள் கவனம் ஒருமையிலும் பிரிக்கப்படாமலும் இருக்க வேண்டும்; ஏனெனில் இப்போது நீங்கள் செய்வது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும்…
ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் எப்பொழுதாவது இந்த நிலைமையை சந்திக்க நேரிடலாம். விளைவின் பலன்கள் வித்தியாசப்படலாம். ஒவ்வொரு சமயத்திலும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இருப்பினும், எல்லாவித இன்னல்களுக்கும் இடையே ஒரு உன்னதமான செயல்திறனை வழங்கும் உங்களது இலக்கு மாறுவதில்லை. திடமான, சாந்தமான மனதோடு இதனைச் செய்வது சிறப்பிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது. எந்த நிலையிலும் இது ஒரு கடினமான சவால்தான்; விளையாட்டுகளில் யோகாவின் பங்கு இங்கு தான் உள்ளது.
விளையாட்டு வீரர்களின் பயிற்சி திட்டத்தில் யோகா ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக அமைந்துள்ளது. தடகள வீரராகவோ, நீச்சல் வீரராகவோ, டென்னிஸ் ஆட்டக்காரராகவோ அல்லது பந்தாட்டக்காரராகவோ, எவராக நீங்கள் இருந்தாலும் சரி, விளையாட்டுகளில் யோகாவின் பங்கு இன்றியமையாதது. அது ஏனென்று உங்களுக்குத் தோன்றினால் வாருங்கள், யோகாவினால் விளையாட்டுகளில் உள்ள பலதரப்பட்ட நன்மைகளை கண்டறியுங்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு யோகாவின் பலன்கள்
விளையாட்டினைப் பொருத்து விளையாட்டு வீரர்கள் உடலை முறுக்கிக் கொள்ளவோ, திருப்பவோ, பாயவோ, குதிக்கவோ, ஓடவோ, நீட்டிக்கொள்ளவோ, திடீரென வேகமாக குனியவோ அவசியம் ஏற்படுகிறது. இது சில சமயங்களில் சீர்கேடாகவும் நிகழ்கிறது. இது தவறான அசைவின் வாய்ப்பை அதிகரிக்கிறது. இங்கு யோகா உதவிக்கு வருகிறது!

யோகா சமநிலையிலும், ஆயத்தநிலையிலும், கட்டுப்பாட்டுடனும் இருக்கக் கற்றுக்கொடுக்கிறது. இந்த அசைவுகளை நிகழ்த்துவதற்கு கட்டுக்கோப்புடையதாக உங்கள் உடலை ஆக்குகிறது. இது உங்கள் மனதை பொறுமையாகவும் நிலையாகவும் இருக்கப் பயிற்றுவிக்கிறது. இதனை யோகா எவ்வாறு செய்ய முடியும்? தொடர்ந்து படியுங்கள்.
- யோகா தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்குகளைத் தடுக்க உதவுகிறது: யோகாசனங்கள் இறுகிய தசைகளைத் தளர்வாக்க உதவுகின்றன. இது பல்வேறு உடல் பகுதிகளை விரிவாக்க, வலுவாக்க உதவுகின்றது-இடுப்பு, முதுகு மற்றும் மார்பு பகுதிகளை நெகிழ்வானதாக்குகிறது. யோக பயிற்சியில் வளைத்தும், நீட்டியும் செய்யும் அசைவுகள், தேய்மானம் மற்றும் சேதாரம், தசை இழுப்பு, சுளுக்குகள் ஆகியவற்றின் சாத்தியத்தைக் குறைக்கிறது.
