ஒரு படகைச் செலுத்தத் தெரிந்திருந்தால், உங்களால் எந்தப் படகையும் செலுத்த முடியும். ஆனால், படகைச் செலுத்தத் தெரியாவிட்டால், படகை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. அதேபோல், ஒரு உறவை மாற்றுவது பிரச்சினைக்கு தீர்வாகாது. விரைவிலோ அல்லது தாமதமாகவோ, மற்றொரு உறவிலும் அதே சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
பெரும்பாலான மக்கள் நல்லுறவுக்கான கூறுகளை தமக்கு வெளியே தேடுகிறார்கள் ஆனால், மிகச் சிலரே தம்முள் தேடுகிறார்கள், நம்முள்ளிருந்தே உறவுகள் மலர்கின்றன. கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இதோ:
உங்களுடனான உங்கள் உறவு என்ன? உங்களுக்கு நீங்களே யார்?
மக்கள் நினைக்கிறார்கள்: ஓ! நான் தனியாக இருக்கிறேன். தனியாக இருப்பது எனக்கு மிகவும் சலிப்பாக இருக்கிறது. எனக்கு ஒரு துணை தேவை. எனக்கு ஒரு உறவு தேவை. உங்களுடனேயே இருப்பது உங்களுக்கு இவ்வளவு சலிப்பாக இருந்தால், மற்றொருவருக்கு நீங்கள் இன்னும் எவ்வளவு சலிப்பை ஏற்படுத்துபவராக இருப்பீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்!
தங்களுடனேயே சலிப்படைந்த இருவர் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் சலிப்பை ஏற்படுத்துவார்கள்!
உங்கள் உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவற்றைக் குறித்த உங்கள் புரிதல், நிலைத்தன்மை மற்றும் பரந்த மனப்பான்மையுடன் நம்மைச் சுற்றியுள்ளவற்றை பார்க்கும் திறன் ஆகியவையே ஓர் உறவுக்கு இன்றியமையாதவை
உங்கள் உறவு ஏதேனும் தனிப்பட்ட தேவையை அடிப்படையாகக் கொண்டதா?
உங்கள் உறவு தனிப்பட்ட தேவையை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அது நீண்ட காலம் நீடிக்காமல் போகலாம். உடல் ரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ அந்தத் தேவை நிறைவேறியவுடன், மனம் வேறு எதையோ தேடி வேறொரு இடத்திற்குச் செல்லும். உங்கள் உறவு பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையின் அடிப்படையில் அமைந்திருந்தால், அது நீண்ட காலம் நீடிக்கக்கூடும்.
உங்கள் துணையிடமிருந்து பாதுகாப்பு, அன்பு மற்றும் ஆறுதலை எதிர்பார்க்கும்போது, நீங்கள் பலவீனமாகிறீர்கள். நீங்கள் பலவீனமாக இருக்கும்போது, எதிர்மறையான உணர்ச்சிகள் அனைத்தும் மேலெழுந்து, நீங்கள் அதிகமாக எதிர்பார்க்கத் தொடங்குகிறீர்கள். எதிர்பார்ப்புகள் அன்பை அழித்துவிடுகின்றன. இந்த ஒரு விஷயத்தை மட்டும் நாம் அறிந்துகொண்டால், நமது அன்பு சீர்கெட்டுப் போகாமல் காப்பாற்ற முடியும்.
உங்களைப் பற்றிய வரையறுக்கப்பட்ட விழிப்புணர்வும், அன்பைப் பற்றிய வரையறுக்கப்பட்ட அனுபவமும் உங்களை ஒரு சிறிய கூட்டுக்குள் அடைத்துவிடுகின்றன. அங்கே நீங்கள் மூச்சுத் திணறத் தொடங்குகிறீர்கள். நமது சொந்த மனதின் ஆழத்தையும், நமது சொந்த உணர்வுநிலையின் ஆழத்தையும் நாம் ஒருபோதும் ஆராய்ந்ததில்லை. அதனால், நாம் கேட்டுப் பெற விரும்பும் அன்பைக்கூட நம்மால் கையாள முடியாமல் போகிறது.
















