இந்து மத புராணங்களில் மஹா விஷ்ணு, தனது கோபத்துடன் போராடிய ஒரு கதை உள்ளது. மஹா விஷ்ணுவின் காதில் சேர்ந்த மெழுகிலிருந்து பிறந்த மது, கைடபா என்ற இரண்டு அரக்கர்கள் அவரைத் தொல்லைப் படுத்தினார்கள். மது என்றால் கோபம், கைடபா என்றால் வெறுப்பு. மஹா விஷ்ணு இவர்களுடன் ஆயிரம் வருடங்கள் போராடினார். ஆயினும் அவர்களை வெல்ல முடியவில்லை.
தானே உருவாக்கிய கோபத்தையும் வெறுப்பையும் எவ்வாறு அழிக்க முடியும்.எனவே தேவிக்கு – தெய்வீக உணர்விற்கு அழைப்பு விடுத்தார். இறை உணர்வு எழும்பொழுது, கோபமும் வெறுப்பும் கரைந்து விடுகின்றன. நீரின் உதவியுடன் மது கைடபர்களை தேவி அழித்தார். இங்கு நீர் என்பது அன்பைக் குறிக்கும். எனவே அன்பின் உதவியுடன், இறை உணர்வு கோபத்தையும் வெறுப்பையும் அழித்தது. உணர்வு நிலையில் அன்பு நிறையும் பொழுது, கோபம், வெறுப்பு இருப்பது இல்லை- முடிவிலா அன்பு மட்டுமே நிலைத்திருக்கும்.
மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதினால் கோபம் மற்றும் வெறுப்பு எழுகின்றன. ஆக்கும் திறனை ஏற்றிருக்கும் பிரம்மனோ, அழிப்பதை மேற்கொண்டிருக்கும் சிவனோ மற்றவர்கள் சொல்வதை கவனிப்பதில்லை. இவ்விருவரும் தங்கள் பணியை செய்துவிட்டு விலகுகின்றனர்.ஆனால் உலகத்தையும், அதன் நடவடிக்கைகளையும் பராமரிக்கும் விஷ்ணு எல்லோரையும் கவனிக்க வேண்டியிருக்கிறது .அப்பொழுதுதான் கோபம் எழுகிறது.
மக்கள் ஏன் சண்டையிடுகிறார்கள் – அதன் மூலக்காரணம்
மக்கள் தாங்கள் சரி என்று உணர்வதால் சண்டையிடுகிறார்கள். இந்த நீதி உணர்வு அவர்களுக்குப் போராடுவதற்கான பலத்தைத் தருகிறது. யாராவது தான் தவறு என்று உணர்ந்தால், அவர்களிடம் போராடுவதற்கான பலம் இல்லை. இந்த வரையறுக்கப்பட்ட மற்றும் குறுகிய நீதி உணர்வு உலகில் மிக மோசமானதை உருவாக்கியுள்ளது. உலகின் அனைத்துப் போர்களும் இதன் காரணமாகவே நடந்துள்ளன.
நம்முடைய கண்ணோட்டத்தை விரிவாக்கி, விருப்பு வெறுப்பின்றி நிஜத்தை ஆராய்ந்து நோக்கும் பொழுது, நாம் காணக்கூடியது வேறொன்றாக இருக்கும். தர்மத்தின் பாதையைக் கடைப்பிடிப்பது பற்றிய நமது நினைப்பானது நம் மனக் கருத்தேயாகும்; எந்த ஒரு விளைவின் உண்மையான காரணமும் அதற்கு அப்பாற்பட்டது. அந்த உண்மையான மற்றும் அறுதியான காரணத்தைக் கண்டறிவதே ஞானமாகும்.
இன்றைய உலகில் நம்மை கோபப்படுத்தும் விஷயங்கள் பல உள்ளன. இதன்பின் குற்ற உணர்வு, வன்முறை, புண்படுதல் மற்றும் வெறுப்பு, இந்த கோபத்தைத் தொடர்கிறது. இந்த சுழற்சியை முறியடிப்பது கடினமாகிறது. கோபத்தை கையாள்வதற்கான ஐந்து ஆலோசனைகள், இதோ:
-
கோபத்தில் உள்ளோரை பட்டாசுகளைப் போல் நடத்துங்கள்
கோபத்தோடு உள்ள ஒருவரை பட்டாசுகளைப் போல கருதுங்கள். தீபாவளி சமயத்தில் பட்டாசுகளைப் பற்றவைத்து, அங்கிருந்து விலகிச் சென்று, தூரத்திலிருந்து அவற்றை ரசிக்கிறோம். சிறிது நேரத்திற்குப் பிறகு அது தோய்ந்து விடுகிறது.
கோபப்படுபவரும் அது போலத்தான்.