- யோகா உங்களுடைய மீட்பு நேரத்தைக் குறைக்கிறது: நீண்ட கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு உறக்கமும் ஓய்வும் போதுமானதல்ல. உங்களது சோர்வுற்ற உடலையும் மனதையும் திறம்பட அமைதியான முறையில் யோகா தளர்வாக்க உதவுகிறது. ஏனென்றால் ஆசனங்கள் முறையாக, நளினத்துடன் செய்யப்படுகின்றன. இது உங்களது உடலில் உள்ள இறுக்கத்தை நீக்கி, மீட்பு நேரத்தை துரிதப்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
- உங்களது சமநிலை உணர்வை யோகா அதிகரிக்கிறது: விருக்ஷாசனம்(Tree pose) மற்றும் வீரபத்ராசனம்(Warrior pose) போன்ற ஆசனங்கள் உங்களுள் சமநிலையை வளர்க்க உதவுகின்றன. உடல் அளவிலும், மனதளவிலும், ஆயத்த நிலை மற்றும் சமநிலை தேவைப்படுகின்றன. ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகியவற்றில் தேவைப்படுவது போல, யோகா உங்கள் தோரணை மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்க உதவுகிறது.
யோகா உங்கள் மன உறுதியை வலுவாக்குகிறது; மேலும் மனதில் ஓடும் எதிர்மறையான எண்ணங்களுக்கு தடை போடுகிறது. உங்கள் உடலின் ஆற்றலைக் கடந்து மனதின் தின்மையோடு செல்லமுடியும் என்று நீங்கள் நம்புவீர்கள்.
- உங்களுக்குள் உள்ள அரக்கர்களை வெல்ல யோகா உதவுகிறது: விளையாட்டுப் போட்டி என்பது உடலியல் ரீதியான பயிற்சி மட்டும் அல்ல; மனதளவில் ஒரு கடுமையான போராட்டத்திற்கு நீங்கள் தயாராக வேண்டும். நீங்கள் பதட்ட நிலையில் உள்ள பொழுது யோகா உங்களது நரம்புகளை வலுவாக்க உதவுகிறது.
- உள்ளுணர்வு கொண்டவராகவும் ஒருமுகச் சிந்தனை கொண்டவராகவும் உங்களை யோகா உருவாக்குகிறது: விளையாட்டுப் போட்டிகள் பல சமயங்களில் உங்களுக்கு நொடியில் சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன. உங்களது முந்தைய ஏற்பாடுகளும் கணிப்புகளும் அர்த்தமற்றுப் போகலாம். ஆரம்பத்திலிருந்து நீங்கள் மீண்டும் தொடங்க வேண்டியிருக்கலாம். அது போன்ற தருணத்தில், உங்களது அடுத்த அடியை தீர்மானிப்பதற்கு தெளிந்த சிந்தை தேவை. யோக பயிற்சி பகுத்தறிவோடு செயல்பட உதவுகிறது.
- யோகா உங்கள் மூச்சினை ஒழுங்குப்படுத்த உதவுகிறது: பல விளையாட்டுகள் உங்கள் சக்தி முழுவதையும் செலவழிக்கும் அவசியத்தை ஏற்படுத்துகின்றன. எந்த அளவு ஆக்ஸிஜன் உடலுக்குள் செல்கிறது என்பதை சுவாசம் தீர்மானிக்கிறது. உங்களது உள்ளுரம் இதனைச் சார்ந்துள்ளது. பிராணாமாயங்கள் உங்களது மூச்சினை ஒழுங்குபடுத்த உதவுகின்றன. நீருக்குள் நீச்சல் அடிக்கும்பொழுது அல்லது மாரத்தானில் இறுதி வரியை எட்டிப் பிடிக்கக் குறிவைக்கும் பொழுது, இது ஒரு உதவிகரமான நுட்பமாக அமைகிறது.
- யோகா உங்கள் உடலைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க உதவுகிறது: உங்களது உடலை வலுவாக்கி, அதனை லேசாக நெகிழ்வுத்தன்மையுடன் வைத்து, பயிற்சியை எளிதாக்குகிறது. யோகா எடைக் குறைப்பிற்கு உதவி செய்கிறது. இது உங்கள் அசைவுகளைத் துரிதப்படுத்துகிறது.
- யோகா உங்கள் உள் மற்றும் வெளிப்புற சுயத்தை ஒன்றிணைக்கிறது: யோகா உங்களது வேகத்தையும், அனிச்சை செயல்களையும் மேம்படுத்துகிறது. விளையாட்டுகளில் யோகாவின் இறுதிப் பங்கு, அடிப்படையில், மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒன்றிணைப்பதாகும். இது உங்களது கவனக்குவிப்பையும், துல்லியத்தன்மையையும் அதிகரிக்கிறது.
யோகாவும் விளையாட்டு வீரர்களும்: பயிற்சி செய்பவர்கள் யார் யார்?
- ஆண்டி முர்ரே
- டாமி ஹாஸ்
- அனா இவானோவிச்
- லின் டான்
- பி.வி. சிந்து
- சாய்னா நேவால்
- கிடாம்பி ஸ்ரீகாந்த்
- சக்கீல் ஓநீல்
- லெப்ரான் ஜேம்ஸ்
விளையாட்டுகளின் இருண்ட பக்கத்தை யோகா எவ்வாறு ஒளியூட்டுகிறது
எந்த ஒரு விளையாட்டு வீரரையும், அவரது மிகப் பெரிய அச்சம் எதுவென்று வினவினால், அநேகமாக நமக்குக் கிடைக்கக் கூடிய ஒருமித்த பதில்-காயம்! சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அவற்றில் கலந்து கொள்ளாமல் செயலற்று இருப்பது அல்லது மருத்துவமனையில் படுத்துக் கிடப்பது போன்ற வேறு ஒரு கடினமான நிலைமை இருக்க முடியாது. இது யோகாவும் விளையாட்டுகளும் இணைந்து செல்வதன் மற்றொரு காரணமாகும்.
ஒரு புன்னகையுடன் மீண்டு எழுந்து வர யோகா உதவுகிறது
விளையாட்டுகளின் உலகத்தில், ஒரு சில மாதங்களே விலகியிருந்தாலும் அது பல வருடப் பின்னடைவுக்கு நிகராகும். மறுநிகழ்வு அல்லது அதிகரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு, உங்கள் உடலுக்கு அவகாசம் தேவை. பல சமயங்களில், முந்தைய நிலைமையையும் ஆரோக்கியத்தையும் மீண்டும் பெற ஓய்வு மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை.

யோக பயிற்சியினால் விளையாட்டு வீரர்கள், தங்கள் உடலை உறுதிப்படுத்தி வலுவாக்கிக் கொள்ள முடிகிறது. மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய வருடங்களை தவற நேரிடும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் கையாளவும் யோகா உதவுகிறது. இது சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு , வலுவுடன் மீள்வதற்கு நயம்பட உங்களைத் தயார் செய்கிறது.
விளையாட்டுச் செயல்திறனை தாக்குப்பிடிப்பதில் யோகாவின் முக்கியத்துவம் கேள்விகளுக்கு இடமளிப்பதில்லை. ஆனால், ஒரே நாளில் பலன்களை எதிர்பார்க்காதீர்கள். மதிப்புமிக்க ஏதேனும் ஒன்றை அடைவதற்கு அவகாசமும் பொறுமையும் தேவை. யோகாவின் பலன்களும் அங்ஙனமே; அவை காலப்போக்கில் வெளிப்படுகின்றன. பலன்களை எதிர்பார்க்கும் முன் உங்கள் பயிற்சி தொடர்ந்து இடைவிடாது இருக்க வேண்டும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல தரப்பட்ட யோகாசனங்களை, ஸ்ரீஸ்ரீ யோக பயிற்சி, துவக்கி வைக்கிறது. இந்த பயிற்சி பிராணாயாமங்களையும் தியானத்தையும் உள்ளடக்குகிறது. இது முழுமையான வளர்ச்சிக்கு ஏதுவாகிறது.











