தேவி அல்லது தெய்வீக அன்னை என்பவள், தொலைதூர விண்மீன்கள், சூட்சுமமனம் மற்றும் அதன் உணர்வுகள் உட்பட முழு பிரபஞ்சத்தையும் படைத்த சக்தியாவாள். ‘சக்தி’ என்று அழைக்கப்படும் இந்த தெய்வீக அன்னையே,  இந்தப் படைப்பை இயக்குவதற்கும் பொறுப்பானவள்.

நவராத்திரி என்பது இந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள உகந்த நேரமாகும்.  அவ்வாறு செய்வதற்கான வழிகளில் ஒன்று, தெய்வீக அன்னையின் அனைத்து நாமங்களையும்  வடிவங்களையும் வழிபடுவதாகும்.

தெய்வீகம் எங்கும் நிறைந்துள்ளது; ஆனால் அது உறங்கிய நிலையில் உள்ளது.  பூஜை (வழிபாடு) என்பது அதனை விழிப்புறச் செய்யும் செயல்முறையாகும்.

– குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் தெய்வீக சந்நிதியில் சக்தி வாய்ந்த வேத கோஷம், மௌனம், ஆழ்ந்த தியானம் ஆகியவற்றை அனுபவிக்கலாம் வாருங்கள்! பெங்களூரு ஆசிரமத்தில் நவராத்திரி 2026 கொண்டாட்டங்களில் (11–20 அக்டோபர்) கலந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

துர்கா, லட்சுமி, சரஸ்வதி

தெய்வீக அன்னை அல்லது சக்தி மூன்று முக்கிய வடிவங்களைக் கொண்டுள்ளார்: பாதுகாப்பின் தேவியான துர்கா,  செல்வத்தின் தேவியான லட்சுமி  மற்றும்  கல்வியின் தேவியான சரஸ்வதி.  நவராத்திரியின் ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்களிலும்  இந்த மூன்று வடிவங்களும் ஆவாஹனம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

துர்கா

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் தேவி,  துர்கா வடிவில் கொண்டாடப்படுகிறார்.  துர்காவின் சன்னிதியில் எதிர்மறை சக்திகள் மறைந்து விடுகின்றன.  அவர் எதிர்மறை எண்ணங்களையும் சக்திகளையும் நேர்மறையாக மாற்றுகிறார்.

துர்கா, ‘ஜெய துர்கா’என்றும் அழைக்கப்படுகிறார்;  அதாவது வெற்றியை அருளுபவர்.  துர்காவின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு:

  • சிவப்பு நிறம்

துர்கா சிவப்பு நிறத்துடன் தொடர்புடையவர்.  அவர் சிவப்பு நிற புடவையை  அணிந்தவராக சித்தரிக்கப்படுகிறார்.  சிவப்பு என்பது சுறுசுறுப்பும் செயல்துடிப்பும் நிறைந்த ஆற்றலின் நிறமாகும் — அதாவது ‘இயங்கும்’ சக்தியின் அடையாளம்.

நீங்கள் நல்ல பயிற்சியும் திறமையும் பெற்றவராக இருக்கலாம். ஆனால், செயல்களை, மக்களை மற்றும் முயற்சிகளை ஒருமித்து இயக்கும் திறன் இல்லையெனில்,  முடிவுகள் தாமதமாகும்;  மேலும் நீங்கள் முழுமையான செயல்திறனுடன் செயல்பட இயலாது.   துர்காவை பிரார்த்திக்கும்போது, உங்களுக்குள்  அந்தச் செயல்துடிப்பான ஆற்றலை அவர் வெளிப்படுத்தி, அனைத்தையும் முன்னோக்கி நகர்த்தும் சக்தியை வழங்குகிறார்.