ஆனால் நாம் பட்டாசுகளை வீட்டில் பற்ற வைப்பதில்லை . விலை மதிப்புள்ள எதையும் அதனருகில் வைப்பதில்லை. எனவே கோபமாக இருப்பவர்களைச் சுற்றி மதிப்பு மிக்க பொருட்கள் இல்லாதவாறுப் பார்த்துக் கொள்ளுங்கள். கோபப்படுபவர்கள் இல்லாமல், இந்த உலகத்தில் வேடிக்கை இல்லை. எனவே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்; தூரத்திலிருந்து கவனியுங்கள். அவர்களுடன் ஈடுபடாதிருந்தால் உங்களுக்கு களிப்புக்கிட்டும்.
-
விழிப்புணர்வுடன் கோபத்தை வெல்லுங்கள்
நீங்கள் கோபப்படும் பொழுது அதனை வெளிப்படுத்தாமல் இருந்தால், நீங்கள் திணறிப்போவீர்கள். அதற்கு மாறாக, அதனை வெளிப்படுத்தும் பொழுது, நீங்கள் குற்ற உணர்வை அனுபவிப்பீர்கள். எனவே இவ்விரண்டையும் கடந்து செல்வதே விடையாகும். வாழ்க்கையை வேறொரு கண்ணோட்டத்துடன் நோக்குங்கள்.
உங்களது உணர்ச்சிகளை அலங்காரங்களாகக் காணுங்கள்- கேக்கின் மீதுள்ள விதவிதமான நிறங்களும், வடிவமைப்புகளும் கொண்ட ஐசிங்கைப் போல. இந்த அலங்காரம், பொருளின் உண்மையான தன்மையைப் பாதிப்பதில்லை. அது போல இந்த உணர்ச்சிகள் உங்களைப் பந்தப்படுத்தவோ அல்லது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவோ கூடாது. உங்களது விழிப்புணர்வு விரிவடையும் பொழுது இது நிகழ்கிறது.
நவராத்திரி சமயத்தில், நமது மனதைப் பக்தி அலையில் மூழ்கடிப்பதற்காக, சத்சங்கங்களில் ஈடுபடுகிறோம் மற்றும் உபவாசங்களைக் கடைப்பிடிக்கிறோம். இவ்விதமாகக் கோபம் மற்றும் இதர எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் எல்லா வாய்ப்புகளையும் தவிர்க்கலாம்.
-
ஆக்ரோஷத்தை உங்கள் வலுவினால் சமாளியுங்கள்
உங்களுக்குள் ஆக்ரோஷம் ஏன் எழுகிறது? உங்களை விட வேறொருவர் வலிமை வாய்ந்தவராகத் தோன்றும் பொழுது நீங்கள் ஆக்ரோஷம் அடைகிறீர்கள்.இல்லையா? இதைப் பற்றி யோசியுங்கள். ஒருவர் உங்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவராக இருக்கும் பொழுது அல்லது கணக்கில் கூட எடுக்க முடியாத அளவு சிறியவராக இருக்கும் பொழுது நீங்கள் ஆக்ரோஷம் அடைவதில்லை. ஆனால் ஒருவர் உங்களுக்கு சமமானவர் என்றோ அல்லது உங்களை விட சிறிதளவே வலுவுள்ளவராகவோ நீங்கள் நினைக்கும் பொழுது ஆக்ரோஷம் அடைகிறீர்கள்.இது உங்களது வலிமையைப் பற்றிய உங்கள் அறியாமையாலேயே.
விழித்தெழுங்கள்! நீங்கள் எத்தகையவர், யாரிடம் ஆக்ரோஷம் கொள்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
ஒரு கொசுவினை அழிக்க முற்படும் பொழுது நீங்கள் ஆக்ரோஷம்அடைவதில்லை. அது ஒரு பெரும் பொருட்டல்ல; ஒரு கொசுதான் என்பது உங்களுக்குத் தெரியும். அது போலவே உங்களது வலிமையை அறிந்து கொள்ளுங்கள்.
-
சிறிதளவு குறைபாடு மனதை ஆரோக்கியமாக வைக்கும்
முழுமையின் அதீத எதிர்பார்ப்பு, கோபம் மற்றும் வன்முறையை மனதில் எழச் செய்யும். குறைபாட்டை ஏற்றுக் கொள்வது கடினமாகிறது. சில சமயங்களில் நாம் திட்டமிட்டபடி நடப்பதில்லை. ஒருவர் அதனை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
குறைபாட்டிற்கு சிறிதளவு இடம்கொடுங்கள், இது அவசியம். இது உங்களுக்கு அதிக பொறுமையைத் தரும். பொறுமை அதிகரித்த நிலையில், கோபம் குறைவாக இருக்கும். கோபம் குறைந்த நிலையில் வன்முறை நிகழாது.
-
அன்பிற்கு ஞானம் என்கிற கவசம் கொடுக்கவும்
நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என்றால் அது உங்களைப் புண்படுத்துகிறது. ஏனெனில், யாரோ தெருவில் நடந்து போகும் ஒருவர் உங்களைப் புண்படுத்தவில்லையே! நீங்கள் நேசிக்கும் ஒருவர் அல்லது உங்களுக்கு நெருங்கியவராக நீங்கள் கருதும் ஒருவர்,உங்களை நலன் விசாரிக்கவில்லை அல்லது உங்களைக் கண்டு புன்னகைக்கவில்லை என்னும் பொழுது நீங்கள் வருத்தப்படுகிறீர்கள்.
