நீண்ட பயண நேரங்கள், 12 மணி நேர வேலை /அட்டவணைகள், மற்றும் நமது பொதுவான பரபரப்பான வாழ்க்கை ஆகியவை நம்மில் பெரும்பாலோருக்கு உடற்பயிற்சி செய்வதை கடினமாக்குகின்றன. ஆரோக்கியம் காரணமாக சிலரால் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. இவ்விரண்டு சூழலிலுமே, உடற்பயிற்சி செய்ய இயலாமை எடைக்குறைப்பு செய்ய விரும்புபவர்களுக்கு தடையாக உள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் எப்படி எடையைக் குறைப்பது என இங்கே காணலாம்.
மன அழுத்தத்தை வெல்லுங்கள்
நம்பினால் நம்புங்கள்! உங்கள் மன அழுத்தத்தையும், உணர்ச்சிகளையும் நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள் என்பது எடையை நிர்வகிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. செரிமானம் எனப்படும் உயிர்காக்கும் செயல்முறையை இயக்கும் உங்கள்புற நரம்பு மண்டலம் (பாராசிம்பெதெடிக் நரம்பு மண்டலத்தை), மன அழுத்தம் செயலிழக்கச் செய்கிறது. இதன் காரணமாகவே, இது ஓய்வு மற்றும் செரிமான மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. மன அழுத்தம் மக்களை அதிகம் உண்ண வைத்து, எடை கூடுதலுக்கு வழிவகுக்கிறது. மன அழுத்தத்தை நீங்கள் வெல்ல உதவும் சில வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் பின்வருமாறு
- சுதர்சன கிரியாவைப் பயிற்சி செய்யுங்கள்: இது இருபது நிமிட நேரம் மட்டுமே மேற்கொள்ளப்படும் சுவாச நுட்பப் பயிற்சியாகும். இது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை கணிசமாக குறைக்கிறது என்று மிகத் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
- தினமும் தியானம் செய்யுங்கள்: சுதர்சன கிரியா பயிற்சிக்கு பிறகு தியானம் செய்யவும். நாள் முழுதுமே தியான இடைவேளைகளை ஒதுக்கவும். தியானம் உடலுக்கும் மனத்திற்கும் மெய்யாகவே ஓய்வளிக்கிறது.
- நன்றாக உறங்குங்கள்: தரமான, எட்டு மணி நேர தூக்கம் மன அழுத்தத்தை தவிர்த்து, உங்கள் உள்ளுறுப்புகளுக்கு புத்துயிர் அளிக்க உதவுகிறது. தூங்குவதற்கான இந்த குறிப்புகளின் மூலம் உங்கள் தூக்கத்தின் தரத்தை நீங்கள் மேம்படுத்தலாம்.
- சுயஅன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்களை நீங்களே நேசியுங்கள். உங்கள் எடையை அடையாள விஷயமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் எடையைக் காட்டிலும் உங்கள் மதிப்பு நிச்சயம் மேலானது.
உங்கள் உண்ணும் முறைப் பழக்கத்தை மாற்றுங்கள்
குறிப்பான உணவு முறை என்பது குறுகிய காலத்திற்கானதாக மட்டுமே இருக்கும் என்பதால், எடை குறைப்பிற்காக ஒரு குறிப்பிட்ட உணவு முறையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. உங்கள் வழக்கமான உணவு முறைக்கு திரும்பிய கணமே, உங்கள் எடை அதிகரிக்கத் துவங்கும். சிறப்பு உணவு முறைகளை கடைபிடிப்பதில் உள்ள சிரமங்களையும், மனஅழுத்தத்தையும் சொல்லவே வேண்டியதில்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.
- நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்: முழு தானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களுடன் நட்பு கொள்ளவும்.
- கடினமான மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள உணவுகளை தவிர்க்கவும்: பால் விளைபொருட்கள் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்க்கவும். மேலும், ஊட்டச்சத்து குறைந்த உணவுகளான, எண்ணையில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
- சரியான நேரத்தில் சாப்பிடவும்: நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை பின்பற்றாவிட்டால், உங்கள் உடல் உணவை திறம்பட செரிமானம் செய்வதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் தயாராக இருக்காது.