  • நவதுர்கா

நவதுர்கா என்பது துர்கா சக்தியின் ஒன்பது அம்சங்களாகும். இவை அனைத்து எதிர்மறை சக்திகளை  தடுக்கும் பாதுகாக்கும் கவசமாகச் செயல்படுகின்றன.  தேவியின் இந்த குணங்களை வெறுமனே நினைவுகூர்வதே மனதிலுள்ள தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அகற்ற உதவும்.  இந்த நாமங்களை உச்சரிப்பது உங்கள் உணர்வுநிலையை உயர்த்தி, உங்களை மேலும் ஒருமுகப்படுத்தப்பட்டவராகவும், துணிச்சலானவராகவும், அமைதியான மனநிலையிலும் இருக்கச் செய்கிறது. குறிப்பாக பதட்டம், தன்னம்பிக்கை குறைவு மற்றும் பயம் ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

  • துர்க்கையின் மகிஷாசுர மர்தினி வடிவம்

மகிஷாசுர மர்தினி வடிவில் விளங்கும் தேவி துர்கா, மகிஷனை அழிப்பவளாகப் போற்றப்படுகிறார்.  ‘மகிஷ’என்ற சொல் எருமையைக் குறிக்கிறது. எருமை என்பது சோம்பல்,  மந்தத்தன்மை மற்றும் செயலற்ற நிலையின் அடையாளமாகக் கருதப்படுகிறது இத்தகைய குணங்களே ஒருவரின் ஆன்மிக மற்றும் உலகியல் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகின்றன. தேவி அளவற்ற நேர்மறை ஆற்றலின் பொக்கிஷமாக விளங்குகிறார். அவரது சன்னிதியில் சோம்பல், மந்தத்தன்மை அல்லது செயலற்ற தன்மையின் எந்தச் சுவடும் கரைந்து விடுகிறது.

லட்சுமி

நவராத்திரியின் அடுத்த மூன்று நாட்கள்,  தேவி, லட்சுமி வடிவில் போற்றப்படுகிறார்.  லட்சுமி, செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமாக விளங்குகிறார்.  செல்வம் என்பது நமது வாழ்க்கையின் பராமரிப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் அருளப்பட்ட மிக முக்கியமான அம்சமாகும்.

செல்வம் என்பது வெறும் பணத்தை மட்டும் குறிப்பதல்ல .  அது அறிவு, திறமைகள் மற்றும் இயல்பான ஆற்றலின் வளமையையும் குறிக்கிறது. லட்சுமி என்பது ஒருவரின் முழுமையான ஆன்மிக  மற்றும் பொருள்சார் நலனாக வெளிப்படும் தெய்வீக ஆற்றலாகும்.

நமக்கு அருளக்கூடிய இந்த தெய்வீக ஆற்றலில் எட்டு அம்சங்கள் உள்ளன:

  • ஆதி லட்சுமி

இது மூலாதாரத்தின் நினைவுணர்வாகும். நாம் முழுப் படைப்பின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிட்டால், நம்மை சிறியவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறோம். ஆதி லட்சுமி என்பது நம்மை, நமது மூலத்துடன் மீண்டும் இணைக்கும் அம்சமாகும்; இதன் மூலம் மனத்திற்கு வலிமையும் அமைதியும் கிடைக்கின்றன.

  • தன லட்சுமி

இது பொருளாதாரச் செல்வத்தை அருளும் அம்சமாகும்.

  • வித்யா லட்சுமி

இது அறிவு, திறமைகள் மற்றும் இயல்பான கலைத் திறன்களின் அம்சமாகும்.

  • தான்ய லட்சுமி

இது உணவின் வடிவில் வெளிப்படும் செல்வமாகும்.

  • சந்தான லட்சுமி

இது சந்ததி மற்றும் படைப்பாற்றலின் வடிவில் வெளிப்படும் செல்வமாகும். படைப்பாற்றல், திறமைகள் மற்றும் கலைநயங்கள் நிறைந்தவர்களுக்கு லட்சுமியின் இந்த அம்சம் அருளப்படுகிறது.

  • தைரிய லட்சுமி

இது தைரியத்தின் வடிவில் வெளிப்படும் செல்வமாகும்.