மக்கள் மனம் புண்படும்பொழுது, மனம் இறுகி, கல்நெஞ்சோடு, கொடூரமாக நடந்துக் கொள்கிறார்கள். அன்பு ஒரு சிறந்த மென்மையான உணர்ச்சியாகும். இது எளிதில் புண்படக்கூடியது. இது சட்டென்று வெறுப்பு, கோபம், குற்றம்சாட்டல், வன்மம், கசப்பு அல்லது பொறாமை ஆகிய உணர்ச்சிகளாக மாறக்கூடும்.
இத்தனை மென்மையான உணர்ச்சி சமூகத்தால் சிதைக்கப்படாமல் பாதுகாப்பது எப்படி? – . ஞானம், இதுவே அன்பைப் பாதுகாக்கக் கூடிய கவசமாகும். ஞானம் என்பது அன்பின் தூய்மையைப் பாதுகாக்கிறது. ஞானம் என்பது அன்பின் தூய்மையைப் பராமரிக்கிறது, மற்றும் எல்லா வித சிதைவுகளிலிருந்தும் விலக்கி வைக்கிறது. ஞானிகளின் அன்பு களங்கமற்றது. ஏனெனில் அதை பாதுகாக்க ஞானம் என்ற கவசம் உள்ளது.
மேலும், சாதனாவில் ஆழ்ந்து செல்லும் பொழுது, அன்பை மிக நுண்ணிய நிலைகளில் உணர முடியும்.
கோபம் எப்பொழுது நல்லது?
கோபப்படாமல் இருப்பது சாத்தியமா?
இதுவரை உங்கள் அனுபவம் என்ன? குழந்தைப் பருவத்தில் உங்களது மிட்டாய் உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பொழுது நீங்கள் கோபம் அடைந்தீர்கள்.
பள்ளியில், கல்லூரியில் மற்றும் வேலைப் பார்க்கும் இடத்தில் நீங்கள் வெவ்வேறு மனிதர்களுடன் வெவ்வேறு காரணங்களுக்காக கோபம் அடைந்தீர்கள். ஆக நாம் அனைவரும் கோபம் கொள்கிறோம்.
உங்கள் கோபத்திலிருந்து எவ்வளவு விரைவில் வெளிவருகிறீர்கள் என்பதே முக்கியம். இதனை நிர்ணயிப்பது .இந்த மூன்று காரணிகள்:
- நீங்கள் கோபப்படும் தருணங்கள் எவ்வளவு அடிக்கடி அமைகின்றன என்பது முதல் காரணி. இது உங்கள் சக்திக்கு எதிர்விகிதத்தில் உள்ளது. எவ்வளவு பலவீனமாக உள்ளீர்களோ அவ்வளவு அதிகமாக கோபத்திற்கு உள்ளாவீர்கள். நீங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருக்கிறீர்களோ அவ்வளவு குறைவாகக் கோபத்திற்கு உள்ளாவீர்கள். உங்கள் சக்தி எதில் உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள். எதனால் அதை இழக்கிறீர்கள்?
- உங்களது தொலைநோக்கு இரண்டாவது காரணி. சுற்றியுள்ள மக்களைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு ஆழமான அறிவு உள்ளது?
- உங்களது பந்தத்தின் தீவிரம் மூன்றாவது காரணியாகும். சுகம், சந்தோஷம் இவற்றின் மீதுள்ள ஆசையினால் அல்லது அகந்தையினால் ஏற்படும் கோபம், ஒரு குறிக்கோளுக்காக எழும் கோபம்- இவை இரண்டின் வெளிப்பாடு வித்தியாசமாக இருக்கும்.
நடப்பனவற்றை சரிபடுத்தும் நோக்குடன் எழும் கோபம் பயனுள்ளது.
எனவே கோபம் எப்பொழுதும் நல்லதில்லை என்றில்லை. அரிதாக உபயோகிக்கப்படும் கோபம் நன்மைப் பயக்கும். தினமும் கோபத்தை வெளிபடுத்துவோமாயின் அதற்கு மதிப்பில்லை. மாறாக உங்கள் மதிப்பைத் தாழ்த்துகிறது. எனவே கோபம் உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். அதற்குப் பதிலாக கோபத்தை நேர்மறை மாற்றம் ஏற்படுத்தும் ஒரு கருவியாக உபயோகியுங்கள்.
சகஜ சமாதி தியான யோகா, உங்களது ஆற்றலுக்கு வடிகால் அமைக்க உதவி, உங்களை நேர்மறையான, சிந்தனைமிக்க, ஆற்றல்மிக்க நிலைக்கு வழிகாட்டுகிறது.