- கலோரிகளை எண்ண வேண்டாம்: உங்கள் பசியை அடக்கவோ அல்லது ஓவ்வொரு வேளையின் உணவின் கலோரியை கணக்கிடவோ வேண்டாம். இது உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு நிலையான வழிமுறை அல்ல. இது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுப்பதோடு, நாளடைவில் உங்கள் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். மாறாக, ஒவ்வொரு வேளை உணவும் ஊட்டம் நிறைந்ததாகவும், வயிறு நிறைந்ததாகவும் இருக்கட்டும்.
- கவனத்துடன் உண்ணவும்: அமைதியான மனநிலையில் உண்ணும் உணவு திறம்பட செரிமானமாகிறது. எனவே, அவசர நிலையில் உண்பதை, உரையாடிக் கொண்டே உண்பதை, மற்றும் வேலை செய்து கொண்டே உண்பதையும் தவிர்க்கவும். உணவு உண்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு வாய் உணவையும் சுவைத்து, 32 முறை மென்று உண்ணவும்.
- வெதுவெதுப்பான நீர்: நாள்முழுதும் வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக அருந்துவதால் உங்கள் வளர்சிதை மாற்றம் (மெடபாலிசம்) சுறுசுறுப்பாக அமைகிறது. இது நச்சுப்பொருட்களை அகற்றவும் உதவுகிறது.
- முந்தைய உணவு செரிமானமாக்கப்படட்டும்: முந்தைய வேளை உணவு செரிமானமான பின்னரே அடுத்த வேளை உணவை உண்ணவும். எளிதான செரிமானத்திற்கு ஒரு வேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையே நான்கு மணி நேர இடைவேளை விடவும்.
- உண்ணாவிரதம்: உண்ணாவிரதம் மேற்கொள்ளும்போது, செரிமான ஆற்றல் நச்சுப்பொருட்களை வெளியேற்ற பயன்படுகிறது. ஆகவே, அவ்வப்போது, அதாவது, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, உண்ணாவிரதம் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் இடைப்பட்ட உண்ணாவிரத (இண்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்) முறையும் எடையைக் குறைக்க உதவும்.
ஆயுர்வேத சுத்திகரிப்பு
ஆயுர்வேத நச்சு நீக்கம் வாயிலாக எடை குறைப்பு செய்வது என்பது ஒரு விருப்பமான, ஆனால் பயனுள்ள வழியாகும். ஒரு வார நச்சு நீக்கச் சிகிச்சையில், நீங்கள் ஐந்து முதல் ஆறு கிலோ வரை எடையைக் குறைக்க இயலும். ஒரு தகுதிவாய்ந்த மருத்துவரின் மேற்பார்வையில், ஆயுர்வேத நச்சு நீக்கச் சிகிச்சைக்கு உட்பட்டு சிறந்த பலன்களைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது. எடைக் குறைப்புக்கான சில பயனுள்ள நச்சு நீக்கச் சிகிச்சைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்.
- விரேசனம்: இது ஆசனவாய் பாதை வழியாக நச்சுகளை நீக்குகிறது.
- அப்யங்கம் மற்றும் நீராவி குளியல்: அப்யங்கம் என்பது மருத்துவ குணம் நிறைந்த எண்ணைகளை பயன்படுத்தி செய்யப்படும் மசாஜ் ஆகும். நீராவி குளியல் என்பது ஒரு மூடிய அறையில் நீராவியால் உடல் சுத்திகரிக்கப்படுவதாகும்.
- உத்வர்தனம்: இது எண்ணைக்கு பதிலாக மூலிகைப் பொடிகளைப் (சூர்ணா) பயன்படுத்தி முழு உடலுக்கும் அளிக்கப்படும் மசாஜ் ஆகும். இது நிணநீர் (லிம்ஃபாடிக்) மற்றும் சுற்றோட்ட அமைப்புகளிருந்து நச்சுத்தன்மையை நீக்கும் சக்திவாய்ந்த நச்சு நீக்கும் சிகிச்சை முறையாகும்.
ஒரு ஆயுர்வேத மருத்துவரால் நமது உடல் தன்மைக்கு ஏற்ற எடைக்குறைப்பு சிகிச்சையை பரிந்துரைக்க முடியும்.
பூஜா வேணுகோபால், ஆசிரியர், ஸ்ரீ ஸ்ரீ யோகா, அவர்களின் குறிப்புகளைக் கொண்டு வந்திதா கோட்டாரியால் எழுதப்பட்டது.