  • விஜய லட்சுமி

இது வெற்றியின் வடிவில் வெளிப்படும் செல்வமாகும்.

  • பாக்கிய லட்சுமி

இது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை அருளும் அம்சமாகும்.

ஒருவரின் வாழ்நாளில், தேவி லட்சுமி தனது அருளை இவ்வாறான பல்வேறு வடிவங்களில் வழங்கக்கூடும். தேவி லட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மூன்று நாட்களில், இந்த அனைத்து வகையான செல்வங்களையும் நமக்கு அருளுமாறு தெய்வீகத் தாயை நாம் பிரார்த்தனை செய்கிறோம்.

சரஸ்வதி

நவராத்திரியின் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.

சரஸ்வதி, ஞானத்தின் தேவியாக விளங்குகிறார். ‘ஸ்வ ‘ (சுயம்) என்பதின் ‘சாரம் – மூல தத்துவத்தை (ஆன்மாவின் சாரத்தை) அளிப்பவளே சரஸ்வதி.

தேவியின் பல்வேறு அம்சங்கள், அவரைப் பற்றிய ஆழமான ஒரு கதையை எடுத்துரைக்கின்றன.

பாறை: சரஸ்வதி தேவி பெரும்பாலும் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருப்பவராக சித்தரிக்கப்படுகிறார். அறிவு, பாறையைப் போல உறுதியான ஆதரவாகும். அது எப்போதும் நம்முடன் இருந்து, வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் நமக்கு துணையாக நிற்கிறது.

வீணை: சரஸ்வதி தேவி பண்டைய இந்திய இசைக்கருவியான வீணையை வாசிப்பவராக சித்தரிக்கப்படுகிறார். வீணையின் இனிமையான நாதங்கள் மனதிற்கு  நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்துகின்றன. அதைப் போலவே, ஆன்மிக அறிவும் ஒருவரின் வாழ்க்கையில் இளைப்பாறலையும் கொண்டாட்ட உணர்வையும் கொண்டு வருகிறது.

அன்னப்பறவை: அவரது வாகனமாக அன்னப்பறவை சித்தரிக்கப்படுகிறது.  பால் மற்றும் தண்ணீர் கலந்த கலவையை அன்னத்திற்கு அளித்தால்,  அது பாலை மட்டும் அருந்தும் என்று கூறப்படுகிறது.  இது விவேகத்தின் (பகுத்தறியும் திறன்) அடையாளமாகும்.  அந்த விவேகத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் நல்லவற்றை ஏற்றுக்கொண்டு, எதிர்மறையானவற்றை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

மயில்கள்: மயில்கள் தேவியுடன் இணைந்து காணப்படுகின்றன. மயில் எப்போதும் ஆடுவதில்லை;  மழைக்கு சற்று முன்புதான் நடனமாடி தனது அழகிய நிறங்களை காட்சிப்படுத்துகிறது.  அதுபோல, தெய்வீக ஆற்றல் ஒருவருக்கு சரியான அறிவை, சரியான சூழலில், சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறனை வழங்குகிறது.

தேவி சரஸ்வதி என்பவர் பல்வேறு வகையான கற்றல்களுடன் அதிர்வுறும் விழிப்புணர்வாகும். அவர் ஆன்மிக ஒளியின் ஆதாரமாகவும், அனைத்து அறியாமையையும் அகற்றுபவளாகவும், ஞானத்தின் மூலாதாரமாகவும் விளங்குகிறார்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் தேவியின் பல்வேறு நாமங்களையும் குணங்களையும் உச்சரித்து அவரை நாம் போற்றும்போது, அந்தக் குணங்கள் நம்முள் உயிர்ப்பிக்கப்படுக்கின்றன.   காலத்தின் தேவைக்கேற்ப அவை நம்முள் வெளிப்படுகின்றன.

– குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் சகோதரி பானுமதி நரசிம்மன் அவர்கள்

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *